Published:Updated:

பனிமலையில் ராக் பாடகன் உதயமாகிறான்! #RockDog

பனிமலையில் ராக் பாடகன் உதயமாகிறான்!  #RockDog
பனிமலையில் ராக் பாடகன் உதயமாகிறான்! #RockDog

கிராமத்தைச் சேர்ந்த நாய்க்கு ராக் இசைக்கலைஞனாகும் ஆர்வம். அந்த நோக்கத்துடன் நகரத்தைச் நோக்கி செல்லும் அது, தன் கனவை அடைந்ததா என்பதை சுவாரஸ்யமாக விவரிக்கிறது Rock Dog அனிமேஷன் திரைப்படம்.

பனிமலை சூழ்ந்திருக்கும் அழகிய பிரதேசம் அது. அமைதியானதும் கூட.  பெரும்பான்மையாக ஆடுகள் வசிக்கும் அந்தக் கிராமத்தின் இயக்கம் இரண்டே விஷயங்களில் அடங்கி விடுகிறது. ஒன்று, கம்பளி நெய்தல், இன்னொன்று இசை. அங்கு, ஆடுகளுக்கு பாதுகாப்பாக கம்ப்பா என்னும் திபெத்திய வகை நாயொன்று இருக்கிறது. அதனுடைய மகன் போடி (Bodi). இவர்தான் நமது ஹீரோ. இவர்களுக்கு உறுதுணையாக ஒரு வயதான காட்டெருமையும் உண்டு.

சுற்றியுள்ள ஓநாய்களால் அந்தக் கிராமத்திற்கு எந்நேரமும் ஆபத்து இருக்கிறது. சமயங்களில் ஓநாய்கள் கிராமத்தின் உள்ளே புகுந்து ஆடுகளைத் தாக்குவதுண்டு. கிராமத்தின் பாதுகாவலரான கம்ப்பா இதற்காக ஓர் உத்தியைப் பின்பற்றுகிறது. அதன்படி மிரட்டும் பாணியில் அமைந்த உருவங்களின் உள்ளே ஆடுகளை ஒளித்து வைத்து அவற்றை எல்லையில் நிறுத்தி நடமாட வைப்பது. இதன் மூலம் பயங்கரமான காவல்படை ஒன்று அங்கே இருக்கிறது என்பதான ஒரு தோற்றத்தை எதிரிகளுக்கு தர முடியும். இந்த உத்தி நடைமுறையில் சாத்தியமும் ஆகிறது. தூரத்திலிருந்து கண்காணித்துக் கொண்டிருக்கும் ஓநாய்கள், இந்தக் காவல்படையை உண்மை என நம்பி தயங்கி அங்கேயே நிற்கின்றன.

இந்தக் காவல்படையை தனக்குப் பிறகு தன் மகன் போடி சிறப்பாக கையாள வேண்டும் என்று கம்ப்பாவிற்கு விருப்பம். அதற்காக பயிற்சி தருகிறது.  'உனக்குள் இருக்கும் நெருப்பு எதிரிகளை அழிக்க வேண்டும் மகனே' ஆனால் நம் ஹீரோவுக்கோ இசையின் மீது காதல். தந்தை கம்ப்பா ஒளித்து வைத்திருந்த இசை வாத்தியம் ஒன்றை எப்படியோ தேடி எடுத்து அதை மீட்டிக் கொண்டே இருக்கிறது.

பல வருடங்களுக்கு முன்பே அந்தக் கிராமத்திலுள்ள இசை வாத்தியங்களையெல்லாம் ஓர் அறையில் போட்டு மூடி வைத்ததே கம்ப்பாதான். நாய்கள் இசைக் கொண்டாட்டத்தில் இருக்கும் சமயத்தில் ஓநாய்கள் ஊரினுள் புகுந்து விடுவதால் எப்போதும் பாதுகாப்பு உணர்வோடு இருக்க வேண்டும் என்பதால் இந்த ஏற்பாடு.

ஆனால், தன் மகன் இசை மீது பித்தாக இருப்பதை எப்படி தடுப்பது என்பது அதற்குப் புரியவில்லை. மிரட்டிப் பார்க்கிறது; கெஞ்சிப் பார்க்கிறது. எதுவும் நடப்பதில்லை.

அந்தக் கிராமத்தின் மீது பறந்து செல்லும் விமானத்திலிருந்து சில பொருட்கள் கீழே விழுவதை போடி பார்க்கிறது. அவற்றில் ஒன்று வானொலிப் பெட்டி. இயக்கிப் பார்த்தால் துள்ளலான ராக் அண்ட் ரோல் இசை. போடி மிக மிக உற்சாகமாகிறது.

ராக் இசையின் சூப்பர் ஸ்டாரான 'ஆக்னஸ் ஸ்கேட்டர்குட்' டின் பேட்டி அப்போது வானொலியில் ஒலிபரப்பாகிறது. இதைக் கேட்டவுடன் இன்னமும் உற்சாகமாகிறது போடி. எந்நேரமும் கிடாரை வைத்துக் கொண்டு மீட்டிக் கொண்டேயிருக்கிறது.

ஒரு கட்டத்தில் போடி தனது, தந்தையிடம் போய் துணிச்சலாக சொல்கிறது. 'நான் நகரத்திற்கு செல்கிறேன். ராக் இசைப் பாடனாகப் போகிறேன். பிரபல பாடகர் ஆக்னஸை சந்திக்கப் போகிறேன்."  கம்ப்பாவிற்கு கோபம் வருகிறது. ஆனாலும் கூடவிருக்கும் காட்டெருமை 'அவனுடைய ஆர்வத்திற்குத் தடை சொல்லாதே. சென்று பார்க்கட்டும். ஒருவேளை அவனுடைய நெருப்பு இசையின் மூலமாகத்தான் வருமோ என்னமோ' என்று ஆலோசனை சொல்கிறது.

'சரி.. உன் முயற்சியில் தோற்றுவிட்டால் உடனே கிராமத்திற்கு திரும்ப வேண்டும். சரியா?' என்கிற உத்திரவாதத்துடன் போடியை நகரத்திற்குச் செல்ல அனுமதிக்கிறது கம்ப்பா.

போடியின் கனவு நிறைவேறியதா, ராக் சூப்பர் ஸ்டாரைச் சந்தித்ததா, சுற்றியிருக்கும் ஓநாய்கள் அப்பாவி ஆடுகளை என்ன செய்தன, இசைப் பைத்தியமான போடி தனது கிராமத்திற்கு உதவியதா என்பதையெல்லாம் விறுவிறுப்பும் சுவாரசியமுமாக சொல்லியிருக்கிறார்கள்.

ஓநாய், புலி போன்ற விலங்குகளிடமிருந்து ஆட்டு மந்தையைக் காப்பாற்ற, கண்காணிக்க வளர்க்கப்படும் திபெத்திய வகை நாய்கள் தோற்றத்தில் வித்தியாசமானவை. வித்தியாசமான காதுகளும், குறும்பு கொப்பளிக்கும் கண்களும் என பார்க்க வேடிக்கையானவை. எனவே இதற்குப் பொருத்தமாக துள்ளலான நடையும் அப்பாவித்தனமுமாக போடியின் பாத்திரம் சுவாரசியமான தோற்றத்துடன் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இன்னொரு சுவாரஸ்யமான பாத்திரம், ராக் இசை சூப்பர் ஸ்டார் 'ஆக்னஸ் ஸ்கேட்டர்குட்'. அதுவொரு பூனை. அதனுடைய பிரமாண்டமான மாளிகையும் பாதுகாப்பு மாய்மாலங்களும், ரோபோக்களின் சேவையும், உளளேயிருக்கும் நவீன ரிகார்டிங் ஸ்டுடியோவும் அதன் அலட்டல்களும் சர்வதேச அளவில் பிரபலமான ஓர் இசைக்கலைஞனை நினைவுப்படுத்துகின்றன.

பாடல் ஒன்றை உருவாக்க முடியாமல் தவிக்கிறது ஆக்னஸ். தயாரிப்பாளர் வேறு அதனை அவ்வப்போது மிரட்டிக் கொண்டேயிருக்கிறார். அந்த நெருக்கடி சமயத்தில்தான் நமது ஹீரோ 'போடி', இசை கற்பதற்காக சூப்பர் ஸ்டாரின் வீட்டை முற்றுகையிடுகிறது. முதலில் அதைத் துரத்தும் ஆக்னஸ், பின்பு அது பாடுவதை நைசாக தன்னுடைய பாடலாக வெளியிட்டு அப்போதைய நெருக்கடியில் இருந்து தப்புகிறது. ஆனால், தன் கூட இருக்கும் ரோபோ பார்க்கும் பார்வையின் குற்றவுணர்வு தாங்காமல் மன்னிப்பு கேட்க போடியைத் தேடிச் செல்கிறது.

கலைஞர்களுக்கே உரிய வீழ்ச்சியும் உயர்வும் வெளிப்படும் இடம் இது. ரோபோவிற்கு அறவுணர்வு இருப்பது போன்ற கற்பனை சுவாரஸ்யமானது.

தன்னுடைய கிராமத்திற்கு எதிரிகளால் ஏற்படும் ஆபத்தை வீரத்தின் மூலமாக அல்லாது இசையின் மூலமாக போடி போக்கும் உச்சக்காட்சி அற்புதமானது.

ராக் இசையை அடிப்படையாகக் கொண்ட திரைக்கதை என்பதால் இசையமைப்பாளர் Rolfe Kent உருவாக்கிய பாடல்கள் அதிரடி சுவாரஸ்யத்துடன் உள்ளன. சீன கிராபிக் நாவல் ஒன்றின் அடிப்படையில் இந்த அனிமேஷன் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இயற்கையின் எழில் கொஞ்சும் போடியின் அழகிய கிராமம், அதைச் சுற்றிய பனிமலைகளின் அழகு, ஆங்கஸின் பிரமாண்டமான  மாளிகை, அதனுள் இருக்கும் வியக்க வைக்கும் நுட்பங்கள் போன்றவைகளுடன் அமைந்திருக்கும் திரைக்கதை. இந்தத் திரைப்படத்தை அற்புதமாக இயக்கியிருப்பவர் Ash Brannon. டாய் ஸ்டோரி, எ பக்ஸ் லைஃப் போன்ற பிரபலமான அனிமேஷன் திரைப்படங்களில் பங்கு பெற்றவர்.

குழந்தைகளுடன் இணைந்து கண்டு களிக்க வேண்டிய திரைப்படங்களில் இதுவும் ஒன்று.