Published:Updated:

விகடன் விருதுகள் 2013 - 4

விகடன் விருதுகள் 2013 - 4

விகடன் விருதுகள் 2013 - 4
விகடன் விருதுகள் 2013 - 4

சிறந்த பயிற்சியாளர் - பாலாஜி -  கிரிக்கெட்

கிரிக்கெட் விளையாட்டு முழுக்கவே வணிகமாகிவிட்ட இன்றைய சூழலில், பயிற்சிக் கட்டணத்தைப் பற்றி கண்டுகொள்ளாமல், ஆர்வமும் திறமையும் உள்ள இளைஞர்களுக்கு கிரிக்கெட் கற்றுத்தருபவர்களில் எஸ்.பாலாஜி முக்கியமானவர். 200, 300 பேர் என்று குழுவாகப் பயிற்சி அளிக்கும் நிலையில், ஒவ்வொருவரின் மேல் தனி கவனம் கொண்டு பயிற்சி அளிப்பது பாலாஜியின் தனித்தன்மை. கிரிக்கெட் ஆர்வமுள்ள வீரர்கள் எங்கு இருந்தாலும் கண்டுபிடித்து, ஊக்குவித்துப் பயிற்சி அளிக்கிறார். தமிழக ரஞ்சி அணியில் கலக்கிவரும் அபராஜித், இந்திரஜித் மற்றும் விஜய் சங்கர் ஆகியோரின் திறமையைக் கூராக்கிய பெருமை மொத்தமும் பாலாஜிக்கே!

சிறந்த சேனல் - ஸ்டார் விஜய்

ப்போதும் இளமை, இனிக்க இனிக்கப் புதுமை என்று இந்த வருடமும் அசத்தியது ஸ்டார் விஜய் சேனல். 'நீயா? நானா?’, 'சூப்பர் சிங்கர்’ போன்ற விஜய் ஸ்பெஷல் நிகழ்ச்சிகள் 'ஆல்டைம் ஃபேவரைட்’ அந்தஸ்தைத் தக்கவைத்துக்கொள்ள, புதுப்புது நிகழ்ச்சிகள் மூலமும் வசீகரித்தது விஜய். பிரகாஷ்ராஜ் தொகுத்து வழங்கிய 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’, சிரிக்க ரசிக்க 'காபி வித் டிடி’, செம கலாட்டா 'கனெக்ஷன்’ கேம் ஷோ, திடுக் சவால்கள் நிரம்பிய 'நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம்’, கலகலப்பூட்டும் 'காமெடியில் கலக்குவது எப்படி?’ என வெரைட்டி நிகழ்ச்சிகள் மூலம் 'இன்றும் இளைஞர்களின் சாய்ஸ் நாங்கள்தான்’ என்று நிரூபிக்கிறது 'ஸ்டார் விஜய்’ குழு!

விகடன் விருதுகள் 2013 - 4

சிறந்த நெடுந்தொடர் - தெய்வ மகள்  - சன் டி.வி.

ன் டி.வியில் ஒளிபரப்பாகத் தொடங்கிய நாள் முதல் சரசரவென ரேட்டிங் ஏணியில் ஏறி, உச்சகட்ட டி.ஆர்.பி. பிடித்திருக்கிறது 'தெய்வ மகள்’ நெடுந்தொடர். 'திருமதி செல்வம்’, 'தென்றல்’ என்று ஹிட் அடித்த இயக்குநர் எஸ்.குமரனின் ஹாட்ரிக் ஹிட் சீரியல் இது. தந்தையை இழந்து சொத்துகளைப் பறிகொடுத்த மூன்று பெண்கள் தங்கள் அப்பாவி தாயோடு எப்படி தடைகளைத் தகர்த்து வாழ்க்கையின் வெற்றிப் படிக்கட்டுகளை எட்டிப் பிடிக்கிறார்கள் என்ற கதையை தினந்தோறும் சுவாரஸ்யத்தோடு நகர்த்துகிறது திரைக்கதை. யதார்த்த நிகழ்வுகள் என்பதோடு, தங்களில் நிஜ வாழ்க்கைக்கும் நெருக்கமான கதையாக இருப்பதால், தமிழக இல்லத்தரசிகளின் ப்ரைம் டைம் ஸ்லாட்டில் கம்பீரமாக அமர்ந்திருக்கிறாள் இந்த தெய்வ மகள்!

சிறந்த டி.வி. நிகழ்ச்சி - நேர்படப் பேசு - புதிய தலைமுறை

மிழகத்தில் அனல் கிளப்பும் சர்ச்சைகள் மட்டுமல்ல, இந்தியாவே பரபரக்கும் சம்பவங்களைப் பற்றியும் விவாதித்து நம் சிந்தனையில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் நிகழ்ச்சி 'புதிய தலைமுறை’ சேனலின் 'நேர்படப் பேசு’. சர்ச்சைகளோடு சம்பந்தப்பட்ட பிரபலங்களை விவாத மேடைக்கு அழைத்து வந்து காரசாரக் கருத்துத் தாக்குதல் நடத்தும் பாணி, தமிழ் சேட்டிலைட் அரங்கில் ஆச்சர்யப் புருவ உயர்த்தல்களை உண்டாக்கியது. 'மின்வெட்டுக்கு உண்மையான காரணம்... அதீத உபயோகமா... உற்பத்தித் திண்டாட்டமா?’, 'ஆம் ஆத்மி எழுச்சி... மாற்று அரசியலின் தொடக்கமா... மக்கள் கருத்துக்கு மதிப்பா?’, 'கல்லூரிகளில் ஆடைக் கட்டுப்பாடு அவசியமா... பெண்ணடிமை அடக்குமுறையா?’ என பல தளங்களிலும் விவாதித்த இந்த நிகழ்ச்சியின் வடிவமைப்பு டிரெண்ட்செட்டராக, மற்ற சேனல்களிலும் இடம்பிடித்ததே, 'நேர்படப் பேசு’ குழுவினருக்குக் கிடைத்த வெற்றி!

சிறந்த தொகுப்பாளர் -  கோபிநாத் - நீயா? நானா?  விஜய் டி.வி.

ரு தொகுப்பாளருக்கான ஆளுமை, ஒரு பார்வையாளருக்கான கவனம், ஒரு நடுவருக்கான சீராய்வுப் பார்வை, ஒரு விமர்சகனின் கோபம், ஒரு சாமானியனின் யதார்த்த மனம்... 'நீயா? நானா?’ விவாத அரங்கில் நிற்கும்போது கோபிநாத்துக்குள் இத்தனை குணநலன்களும் பொதிந்து இருக்கும். தானே பங்கேற்கும் ஒரு விவாதத்தின் போக்கைக் கணித்து, சட்டென வியூகம் வகுத்து ஆவேசத்தை மட்டுப்படுத்தவோ, உரையாடலில் காரசார மசாலா சேர்க்கவோ செய்யும் கலை, கோபிக்கு மிக எளிதாகக் கைவருகிறது. சமூகத்தின் பல அடுக்கு மனிதர்களையும் அவர்களின் வாழ்வியல் சூழலோடு மையப்படுத்தி உரையாட செய்வதில் கோபிநாத், எக்சலன்ட் ப்ரோ!

விகடன் விருதுகள் 2013 - 4

சிறந்த தொகுப்பாளினி - திவ்யதர்ஷினி - காபி வித் டி.டி.  விஜய் டி.வி.

விஜய் டி.வி.சேனல் வட்டாரத்தில், 'டி.டி.’ என்றால், டி.ஆர்.பி. தன் 14-வது வயது முதல் வி.ஜே-வாக இருக்கும் திவ்யதர்ஷினிதான், தமிழகத்தில் சேனல் தொகுப்பாளினிக்கான சம்பளத்தை சரசரவென உயர்த்தியவர். தொடர்ந்து மூன்றாம் ஆண்டாக விகடன் விருது பெறும் திவ்யதர்ஷினிக்கு ஃபேஸ்புக் முதல் பேரையூர் வரை எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள் ரசிகர்கள். 'காபி வித் டி.டி.’ நிகழ்ச்சியில் 'ஹஹஹஹஹஹஹ’ என சிரித்துச் சிரித்தே, கூச்சப் படும் பிரபலங்களையும் அரட்டையடிக்க வைத்துவிடுவார். விஜய் டி.வி-யின் ஜாலிக் கோழியான டி.டி-யை, சேனலே 'காபி 'வித்த’ டி.டி.’ என விஜய் ஸ்டார்ஸ் நிகழ்ச்சியில் கலாய்த்தது, இந்த வருடத்தின் டாப் ஹிட் காமெடி!

விகடன் விருதுகள் 2013 - 4

சிறந்த பண்பலை -  ரேடியோ மிர்ச்சி

மிழ்நாட்டின் டாப் பண்பலைகளில் ஒன்று. அனைத்து பண்பலைகளின் இலக்கும்  இளைஞர்கள்தான் என்றாலும், குழந்தைகளையும் சந்தோஷப்படுத்தும் நிகழ்ச்சி நடத்துவது மிர்ச்சியின் புது முயற்சி. 'ஒலி நூலகம்’ மூலம் விழித் திறனற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு புத்தக வாசிப்பு, பாடல்கள், நிகழ்ச்சிகளின் ஒலித் தொகுப்பு ஆகியவற்றைக் கேட்க வாய்ப்பளிக்கும் முயற்சி பாராட்டுக்குரியது. மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளரை அழைத்து மாவட்ட சட்டம்-ஒழுங்கு நிலவரத்தை விவாதிக்கச் செய்வது, மக்கள் விழிப்பு உணர்வு, போலீஸ் - பொதுமக்கள் உறவு எனப் பல பிரச்னைகளை அலசி ஆராய்ந்து, ஊர் நலம் பெற நல்லன செய்துவருகிறது ரேடியோ மிர்ச்சி!

சிறந்த பண்பலைத் தொகுப்பாளர் -   பாலாஜி  - பிக் எஃப்.எம்.

பாலாஜி நடத்தும் '120’ என்ற சினிமா விமர்சன ஷோ, சமூக வலைதள தமிழர்களிடம் வைரல் பிரபலம். காரணம், பாலாஜியின் ரைமிங் டைமிங் அட்ராசிட்டி! ஆனால், சில படங்களைப் பற்றிய பாலாஜியின் 'திகுதிகு’ விமர்சனம் சர்ச்சைக்குள்ளாக, சினிமாவுலகப் பிரபலங்களின் தலையீட்டால் அந்த ஷோவுக்கு விழுந்தது தடா. இப்போது 'பிக் டாக் வித் பாலாஜி’ என்று புது ஐடியாவில் களம் இறங்கியிருக்கிறார். சென்னைக்கு வெறுங்கையோடு வந்து, இன்று லட்சங்களில் வருமான வரி கட்டும் மலையாளி, எம்.பி.ஏ. முடித்துவிட்டு இயற்கை விவசாயம் செய்யும் 25 வயது இளைஞர், 'பயோடேட்டா தயாரிப்பது எப்படி?’ என்று சொல்லிக்கொடுத்தே சம்பாதிக்கும் ஒருவர் என விதவிதமான, ரசனையான மனிதர்களை நேர்காணல் எடுக்கிறார். ஆக, பாலாஜி தொட்டதெல்லாம் ஹிட்டு!

சிறந்த பண்பலைத் தொகுப்பாளினி - மிருதுளா - பிக் எஃப்.எம்.

ற்ற எஃப்.எம்-களில் இரவு நேரங்களில் மட்டும் இளையராஜா பாடல்களை ஒலிபரப்ப, 'ஏன் பகலில் இளையராஜா இசையை ரசிக்க மாட்டார்களா?’ என்று மாற்றி யோசித்தது, பிக் எஃப்.எம்-மின் 'ராஜாதி ராஜா’ நிகழ்ச்சியை ஹிட் அடிக்கவைத்தது. இளையராஜாவின் மனம் மயக்கும் மெலடிகளும், மிருதுளாவின் மனம் வருடும் வர்ணனையும் இணைந்த ரசனைக் கலவையே, நிகழ்ச்சியின் வெற்றிக்கு அடித்தளம். இதழியல் படித்த மிருதுளா, நிகழ்ச்சியை மெல்லிசை நடையில் தொகுத்து வழங்குவது... ஆவ்சம் அனுபவம். இசையை ஒலிக்கச்செய்து பாடல் வரிகளைக் கேட்டு போட்டி வைப்பது, இளையராஜாவோடு பணிபுரிந்த இயக்குநர்கள், இசைக் கலைஞர்களிடம் நெகிழ்ச்சி அனுபவங்களைக் கேட்டு வாங்குவது என நேயர்களை ராஜா மகுடிக்கு இன்னும் மதிமயங்கி ஆடச் செய்வது மிருதுளா ஸ்பெஷல்!

விகடன் விருதுகள் 2013 - 4

சிறந்த விளம்பரம் - லைஃப்பாய் - Help a child reach 5

'நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணம் என் மகன் வளருகிறான்..’ என்று பாடல் ஒலிக்க, ஒரு குக்கிராமத்தில் தன் வேண்டுதலை நிறைவேற்ற தந்தை ஒருவர் தலைகீழாக நடக்கும் லைஃப்பாய் விளம்பரம் இணையத்தில் ஏக ஹிட். தலைகீழாகவே தெருக்கள், வயல், மலைக்கோயில் என்று நடந்து, 'இன்று என் மகனுக்கு அஞ்சு வயசு’ என்று அப்பா உருக்கமாகச் சொல்லும் வரையிலான விளம்பரத்தின் சஸ்பென்ஸ், சட்டென நெகிழச்செய்யும் அவசிய விழிப்பு உணர்வாக வடிவம் எடுக்கிறது. 'ஒவ்வொரு வருடமும் ஐந்து வயதுக்கு உட்பட்ட இரண்டு மில்லியன் குழந்தைகள் தொற்றுநோயால் இறக்கிறார்கள். இதற்கு அவர்கள் சோப்பைப் பயன்படுத்தி கை கழுவாததே காரணம்’ என்ற சமூக அக்கறை, யூ-டியூபில் கிட்டத்தட்ட இரண்டு கோடி ஹிட்ஸ்களைக் குவித்திருக்கிறது!

சிறந்த பைக் - 390 டியூக் - கே.டி.எம்

100-150 சி.சி. பைக்குகள்தான் இந்தியாவில் அதிகம் விற்பனையாகின்றன என்றாலும், பெர்ஃபார்மென்ஸ் பைக்குகளுக்கான மார்க்கெட் ஒருபக்கம் உயர்ந்துகொண்டே போகிறது. இதன் அடிப்படையில்தான் இப்போது 100, 150 சி.சி. பைக்குகளைக் காட்டிலும் 200 சி.சி-க்கும் மேலான புதிய பைக்குகள் விற்பனைக்கு வருகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டு விற்பனைக்கு வந்த 390 டியூக் கே.டி.எம். பைக், இந்தியாவின் சிறந்த பைக். பவர்ஃபுல் பெர்ஃபார்மென்ஸ், சிறந்த கையாளுமை, பெர்ஃபார்மென்ஸ் பைக்குகளுக்கு ஏற்ற மைலேஜ் என்பதோடு, விலையும் குறைவு என்பது ப்ளஸ்!

விகடன் விருதுகள் 2013 - 4

சிறந்த கார் - அமேஸ் ஹோண்டா

மிட் சைஸ் கார் மார்க்கெட்டில் மாதத்துக்கு 15,000 கார்கள் விற்பனையாகும் மாருதி டிசையரின் மார்க்கெட்டில் புகுந்து, விற்பனைக்கு வந்த ஐந்து மாதங்களிலேயே 30,000 கார்கள் என சாதனை படைத்த ஹோண்டாவின் அமேஸ், இந்த ஆண்டின் சிறந்த கார். அமேஸில் இருப்பது ஹோண்டாவின் புத்தம் புதிய டீசல் இன்ஜின். 100 bhp சக்திகொண்ட பவர்ஃபுல் இன்ஜின் என்றாலும், மிட் சைஸ் காருக்கு ஏற்றவகையில் இதைச் சிறப்பாக ட்யூன் செய்து, மைலேஜிலும் நம்பர் ஒன் காராக மாற்றியிருக்கிறது ஹோண்டா. இடவசதி, சிறப்பம்சங்கள், பில்டு குவாலிட்டி... என அனைத்திலும் நிறைவான காராக அமைந்திருக்கும் அமேஸ், 'ஹோண்டாவின் தயாரிப்பு’ என்பதால் நம்பகத்தன்மையிலும் நம்பர் 1.