Published:Updated:

அறிவிழி - 51

அண்டன் பிரகாஷ்

அறிவிழி - 51

அண்டன் பிரகாஷ்

Published:Updated:
##~##

 'Harvard Business Review’ - மேலாண்மை படிப்பவர்களும், பயிற்சி செய்பவர்களும் ஆர்வத்துடன் படிக்கும் இதழ். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இருந்து வருடத்துக்கு 10 முறை வெளியாகும் இந்த இதழின் கட்டுரைகள் பரவலாக வணிக உலகில் பயன்படுத்தப்படுவதைப் பார்க்கலாம். 2013-ம் ஆண்டில், புதுமையாக்கலில் பிரமிக்கவைத்த மூன்று நிறுவனங்கள் என்ற தலைப்பில் சென்ற மாத இதழில் கட்டுரை ஒன்று வெளி யாகியிருந்தது. ஃபேஸ்புக், ஆப்பிள், ட்விட்டர் போன்றவைதான் இதில் இருக்கும் என அசிரத்தையாகப் படிக்க ஆரம்பித்த எனக்கு, கடும் அதிர்ச்சி. கூகுள், அமேசான் என்ற இரண்டு நிறுவனங்களும் நான் எதிர்பார்த்தது தான். மூன்றாவது நிறுவனம் Tencent. சீனாவில் இருந்து இயங்கும் நிறுவனம் இது எனக் கேள்விப்பட்டது உண்டு. ஆனால், புதுமையாக்கலில் முன்னணி வகிக்கும் நிறுவனமாக Tencent என்ன செய்கிறது?

சீனாவுக்கு வெளியே பரவலாகத் தெரியாத இந்த அலைபேசித் தொடர்பு மென்பொருள் நிறுவனம் QQ என்ற உடனடிச் செய்தி (Instant Messaging) மென்பொருளையும், We Chat என்ற குறுஞ்செய்தி (SMS) மென்பொருளையும் தயாரித்து நடத்துகிறது. இந்த இரண்டு பிரிவுகளிலும் பலத்த போட்டி உண்டு. உதாரணத்துக்கு, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் Whats App மென்பொருளும், ஜப்பானில் இருந்து வெளியான Line மென்பொருளும் பல நூறு மில்லியன் பயனீட்டாளர்களைக் கொண்டவை. இந்தியாவில் Hike  அலை மென்பொருள், பயனீட்டாளர்கள் எண்ணிக்கையைக் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. இதைப் பயன்படுத்த ஸ்மார்ட்போன் தேவை இல்லை என்பது இந்தியாவில் பயனீட்டாளர்கள் அதிகரிப்பதற்குப் பின் இருக்கும் ரகசியம். ஃபேஸ்புக், ஸ்கைப் போன்றவற்றைப் பயன்படுத்தியும் பயனீட்டாளர்கள் ஒருவருடன் ஒருவர் தொடர்புகொள்ள முடியும் என்பது Tencent போன்ற அலைபேசித் தொடர்புத் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு முன் இருக்கும் இன்னொரு சவால்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அறிவிழி - 51

மென்பொருள் மூலம், அதே மென்பொருளைப் பயன்படுத்தும் மற்ற பயனீட்டாளர்களைத் தொடர்புகொள்ளும் App to  App Communication தொழில்நுட்பங்கள் நன்றாக முதிர்ச்சி அடைந்துவிட்டதால், வித்தியாசப்படுத்தி புதுமையைக் கொண்டுவருவது என்பது மிகவும் அரிது.

Tencent  புதுமையாக்கலைச் செய்தது, அதனது அடிப்படை தொழில்நுட்பத்தில் அல்ல. மாறாக, பயனீட்டை அடிப்படையாகக்கொண்டு பணம் ஈட்டும் முறையில். எப்படி?

விளக்குகிறேன். இலவசமாக உங்களுக்குக் கொடுக்கப்படும் அலைபேசி மென்பொருள்களின் வணிக நோக்கம் கீழ்க்கண்ட ஒன்றாக இருக்கும்.

பயனீட்டாளர்கள் அலைபேசிக்குள் தங்களது மென்பொருளைத் தரவிறக்கம் செய்வதுடன், அவர்களைத் தொடர்ந்து பயன்படுத்திக்கொண்டே இருக்கும்வண்ணம் வடிவமைத்து, அதன் மூலம் விளம்பரங்களைக் காட்டுவது. கூகுள், ஃபேஸ்புக், ட்விட்டர் எனப் பிரபலமான அனைத்து நிறுவனங் களும் மேற்கொள்ளும் பணம் ஈட்டும் முறை இதுதான்.

குறைந்த வசதிகள் கொண்ட மென்பொருளை இலவசமாகக் கொடுத்துவிட்டு, பயனீட்டாளர்களைக் கவர்ந்த பின்னர், அதே மென்பொருளின் மேம்பட்ட பதிப்பை விலைக்கு விற்பது இரண்டாவது வகை. இலவசப் பதிப்பில் விளம்பரங்களைக் காட்டிவிட்டு, மேம்பட்ட பதிப்பில் அவற்றை மறைத்துவிடுவது பொதுவாகப் பின்பற்றப்படும் டெக்னிக். வணிக மென்பொருள்கள் இந்த முறையை அதிகம் பயன்படுத்துவதைப் பார்க்கலாம்.

இலவசமாக மென்பொருளைக் கொடுத்துவிட்டு அதைப் பயன்படுத்தும்போது, கூடுதலாகத் தேவைப்படும் மெய்நிகர் உபகரணங்களை (Virtual Goods) சல்லி விலைக்குப் பயனீட்டாளர்களிடம் விற்பது மூன்றாவது வகை. இணையப் பயனீட்டாளர்களிடம் ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த Farmville போன்ற விளையாட்டு மென்பொருள்கள் இந்த முறையைப் பயன்படுத்துவது உண்டு. டிராக்டர், விதை போன்ற மெய்நிகர் பொருள்களை Farmville-க்குள் நீங்கள் வாங்கியிருக்கலாம்.

Tencent, இந்தக் கடைசி முறையைப் பயன்படுத்துவதில்தான் புதுமையாக்கலைச் செய்திருக்கிறது. தங்களது மென்பொருளைப் பயன்படுத்துவோருக்கு 'ஸ்மைலி’ போன்ற மெய்நிகர் பொருள்களை பில்லியன் கணக்கில் விற்றபடி இருக்கிறது இந்த நிறுவனம். 2013-ல் ஃபேஸ்புக்கின் வருமானத்தை மிஞ்சிவிட்டது Tencent. ஃபேஸ்புக்கைவிட உள்கட்டமைப்பு குறைந்த அளவே தேவை என்பதால், ஃபேஸ்புக்கைவிட அதிக லாபம் ஈட்டி அதகளம் செய்திருக்கிறது இந்த நிறுவனம்.

டெய்ல் பீஸ் : 2014-ம் வருடம் தகவல் வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக இருக்கப் போகிறது. 'செயல்படும் அலைபேசிகளின் எண்ணிக்கை’ (Active Subscriptions) உலகின் மக்கள்தொகை எண்ணிக்கையைவிட அதிகரிக்கப்போவது இந்த ஆண்டில்தான்!

- விழிப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism