Published:Updated:

வேடிக்கை பார்ப்பவன் - 14

நா.முத்துக்குமார், ஓவியங்கள்: செந்தில்

வேடிக்கை பார்ப்பவன் - 14

நா.முத்துக்குமார், ஓவியங்கள்: செந்தில்

Published:Updated:
##~##

 சாலைகளின் பாடல்

''நம் ஒட்டுமொத்த வாழ்க்கையும் சினிமா பார்ப்பதைப் போலத்தான். ஆனால், படம் முடிந்த பின் க்ளைமாக்ஸ் என்ன என்பது படம் பார்த்தவருக்குத் தெரியாது!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- ரோமன் பொலன்ஸ்கி, போலந்து திரைப்பட இயக்குநர்.

கனவுத் தொழிற்சாலையில் இவன் காலடி வைத்ததற்கு நிறைய முன்கதைச் சுருக்கங்கள் இருக்கின்றன.

இவன் எட்டாவதோ ஒன்பதாவதோ படிக்கும்போது இவன் கிராமத் துக்கு ஒரு குழுவினர், தொலைக்காட்சி மற்றும் வீடியோ டெக்குடன் வந்து இறங்கினார்கள்.

பஞ்சாயத்துத் தலைவர் அனுமதி பெற்று அந்தி மாலை, இருளுக்குள் விழுந்துகொண்டிருந்த நேரத்தில் கோயில் மண்டபத்தில் வைத்து ஊர் மக்களுக்கு ஒரு படத்தைப் போட்டுக் காட்டினார்கள். அந்தப் படம், சத்யஜித் ரே இயக்கிய 'பதேர் பாஞ்சாலி’.

வீடியோ டெக் அறிமுகமான காலம் அது. துபாயிலோ, சிங்கப்பூரிலோ வேலை செய்பவர்களின் வீடுகளில்தான் அது இருக்கும். இவன் கிராமத்தில் எல்லோரும் தறிக்குழியில் அமர்ந்து வேலை செய்ததால், துபாய்க்குப் போகும் யோகம் இல்லை. ஆகையால், வாடகைக்கு எடுத்த வீடியோ டெக்கை இவன் திருவிழா சமயங்களில்தான் பார்த்திருக்கிறான். அந்தத் திருவிழாக்களிலும் பெரும்பாலும் இவன் பார்த்த படங்கள் 'திருவிளையாடல்’, 'சரஸ்வதி சபதம்’, 'கர்ணன்’, 'ஆயிரத்தில் ஒருவன்’, 'விதி’ போன்றவைதான். இப்போது எழுப்பிக் கேட்டாலும், அந்தப் படங்களின் வசனத்தை வரிக்கு வரி ஒப்பிப்பான்.

'பதேர் பாஞ்சாலி’யின் கதைச் சுருக்கத்தையும் சத்யஜித்ரே பற்றியும் தாடி வைத்த ஒருவர் அறிமுகப்படுத்த, படம் தொடங்கியது. 'சாலையின் பாடல்’ என்னும் பதேர் பாஞ்சாலி, இவன் கிராமத்தின் சாலையைப் பாடத் தொடங்கியது. அதன் ஒவ்வொரு காட்சிகளும் விரியத் தொடங்க இவன் அழுதான்; சிரித்தான்; நெகிழ்ந்தும்போனான். அவ்வப்போது திரும்பிப் பார்க்கும்போது, அரை இருட்டில் இவனைப் போலவே, மற்றவர்களும் உருகிக்கொண்டு இருந்தார்கள்.

வேடிக்கை பார்ப்பவன் - 14

படம் முடிந்து, தாடி வைத்தவர் ''இந்தப் படம் உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நெனைக்கிறேன். இதைப் பத்தி உங்க கருத்துகளைப் பகிர்ந்துக்கலாம். அதுக்கு முன்னாடி ஒரு தகவல், வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை மதியம் ஒன்றரை மணிக்கு இந்த மாதிரிப் படங்களை தூர்தர்ஷனில் ஒளிபரப்புவாங்க. வாய்ப்பு இருந்தா பாருங்க'' என்று சொல்ல, அந்த இரவு விடியா இரவானது.

இவன் கிராமத்தில் யார் வீட்டிலும் தொலைக்காட்சி இல்லை என்பதால், பெரியார் நகரில் இருந்த நண்பன் அகஸ்டின் செல்லபாபு வீட்டுக்கு ஒவ்வொரு ஞாயிறு மதியமும் ஆஜராகிவிடுவான். இவன் ஆர்வம் அறிந்து, அவர்களும் இவனுடன் மதியத் தூக்கம் துறந்து, படம் பார்ப்பார்கள்; அல்லது பாதியில் எழுந்துபோவார்கள். அப்படித்தான் இவன் சத்யஜித் ரேவை, ரித்விக் கட்டக்கை, மிருணாள் சென்னை, அடூர் கோபாலகிருஷ்ணனை, கோவிந்த நிஹாலினியை அறிந்துகொண்டான்.

ப்ளஸ் டூ படிக்கையில் இவன் வாழ்க்கையில் மிகப் பெரிய ஒரு மாற்றம் நிகழ்ந்தது. காஞ்சிபுரம் அண்ணா அரங்கத்தில் எடிட்டர் B.லெனின், அவர் இயக்கி தேசிய விருது பெற்ற 'நாக் அவுட்’ படத்தைத் திரையிட வந்திருந்தார். ஒரு பிணத்தை வைத்து அவர் கதை சொன்ன விதம் இவனுக்குப் பிடித்திருந்தது. அவர்தான் 'உதிரிப்பூக்கள்’ படத்தின் எடிட்டர் என்று யாரோ சொல்ல, மேலும் மரியாதை கூடியது. அந்த மரியாதைக்கு மகுடம் சூட்டியது, அவர் இயக்குநர் பீம்சிங்கின் மகன் என்பது.

அன்று அவர் பேசிய பேச்சு, சினிமா பற்றிய இவன் பார்வையை மேலும் செழுமைப்படுத்தியது. மக்களுக்கான சினிமாவைப் பற்றியும், சினிமாவில் என்னென்ன துறைகளில் எளிமை தேவை என்பதைப் பற்றியும் அவர் சொல்லிக்கொண்டே செல்ல, பக்கத்தில் அமர்ந்திருந்தவர் இவன் காதில் ''இந்த நிகழ்ச்சிக்குக்கூட பேருந்தில்தான் வந்தார் தோழர். சென்னையில்கூட அடிக்கடி இவரை பேருந்துகளில் பார்த்திருக்கிறேன். அவ்வளவு எளிமை'' என்று சொல்ல B. லெனின் தொடர்ந்து ''மக்கள்கிட்ட பணம் வாங்கி, மக்களுக்கான படம் எடுக்கப்போறேன். ஏற்கெனவே கேரளாவுல இயக்குநர் ஜான் ஆபிரஹாம் 'ஒடேசா’ (Odessa) திரைப்பட இயக்கம் மூலமாக இந்த முயற்சிக்கு முன்னுதாரணமாக இருந்திருக்கார். இப்ப நான் துண்டேந்தி உங்ககிட்ட வரப்போறேன். உங்களால முடிஞ்ச உதவியை செய்ங்க'' என்று சொல்லிவிட்டு, தோளில் போட்டிருந்த துண்டை விரித்து பார்வையாளர்களிடம் வந்து கையேந்தினார். அவரது துண்டில் 5, 10, 100 ரூபாய் நோட்டுகள் விழுந்துகொண்டிருந்தன.

முன் வரிசையில் இருந்த ஒரு பெண்மணி, தன் கையில் அணிந்திருந்த தங்க வளையல்களைக் கழற்றித் துண்டில் போட்டதும், இவன் திடுக்கிட்டான். B.லெனின் அவரை நன்றியுடன் பார்த்துவிட்டு இவனை நெருங்கிவர, பேருந்துக்குக்கூட காசு எடுக்காமல், பையில் இருந்த மொத்தப் பணத்தையும் துண்டில் போட்டான். நிகழ்ச்சி முடிந்து, எட்டு கிலோமீட்டர் நடந்தே இவன் வீட்டுக்கு வந்தபோது, இவன் காதுகளில் 'பதேர் பாஞ்சாலி’யின் சாலையின் பாடல் கேட்டுக்கொண்டே இருந்தது.

வேடிக்கை பார்ப்பவன் - 14

அதற்குப் பின் இவன் திரைப்படங்களை, படங்களாகப் பார்க்கவில்லை; பாடங்களாகப் பார்த்தான். இதற்கு முன் இவன் கண்ட கனவையெல்லாம் அழித்துவிட்டு, திரைப்பட இயக்குநராக வேண்டும் என்ற புதிய கனவை உரம் போட்டு வளர்க்க ஆரம்பித்தான். வகுப்பு அறைகளைவிட சங்கம், அருணா, பாபு, பாலாஜி, லட்சுமி, நாராயணமூர்த்தி, பாலசுப்ரமணியா தியேட்டர்களில்தான் இவன் அதிகம் தவம் இருந்தான்.

வருட இறுதியில், அந்த வருடத்தில் வந்த படங்களின் பட்டியல் நாளிதழ்களில் வெளியிடப்பட்டிருக்கும். ஒரு பேனாவை எடுத்துக்கொண்டு பார்த்த படங்களை இவன் டிக் செய்வான். டப்பிங் படங்கள் உள்பட எல்லாப் படங்களிலும் அந்த டிக் மார்க் விழுந்திருக்கும். சில படங்களின் ஓரம் 5, 8 என்று எழுதுவான். அத்தனை முறை இவன் அந்தப் படங்களைப் பார்த்திருக்கிறான்.

திரைத் துறைதான் தன் தொழில் என்று முடிவானதும், இவன் தன் அப்பாவிடம் எப்படிச் சொல்வது என்று பல வாரங்களாக யோசித்துக்கொண்டிருந்தான். இவன் உறவுகளில் இருந்து திரைத் துறையில் சாதித்தவர் யாரென்று பட்டியலிட்டான். அந்தப் பட்டியலில் ஒரேயரு பெயர்தான் இருந்தது.

இவன் பிறப்பதற்கு முன்பே இறந்தவிட்ட அவர், திரைத் துறையில் தன் அடுக்குமொழி வசனங்களில் கோலோச்சினார். தமிழ் சினிமாவை திராவிடக் கொள்கைகளின் பின்னால் திசை திருப்பினார். அரசியலிலும் ஆங்கிலப் புலமையிலும் முன்னுதாரணமாகத் திகழ்ந்தார். அவரது இறுதி ஊர்வலத்தின்போது வரலாறு காணாத அளவு மக்கள் திரண்டார்கள். அவர்தான் பேரறிஞர் அண்ணா.

இவன் அம்மா வழியிலும், அப்பா வழியிலும் பேரறிஞர் அண்ணா இவன் உறவினர். சிறு வயதில் அண்ணாவின் மேற்கோள்களை உதாரணம் காட்டித்தான் இவனை, இவன் தந்தை வளர்த்தார். உறவினர்கள் கூடும் சுப நிகழ்ச்சிகளில் இவனை, இவன் தந்தை, அண்ணாவின் மகன் C.N.A.பரிமளத்திடம் அழைத்துச் சென்று, இவன் அப்போது எழுதிய கவிதையைச் சொல்லச் சொல்வார். உரத்தக் குரலில் இவன் சொல்லி முடித்ததும், C.N.A.பரிமளம் இவனை அருகில் அழைத்து மடியில் அமர்த்திக்கொண்டு, ''இதை அப்படியே ஒரு காகிதத்துல எழுதிக் குடு. நான் திரும்பவும் நடத்தற 'காஞ்சி’ பத்திரிகைல பிரசுரிக்கிறேன்'' என்று உற்சாகப்படுத்துவார். அப்போது அவர் காஞ்சியில் தோல் மருத்துவராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். அடிக்கடி அவரை இவன் கவிதைகளுடன் சந்திப்பான். படித்துப் பார்த்து நிறைகுறைகள் சொல்வார். இவன் ஆளுமையை வளர்த்ததில் அவருக்கும் பெரிய பங்கு உண்டு.

வனது சினிமா ஆசை தெரியவந்ததும் இவன் வகுப்பில் படித்த நண்பர் T.S.ராஜராஜன், அலட்டிக்கொள்ளாமல் சொன்னான், ''எங்க சித்தப்பாவும் அப்பாவும் சேர்ந்து எடுத்த படம்தான்டா, தேசிய விருது பெற்ற ஜெயபாரதி இயக்கிய 'உச்சி வெயில்’ திரைப்படம்''. இவன் ஆச்சரியப்பட்டுப் போனான். ராஜராஜன் தொடர்ந்தான். ''வர்ற சண்டே வீட்டுக்கு வா. அப்பாவை அறிமுகப்படுத்துறேன்.''

ராஜராஜனின் அப்பாவைப் பற்றி சொல்வதற்கு முன்பு, அவரது தம்பி T.M.சுந்தரத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும். அரக்கோணத்தில் சுந்தரம் லஞ்ச் ஹோம் நடத்தி வருபவர். 'உச்சி வெயில்’ படத்தின் தயாரிப்பாளர். இலக்கிய வாசகர். அவரது அண்ணன் ராஜராஜனின் தந்தை T.M. சுப்ரமணியமும் தேர்ந்த வாசகர். கணையாழி, காலச்சுவடு என்று கல்லூரிப் பருவத்தில் படித்த இதழ்களின் கதை, கட்டுரைகளை அவர்களுடன் இவன் விவாதித்தான்.

வேடிக்கை பார்ப்பவன் - 14

இவன் இன்று வரை திரும்பத் திரும்ப எடுத்துப் படிப்பது, திரையுலகைப் பற்றி எழுதப்பட்ட மிகச் சிறந்த நாவலான அசோகமித்திரன் எழுதிய 'கரைந்த நிழல்கள்’. இந்த நாவலை, அசோகமித்திரனின் அனுமதி பெற்று தூர்தர்ஷனில் தொலைக்காட்சித் தொடராகத் தயாரிக்க அவர்கள் திட்டமிட்டு இருப்பதாகவும், 'ஏர்முனை’, 'காணி நிலம்’ போன்ற தேசிய விருது பெற்ற படங்களை இயக்கிய அருண்மொழி, அந்தத் தொடரை இயக்கவிருப்பதாகவும், அதில் இவன் உதவி இயக்குநராகப் பணியாற்ற வாய்ப்பு அளிப்பதாகவும் நம்பிக்கையூட்டினார்கள்.

இவன் கனவுகளின் மேகத்தில் மிதந்தான். இளங்கலை இறுதி ஆண்டு கடைசித் தேர்வு எழுதி வெளியே வந்ததும், ராஜராஜன் இவனைத் தனியே அழைத்து, ''போன மாசம் அப்பா சொன்னார்ல அசோகமித்திரனோட 'கரைந்த நிழல்கள்’ நாவலைத் தொடரா எடுக்கப் போறோம்னு. ரெண்டு நாள் கழிச்சு ஷூட்டிங் ஆரம்பிக்கப்போகுது. வீட்ல போய் அப்பாகிட்ட சொல்லிட்டு, நாலு செட்டு டிரெஸ் எடுத்துக்கிட்டு நாளைக்குக் காலைல எங்க வீட்டுக்கு வா. நீ அசிஸ்டென்ட் டைரக்டர் ஆயிட்ட. வாழ்த்துகள்'' என்று கைகுலுக்கினான்.

இரவு உணவு முடிந்ததும் இவன், அப்பாவிடம் தயங்கித் தயங்கி தன் ஆசையைச் சொல்லத் தொடங்கினான். கொஞ்ச நேரம் மௌனமாக இருந்த அப்பா, ''உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கிற எல்லா சுதந்திரமும் உனக்கு இருக்கு. பின்னாட்கள்ல அதற்கான சந்தோஷத்தையும் துக்கத்தையும் அனுபவிக்கும்போது மட்டும், என்னை நினைச்சுப் பாத்துக்கோ. அதுக்கு முன்னாடி ஒரு புத்தகம் தர்றேன். அதை முழுசாப் படி. அப்புறம் முடிவு எடு'' என்று சொல்லிவிட்டு புத்தக அலமாரிகளில் தேடித் தேர்ந்தெடுத்து ஒரு புத்தகத்தை இவனிடம் கொடுத்தார்.

அது நடிகர் சிவகுமார் எழுதிய 'இது ராஜபாட்டை அல்ல’ என்ற புத்தகம். விடிய விடிய கண் விழித்து அந்தப் புத்தகத்தைப் படித்தான். அதிகாலையில் அப்பாவை எழுப்பி ''நீங்க குடுத்த புத்தகத்தைப் படிச்சிட்டேன். நான் சினிமாவுல அசிஸ்டென்ட் டைரக்டரா சேரப்போறதுல உறுதியா இருக்கேன்'' என்றான். அப்பா இவனை ஆசீர்வதித்தார்!

- வேடிக்கை பார்க்கலாம்...