Published:Updated:

வேடிக்கை பார்ப்பவன் - 12

நா.முத்துக்குமார், ஓவியங்கள்: செந்தில்

வேடிக்கை பார்ப்பவன் - 12

நா.முத்துக்குமார், ஓவியங்கள்: செந்தில்

Published:Updated:
##~##

 வீடென்பது யாதெனில்...

''எனது புறநகர் குடியிருப்பு
வயல்களின் சமாதி என்று
நினைவுபடுத்தியவை
தவளைகளே! ''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

                                 - சுகுமாரன் - 'பூமியை வாசிக்கும் சிறுமி’ கவிதைத் தொகுப்பில் இருந்து...

ன்னமும் இவனுக்கு லிஃப்ட்டில் செல்வது என்றால், அடிவயிற்றில் இருந்து ஒரு பயம் லேசாக எட்டிப் பார்க்கும். ஒவ்வொரு முறை லிஃப்ட்டுக்குள் நுழையும்போதும், திறந்து மூடும் சவப்பெட்டிக்குள் நுழைவதுபோலவே நினைத்துக்கொள்வான். முதன்முறையாக ரயிலின் ஓட்டத்தைப் பார்த்து மரத்துக்குப் பின்னால் ஒதுங்கிய காட்டுமிராண்டியின் பயம் அது.

தலைமுறைகள் கடந்து இவன் டி.என்.ஏ- வில் ஏதோ ஒரு முப்பாட்டன் அந்தப் பயத்தைக் கடத்தியிருக்கிறான். மாநகரத்துக்கு வந்த புதிதில், உயரமான கட்டடங்களுக்குள் நுழையும்போதெல்லாம், இவன் பழைய பயத்துடன் லிஃப்ட்டைப் புறக்கணித்து கால்களாலேயே அந்த உயரங்களைத் தாண்டியிருக்கிறான்.

இவன் இப்படியென்றால், இவன் மனைவிக்கு எஸ்கலேட்டரைக் கண்டால் பயம். சேலையின் கால் பகுதி படிக்கட்டில் மாட்டிக்கொண்டால் என்னாவது? எஸ்கலேட்டரில் கால் வைக்கும்போது தலைகீழாக விழுந்துவிடுவேனா..? எனப் பல சந்தேகங்கள் கேட்டு இவன் அச்சத் தீயில் நெய் ஊற்றுவாள்.

இவன் என்னமோ பெரிய வீரன் மாதிரி, 'இது நம்மள மேல தூக்கிட்டுப் போற ஒரு மெஷின். அவ்வளவுதான். இதைப் பார்த்துப் பயப்பட வேண்டாம்’ என்று கடைசி படிக்கட்டில் இருந்து காலை எப்படி எடுப்பது என்று பாடம் நடத்துவான். எஸ்கலேட்டரில் கால் வைத்ததுமே, தோளோடு சேர்த்து மனைவியைப் பிடித்துக்கொள்வான். தன் பாதுகாப்புக்காகத்தான் கணவன், தோள் சாய்த்துக்கொள்கிறான் என்று மனைவி நினைத்தாலும், இவனுக்குள் இருக்கும் அச்சத்தால்தான் அவளைப் பிடித்துக்கொள்கிறான் என்று இன்று வரை அவளுக்குத் தெரியாது. காட்டுமிராண்டிக்கு ஏற்ற காட்டுச்சி!

வேடிக்கை பார்ப்பவன் - 12

வன் இப்போது வசிப்பது ஒரு அபார்ட்மென்டின் நான்காவது தளத்தில். மொத்தம் ஆறு பிளாக்குகள். 400 ஃப்ளாட்டுகள். குடும்பத்துக்கு ஐந்து பேர் என்று கணக்கிட்டாலும் 2,000 பேர் வசிக்கும் ஒரு நவீன காலனி அது. இவன் வசிப்பது, 'Sun flower’ பிளாக்கில். ஒவ்வொரு முறை அதற்குள் நுழையும்போதும் வான்கா வரைந்த சூரியகாந்தி ஓவியமும், கூடவே காதலிக்காக அறுத்துக்கொடுத்த அவன் காதும்தான் இவன் ஞாபகத்துக்கு வரும்.

ஒவ்வொரு நாளும் இவன் லிஃப்ட்டையும், லிஃப்ட் இவனையும் எதிரிகளைப் போல சந்தித்துக்கொள்வார்கள். சில மாதங்களுக்கு முன்பு பள்ளி விட்டு வந்த மகனுடன் லிஃப்ட்டுக்குள் நுழைந்தான். அங்கே ஏற்கெனவே ஒருவர் நின்றிருந்தார். ஆறரை அடி உயரத்தில் செக்கச்செவேலென இருந்த அவரை, இவன் பல முறை பார்த்திருக்கிறான்; பேசியது இல்லை. இவன் இருக்கும் பிளாக்கில் ஏதோ ஒரு தளத்தில் வசிக்கிறார்.

அவர் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் உயர் அதிகாரியாகப் பணியாற்றுகிறார் என்றும், காரில் செல்லும்போது இவன் எழுதிய பாடல்களை விரும்பிக் கேட்பார் என்றும் அவரது டிரைவர் இவனிடம் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. இவன் அவரைப் பார்த்து ஒரு சிநேகப் புன்னகை வீசினான். அவர் லேசாகத் தலையாட்டி இவனிடம், ''எந்த ஃப்ளோர்ல இருக்கீங்க?'' என்றார்.

இவன் ''ஃபோர்த் ஃப்ளோர்'' என்றான்.

''ஹவுஸ் ஓனரா? டெனன்ட்டா?''

''டெனன்ட்தான் சார்.''

''ஓ! வாடகை வீடா?'' என்று வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டார். அந்த 'ஓ’வின் அலட்சியத்தாலும் முகத் திருப்பலிலும், இவன் சற்றுக் காயப்பட்டுப்போனான்.

''ஹலோ சார்'' என்றான் அவரைப் பார்த்து.

''என்ன?'' என்றார் எரிச்சலுடன்.

''இந்த உலகமே ஒரு வாடகை வீடுதான். இன்னும் சொல்லப்போனா, நம்ம உடம்பே ஒரு வாடகை வீடுதான். இங்க யாரும் எதுக்கும் ஓனர் இல்லே'' என்றான்.

இதற்குள் அவர் இறங்கவேண்டிய ஃப்ளோர் வந்ததும், ''அதனால்தான் நீங்க இன்னமும் வாடகை வீட்டிலேயே இருக்கீங்க'' என்று மீண்டும் காயப்படுத்திவிட்டுக் கடந்து போனார். லிஃப்ட் இயங்கத் தொடங்கியதும் இவர்களின் உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த மகன், ''அப்பா வாடகை வீடுனா என்ன?'' என்றான்.

இவன் அவனுக்கு எப்படிப் புரியவைப்பது என்று யோசித்துக்கொண்டிருக்கும்போது, 'ஆதவன் நான் சொல்றேன்’ என்ற குரல் கேட்டு, அப்பனும் பிள்ளையும் திடுக்கிட்டார்கள்.

''யாரோ பேசுறாங்கப்பா'' என்றான் மகன் ஆச்சர்யத்துடன்.

'யாரோ இல்ல. மேலே நிமிர்ந்து பாரு’ என்ற குரல் கேட்டு மேலே நிமிர்ந்தார்கள்.

ஒரு சின்ன வட்டத்துக்குள் கோடு கோடுகளாகப் பொருத்தப்பட்டிருந்த லிஃப்ட்டின் மின் விசிறியில் இருந்து, மீசையை ஆட்டியபடி ஒரு கரப்பான் பூச்சி வெளிவந்தது.

''வணக்கம் கவிஞரே'' என்றது கரப்பான் பூச்சி.

இவன் வணக்கம் சொன்னான்.

''அப்பா, கரப்பான் பூச்சி பேசுதுப்பா!'' என்றான் மகன் ஆச்சர்யத்துடன்.

கரப்பான் பூச்சி பேசியது.

''ஒரு கவிதை சொல்லலாமா?''

''அப்பா... கவிதையாம்ப்பா... சொல்லு சொல்லு. என்ன கவிதை?'' என்று துள்ளிக் குதித்தான் மகன்.

''வாடகை வீட்டைப் பத்தித்தான்! கேக்கிறியா?'' என்றது கரப்பான் பூச்சி.

''ம்'' என்றான் மகன் ஆர்வத்துடன்.

''இது மலையாளக் கவிஞர் ஸ்ரீவத்ஸன் எழுதி, கே.வி.ஷைலஜா தமிழில் மொழிபெயர்த்தது'' என்று கரப்பான் பூச்சி சொன்ன அந்தக் கவிதை...

வேடிக்கை பார்ப்பவன் - 12

''நமதில்லை மகனே,
இந்த வீடும் கதவுகளும்
மாடங்களும் படிக்கல்லும்
வெளிப்புற வேலிப்படர்ப்பும்
பொன் பூக்களும்.

நமதில்லை மகனே,
இந்த வீடும் வாசலும்
நந்தியாவட்டை நிழலும்
அரளியும் இலஞ்சிப்பூ மணமும்.

நமதில்லை மகனே,
இந்த வீடும் குளமும்
கோயிலும் குளிர் சாமரம் வீசும் காற்றும்.

நமதில்லை மகனே,
இந்த வீடும் சித்திர விதானங்களும்
கண்ணாடி பார்க்கும் மரச்சிற்பக் கன்னிகளும்.

நமதில்லை மகனே,
இந்த வீட்டின் கோடியில்
தொங்கவிட்டிருக்கும்
ஆலோலம் கிளிக் கூடும்
நெல்மணிக் குதிர்களும்.
(கூட்டில் வந்து உட்காரும்
கிளியைக் காணாமல் நீ
துக்கத்தில் தேம்பின எத்தனை
அந்திகள் போயிருக்கிறது
இந்த வாசம் வழியாக!)

நமதில்லை மகனே,
இந்த வீடும் வீட்டின் சங்கீதமும்.
நாம் போகிறோம்,
கால தேசங்கள் அறியாமல்
பூமியின் எல்லைக்கோடு வரை
முடிவில்லா யாத்திரையாய்...

யாத்திரையின் இடையில்
ஒரு நொடி தலைசாய்க்க
வீடு தேடிப் போகிறோம் மகனே நாம்!''

புரிந்தும் புரியாமலும் மகன் கேட்டுக்கொண்டிருக்க, இவன் தன் உணர்வை வரிகளாகச் சொன்ன ஸ்ரீவத்ஸனையும் கரப்பான் பூச்சியையும் நன்றியுடன் பார்த்தான்.

திருமணத்துக்குப் பிறகு எத்தனை வீடுகள் இவன் மாறியிருக்கிறான்! இவன் மனைவி, மிக்ஸியில் எதையோ அரைத்துக்கொண்டிருப்பாள். காலிங்பெல்கூட அடிக்காமல், ஹவுஸ் ஓனர் பெண்மணி உள்ளே நுழைவார்.

''ஆணி அடிக்கக் கூடாதுனு சொன்னேன்ல! எதுக்கு ஆணி அடிக்கிறீங்க?''

''நாங்க ஆணி எதுவும் அடிக்கலயே!''

''சத்தம் மாடி வரைக்கும் கேக்குது''

''மிக்ஸில் சட்னி அரைச்சிட்டு இருந்தேன்'' என்று மனைவி சொன்னதும்,

''இனிமே சத்தம் போடாத மிக்ஸி வாங்குங்க'' என்று ஹவுஸ் ஓனர் பெண்மணி வெளியேறுவதைப் பார்த்து இவன் பதைபதைத்துப் போய், அடுத்த மாதமே அந்த வீட்டைக் காலி செய்தான்.

இன்னொரு வீட்டில் தண்ணீர் பிரச்னை. வாட்டர் டேங்க் துருப்பிடித்திருக்க, குழாயைத் திறந்தால் செந்நிறத்தில் சக்கை சக்கையாக இரும்புத் துண்டுகள் பக்கெட்டில் மிதந்தன. அந்தக் காலகட்டத்தில்தான் ஐ.டி. இளைஞர்கள் மாநகரத்தில் மும்முடங்காக வாடகையை ஏற்றியிருந்தனர். இவன் சினிமாக்காரன் என்பதால், நான்கு மடங்கு வசூலித்துக்கொண்டிருந்தார் ஹவுஸ் ஓனர். அவரை வீட்டுக்கு வரவழைத்து தண்ணீர் பக்கெட்டைக் காட்டினான்.

''இரும்பும் ஒரு சத்துதான் சார். உடம்புக்கு நல்லது. இதயெல்லாம் பாத்தா சிட்டியிலே வாழ முடியுமா? அதுவும் நீங்க குடுக்கற வாடகையில?'' என்று சிடுசிடுத்தபடி வெளியே போனார்.

இவனுக்குள் இருக்கும் வைராக்கிய வேதாளம் வெளியே கிளம்பி, இப்போது இருக்கும் இந்த வீட்டுக்கு குடி வந்தான். இந்த ஹவுஸ் ஓனர் தஞ்சாவூரில் டாக்டர். இந்த மூன்று ஆண்டுகளில் ஒருமுறைதான் அவரைச் சந்தித்திருக்கிறான். வாடகை வீட்டிலும் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும் சுகத்தைத் தந்துகொண்டிருப்பவர்.

லிஃப்ட்டில் பார்த்த கரப்பான் பூச்சி இவர்களது சிநேகிதன் ஆனது. கரப்பான் பூச்சிக்கு மகன் 'டிங்கு’ என பெயர் வைத்தான். தினமும் காலையில் பள்ளிக்குக் கிளம்பும்போது, மகனுக்கான உணவை இவன் மனைவி டிபன் பாக்ஸில் எடுத்துவைக்கும்போதே ''அம்மா, டிங்குவுக்கு?'' என்பான் மகன்.

பிளாஸ்டிக் தட்டில் பரிமாறப்பட்ட இட்லியையோ, பூரியையோ, உப்புமாவையோ, கீரை சாதத்தையோ கடவுளுக்குப் படைக்கச் செல்லும் பக்தனைப் போல, உள்ளங்கையில் ஏந்திக்கொண்டு இவனுடன் லிஃப்ட்டுக்குள் நுழைந்ததும் மகன், ''டிங்கு... சாப்பிட வா'' என்பான். மின்விசிறிக்குள் இருந்து வெளியே வந்து டிங்கு மீசையை ஆட்டும்.

இன்று வரை டிங்கு அந்த உணவைச் சாப்பிட்டதா... இல்லையா என்று இவர்களுக்குத் தெரியாது. ஆனால் அடுத்த முறை லிஃப்ட்டுக்குள் நுழையும்போது அந்த உணவு காணாமல் போயிருக்கும்.

வேடிக்கை பார்ப்பவன் - 12

பள்ளி விட்டுத் திரும்புகையில் மகன் கேட்பான். ''டிங்கு, இன்னிக்கு என்ன பண்ணின?''

''தேர்ட் ஃப்ளோர் ஆன்ட்டி லிஃப்ட்டுக்குள் நுழைஞ்சதும் அழுதுக்கிட்டே இருந்தாங்க. அப்புறம் கண்ணாடியைப் பாத்து கண்ணைத் துடைச்சுக்கிட்டு வெளில போயிட்டாங்க. பாவம், அவங்களுக்கு என்ன கஷ்டமோ? ஒண்ணும் புரியாமப் பாத்திட்டே இருந்தேன்.''

''அய்யோ பாவம்'' என்பான் மகன்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வோர் உரையாடல். மகனும் டிங்குவும் பேசிக்கொண்டிருக்கும் ஒரு லிஃப்ட் கீழிறங்கும் நிமிடத்துக்கும் குறைவான  அந்தக் கணம், இவனுக்கு கடவுள் கொடுத்த வரமாகத் தோன்றும்.

நேற்று மகன், டிங்குவிடம் கேட்டான்: ''எதுக்கு லிஃப்ட்லயே இருக்க? பேசாம எங்க வீட்டுக்கு வந்துடேன். நாம ஒண்ணா சேர்ந்து விளையாடலாம்.''

டிங்கு சொன்னது, ''இல்ல ஆதவன், வாடகை வீடுனா என்னனு உன்னை மாதிரி ஒரு பையன் கேப்பான்ல? நான் உங்க வீட்டுக்கு வந்துட்டா... அந்தக் கவிதையை அவனுக்கு யாரு சொல்றது?''

ஒரு கணம் இவன் திகைத்துப்போனான்.

டிங்குவை கீழே இறங்கி வரச்சொல்லி, ஆத்மார்த்தமாகக் காலில் விழுந்து வணங்கினான். ஒரு மனிதன், பூச்சியின் காலில் விழுந்து வணங்குவதை, லிஃப்ட் ஆச்சர்யத்துடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது!

- வேடிக்கை பார்க்கலாம்...