Published:Updated:

“என்னை ‘புரட்சித்தமிழன்’னு சொல்லாதீங்க!”

விகடன் மேடை - சத்யராஜ் பதில்கள் வாசகர் கேள்விகள்

ராம்குமார், வந்தவாசி.

''விஜய்க்கு ஓவரா ஜால்ரா அடிக்கிறீங்க. அதுக்கு என்ன காரணம்?''

'' 'ஜால்ரா’ங்கிற வார்த்தையைப் பயன்படுத்தி சத்யராஜ் என்கிற நடிகனைக் கொச்சைப்படுத்திடலாம்னு நீங்க நினைக்கிறீங்க. தம்பி விஜய் மேல உங்களுக்கு இருக்கும் வெறுப்பின் காரணமாகக்கூட நீங்க கேட்டிருக்கலாம். ஆனா, சினிமாவில் முன்னுக்கு வந்த அத்தனை நடிகர்களுமே பாராட்டுக்குத் தகுதியானவர்கள்தான். இண்டஸ்ட்ரிக்கு வந்து 20 வருஷமா விஜய் நல்ல கிராஃப்ல இருக்கார்னா, அதுக்கு அவர் திறமைதான் காரணம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஒரு மேடையில ஒருத்தரைப் புகழ்ந்து பேசும்போது ஒண்ணு, ரெண்டு வார்த்தைகள் கூடக்குறைய வரத்தான் செய்யும். அதை நீங்க ஜால்ரா கணக்குல குறிச்சுக்க வேண்டிய அவசியம் இல்லே. அப்படி நீங்க நினைச்சுக்கிட்டாலும் அதைப் பத்தி எனக்குக் கவலை இல்லை. ஏன்னா, விஜய்க்கு ஜால்ரா அடிச்சுப் பிழைக்க வேண்டிய நிலைமையில் நான் இல்லை. ஜூனியர்களைப் பத்தி நாலு வார்த்தை சொல்றதுல என்ன தப்பு? அதை நீங்க ஜால்ரானு கொச்சைப்படுத்தினாலும் பரவாயில்லை... ஜூனியர்களைப் பற்றி பேசும்போது எதிர்காலத்திலும் நான் ஜால்ரா அடிப்பேன்!''

கணேஷ், சென்னை.

'' 'புரட்சித்தமிழன்’ என்ற பட்டத்துக்குத் தாங்கள் தகுதியானவரா?''

''என் தலைவர் பிரபாகரன் போன்ற உண்மையான புரட்சித் தமிழர்கள் இருக்கும்போது அந்தப் பட்டத்துக்குக் கொஞ்சமும் தகுதி இல்லாத என்னை, இனி அப்படி அழைக்காதீங்கனு கெஞ்சிக் கேட்டுக்கிறேன். 20 வருஷத்துக்கு முன்னாடி 'திருமதி பழனிச்சாமி’ படம் நடிச்சுட்டு இருந்த சமயம், கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டபோது, அவங்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டது. அப்ப நான் 2 லட்சம் கொடுத்தேன். என் மனைவி தன் வளையல்களைக் கழட்டிக் கொடுத்தாங்க. அதுக்கு நன்றி சொல்லி கர்நாடகாவில் இருந்து ரசிகர் ஒருவர் எழுதின கடிதத்துல 'புரட்சித்தமிழன் சத்யராஜ்’னு எழுதியிருந்தார். அதைப் பார்த்த என் உதவியாளர் ராமநாதன் தான் தயாரிச்ச 'திருமதி பழனிச்சாமி’ பட விளம்பரங்கள்ல 'புரட்சித்தமிழன் நடிக்கும் திருமதி பழனிச்சாமி’னு போட்டுட்டார். அடுத்து நான் நடிச்ச படம் 'வால்டர் வெற்றிவேல்’. அதில் 'புரட்சித்தமிழன் சத்யராஜ் நடிக்கும் வால்டர் வெற்றிவேல்’னு கார்டு போட்டாங்க. படம் 200 நாள் ஓடவும் அதை ஒரு சென்ட்டிமென்ட் மாதிரி ஆக்கிட்டாங்க. சினிமா சென்ட்டிமென்ட்டுக்கு கேக்கவா வேணும்! அப்புறம் எல்லோரும் 'புரட்சித் தமிழன்’னு போட ஆரம்பிச்சிட்டாங்க. நானும் அதைக் கண்டுக்கலை. ஆனா, அந்தப் பட்டத்துக்குத் தகுதியே இல்லாத ஆள் நான். இனிமே 'புரட்சித் தமிழன்’னு என்னைக் குறிப்பிடாம இருந்தாலே போதும், ரொம்ப சந்தோஷப்படுவேன்!''

“என்னை ‘புரட்சித்தமிழன்’னு சொல்லாதீங்க!”

ரேகா, திருச்சி.

''உங்களைப் பற்றிய ரகசியம் ஒண்ணு சொல்லுங்களேன்?''

''நடிக்க வந்த புதுசுல அப்பப்ப கண்ணாடியில என் முகத்தைப் பார்த்துட்டு, 'இந்த மூஞ்சியை வெச்சுக்கிட்டு நடிக்க வந்துட்டோமே’னு வருத்தப்படுவேன். ஏன்னா, எனக்கு பல்லு எத்திக்கிட்டு வாய்க்கு வெளியே நீட்டிக்கிட்டு இருக்கும். 'கிளிப் போட்டு மேக்ஸிமம் பல்லை உள்ளே தள்ளியாச்சு. இதுக்கு மேல உள்ளே தள்ள முடியாது’னு டாக்டர்கள் சொல்லிட்டாங்க.

பல்லோட நீளத்தைக் குறைச்சா, கொஞ்சம் லட்சணமா இருப்பேன்னு நானே முடிவு பண்ணி ஒரு பல் டாக்டர்கிட்ட போனேன். பிளேடு வெச்சு ராவு ராவுனு ராவிட்டார் மனுஷன். ரைஸ் மில்ல அரிசி மாவு கொட்டுறமாதிரி பல்லு பவுடராக் கொட்டுது. 'இன்னும் ராவுங்க டாக்டர், இன்னும்...’னு நான் சியர்ஸ் கேர்ள்ஸ் மாதிரி அவரை உற்சாகப்படுத்துறேன். 'இதுக்கு மேல ராவுனா ஐஸ்கிரீம் சாப்பிட முடியாது. சூடா காபி குடிக்க முடியாது’னு சொல்லிட்டார். அவ்வளவு ராவியும் பெர்சனாலிட்டியில் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை.

நான் சுமாரா ஓவியம் வரைவேன். ஒரு தடவை என்னை நானே கண்ணாடி பார்த்து வரைஞ்சேன். அப்ப, 'தாடை கொஞ்சம் பின்னாடி இருக்கு. இது கொஞ்சம் முன்னாடி வந்துச்சுனா, பல் உள்ளுக்குப் போயிடும்’னு தோணுச்சு. இதை மாதங்கி ராமகிருஷ்ணன்னு ஒரு டாக்டர்கிட்ட சொன்னேன். தாடையின் கீழ்ப் பக்கத்தைக் கிழிச்சு ஒரு சுண்டுவிரல் அளவுக்கு பிளாஸ்டிக் இம்பிளான்ட் ஒண்ணை வெச்சு பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணாங்க. சக்சஸ். இந்த விஷயம் சிவகுமார் அண்ணன், கவுண்டமணி, மணிவண்ணன்னு மூணு பேருக்குத்தான் தெரியும்.

'நம்ம நடிக்கிற துண்டு துக்கடா கேரக்டருக்கு இதெல்லாம் நமக்குத் தேவையா சத்யராஜ்’னு கவுண்டர் கலாட்டா பண்ணினது தனிக் கதை. ஆபரேஷனுக்குப் பிறகு நான் நடிச்ச முதல் படம், 'சந்தோஷக் கனவுகள்’. விஜயகாந்த் ஹீரோ, நான் வில்லன். ஸ்பாட்ல என்னைப் பார்த்ததுமே, 'என்ன சத்தி, ஒரு டைப்பா இருக்கீங்க. பெர்சனாலிட்டி லோடான மாதிரி தெரியுதே’னு விஜயகாந்த் புரியாமப் பார்த்தார். ஒரு ஃபைட்டர், 'அண்ணே அசப்புல நம்ம தலைவர் மாதிரியே இருக்கீங்க’னு வேற சொல்லிட்டார். எனக்குப் பயங்கர சந்தோஷம்.

'மகாநடிகன்’ படத்தில் கதைப்படி ஒரு துணை நடிகனின் வளர்ச்சியைக் காட்டுறதுக்காக வர்ற பாட்டுல, எம்.ஜி.ஆர்., ஹிட்லர், எம்.ஆர்.ராதானு ஏகப்பட்ட வேஷங்களில் வருவேன். அதைப் பார்த்த மணிவண்ணன், 'தலைவரே... பெரியார், ஹிட்லர், எம்.ஜி.ஆர்., எம்.ஆர்.ராதானு ஒவ்வொருத்தருக்கும் வெவ்வேறு முக அமைப்பு. ஆனா, இவங்க எல்லார் முகமும் உங்களுக்குப் பொருந்தி வருது. 'இந்த ஊர், இந்த நாடு, இந்த மொழியைச் சேர்ந்தவர்’னு சொல்ல முடியாத வித்தியாசமான முக அமைப்பு’னு சொன்னார்.

'பெரியார்’ படத்தின் சில காட்சிகளை ரஷ்யாவில் ஷூட் பண்ணப்ப ரஷ்யப் பெண்மணி ஒருவர், தங்கர்பச்சான்கிட்ட வந்து, 'பெரியாரா நடிச்சிட்டு இருக்கிற அவர், 'காந்தி’ படத்துல நடிச்ச பென் கிங்ஸ்லிதானே’னு கேட்டாங்களாம். என்னன்னு விசாரிச்சா, தென் ஆஃப்பிரிக்காவில் இருந்த இளம் வயது காந்தி சாயல் எனக்கு இருக்குனு தோணுச்சாம்.

ஒருதடவை என் நெருங்கிய நண்பர் வாகை சந்திரசேகர், 'டேய் உனக்கு ஆண்டன் பாலசிங்கம் முகவெட்டு இருக்குடா’னு சொன்னான். 'நிழல்கள்’ ரவி, 'ஒரு சாயல்ல உன்னைப் பார்த்தா நரேந்திர மோடி மாதிரியே இருக்கு’னு சொன்னான். இப்படி இயேசு, காந்தி, பெரியார், எம்.ஜி.ஆர்., ஆண்டன் பாலசிங்கம், நரேந்திர மோடி, ஹிட்லர்னு பல தலைவர்களின் சாயல்கள் என் முகத்துக்கு வந்ததுக்குக் காரணம், 30 வருஷமா என் வாய்க்குள்ள இருக்கிற அந்தச் சின்ன பிளாஸ்டிக்தான் காரணமா இருக்குமோனு டவுட்டா இருக்கு!''

வேலுதுரை ராஜ்குமார், Facebook 

''ஒரு பகுத்தறிவாளியாக, ஈழ ஆதரவாளராக உங்களை அடையாளப்படுத்திக்கொள்வது, திரைத் துறையில் என்னவிதமான சிரமம், சங்கடத்தை உங்களுக்கு ஏற்படுத்தியது, ஏற்படுத்துகிறது?''

''நிறைய விஷயங்கள் இருக்கு. ஒண்ணு ரெண்டை மட்டும் சொல்றேன். தேங்காய்ல சூடத்தை வெச்சு கொளுத்தி கேமராவுக்குச் சுத்தி எடுத்துட்டு வருவாங்க. நான் எடுத்துக்க மாட்டேன்னு சொல்வேன். அப்ப சிலர், 'எங்க மனசு புண்படுமேனு நினைச்சாவது இந்தக் கற்பூரத்தைத் தொட்டு கண்ல ஒத்திக்கலாம்ல’னு கேப்பாங்க. உடனே, 'என் மனசு புண்படும் கிறதுக்காக நீங்க தேங்காய் சுத்தாம இருக்கலாம்ல’னு திருப்பிக் கேட்டுடுவேன்.

இதேபோல சினிமாவுல இன்னொரு மிகப் பெரிய காமெடி இருக்குது. ஒரு காட்சியில செத்துப்போற மாதிரி நடிச்சா, அப்படி நடிச்சு முடிச்ச பிறகு கேமராவை ஒருமுறை பார்த்து சிரிக்கச் சொல்வாங்க. அதாவது 'ஆள் சாகலை... திரும்ப எந்திரிச்சு சிரிச்சுட்டார்’னு விதியை ஏமாத்துறோமாம். ஆனா, நான் சிரிக்க மாட்டேன்னு சொல்வேன். 'இல்ல சார் சிரிச்சிடுங்க’னு விடாப்பிடியா நிப்பாங்க. 'சிரிக்காட்டி நான் நிஜமாவே செத்துடுவேன்னு பயப்படுறீங்களா?’னு கேட்பேன். யார் என்ன சொன்னாலும் சிரிக்க மாட்டேன்னு உறுதியா இருப்பேன். எங்க போனாலும் எனக்கு இது பெரிய போராட்டமா இருக்கும். அதே மாதிரி ஈழப் பிரச்னையில், மனசுல அவ்வளவு ஆதங்கம், கோபம், சோகம் இருக்கு. அதை எல்லாத்தையும் மேடையில் கொட்டித் தீர்த்தால், கண்டிப்பா எனக்கு ஜெயில்தான். அப்படி நான் ஜெயில், கோர்ட், கேஸ்னு அலைஞ்சேன்னா, தயாரிப்பாளர்கள் பாதிக்கப் படுவாங்க. அதான் மனசுல இருக்கிறதைக் கொட்டித் தீர்க்காமல் கொஞ்சம் அடக்கி வாசிக்கவேண்டிய சூழல். அது என் மனசாட்சியை ரொம்ப உறுத்தும்!''

“என்னை ‘புரட்சித்தமிழன்’னு சொல்லாதீங்க!”

ரமேஷ், காஞ்சிபுரம்.

''ரஜினியை விடுங்கள்... விஜய் அரசியலுக்கு வருவாரா?''

''எனக்குத் தெரிஞ்சு வர மாட்டார்னுதான் நினைக்கிறேன். அவர்கூட ரெண்டு படங்கள் நடிச்சிருக்கேன். சின்ன வயசுல இருந்து பழகியிருக்கேன். அரசியல் சம்பந்தமா என்கிட்ட எதுவும் பேசினதே இல்லை. நானும் கவுண்டமணி அண்ணனும் நடிச்ச படங்கள் பத்திதான் ஆர்வமா விசாரிச்சு, கேட்டுட்டே இருப்பார். குறிப்பா, 'நடிகன்’ படத்தின் பெரிய ரசிகர். இப்படி சினிமா விஷயம் பேசியிருக்காரே தவிர, அவருக்கு அரசியல் ஆர்வம் இருக்கிற மாதிரியே தெரியலை!''

அபிநயஸ்ரீ, வேலூர்.

'' 'ஏன்டா இந்தப் படத்தில் நடிச்சோம்’னு நீங்க நினைச்ச படங்கள் என்னென்ன? பேர் சொல்லத் தயக்கமாக இருந்தா, சின்னச் சின்ன க்ளூ கொடுங்களேன்!''

''நீங்க நம்மளைவிட நக்கல் புடிச்ச ஆளா இருக்கீங்களே! க்ளு கொடுத்தா, கண்டுபிடிச்சுட மாட்டீங்களா என்ன? 'ஒன்றா இரண்டா எடுத்துச்சொல்ல’னு பாடுற அளவுக்கு அப்படி ஏகப்பட்ட படங்கள்ல நடிச்சிருக்கேன். குறிப்பிட்டுச் சொன்னா சம்பந்தப்பட்ட இயக்குநர் மனசைப் புண்படுத்துற மாதிரி ஆகிடும். நம்மளை நடிக்க வெச்சு படம் எடுத்தவங்களை அப்படிச் சங்கடப்பட விடலாமா?''

மஞ்சுளா, மூவரசம்பேட்டை.

''பெரியார் அணிந்த மோதிரம் உங்களிடம் எப்படி வந்தது?''

'' 'பெரியார்’ படத்தில் நடிச்சதுக்கு சம்பளம் வேண்டாம்னு சொல்லிட்டேன். 60 நாட்கள் அந்தப் படத்துல நடிச்சேன். படத்தின் 100-வது நாள் விழாவில், 'இந்த மோதிரம் பெரியார் தன் 19-வது வயசுல விரல்ல போட்டுக்கிட்டது. இன்னைக்கு கணக்குப் போட்டா மோதிரத்துக்கு சுமார் 110 வயசு. இதை சத்யராஜுக்குப் பரிசளிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்’னு சொல்லி, கி.வீரமணி ஐயா கலைஞர் கையால் எனக்கு அணிவிச்சார். 'இந்த மோதிரத்தின் மீது பலருக்கும் கண் உண்டு. நானும்கூட ஒரு கண் வைத்திருந்தேன். ஆனாலும், இந்த மோதிரம் தம்பி சத்யராஜ் கைக்குப் போனதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி’னு தலைவர் கலைஞரும் சொன்னார். அப்படிப் பார்த்தா ஹாலிவுட் நடிகர்கள் பிராட் பிட், டாம் குரூஸைவிட உலகத்துலயே அதிக சம்பளம் வாங்கிய நடிகன் நான்தான். ஏன்னா, பெரியாரின் மோதிரம் அந்த அளவுக்கு விலை மதிப்பில்லாதது!''

“என்னை ‘புரட்சித்தமிழன்’னு சொல்லாதீங்க!”

பாண்டியன், ஆரணி.

''வாழ்க்கையில் ஜெயிப்பதற்கான சக்சஸ் ஃபார்முலா என்ன?''

'அப்படிப் புட்டுப் புட்டு வைக்கிற அளவுக்கு நான் ஒண்ணும் ஆராய்ச்சி பண்ணி வாழலை. ஆனா, அப்படி வாழ்ந்துட்டு இருக்கிற சிவகுமார் அண்ணன் வாழ்க்கையில் இருந்து நாம எல்லாருமே பாடம் படிச்சுக்கலாம்.

ஏகப்பட்ட நல்ல பழக்கங்கள் உள்ளவர் அவர். காலையில 7 மணி கால்ஷீட்னா 6.30-க்கே போய் நின்னுடுவார். ஒரு தடவை காலைல ஸ்பாட்டுக்குப் போனவருக்கு சாயங்காலம் 4 மணிக்குத்தான் ஷாட் வந்துச்சு. அவர் அமைதியா இருக்க, 'என்னங்கண்ணா... நீங்க எவ்வளவு பெரிய ஹீரோ? உங்களைக் காக்க வெச்சுட்டாங்களே’னு எனக்குக் கோபம் வந்துடுச்சு. 'இதுக்கெல்லாம் சேர்த்துத்தான சம்பளம்’னு என்னை ஆஃப் பண்ணிட்டார். பேசுறப்ப வார்த்தைப் பிரயோகம் எப்படி இருக்கணும்னு அவர்கிட்டதான் கத்துக்கணும். 'பசுன்னாலும் மாடுனாலும் ஒண்ணுதான். ஆனா, ஒருத்தனைப் பார்த்து மாடுனா கோவிச்சுக்குவான். பசுன்னா கோவிச்சுக்க மாட்டான். நாம பயன்படுத்துற வார்த்தைகள் எந்தச் சூழ்நிலையிலும் யாரையும் புண்படுத்தக் கூடாது’னு சொல்வார்.

'நல்ல நேரமா கெட்ட நேரமானு பார்த்துட்டு இருக்காத... ஒவ்வொரு நாளும் உன் ஆயுசை, உன் வயசை, உன் திறமையை, உன் ஆரோக்கியத்தைத் திருடிட்டு இருக்கு. நீ நிர்ணயிச்ச இலக்கைத் தாண்டி ஓடணும்னு முடிவு பண்ணி ஓடு’னு அவர் என்னை விரட்டலைன்னா, நான் இங்கே இந்த நிலைமைல இருக்க மாட்டேன். நீங்களும் அப்படி ஓடிட்டே இருங்க!''

- நிறைந்தது _