பிரீமியம் ஸ்டோரி
##~##

 ''ஹலோ ஜீபா... ஒரு புத்தகத்தில், 'பழங்களை உணவுக்கு முன் சாப்பிட வேண்டும்’ என்று இருந்தது. ஆனால் மற்றொரு புத்தகத்தில், 'உணவுக்குப் பின் சாப்பிட வேண்டும்’ என்று இருக்கிறது. இதில் எது சரியான முறை?''

- ஆ.குழலரசன், அய்யூர் அகரம்.

''பழங்களில் வைட்டமின்கள், நுண் ஊட்டச் சத்துக்கள், நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து நிறைய உள்ளன. ஆனால், உணவோடு சேர்த்துச் சாப்பிடும்போது, செரிமானக் கோளாறை ஏற்படுத்தும் என்கிறார்கள். சர்க்கரை அதிகம் உள்ள பழங்களை, உணவுக்குப் பின் எடுத்துக்கொள்ளும்போது, செரித்த உணவுகளை அது நொதிக்கச் செய்கிறது (fermentation). இதனால், உண்டாகும் வாயு, அஜீரணம் போன்ற வயிற்றுக் கோளாறுகளுக்குக் காரணமாகிறது. எனவே, உணவுக்குப் பிறகு இரண்டு மணி நேரம் கழித்தோ, உணவு உண்பதற்கு ஒரு மணி நேரம் முன்பாகவோ பழங்களைச் சாப்பிடுவது நல்லது. இல்லாவிட்டால், காலையில் பல் துலக்கிய பின், ஒரு டம்ளர் தண்ணீர் அருந்துங்கள். பிறகு, ஒரு கப் பழத்துண்டுகளைச் சாப்பிடுவது மிகவும் நல்லது என்கிறார்கள் உணவு நிபுணர்கள்.''

''ஹாய் ஜீபா... வெள்ளை பெட்ரோல் (White petrol) என்றால் என்ன? அது எதற்குப் பயன்படுகிறது?''

- என்.கவியரசன், ஈரோடு.

மை டியர் ஜீபா...

''வீட்டில் அடுப்பு எரிக்கவும் சிம்னி விளக்கு ஏற்றவும் பயன்படுத்தும் மண்ணெண்ணெயை உயரிய அளவில் தரப்படுத்தப்பட்ட நிலைதான் 'வெள்ளை பெட்ரோல்’ எனப்படுகிறது. பெட்ரோலியத்தில் மிக அதிக வெப்பநிலையில் (275 டிகிரி சென்டிகிரேடு வரை) இதைப் பிரித்தெடுக்கும்போது, ஹைட்ரோகார்பன் எனப்படும் மூலக்கூறுகளால் மிகவும் நீர்த்து, சுத்தமாக மாறும். 'பாரஃபின்’ என்றும் சொல்லப்படும் இந்த வெள்ளை பெட்ரோல், ஜெட் விமானங்களுக்கும் ராக்கெட்களுக்கும் எரிபொருளாகப் பயன்படுகிறது.''  

''டியர் ஜீபா... கிரிக்கெட் விளையாட்டில் பந்து வீசும்போது, 'பெவிலியன் எண்ட்’, 'நார்த் எண்ட்’ என்றெல்லாம் போடுகிறார்களே.. அதற்கு அர்த்தம் என்ன?''

- ரா. தஸ்வின், திருச்சி.

''கிரிக்கெட் மைதானத்தில், ஆட்டத்தில் பங்கேற்கும் வீரர்கள் உடை மாற்றவும் ஆட்டத்தைப் பார்க்கவும் ஒதுக்கப்பட்ட இடம், 'பெவிலியன்’. அதன் முனையில் இருந்து, ஆட்டக்காரர் பந்து வீச வருவதை 'பெவிலியன் எண்ட்’ என்று போடுவார்கள். 'நார்த் எண்ட்’ என்பது ஹைதராபாத் ராஜீவ்காந்தி இன்டர்நேஷனல் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் உள்ளது.

சர்வதேச அளவில் முக்கியமான இந்த மைதானத்தில், சுமார் 55,000 பேர் அமர்ந்து கிரிக்கெட்டைப் பார்க்கலாம். இந்த மைதானத்தின் இரு முனைகளை, 'பெவிலியன் எண்ட்’ மற்றும் 'நார்த் எண்ட்’ என்பார்கள். ஆனால், பிரபல கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ்.லக்ஷ்மண் ஓய்வு பெற்றபோது, அவரைக் கௌரவிக்கும் விதமாக, 'நார்த் எண்ட்’ என்ற முனைக்கு அவர் பெயர் சூட்டப்பட்டது. இதுபோல ஒவ்வொரு ஸ்டேடியத்திலும் பெவிலியன் முனைக்கு எதிர் முனையின் பெயர்கள் வேறுபடும். சென்னை, சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில், இந்த முனை 'வாலாஜா எண்ட்’ எனப்படுகிறது.''

மை டியர் ஜீபா...

''மை டியர் ஜீபா, நெற்றிக்கண் என்கிறார்களே... நிஜமாவே மூன்று கண்கள் உள்ளவர்கள் இருக்கிறார்களா?''

- எம்.அபிநயா, சென்னை - 85.

''புராணத்தில் வரும் சிவபெருமானுக்கு மூன்று கண்கள் என்பார்கள். மனிதர்களில் யாருக்கும் இல்லை. ஆனால், 'டாட்டரா’ (Tuatara) என்னும் விலங்குக்கு மூன்று கண்கள் உண்டு. வழக்கமான இரண்டு கண்களுக்கு நடுவில், உச்சந்தலையில் சின்னதாக இந்தக் கண் இருக்கும். சட்டெனப் பார்த்தால் புலப்படாத இந்தக் கண்ணில், சிறிய லென்ஸும் ரெட்டினாவும் உண்டு. இதை ஆங்கிலத்தில், parietal eye என்பார்கள். அதாவது, உடல் பரப்பிலேயே சிறிய குழிவான பகுதி அல்லது சுரப்பி மாதிரி பகுதியில் இருப்பதால் அந்தப் பெயர். சில வகை தவளை, மீன்களிலும் இந்த மாதிரி கண் இருக்கிறது.''

''மை டியர் ஜீபா... புயல்களுக்கு எப்படிப் பெயர் வைக்கப்படுகிறது?''

- டி.பச்சமுத்து, கிருஷ்ணகிரி.

''புயல்களுக்குப் பெயர் வைக்கும் வழக்கம் முன்பு கிடையாது. அட்லான்டிக், பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களில் உருவாகும் புயல்களை, காற்றின் வேகத்தைப் பொறுத்து (மணிக்கு 74 கி.மீ. வேகத்தைத் தாண்டும்போது), ஆங்கிலத்தில் 'ஹரிகேன், டைபூன், சைக்ளோன்’ என்று அழைத்தார்கள். முதன்முதலில் அட்லான்டிக் பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்க ஆரம்பித்தார்கள். 1953-ல் அமெரிக்க வானிலை மையம், பெண்களின் பெயர்களை வைக்கத் தொடங்கியது. இதற்கு பெண்கள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்ததால், 1978-ல் ஆண்களின் பெயர்களையும் புயலுக்கு வைக்கும் பழக்கம் வந்தது.

மை டியர் ஜீபா...

நமது இந்தியப் பெருங்கடலில் எழும் புயல்களுக்குப் பெயரிடும் வழக்கம் 2000-ம் ஆண்டில் தொடங்கியது. அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, மாலத்தீவுகள், வங்கதேசம், மியான்மர், ஓமன், தாய்லாந்து ஆகிய எட்டு நாடுகள் சேர்ந்து ஒரு ஃபார்முலாவை உருவாக்கினர். இந்த எட்டு நாடுகளும் ஆளுக்கு ஒரு பெயர்ப் பட்டியலைத் தயாரிக்க, அவற்றில் இருந்து ஒவ்வொரு புயலுக்கும் ஒரு பெயரைத் தேர்ந்தெடுத்து வைக்க ஆரம்பித்தனர். பெயர் வைப்பதன் காரணம், அடுத்தடுத்து புயல்கள் தாக்கும்போது, அவற்றின் வேகம் மற்றும் எண்களை நினைவில் கொள்வதைவிட, பெயர்களின் மூலம் பதிவு செய்வது சுலபமாக இருக்கும் என்பதால்தான்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு