Published:Updated:

சரிகமபதநி டைரி 2013

வீயெஸ்விபடங்கள்: கே.ராஜசேகரன், வீ.நாகமணி, சொ.பாலசுப்ரமணியன், சரவணகுமார், சோ.கேசவசுதன்

சரிகமபதநி டைரி 2013

மாஸ் ராகத்தை ஆரம்பித்தார் இளம் பாடகர் அபிஷேக் ரகுராம் (மியூசிக் அகாடமி). 'இளம்’ அடைமொழி, வயதுக்கு (28) மட்டுமே. பாடும்போது தென்றலாகத் தழுவி, புயலாகச் சீறி, சுனாமியாகக் கொந்தளித்து... கூட்டம் ஈர்க்கும் இன்றைய பிரபலங்களுக்கு சவால்விட்டு மிரட்டும் ஞானஸ்தன்!

கறுப்புத் துணியால் நம் கண்களைக் கட்டி, 30, 40 நிமிடங்களுக்கு ஹைவே சாலையில் கடத்திச் சென்றுவிட்டார் அபிஷேக். கற்பனை கரைபுரண்டு ஓட, மூன்று காலங்களிலும் கமாஸ் சங்கதிகள் அடுக்கடுக்காக வந்து காதுகளை நிறைத்தன. இந்த ராகத்தில் அமையப்பெற்ற பெரும்பாலான பாடல்களை அடையாளம் காட்டினார். ஆலாபனை முடிந்தபோது, கறுப்புத் துணியை அபிஷேக் அவிழ்த்துவிட, 'கமாஸ்’ என்ற பிரமாண்ட மாடமாளிகை கண்முன்னே தோன்றி பிரமிக்கவைத்தது. அப்படி ஒரு கமாஸ்... சான்ஸே இல்லை!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
##~##

முன்னால் அசாவேரி, ஆரபி, விரிவான சிம்மேந்திரமத்யமம். மைசூர் ஸ்ரீகாந்த் (வயலின்), திருவாரூர் பக்தவத்சலம் (மிருதங்கம்), கே.வி.கோபால கிருஷ்ணன் (கஞ்சிரா) கூட்டணியில் வாகை சூடினார் அபிஷேக். முக்கியமாக, பக்தவத்சலத்தின் வாசிப்பு பக்கா.

அபிஷேக் தம்பிக்கு குரலில் வால்யூம் இயற்கையாகவே அதிகம். மைக் இவருக்குத் தேவை இல்லை. அது இல்லாமல் இந்த ஜென்மத்தில் பாடப்போவதும் இல்லை. ஒரே வழி, இரண்டு காதுகளையும் இரண்டு ஆள்காட்டி விரல்களால் லேசாக மூடிக்கொண்டு கேட்க வேண்டியதுதான்!

அதேபோல் நேர நிர்வாகம். சீனியரான திருவாரூராருக்கு எப்போது 'தனி’ விடுவது என்பதில் குழப்பம். 'பாடு... அப்புறம் பார்த்துக்கலாம்’ என்று அவரும் சொல்லிவிட, கமாஸில் பல்லவி முடிந்ததும் 'தனி’க்கு வழிவிட்டு, அது முடிந்ததும் மீண்டும் ஸ்வரங்களைத் தொடர்ந்து பாடினார். பெரியவங்க இவருக்கு எடுத்துச் சொல்லணும்.

கொசுறு: அகாடமியில் இந்த சீஸனின் ஆகச் சிறந்த பாடகர் விருது பெற்றார் அபிஷேக்!

பைசா செலவழித்து குற்றாலம் சென்றுதான் அருவியில் குளியல் போட வேண்டும் என்பது இல்லை. கணேஷ்-குமரேஷ் வயலின் டூயட் கேட்டாலே போதும். அந்த ஜிலுஜிலு அனுபவம் கிடைத்துவிடும். சாந்தமான முகத்துடன் சகோதரர்கள் மேடையில் உட்காருவதையும், புன்னகை மலர பரஸ்பரம் பாராட்டிக்கொள்வதையும் பார்க்கும்போது பார்வையாளர்களுக்குக் கிடைப்பது பாசிடிவ் எனர்ஜி!

தியாக பிரம்ம கான சபாவுக்காக இவர்களின் கச்சேரி. இளவல் குமரேஷ், லதாங்கியைக் கரம் பிடித்து மேடைக்கு அழைத்து வந்தார். மந்த்ர ஸ்தாயியில் மெதுவாக ஆரம்பித்து, குழைவுகளில் லதாங்கிக்குப் பொலிவு கூட்டி, 18 படிகள் ஏறுவதுபோல் மேல் காலம் நோக்கிப் பயணித்து, 'சுவாமியே சரணம் அபயம்...’ பாடலில் ஐயப்பனிடம் அருள் வேண்டி... பின்னர், டேபிள் டென்னிஸ் கணக்கில் அண்ணன்-தம்பி மாறி மாறி வாசித்த ஸ்வரங்கள் சூப்பர்!

காம்போதியை எடுத்து ஆட்கொண்டார் கணேஷ். இவருடைய வில்லும் விரல்களும் வயலினில் வித்தை புரிகின்றன. காம்போதி சங்கதிகள், சிம்பொனி effect-ல் தெறித்து விழுந்தன. கனமான இந்த ராகம் கம்பீர நடை போட்டது. தொடர்ந்த பல்லவி வரிகளில் ராகமாலிகை... தொடர்ந்த ஸ்வரங்களிலும் டிட்டோ. இந்த மேளாவில் பல்வேறு ராகங்கள் பளிச் பளிச் என்று மின்னலாகத் தோன்றி மறைந்தன. அரித்வாரமங்கலம் ஏ.கே.பழனிவேல் தவில். அனந்த் ஆர்.கிருஷ்ணன், மிருதங்கம்/தபேலா. தனியில் இவர்கள் பொழிந்தது பலத்த இடியுடன்கூடிய தாள மழை.

எல்லாம் சரி, அனந்த் ஒருவரே எதற்காக மிருதங்கமும் தபேலாவும் மாறி மாறி வாசித்துக்கொண்டிருந்தார்? இதனால், தபேலா கலைஞர் ஒருவர் பிழைப்பில் மண் விழுந்ததுதான் மிச்சம்!

சரிகமபதநி டைரி 2013

லால்குடி சங்கீதம் என்றால் அது Branded ரகம். உயர்வான இந்த சங்கீதத்தை நம்பி ஏமாந்தவர்கள் எவரும் இல்லை.

அந்த நாட்களில் லால்குடி ஜெயராமனும், அவரது சகோதரி ஸ்ரீமதி பிரும்மானந்தமும் இணைந்து வாசித்த வயலின் டூயட், உலக அளவில் பிரபலம். அவர்கள் போட்டுக் கொடுத்த ராஜபாட்டையில் இன்று பயணித்து வருகிறார்கள், லால்குடி ஜி.ஜெ.ஆர்.கிருஷ்ணனும் லால்குடி விஜயலட்சுமியும்.

மியூசிக் அகாடமியில் அண்ணனும் தங்கையும் நிகழ்த்திய கச்சேரியில் மந்தாரி வர்ணத்தில் ஆரம்பித்து ஹம்சானந்தி தில்லானா வரை ருசிமிக்க ராத்திரி சாப்பாடு, அஜீரணம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை!

விஜயலட்சுமி வாசித்த தன்யாசி, கல்நெஞ்சங்களையும் கரைத்துவிடக்கூடியது. வெண்ணெயாக வழுக்கிக்கொண்டு சங்கதிகள் விழ, பிடிகளில் அழுத்தம் கொடுத்து அசத்தலாக வாசித்தார். மெயினாக காம்போதி. இந்த ராகத்தை கிருஷ்ணன் குத்தகைக்கு எடுத்துக் கொண்டார். தியாகராஜரின் லால்குடிப் பஞ்சரத் தினங்களில் ஒன்றான 'மஹதி ப்ரவ்ருத்த ஸ்ரீமதி...’ பாடல். ஸ்ரீரங்கத்தில் அபாரமான ஒரு காம்போதியில் 'ஓ ரங்கசாயீ...’ பாடிய தியாகராஜர், பக்கத்து லால்குடிக்கு வந்தபோது முற்றிலும் வேறு ஒரு கோணத்தில் காம்போதியில் 'மஹதி’யைப் படைத்தது பிரமிப்பானது!

ராகம்-தானம்-பல்லவிக்கு கோசலம் ராகம். கம்பனின் கோசல நாட்டில் செழிப்பு தாண்டவம் ஆடியது. உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற வேறுபாடு கிடையாது. கிருஷ்ணன் வாசித்த கோசலத்திலும் முழுச் செழிப்பு. சங்கதிகளில் உயர்வு தாழ்வு இல்லாமல் சமமான இனிமை!

அகாடமியின் துல்லியமான ஒலிபெருக்கி சாதனத்தின் உதவியோடு, லால்குடிக்குப் பக்கத்தில் திருச்சி (சங்கரன்) உட்கார்ந்து வாசித்த மிருதங்கம் டாப் கிளாஸ். கஞ்சிரா புருஷோத்தமன், டார்ச் லைட் மாதிரியான வெளிச்சக் கீற்றல்!

சரிகமபதநி டைரி 2013

'சீஸனில் இவர்களை நிச்சயம் கேட்க வேண்டும்’ என்று ஐந்தாறு கச்சேரிகளை பலரும் குறித்துவைத்துக்கொள்வது உண்டு. அவற்றில் ஒன்று ரஞ்சனி-காயத்ரி சகோதரிகளின் கச்சேரி. இவர்களின் மிகப் பெரிய ப்ளஸ், நெஞ்சைத் தொடும் பாவம் நிறைந்த பாட்டு. உருக்கமாகப் பாடி, கேட்பவர்களையும் உருக்கிவிடக்கூடிய இசைக்கு இவர்கள் சொந்தக்காரிகள்!

கலாரசனாவில் ஹம்ஸத்வனியில் வர்ணம். தொடர்ந்தது புரந்தரதாசரின் பாடல், அடாணாவில். அடுத்து லதாங்கி, ரஞ்சனி வசம். சின்மயா ஹெரிடேஜ் சென்டரின் தபோவன் ஹாலில் பிரார்த்தனை செய்யும் விதமாக லதாங்கியை வழங்கினார் ரஞ்சனி. பின்னர், இருவருமாக பாபநாசம் சிவனின் 'பிறவா வரம் தாரும்...’ பாடலின் ஆரம்ப வரியை நிரவலுக்கு எடுத்து, வரம் கேட்டு ஆண்டவனைக் கெஞ்சியும் அதட்டியும் பாடினார்கள்!

சரிகமபதநி டைரி 2013

பல்லவிக்கு சிந்துபைரவி ராகம். சகோதரிகள் இதை 50:50 பிரித்துக்கொண்டார்கள். எல்.கே.ஜி. வரை சீராட்டி வளர்த்துவிட்டு பொறுப்பை காயத்ரியிடம் ஒப்படைத்தார் ரஞ்சனி. இந்துஸ்தானி ஸ்டைலில் அதை வளர்த்திச் சென்றார் காயத்ரி. 'வாவ்... பஹுத் அச்சா ஆலாப்!’

அருண்பிரகாஷ் மிருதங்கம். பாடகரை எந்தவிதத்திலும் உபத்திரவப்படுத்தாமல் வாசிப்பதில் மன்னர். பெரும்பாலான நேரங்களில் மிருதுவாகத் தடவியும், தேவையான நேரத்தில் அடித்தும் வாசித்து கச்சேரியைத் தூக்கிவிடக்கூடியவர். தொப்பியில் மட்டுமே சில நிமிடங்களுக்கு இவர் வாசிப்பதைக் கேட்பது, சுகானுபவம்.

ஆடிட்டோரியத்தில் ஆறாவது வரிசையில் எட்டாவது இருக்கையில் உட்கார்ந்திருப்பது யார் என்று அருண்பிரகாஷைக் கேட்டால் சொல்லிவிடுவார். அந்த அளவு சுற்றிலும் கழுத்துத் திருப்பி நோட்டம் விட்டபடி இருப்பார்! அன்று அனிருத் ஆத்ரேயா கஞ்சிரா!

மினிமம் கியாரன்டி பாடகி காயத்ரி கிரீஷ். நேரத்தை வீணடிக்காமல் ஒழுங்காகத் தயார்செய்து வந்து, எந்தவித டென்ஷனும் குளறுபடியும் இல்லாமல் தேர்வு எழுதி, எளிதாக பாஸ் செய்துவிடும் ரகம். சேஷகோபாலனின் தயாரிப்பு.

பார்த்தசாரதி சுவாமி சபா கச்சேரியை பந்துவராளி வர்ணத்துடன் தொடங்கிய காயத்ரி கிரீஷ், தோடியில் தியாகராஜர் கீர்த்தனை, ஹரிகாம்போதியில் முத்தையா பாகவதர் பாடல் என்று தெளிவான உச்சரிப்பில் சின்ஸியராகப் பாடினார். மசாலாப் பொடி தூவும் வியாபாரம் எல்லாம் இவரிடம் கிடையாது.

பல்லவிக்கு இந்துஸ்தானி ராகமான மதுகோன்ஸ். 10 நிமிடங்களுக்கு பேகம் ஆக மாறி, வட இந்திய ஸ்டைலில் ராகத்தை இழுத்துப்பாட, அதை அப்படியே வயலினில் பிரதிபலித்தார் மைசூர் ஸ்ரீகாந்த். 'சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா?’ என்ற கோபாலகிருஷ்ண பாரதியின் பாடல் வரியை பல்லவி வரியாக மதுகோன்ஸில் காயத்ரி பாடியது, அமாவாசை-அப்துல்காதர் சம்பந்தம்! இது மாதிரி இந்துஸ்தானி ராகத்தில் பல்லவி வரிகளும் இந்தியிலே அமைந்தால் பொருத்தமாக இருக்குமே! உதாரணமாக, 'ஆவோ யமுனா கே தீர் கிருஷ்ணா! ஆஜ் ஹி ஆவோனா!’

சரிகமபதநி டைரி 2013

முழுவதும் தெய்விகம் (Essentially Divine). இது சாஸ்வதி பிரபு, இந்த சீஸன் கச்சேரிகளுக்கு எடுத்துக்கொண்ட தீம். இதில் ராகம், நிரவல், ஸ்வரங்களுக்கு இரண்டாவது இடம்தான். பாடல்களுக்கு மட்டுமே முக்கியத்துவம்.

தீமாட்டிக் என்பதால், புல்லாங்குழல், தபேலா, மிருதங்கம், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் என்று பக்கவாத்தியக் குழு. வயலின், மிருதங்கம் மட்டும் இருந்தால் மாமூல் கச்சேரி ஆகிவிடுமே!

நாரதகான சபாவுக்காக மினி ஹாலில் நடந்த நிகழ்ச்சியில் சாஸ்வதியின் வித்தியாசமான குரலில் வெவ்வேறு வாக்கியேயக் காரர்களின் பாடல்களை அடுத்தடுத்துக் கேட்டுக்கொண்டுபோனது மாறுபட்ட அனுபவம். கல்யாணியில் மட்டும் விரிவான ஆலாபனை - நிதி சாலாசுகமா கீர்த்தனை - ஸ்வரங்கள் எல்லாம் உண்டு!

வித்தியாசமான அனுபவம் எனினும், எல்லாமே தெய்விகம் என்பதை நிலைநிறுத்த சாஸ்வதி இன்னும் கொஞ்சம் மெனக்கெடணும்!

டெய்ல் பீஸ்: ஜனவரி முதல் தேதி மியூசிக் அகாடமியின் சதஸ். இங்கு சீஸனில் பாடியவர்களிலிருந்து பரிசுக்காக சிலரைத் தேர்வுசெய்து, மேடையில் உட்காரவைப்பார்கள், சான்றிதழ் பெறுவதற்கு. விழா தொடங்கிய சில நேரம் கழித்து, மல்லாடி சகோதரர்கள் ஒரே கலர் ஜிப்பாவில் மேடைக்கு வந்து பரிசு பெறுபவர் களோடு சேர்ந்து உட்கார்ந்துகொண்டார்கள். சரி, மல்லாடிக்கும் விருது உண்டு என்று நினைத்தேன். ஆனால், சற்று நேரத்தில் இருவரும் எழுந்து சென்றுவிட்டார்கள். அவர்கள் பெயரும் கடைசி வரை அறிவிக்கப்படவில்லை! மட்டுமல்ல, சகோதரர்கள் எதற்காக அங்கே வந்தார்கள், ஏன் எழுந்து போனார்கள் என்பது அகாடமி காரியதரிசிகளுக்கே தெரியவில்லை. தேவுடா!!

- டைரி புரளும்...