##~## |
ஆடை இல்லாதவன் அரை மனிதன் என்றால்... செல்போன் இல்லாதவன்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சுதந்திர மனிதன்!
எஸ்.உபேந்திரன், சென்னை-30.
நீங்களாவது சற்று எளிமையாக விளக்கித் தொலையுங்களேன்! கேயாஸ் தியரி (chaos theory)க்கும், பட்டாம்பூச்சியின் விளைவுக்கும் (Butterfly Effect) என்ன வித்தியாசம்?
இரண்டும் ஒன்றுதான்! எதிர்பாராத விளைவுகள்! விஞ்ஞானத்தில் லாஜிக் உண்டு. 'Chaos’ல் கிடையாது. அது விஞ்ஞானத்தை மீறியது. திடீர் என்று, இயற்கையில் கிறுக்குத்தனமாக, எதிர் பாராத விஷயங்கள் நடக்கும். ஆனால், அந்தக் கிறுக்குத்தனத்திலும் ஒரு கட்டுக்கோப்பு (order) உண்டு என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக் கிறார்கள். அதுதான் Chaos theory. 'There is a Method in madness’ என்று ஷேக்ஸ்பியர் சொன்னதைப்போல! 'பட்டாம்பூச்சி’ விஷயத்தில், ஏதோ ஆரம் பித்துக் கடைசியில் எங்கோ முடிகிறது. 'தலை சுற்றவைக்கும் செயின் ரியாக்ஷன்’! சுருக்கமாக... இதுபற்றிய ஒரு கதையே உண்டு (Folk lore)! -ஆணி கழன்றதால், லாடம் விழுந்தது. லாடம் இழந்ததால், குதிரை வீழ்ந்தது. குதிரை போனதால், வீரன் தொலைந் தான். வீரன் இல்லாததால், யுத்தத்தில் தோல்வி. போரில் தோல்வியால், ராஜ்ஜியம் வீழ்ந்தது! அதாவது, ராஜ்ஜியத்தின் வீழ்ச்சிக்குக் காரணம் ஒரு குட்டி ஆணி! - பட்டர்ஃப்ளை எஃபெக்ட்!

அ.அப்துல்காதர், சென்னை-45.
ஏழையின் நேர்மை, பணக்காரனின் நேர்மை என்ன வித்தியாசம்?
ஏழையின் நேர்மை தெய்வீகமானது. பணக்காரனின் நேர்மை அவரிடம் பணிபுரியும் எல்லோருக்கும் பயன்பெறும் அளவுக்கு சோஷலிசமானது!
ஜெ.யாசின், தஞ்சாவூர்.
மனித மூளையில் ஏன் அவ்வளவு மடிப்புகள்? இதனால் என்ன லாபம்?
ரொம்பச் சுருக்கமாக ஒரே ஒரு காரணம் - பரப்பளவைக் குறைக்கத்தான் (Surface area)! மடிப்புகளை எல்லாம் நீக்கினால் மண்டை மட்டும் மிகப் பெரிய பூசணி மாதிரி ஆகிவிடும்! தவிர, மூளைக்குள் மின் தொடர்புகளுக்கு (Connection) இப்படி இருப்பதுதான் வசதி. எலியின் மூளையைப் பார்த்திருக்கிறீர்களா? ரவுண்டாக, 'ஸ்மூத்’ஆக... கிட்னிபோல இருக்கும்!
எஸ்.சையது முகமது, சென்னை-93.
தஞ்சை பெரிய கோயில் கட்டப்பட்டு 1,000 ஆண்டுகள் ஆகின்றனவாமே... பொதுவாகக் கட்டடங் களின் ஆயுட்காலம் எத்தனை ஆண்டுகள்?
பிரமாண்டமான இயற்கைச் சீற்றங்கள் நிகழாமல் இருந்து, மற்றபடி அவற்றைக் கவனமாகப் பாதுகாத்து, பராமரித்து வந்தால் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குக் கட்டடங்கள் நிலைத்து நிற்கும். எகிப்தில் இன்றும் கம்பீரமாக உயர்ந்து நிற்கும் பிரமிடுகள் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவையே! ஆனால், கட்டின உடனேயே விழுந்துவிடும் பாலங்களை எழுப்பும் 'திறமை’ நம் நாட்டு கான்ட்ராக்டர்களுக்கு மட்டுமே உண்டு (நான்குறிப்பிடு வது காமன்வெல்த் விளையாட்டு அரங் கத்துக்கு வெளியே கட்டப்பட்ட பாலம்!)
எம்.சேவியர் பால், கோயம்புத்தூர்.
இன விருத்திக்காக பூனைகள் மறைவாகச் சேர்வதைப்போல அல்லாமல், நாய்கள் பகிரங்கமாகச் சேர்வது ஏன்?
நாய்கள் - ஓநாய் வம்சம். ஓநாய்கள் திறந்தவெளியில் கூட்டமாகச் செல்லும். போகிற வழியில் அவ்வப்போது பகிரங்கமாக உடலுறவு மேற்கொள்ளும். நாய்களும் அப்படியே. பரந்த வெளிகள் இன்று வீடுகள் உள்ள ரோடுகளாக மாறிவிட்டதற்கு நாய்கள் பொறுப்பல்ல! பூனை - புலி வம்சம். புலி அடர்ந்த காடுகளில், அநேகமாக இரவு நேரத்தில்தான் உடலுறவு மேற் கொள்ளும். (ஒரே ஜோடி!). பூனைகளும் அப்படியே!
என்.பிரபாகர், ஆ.புதூர்.
பொருளாதாரரீதியில் பெரிய தவறுகள் செய்துவிட்டேன். 15 வருட வாழ்வு வீணாகிவிட்டது. ஆனாலும் நம்பிக்கை மட்டும் இழக்கவில்லை. வயது 40 ஆகிறது. மேலும் நம்பிக்கை வார்த்தைகள் உங்களிடம் தேவை?

வீணான வருடங்களைத் திரும்பப் பெற முடியாது. அதை மறந்துவிட்டு புது வாழ்க்கையை - கூச்சப்படாமல், எளிமையாக, பழைய தவறுகளை திரும்பச் செய்யாமல் - தொடங்குங்கள்! கொலம்பஸ், ஜேம்ஸ் குக் இருவரும் 41 வயதில்தான் அமெரிக்காவையும் ஆஸ்திரேலியாவையும் கண்டுபிடித்தார்கள்!

க.நா.இராஜேஸ்வரன், மொரட்டுப்பாளையம்.
பெரியவர்களைப்போல் குழந்தைகளுக்கும் ரகசியம் உண்டா?
உண்டு. ஆனால், குழந்தைகள் 'உஷ்! இது ரொம்ப சீக்ரெட். யார்ட்டேயும் சொல்லாதே!’ என்று எல்லோரிடமும் சொல்லிவிடும்!
விஜயலட்சுமி, பொழிச்சலூர்.
'ஆவ்...’, 'ஏவ்...’ இரண்டையும் ஒப்பிட முடியுமா?
இரண்டாவது, அரசியல் தலைகள் செய்வது. அதற்குக் காரணம் மக்களாகிய நாம் தூக்கக் கலக்கத்தில்

செய்யும் முதலாவது!
கே.சங்கரன், சென்னை-88.
'ஹாய் மதன்’ பகுதியில் 'கர்ண கடூரம்’ என்பதற்கு கர்ணனைச் சம்பந்தப்படுத்தி விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. 'கர்ணம்’ என்றால் சம்ஸ்கிருத மொழியில் 'காது’ என்று பொருள். (உ-ம்: கஜகர்ணம் - யானைக் காது. காதைப் பொத்திக்கொள்ளும் அளவுக்குக் கடுமையான சொற்களைக் 'கர்ண கடூரம்’ என்று கூறுகிறோம். இதற்கும் மகாபாரதக் கர்ணனுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை மக(த)னே!
அது... நான் இன்னொரு 'ஆங்கிள்’லே... பதில் சொல்லலாம்னு பார்த்தேன்! ஹிஹி..!