Published:Updated:

'நல்ல வேளை நாங்க அதை மிதிக்கல!' - 'எரும சாணி' டீம் கலகல

ந.புஹாரி ராஜா
'நல்ல வேளை நாங்க அதை மிதிக்கல!' - 'எரும சாணி' டீம் கலகல
'நல்ல வேளை நாங்க அதை மிதிக்கல!' - 'எரும சாணி' டீம் கலகல

'நான், ஹரிஜா, எங்க கேமராமேன், எடிட்டர்னு எல்லாருமே ஒரே கிளாஸ். போன வருஷம் பி.எஸ்.ஜி காலேஜோட விஸ்காம் பேட்ச். படிக்கிறப்போ இருந்தே நிறைய குறும்படங்கள் பண்ணிக்கிட்டுதான் இருந்தோம். சரி நம்ம அன்றாட வாழ்க்கையில நடக்குற, நாம கவனிக்காத விஷயங்களை காமெடியா வீடியோ பண்ணலாமேன்னு தோணுனப்போ ஆரம்பிச்சதுதான் எரும சாணி யூடியூப் சேனல்- - நம்பிக்கையாக விஜய் பேச, க்யூட் எக்ஸ்பிரஷன்களாலே அதை ஆமோதிக்கிறார் ஹரிஜா. இளைஞர்களின் பல்ஸ் பார்த்து, குட்டி குட்டி ரியாக்‌ஷன்களால் கலகலப்பாக்கும் எரும சாணி சேனலின் ஸ்டார் ஜோடி இவர்கள்.

'ஆரம்பத்துல சேனலுக்கு ஜிகர்தண்டானுதான் பெயர் வைக்கலாம்னு முடிவு பண்ணி முதல் வீடியோவுக்கு லோகோ எல்லாம் ரெடி பண்ணிட்டோம், ஒரு நாள் நானும் எங்க கேமராமேனும் அவுட்டிங் போயிட்டு வந்தப்போ நான் சாணிய மிதிக்க போய்ட்டேன். ஆனா நண்பர் தடுத்துட்டாரு, அட எரும சாணின்னு அவர் சொல்லும்போதே என் மூளைக்குள்ள மணியடிச்சுருச்சு, இந்த பேரே நல்லாதானே இருக்குன்னு இதையே எங்க சேனலுக்கு வச்சுட்டோம். இப்போ பார்க்குறவங்க எல்லாம் 'ஏய் எருமசாணி விஜய்', 'எரும சாணி ஹரிஜா'ன்னு கூப்பிடுறாங்க, அய்யா ராசாக்களா சேனல்தான் எரும சாணி, நாங்க இல்லைன்னு சொல்லி புரியவைக்குறதே ஒரு எபிசோடுக்கு கன்டென்ட்டா தேத்தலாம்னா பாத்துக்கோங்க' என்கிறார் விஜய்.

'ஹரிஜான்னா பூமாதேவின்னு அர்த்தம். எனக்கு சின்ன வயசுல இருந்தே ஸ்கூல் ட்ராமா ஸ்கிரிப்டுன்னு எல்லாத்துலயும் பயங்கர ஆர்வம். அதுதான் இந்த வீடியோவுக்குள்ள என்னைக் கொண்டு வந்து விட்டுச்சு. 'நடிப்பேன்னு நினைச்சுக்கூட பாக்கல'னு எல்லாம் கதை விடமாட்டேன். மனசுக்கு பிடிச்சு பண்றேன், நிறைய பாசிட்டிவ் ஃபீட்பேக் வருது, சிலர் ஏய் ஓவர் ஆக்டிங் ஹரிஜான்னு மீம்ஸ் போடுவாங்க, அதுவும் கண்ணுல சிக்கும், ஆன கண்டுக்கிறது இல்ல.

இதுவரை ஆறு வீடியோ பண்ணிருக்கோம். எல்லாமே யூத் பல்ஸ் தான். காதல், பிரேக்கப், சிங்கிள்ஸ் லைஃப்னு எல்லாத்தையும் கலந்துகட்டி அடிக்கிறோம். சிலருக்கு பார்க்கும்போது, 'என்னடா வழக்கம்போல இதுலயும் பொண்ணுங்களைத்தான் கிண்டல் பண்றாங்களோ'னு தோணலாம், ஆனா பொண்ணுங்களே அந்த வீடியோக்களை பாத்துட்டு நல்லா இருக்குனுதான் சொல்றாங்க. அது மட்டும் இல்ல, எல்லா வீடியோவுலயும் ஃப்ரெண்ட்ஷிப்தான் முதன்மைப்படுத்தி சொல்லிருப்போம், ஆண் பெண் பேதமெல்லாம் எங்களுக்குள்ள இல்ல பாஸ்.

எல்லோருக்குமே சினிமா தான் கனவு, அதன் தொடக்கம்தான் இந்த வீடியோக்கள். நிறைய பேரு பார்த்துட்டு பாசிட்டிவா கமென்ட்ஸ் சொல்றாங்க. 'டார்லிங்' படத்தோட இயக்குநர் பார்த்துட்டு பாராட்டுனார். 'கயல்' படத்தோட ஹீரோ சந்திரன்  பார்த்துட்டு அரை மணி நேரத்துக்கு மேல போன்ல பேசினார். முதல் ரெண்டு வீடியோ ஷூட் பண்ணுனப்போ எல்லாம் பப்ளிக்ல ரொம்ப வினோதமா பார்ப்பாங்க, 'என்னடா கேமராவ தூக்கிட்டு வந்துட்டீங்களா'ன்னு. அதுக்குப் பிறகு எடுத்த வீடியோக்களை எல்லாம் ஆர்வமா எங்கள சுத்தி வந்து பார்ப்பாங்க. 'எரும சாணி எரும சாணி'ன்னு உற்சாகமாகிடுவாங்க. எங்களோட முதல் ஆடியன்ஸ் எங்க கேமராமேன்தான், ஷூட் பண்ணும்போதே சிரிக்க வேண்டிய இடத்துல அவரு சிரிக்கலைன்னா, கான்செப்ட் மொக்கைன்னு வேற கான்செப்ட் யோசிக்க ஆரம்பிச்சுருவோம், இப்படி எல்லாமே பார்த்து பார்த்துதான் பண்ணிட்டு இருக்கோம்.


சினிமான்னா ரொம்ப இஷ்டம். 'அலைபாயுதே' படம் எத்தனை தடவை பார்த்துருப்பேன்னு கணக்கே இல்ல. நடிப்பு தவிர டான்ஸ் ரொம்ப பிடிக்கும். இப்போ உள்ள நடிகைல அனுஷ்கா ரொம்ப பிடிக்கும். நிறைய சினிமா வாய்ப்புகள் வருது. ஹீரோ ரோல்தான் பண்ணணும்னு கட்டாயம் இல்ல. நடிப்புக்கு ஸ்கோப் உள்ள எல்லா கேரக்டருமே பண்ணணும்னு ஆசை' என நீளமாய் பேசி பிரேக் எடுக்கிறார் ஹரிஜா.

'என்னம்மா ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்பிட்டாக, அமெரிக்காவுல மைக்கேல் ஜாக்சன் கூப்பிட்டாகனு கலர் கலரா ரீல் விடுற' என  விஜய் கலாய்க்க, 'போடா எரும சாணி' என வழக்கம்போல பன்ச் வைத்து முடித்தார் ஹரிஜா.