Published:Updated:

அறிவிழி - 52

அண்டன் பிரகாஷ்

அறிவிழி - 52

அண்டன் பிரகாஷ்

Published:Updated:
அறிவிழி - 52

2014 - ம் வருடத்தில் ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட அலைபேசி சாதனங்கள் விற்கப்படும். உலகின் மக்கள்தொகை 7 பில்லியன் என்பதால், ஏழு பேரில் ஒருவர் புதிய அலைபேசியை வாங்குவார். வாங்கப்படப்போகும் உலகின் மொத்த அலைபேசி சாதனங்களில் நான்கில் ஒருவர் இந்தியராக இருப்பார். அலைபேசிகளுக்கான இந்தியச் சந்தை இப்படி இனிப்பாக இருப்பதால், இதனை மொய்த்துவரும் நிறுவனங்களின் ரீங்காரம் இந்த வருடம் சற்று பலமாகவே இருக்கும். இந்த ஈக்கூட்டத்தில் கடைசியாகச்

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சேரப்போவது... ஆப்பிள்.

இந்தியச் சந்தையை பல வருடங்களாக அலட்சியப்படுத்தியே வந்தது ஆப்பிள். ஐபாட் வெளியான      10 வருடங்களுக்குப் பின்னர்தான் 2010-ல் தனது சாதனங்களை இந்தியச் சந்தைக்குக் கொண்டுவந்தது. ஐபோன் 4S சாதனம் அமெரிக்கா, சீனா என வெளியிடப்பட்டபோது இந்தியாவிலும் அதே நேரத்தில் வெளியிடப்பட்டு நன்றாகவே விற்பனையானது. சென்ற வருடத்தில் ஒரு மில்லியன் ஐபோன்களை விற்றதுடன், இந்தியச் சந்தையில் நடந்த வர்த்தகம் ஒரு பில்லியன் டாலர்களைத் தாண்டியிருக்கிறது. இது மிகப் பெரியதாகத் தோன்றினாலும், சீனா போன்ற சந்தைகளுடன் ஒப்பிடும்போது மிக மிகக் குறைவு.

இதற்கு மிக முக்கியக் காரணம்... ஆப்பிளின் விலை. பல மடங்கு லாபத்துடன் மட்டுமே ஆப்பிள் சாதனங்கள் விற்கப்படும் என்பதால், இந்தியாவின் வெகுஜன சந்தையை ஊடுருவ முடியவில்லை. ஆனால், இதுவரை விட்டுவந்திருந்த இந்தியச் சந்தையை வெஞ்சினத்துடன் வென்று காட்டத் தயாராகிறது ஆப்பிள்.

'ஓ... அப்படியானால் ஆப்பிள் சாதனங்களின் விலை இந்தியாவில் குறைக்கப்படுமா?’ எனக் கேட்கிறீர்களா? இல்லவே இல்லை... உலகம் முழுவதும் விற்பனையை நிறுத்திவிட்ட பழைய மாடல் ஒன்றை வெகுவாக விலை குறைத்தும், மாதாந்திரக் கட்டணம் அடிப்படையிலும் விற்கத் தயாராகிறது ஆப்பிள். ஐபோன் 4 எனப்படும் இந்த மாடல், 15 ஆயிரத்துக்குள் கிடைக்கலாம். ஆப்பிளின் இந்த 'ஜனதா மாடல்’ ஐ-போனை உங்களுக்கு அருகில் இருக்கும் ஆப்பிள் விற்பனையாளரிடம் விரைவில் வாங்கிக்கொள்ளலாம்!

சென்ற வாரத்தின் மிக முக்கிய டெக் உலகச் செய்தி, Nest நிறுவனத்தை 3.2 பில்லியனுக்கு கூகுள் வாங்கியதுதான். ஆப்பிள் ஐபாட், ஐ-போன் போன்றவற்றின் வடிவமைப்பில் முதன்மையாக இருந்த இருவர் தொடங்கிய இந்த நிறுவனம், இரண்டே இரண்டு பொருள்களை மட்டும் தயாரிக்கிறது. வீட்டுக்குள் வெப்பத்தையும் குளிரையும் கட்டுப்படுத்த உதவும் Thermostat  சாதனம் மற்றும் தீயினால் புகை மூண்டால் அதைக் கண்டறியும் Smoke Alarm சாதனம். இவை இரண்டுமே பொருள்களின் இணையம் (Internet of Things) பிரிவைச் சார்ந்தவை. அதாவது, இந்தச் சாதனங்களை உங்கள் வீட்டில் இருக்கும் இணையத்தில் இணைத்து, உங்கள் அலைபேசியைப் பயன்படுத்தி அவற்றை இயக்க முடியும்.

அறிவிழி - 52

தொடங்கி மூன்றே வருடங்கள் ஆன இந்த நிறுவனத்தை கூகுள் வளைத்துப்போட்டிருப்பதன் மூலம், பொருள்களின் இணையத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் புரிய வருகிறது. ஆனாலும், 'இரண்டு சாதனங்களைத் தயாரிக்கும் நிறுவனத்துக்கு இவ்வளவு மதிப்பா?’ - கேள்வி எழுமே... பதில்,  Nest நிறுவனம் பதிவுசெய்து வைத்திருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட காப்புரிமைகளும் (Patents)  காரணம். மோட்டரோலாவுக்குப் பின் அதிக விலை கொடுத்து கூகுள் வாங்கியிருப்பது  Nest  நிறுவனத்தைத்தான். யூ டியூப்புக்குக்கூட இதில் பாதி விலையைத்தான் கொடுத்தது கூகுள்.

சர் ரிச்சர்ட் பிரான்சன், ''2014-ம் ஆண்டுக்குள் கமர்ஷியலாக விண்வெளிப் பயணத்தை எனது  விர்ஜின் நிறுவனம் நடத்திக்காட்டும்'' என சென்ற ஆண்டின் தொடக்கத்தில் சொல்லியிருந்தார். இது சாத்தியமாகிவிடும் போல. சென்ற வாரம் பரிசோதனை முயற்சியாக இந்த நிறுவனத்தின் Space Ship Two விமானம் 71,000 அடிகளில் பறந்துவிட்டு பூமி திரும்பியிருக்கிறது. ஒலியுடன் ஒப்பிடும்போது எவ்வளவு வேகமாகச் செல்கிறது என்பதைப் பற்றிய  Transonic மற்றும் Supersonic தகவல்களை அளந்துகொண்டு வருவதற்காக மட்டுமே  இயக்கப்பட்ட இந்த விமான வெள்ளோட்டத்தைப் பல கோணங்களில்  வீடியோ எடுத்திருக்கிறார்கள். அதன் தொகுப்பை இந்த யூ-டியூப் உரலியில் பாருங்கள்: http://youtu.be/1ZVDuRS7Jy8

காவிரி நதி தெரியும். காவிரி சிப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

Advanced Micro Devices. சுருக்கமாக, AMD. இன்டெல் நிறுவனத்துக்கு நேரடிப் போட்டியாக இருக்கும் இந்த நிறுவனம், கணினிகளை இயக்கும் சிப்புகளைத் தயாரிக்கிறது. கணினியின் அனைத்து இயக்கங்களையும் கட்டுப்படுத்தும் CPU (Central Processing Unit) பகுதியும், திரைப் படிமங்களைத் தீர்க்கமாக வெளிக்காட்ட உதவும் GPU (Graphics Processing Unit) பகுதியும் இதுவரை சிப்களில் தனித்தனியாகக் காட்டப்பட்டிருக்கும். முதன்முதலாக இவை இரண்டையும் கலந்து மிகவேகமானதாகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது காவிரி சிப். இரண்டரை பில்லியன்களுக்கும் மேற்பட்ட டிரான்சிஸ்டர்களைக் கொண்டிருக்கும் காவிரி சிப், இன்று சந்தையில் இருப்பதில் மிக வேகமானது என்கிறார்கள் ஹார்டுவேர் பிதாமகர்கள்!

- விழிப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism