Published:Updated:

வேடிக்கை பார்ப்பவன் - 13

நா.முத்துக்குமார், ஓவியங்கள்: செந்தில்

வேடிக்கை பார்ப்பவன் - 13

நா.முத்துக்குமார், ஓவியங்கள்: செந்தில்

Published:Updated:
##~##

 நிலாக் காலம்

 'எந்த ஊரில் எந்த நாட்டில்
எங்கு காண்போமோ?
எந்த அழகை எந்த விழியில்
கொண்டுசெல்வோமோ?
இந்த நாளை வந்த நாளில்
மறந்துபோவோமோ? ’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- கவியரசு கண்ணதாசன் ('பசுமை நிறைந்த நினைவுகளே...’ பாடலில் இருந்து)

ல்லாப் பிள்ளைகளையும் போலவே வளர்ந்து பெரியவன் ஆனதும், டாக்டர் ஆக வேண்டும் என்றோ, இன்ஜினீயர் ஆக வேண்டும் என்றோ சொல்லிக்கொடுத்து இவன் வளர்க்கப்படவில்லை. இவன் இவனாகவே வளர அனுமதித்ததால், படித்து முடித்ததும் என்ன வேலையில் சேரலாம் என்று இவன் நிறையக் கனவுகள் வைத்திருந்தான்.

அந்தந்த வயதுக்கு ஏற்ற எளிய, சிறிய கனவுகள். வெவ்வேறு முகவரிகளையும், வாசல் கோலங்களையும் கடந்தபடி கடிதங்கள் சுமக்கும் 'போஸ்ட்மேன்’ ஆக வேண்டும்; குழந்தைகளின் கையாட்டலுக்குத் தலை அசைத்தபடி கூட்ஸ் வண்டியின் கார்டாக கடைசிப் பெட்டியில் நின்று சிவப்புக் கொடி காட்டிச் செல்ல வேண்டும்; இரும்பு யானையைப் போல் கம்பீரத்துடன் அசைந்து வரும் ரோடு ரோலர் டிரைவர் ஆக வேண்டும்; 'மருதமலை மாமணியே முருகய்யா...’ என்று ஸ்பீக்கர் கட்டி முதல் ஆட்டத்துக்கு ஊர் மக்களை அழைக்கும் சீதாலட்சுமி டென்ட் டாக்கீஸில் டிக்கெட் கிழித்துக் கொடுக்க வேண்டும்... என எத்தனையோ கனவுகள். கலைத்துக் கலைத்து மீண்டும் அடுக்கப்படும் சீட்டுக் கட்டுகள்தானே கனவுகள்.

வேடிக்கை பார்ப்பவன் - 13

மூன்றாம் வகுப்பு படிக்கும்போது வகுப்பின் முதல் நாள் அன்று திலகவதி மிஸ் இவனிடம் கேட்டார், ''படிச்சு முடிச்சதும் என்ன ஆகப் போற?''

இவன் ஆர்வத்துடன் பதில் சொன்னான், ''எங்க வீட்டுக்குப் பக்கத்துல இருக்கிற காலேஜ்ல பியூன் வேலைக்குப் போவேன்.''

திலகவதி மிஸ் அதிர்ச்சியாகி, ''புரொஃபஸர் ஆவேன்னு சொன்னாப் பரவாயில்ல; பியூன் ஆகப் போறேன்னு சொல்றியே?'' என்று கேட்க, இவன் அதே ஆர்வத்துடன், ''இல்ல மிஸ் புரொஃபஸர், நாலைஞ்சு கிளாஸுக்குத்தான் போக முடியும். எங்க வீட்டுக்குப் பக்கத்துல இருக்கிற கணபதி அண்ணன் அந்தக் காலேஜ்லதான் பியூனா இருக்காரு. அந்தக் காலேஜ்ல அவரு மட்டும்தான் எல்லா கிளாஸுக்கும் போவாரு தெரியுமா?'' என்று பதில் சொன்னான். திலகவதி மிஸ் இவனை முறைத்துப் பார்த்துவிட்டு, அடுத்த பையனை நோக்கி நகர்ந்தார்.

இவன் வீட்டில் இருந்து பார்த்தால், காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியின் கட்டடம் தெரியும். நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம், அந்தக் கல்லூரிக்குச் சொந்தமாக இருந்தது. இவன் வீட்டை ஒட்டியிருந்த சாலையில் இருந்தே அந்த நிலத்தின் பரப்பளவு தொடங்கிவிடும். சிறுவயதில் அந்த நிலத்தில்தான் இவன் விளையாடித் திரிந்தான். அந்த மைதானத்தில் மாணவர்கள் தங்கும் விடுதி, கூழாங்கல் சப்திக்க வளைந்து நெளிந்து ஓடும் வேகவதி ஆறு, ஆற்றில் மேய்ந்துவிட்டு ஈர மண் தரையில் நட்சத்திரக் கால் பதிக்கும் வாத்துக் கூட்டங்கள், கையில் குச்சியுடன் அவற்றை விரட்டும் ஆடு, மாடு மேய்க்கும் சிறுவர்கள்... எனச் சிற்றில் ஆடித்தான் இவன் பாலகாண்டத்தைக் கடந்து வந்தான்.

இன்று வரை புல் மண்டிக்கிடக்கும் கல்லூரிக்குச் சொந்தமான அந்தச் சிறு வனத்தின் பெரும் வெளியில்தான் எத்தனையெத்தனை மரங்கள்? அங்கு இருக்கும் எல்லா மரங்களின் கிளைகளிலும் இவன் கால் ரேகைகள் பதிந்திருக்கின்றன. கண்ணாமூச்சி ஆட்டங்களில் இவன் ஒளிந்துகொள்ளும் முக்கிய இடம், அந்த மரங்களின் உச்சிக் கிளைகள்தான்.

கொடுக்காப்புளி மரத்தின் முள் கிழித்த காயத்துடன், பொன்வண்டுகள் பிடித்து கொட்டாங்கச்சி சிறையில் அடைத்து, அவை இடும் மஞ்சள் முட்டைகளையும் பச்சை நிறக் கழிவுகளையும் பார்த்துப் பரவசப்பட்டதும், கல்லூரிக்குப் பின்பக்கத்தில் படர்ந்திருக்கும் பெரிய பாதாம் மரத்தின் சருகுகளைத் தேடி ஈரம் அப்பிய பாதாம் கொட்டைகளைப் பொறுக்கி, செந்நிற நார் உரித்து பாதாம் பருப்புகளை ருசி பார்த்ததும், நாவல் மரங்களை கல்லால் அடித்து மண் உதிராப் பழங்களை உப்பிட்டு உண்டதும்... திரும்பி வாராத காலங்கள்.

அந்த மைதானத்தில்தான் இவன் தென்னை மட்டையில் செதுக்கிய பேட்டுடனும், சைக்கிள் டியூபில் செய்த பந்துடனும், கிரிக்கெட் விளையாடினான். கிரிக்கெட் மட்டுமா? கபடி... கபடி, ஐஸ் பால், கில்லித்தண்டு என நாளெல்லாம் ஆட்டங்கள்; நெஞ்சம் எல்லாம் ஞாபகங்கள். இவன் முதன்முதலில் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டது அங்குதான். முதன்முதலில் பீடி குடித்து, முதல் இருமலைப் பெற்றுக்கொண்டதும் பாம்புகள் திரியும் அந்த இடத்தில்தான்.

பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே அந்தக் கல்லூரியை இவன் அப்படி நேசித்தான். பள்ளி விட்டு வரும் மாலைகளிலும், சனி, ஞாயிறு விடுமுறைகளிலும், மிதிவண்டியில் அந்தக் கட்டடங்களைச் சுற்றிச் சுற்றி வருவான்.

'ப்ளஸ் டூ முடிச்சுட்டு, படிச்சா இந்தக் காலேஜ்லதான் படிக்கணும்’ என்று ஏங்குவான். 'அப்படி இந்தக் காலேஜ்ல படிச்சா, எந்த ரூம் நம்ம கிளாஸா இருக்கும்’ என்று ஒவ்வோர் அறையாக வெளியில் இருந்தே பார்த்து, ஜன்னலைத் திறந்தால் பாதாம் மரத்துக் கிளைகளும், பின்னணியில் ஓடும் வேகவதி ஆறும் தெரியும் அறையைத் தேர்ந்தெடுப்பான்.

ப்ளஸ் டூ படிக்கையில் இவன் வானியல் விஞ்ஞானி ஆக வேண்டும் என்று மீண்டும் ஒரு புதிய கனவை நோக்கி அடியெடுத்துவைத்தான். அதற்குக் காரணம், இவனுக்கு இயற்பியல் வகுப்பு எடுத்த சந்திரசேகர் மாஸ்டரும், ஸ்பெக்ட்ரோ மீட்டருக்குள் புலப்பட்ட ஏழு வண்ணங்களுடன் விரிந்த வானவில் தரிசனமும்தான். சந்திரசேகர் மாஸ்டர் இயற்பியலை அணுஅணுவாக அனுபவித்துச் சொல்லிக்கொடுத்தார். ''நான் டியூஷன் எடுக்க மாட்டேன். எது புரியலைனாலும் கிளாஸ் ரூம்லயே கேளுங்க. அப்படியே நேரம் இல்லைன்னா சனி, ஞாயிறு வீட்டுக்கு வாங்க. ஃப்ரீயா சொல்லித்தர்றேன்'' என்று இயற்பியல் சூத்திரங்களின் கதவுகளைத் திறந்துவிட்டார்.

ஐசக் நியூட்டனை, ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை, டாப்லரை, தாமஸ் ஆல்வா எடிசனை, கார்நாட் தியரியை அப்படிப்பட்ட சனி, ஞாயிறுகளில்தான் இவன் அறிந்துகொண்டான். ப்ளஸ் டூ முடிக்கும்போதே எம்.எஸ்சி., இயற்பியல் படிக்கும் மாணவனைவிட, அதிக ஞானத்தை அவர் இவனுக்கு அளித்தார்.

ப்ளஸ் டூ தேர்வில், இயற்பியலில் இவன் 95 சதவிகிதம் மதிப்பெண்கள் எடுத்து, இவன் ஆசைப்பட்ட அதே பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை இயற்பியல் வகுப்பில் சேர்ந்தான்.

வேடிக்கை பார்ப்பவன் - 13

அந்தக் கல்லூரி, பசுமை நிறைந்த நினைவுகளாக, பாடித் திரிந்த பறவைகளாக இவனை அணைத்துக்கொண்டது. இவன் பாடம் படித்தான். கட்டடித்து, நண்பர்களுடன் படங்கள் பார்த்தான். அவ்வப்போது பெண்கள் கல்லூரிப் பக்கம் ஒதுங்கி, பார்வைகளால் காதலும் செய்தான்!

கல்லூரிப் பருவம் என்பது, காலம் ஒரு மாணவனைக் கூட்டுப்புழுப் பருவத்தில் இருந்து வண்ணத்துப்பூச்சியாக மாற்றி வெளியே பறக்கவிடும் பருவம். இவன் சுதந்திரமாகப் பறந்தான்; பதின் வயதுகளின் பூந்தோட்டங்களில் மிதந்தான்; முள்மரங்களில் சிக்கி, இறகுகள் கிழிந்தான்; மீண்டும் வண்ணங்களைப் பூசிக்கொண்டு வானம் அளந்தான்; கைப்பிடிக்குத் தப்பிப்போன அந்த வண்ணத்துப்பூச்சியின் வண்ணங்கள், இன்றும் இவன் நெஞ்சுக்குள் கொட்டிக்கிடக்கின்றன.

கல்லூரியின் வகுப்புகளைவிட மரத்தடி நிழல்கள்தான் இவனுக்கு நிறைய நண்பர்களை அறிமுகப்படுத்தின. 'குண்டு’ சிவா, 'பேட்டை’ சிவா, 'பழைய சீவரம்’ சிவா, ஆர்.சிவா... என்று நான்கு சிவாக்கள் இவனுடன் படித்தார்கள். 'குண்டு’ சிவாவை ஒரு எம்.எல்.ஏ-வின் உதவியாளனாகவும், 'பேட்டை’ சிவாவைப் பேராசிரியராகவும், 'பழைய சீவரம்’ சிவாவை ஆஃப்ரிக்காவின் தான்சானியாவில் இன்ஜினீயராகவும், ஆர்.சிவாவை கோழிப் பண்ணையாளனாகவும் அந்தக் கல்லூரிதான் மாற்றியது!

அதிகாலை பூரிக்கு ஆசைப்பட்டு மைதானத்தைச் சுற்றிவந்து மூச்சு இரைத்து பின்னாட்களில் இவன் கைவிட்ட என்.சி.சி-யில் இவனுடன் பங்கேற்ற தமிழ்வளவனை கார்கிலுக்கு அருகில் பனிப்பொழிவில் ஏதோவொரு ரெஜிமென்டில் ராணுவ வீரனாக்கியதும், அகஸ்டின் செல்லபாபுவை டி.என்.பி.எஸ்.சி. எழுதவைத்ததும், வகுப்பின் முதன் மாணவன் சந்திரசேகரை கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் ரிசர்ச் அசிஸ்டென்ட் ஆக்கியதும், 'குட்லி’ என்று அழைக்கப்படுகிற சுதர்சனத்தை அமெரிக்காவில் ஐ.டி. தொழில் செய்ய அனுப்பியதும், செந்தில்குமாரை விவசாயத்துக்கே திருப்பி அனுப்பியதும், தேவகணேஷை உரக்கடை வைக்கச் சொன்னதும் அதே கல்லூரிதான்!

ஜி.ஆர்.கே. சாரின் பரபரப்பான வேகத்தையும், ஜி.பி. சாரின் அமைதியான கிண்டல்களையும், ஏ.ஆர்.பி. சாரின் 'இதைப் பாரும்மா...’ என்று ஆரம்பிக்கும் தொனியையும், வி.ஜே.ஆர். சாரின் தெலுங்கு கலந்த தமிழையும், கணிதம் எடுத்த எஸ்.ஜி. சாரையும், ஆங்கிலம் எடுத்த சுகந்தி மேடத்தையும், தமிழ் வகுப்பு எடுத்த விநாயகம் மற்றும் எஸ்.குருசாமி ஐயாக்களையும் எப்படி இவனால் மறக்க முடியும்?

அந்தக் காலத்தில் எல்லாப் பத்திரிக்கைகளிலும் இவன் கவிதைகள், கதைகள், கட்டுரைகள் என பரவலாக எழுதிக்கொண்டிருந்தான். அவற்றுக்கான சன்மானங்கள் மணியார்டரில் வரும். போஸ்ட்மேன் தெய்வசிகாமணி சார் இவன் பக்கத்து ஊர்க்காரர் என்பதால், கல்லூரிக்குக் கடிதங்கள் கொடுக்க வரும்போது, இவன் வகுப்புக்கே வந்து மணியார்டர் பணத்தைக் கொடுப்பார். ''எங்களைவிட நீதான் அதிகம் சம்பாதிக்கிற போலிருக்கே?'' என்று பேராசிரியர்கள் கிண்டல் செய்வார்கள்.

இவன் வகுப்பில் இவனுடன் டி.எஸ்.ராஜராஜனும் படித்தான். இவனைப் போலவே அவனும் கதை, கவிதை என்று எழுதிக்கொண்டிருந்ததால், கல்லூரி முடிந்து மாலையில் மரத்தடியில் இருவரும் அமர்ந்து கவிதைகள் எழுதுவார்கள். பனித்துளி, மலை அருவி, வரதட்சணை, முதிர்கன்னி, மூன்றாம் பிறை என்று எல்லா அமெச்சூர் கவிஞர்கள் போலவே ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுத்து ஹைக்கூ கவிதையோ, அதையும் தாண்டி ஆறேழு வரிகளையோ எழுதுவார்கள். அதிகபட்சம் அரை மணி நேரம்தான். அதற்குள் அவரவர் வலைகளில் எத்தனை மீன்கள் விழுந்தாலும் அது லாபம் என்பது கணக்கு. எப்போதாவது சில தருணங்களில் மீன்களுக்கு பதில் விண்மீன்களும் விழுவது உண்டு.

வேடிக்கை பார்ப்பவன் - 13

'நிலா’ என்ற தலைப்புக்கு

'அழுது புரண்டு
நான் அலறிய ராத்திரிகளில்,
நிலா இருந்தது.
சோறும் இருந்தது.
ஊட்டத்தான் தாயில்லை!’

என்று இவனும்...

'ஏழையின் பசிக்கு
எட்டாத தோசையாய்
தெரிந்தது நிலா!’

என்று அவனும்...

பின்பு 'வரதட்சணை’ எனும் தலைப்பில்

'மாமியார்க்கெல்லாம்
மரபுக் கவிதைதான்
அதிகம் பிடிக்கும்
சீர் கொண்டுவருவதால்!’

என்று இவனும்...

'ஜன்னல் கம்பிகளுக்குப் பின்
ஆயுள் சிறை
முதிர்கன்னிகள்!’

என்று அவனும் எழுதி முடித்த பின், அவன் கவிதைகளை இவனும், இவன் கவிதைகளை அவனும் படித்துப் பார்த்து எதை எந்தப் பத்திரிகைக்கு அனுப்பலாம் என்று தரம் பிரிப்பார்கள். நல்ல வரிகளுக்கு பரஸ்பரம் கை குலுக்கிக்கொள்வார்கள். அன்று கை குலுக்கிய டி.எஸ்.ராஜராஜனின் கைகள்தான் பின்னாட்களில் கோடம்பாக்கத்து சினிமாவை நோக்கி இவனை அழைத்துவரப் போகின்றன என்று, அன்று இவனுக்குத் தெரியாது!

- வேடிக்கை பார்க்கலாம்...