Published:Updated:

கூகுளின் புதிய ஆபிஸ் மதிப்பு 8,300 கோடி ரூபாய்! அப்படி என்ன இருக்காம்?

கூகுளின் புதிய ஆபிஸ் மதிப்பு 8,300 கோடி ரூபாய்! அப்படி என்ன இருக்காம்?
கூகுளின் புதிய ஆபிஸ் மதிப்பு 8,300 கோடி ரூபாய்! அப்படி என்ன இருக்காம்?

கூகுள் நிறுவனம் லண்டனில் தனது தலைமையகத்தைக் கட்டவிருக்கிறது. தற்போது கூகுளின் துணை நிறுவனமான டீப்-மைண்ட் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் அலுவலகங்கள் லண்டனில் தனித்தனியாக இயங்கி வருகின்றன. புதிதாகக் கட்டப்படும் இந்த பிரமாண்ட கட்டடத்தில், இனி அவை அனைத்தும் செயல்படத் தொடங்கும். சுமார் 7,000 பேர் பணிபுரியக்கூடிய அளவுக்கு அனைத்து வசதிகளுடனும், இந்தக் கட்டடம்  மிகப் பிரமாண்டமாக உருவாகவிருக்கிறது. கூகுளின் இந்தத் தலைமையகம் தான் தற்போது இணையத்தில் வைரல் டாபிக்.

அமெரிக்காவைத் தாண்டி, கூகுள் சொந்தமாகத் தானே கட்டும் முதல் கட்டடம் இது தான். 2013-ம் ஆண்டே தலைமையக கட்டடத்திற்கான திட்டங்களுக்கு ஒப்புதல் வாங்கிவிட்டது கூகுள். ஆனால், ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறியது உள்ளிட்ட பல காரணங்களால் இந்தத் திட்டத்தை கூகுள் கிடப்பில் போட்டிருந்தது. தற்போது இந்தக் கட்டடத்திற்கான புதிய வடிவமைப்பிற்கான திட்டத்தை இங்கிலாந்து அரசின் ஒப்புதலுக்காக கூகுள் நிறுவனம் சமர்ப்பித்துள்ளது.

310 மீட்டர் உயரம் கொண்ட 'தி ஷார்டு' (The Shard) என்ற கட்டடம் தான் லண்டனின் மிக உயரமான கட்டடம். தற்போது கூகுள் கட்டத் திட்டமிட்டிருக்கும் இந்த லண்டன் தலைமையகத்தின் நீளம் 330 மீட்டர். எனவே தான் இதற்கு 'லேண்ட் ஸ்க்ராப்பர்' (Land Scraper) எனப் பெயரிடப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனத்தின் கலிபோர்னியா தலைமையகத்தை வடிவமைத்த தாமஸ் ஹெதர்விக் (Thomas Heatherwick) உள்ளிட்ட உலகின் தலைசிறந்த ஆர்க்கிடெக்ட்கள் இணைந்து லண்டன் தலைமையகத்தை வடிவமைத்திருக்கின்றனர்.

பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அந்நாட்டின் அதிபர் ட்ரம்ப் அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் இந்நிலையில், கூகுள் நிறுவனம் தனது லண்டன் தலைமையகத்தில் மரபுசாரா ஆற்றல் மூலங்களைப் பயன்படுத்தவிருப்பது கொஞ்சம் ஆறுதலான விஷயம். இந்தக் கட்டடத்தில் பதிக்கப்படும் சோலார் பேனல்கள் மூலமாக ஆண்டுக்கு 20 மெகாவாட் அளவிலான மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இந்த அலுவலகத்துக்குத் தேவையான மின்சக்தி, சோலார் மின்சக்தி போன்ற புதுப்பிக்கக்கூடிய ஆற்றலில் இருந்தே பெறப்பட இருக்கிறது. ஆப்பிள் நிறுவனம் கலிபோர்னியாவில் கட்டிவரும் தலைமையகத்திலும், மரபுசாரா ஆற்றல் பயன்படுத்தப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

11 மாடிகள் கொண்ட இந்தக் கட்டடத்தில் 25 மீட்டர் நீச்சல் குளம், விளையாட்டரங்கம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம்பெற உள்ளன. இவை அனைத்தையும் விட ஒரு ஹைலைட்டான விஷயம் என்னவென்றால், 300 மீட்டர் நீளம் கொண்ட மாடித்தோட்டமும் இந்தக் கட்டடத்தில் இடம்பெற உள்ளது. வெயில் அதிக அளவு உட்புகாதவாறு தடுக்கும் வகையில் சுழலக்கூடிய, மின் மோட்டாரினால் இயங்கக்கூடிய மரத்தினால் ஆன ஜன்னல்கள் இதன் வெளிப்புறத்தில் அமைக்கப்பட உள்ளது.

1 பில்லியன் பவுண்டு (இந்திய மதிப்பில் சுமார் 8,300 கோடி ரூபாய்) மதிப்பில் கட்டப்படும் இந்தக் கட்டடம், பத்து லட்சம் சதுர அடிகள் பரப்பளவில் அமைய உள்ளது. இதன் முதற்கட்ட கட்டுமானப் பணிகள் 2018-ம் ஆண்டு தொடங்க இருக்கிறது.

கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை கடந்த ஆண்டின் இறுதியில், லண்டனில் உள்ள கூகுள் பணியாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர், "திறமையானவர்களும், கல்வி நிறுவனங்களும், புதுமைக்கான வேட்கையும் கொண்டவர்கள் அதிகம் இருப்பதால், யுனைட்டட் கிங்டத்தில் கணினி அறிவியலுக்கான எதிர்காலம் சிறப்பாக உள்ளது" என கூகுளின் தலைமையகம் லண்டனில் அமைவது பற்றிப் பேசியிருந்தார்.

Thanks:www.theguardian.com