ஸ்பெஷல் -1
Published:Updated:

"பொசுக்குன்னு தொட்டுப்புட்டேன்!” - வடிவேலு

வைகைப்புயல்
பிரீமியம் ஸ்டோரி
News
வைகைப்புயல்

''என் வாழ்க்கையில் மறக்க முடியாத நேரம் மதியம்தான்!''

"பொசுக்குன்னு தொட்டுப்புட்டேன்!” - வடிவேலு

டிவேலு ரொம்பவும் தேறிவிட்டார். சென்னை விஸ்வநாதபுரத்தில் உள்ள வாடகை வீட்டில் சந்தித்தபோது, பூசினாற்போல் உடலில் கொஞ்சம் சதை போட்டிருந்தது. விரித்த ஜமுக்காளத்தின் மீது உட்கார்ந்திருந்தார். கறுப்பு நிறத்திலும் மினுமினுப்பு!

''சோபா, சேர் வாங்கிப் போடக் கூடாதா?'' என்று கேட்டதற்கு ''நமக்கெதுக்குண்ணே அதெல்லாம்... இப்டியே இருந்திர வேண்டியதுதான்'' என்ற வடிவேலு, ''ரொம்பக் கஷ்டப்பட்ட குடும்பம்ணே எங்களது. இன்னிக்கு ஏதோ வசதி வாய்ப்போட இருக்கேன்னா, அது ஆண்டவன் தந்த வரம். 'வசதியைத் தந்த கடவுளே... தலைக்கனம், பந்தா, வாய்க்கொழுப்பு குடுத்திடாதய்யா’னு தெனமும் வேண்டிக்கிறேன்'' என்று அண்ணாந்து முகட்டைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டுவிட்டுத் தொடர்ந்தார்.

காலை:

''அப்பா கூலி வேலை பார்த்தார். நான், தம்பிங்கள்லாம் அவரோடு வேலைக்குப் போவோம். பல நாட்கள் காலங்காத்தால 5 மணிக்கெல்லாம் வேலைக்குப் போயிடுவோம். கண்ணாடியை அறுத்து தினுசு தினுசா நகைப்பெட்டிங்க மாதிரி செஞ்சு கொடுக்கிற வேலை. எவ்வளவுக்கெவ்வளவு சுருக்கா வேலை செய்றமோ, அவ்வளவுக்கவ்வளவு வருமானம். அதனால் காலங்காத்தால கண்ணு முழிக்கிறதே வேலையிலதான். பழைய சோறும் வெங்காயமும்தான் காலை சாப்பாடு. தண்ணி ஊத்தின சோத்துக்குச் சில நாள் தொட்டுக்க 'கைக்கூட்டு’ உண்டு. ரெண்டு தக்காளி, ரெண்டு வெங்காயம், கொஞ்சம் உப்புப் போட்டு, எங்கம்மா கையால பிசைஞ்சே ஒரு கூட்டு வைப்பாங்க. அதுக்கு எதையும் அரைக்கிற வேலையுமில்லே... சமைக்க அடுப்பும் தேவையில்லே... அந்தக் கைக்கூட்டோட பழையதை ஒரு புடி புடிச்சா, சும்மா தேவாமிர்தமா இருக்கும்!

"பொசுக்குன்னு தொட்டுப்புட்டேன்!” - வடிவேலு

இப்பவும் அந்தப் பழக்கத்தை நான் மறந்திரல... காலையிலே பழையசோறும் தயிரையும்தான் விரும்பிச் சாப்பிடுறேன். தயிர் இப்போ கூடச் சேர்ந்திருக்கு... அவ்வளவுதான். அவுட்டோருக்கு வெளியூர் போனா, எங்கேயாவது வீட்டு வாசல்ல இட்லி அவிக்கிறாங்களானு பாத்து வாங்கிட்டு வரச் சொல்லுவேன். என்னை ஆளாக்கிவிட்ட ராஜ்கிரண் சார் கூட இருக்கறப்போ, கம்மங்களியும் கருவாட்டுக் குழம்பும்தான் காலை டிபன். 'டேய் வடிவேலு... கருவாடு, வெங்காயம், தக்காளி, மிளகாய் போட்டுக் குழம்பு வெச்சு, கருவாட்டைத் தூக்கித் தூரப்போட்டுட்டு அந்தக் குழம்பை உள்ளங்கையில் ஊத்தி உறிஞ்சிக் குடிக்கணும்டா’னு சொல்வார். அதுமாதிரி நானும் சாப்பிடுவேன். அந்த ருசியே தனிதான்!

'தேவர் மகன்’ படத்துக்கு அவுட்டோர் ஷூட்டிங் போயிருந்தப்பதான், முதன்முதலா நடிகர்திலகம் சிவாஜி சாரை நேரில் பார்த்தேன். காலை ஏழு மணி கால்ஷீட்... அவரைப் பார்க்கணும்கிறதுக்காக முன்னாடியே ஓடினேன். கால் மேல் கால் போட்டுக் கம்பீரமா மகாராஜாவாட்டம் சிவாஜி சார் உட்கார்ந்திருந்தார். எனக்கு அவரைத் தொட்டுப் பார்க்கணும்னு ஆசை. மெள்ளமாப் பக்கத்துல போய் பொசுக்குனு அவர் கையைத் தொட்டுப்புட்டேன். 'ஏம்ல, நீ இந்த ஊர்க்காரனா?’னு சிரிச்சுக்கிட்டே கேட்டார். 'ஐயா, இந்தப் படத்துல நடிக்கிறவன் நான். எம் பேரு வடிவேலு. என் ஊரு மருத. ஆசைப்பட்டுத் தொட்டுப்புட்டேன்... கோவிச்சுக்கிடாதீங்க’னு பயத்தோட சொன்னேன். 'அப்படியா... வெரிகுட். நல்லா நடிக்கணும். நல்ல பிள்ளைனு பேரெடுக்கணும்’னு சிவாஜி சார் சொன்னாங்க.

கஷ்டப்பட்ட காலத்திலேயே எனக்குக் கல்யாணம் ஆயிடுச்சு. கஷ்டத்தைப் பங்கு போட்டுக்கிறதுக்கு இன்னொரு ஜீவன்னு சொல்லலாம். என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ. என் சினிமா ஆசைக்குக் குறுக்கே நிக்கல. நான் நடிச்சு சம்பாதிச்சு சாலிக்கிராமத்தில் ஒரு வீடு வாங்கியிருக்கேன். ஆறு மாசத்துக்கு முன்னாடிதான் குடும்பத்தை இங்கே அழைச்சிட்டு வந்தேன். காலையில வந்து இறங்கினதும் வீட்டை அண்ணாந்து பார்த்த என் மனைவி முகத்திலே பிரமிப்பு. உள்ளே வந்ததும் சுத்துமுத்தும் பார்த்து அசந்துட்டா. 'அம்மாடியோவ்... எம்மாம் பெரிய வீடு!’னு அவ ஆச்சரியப்பட்டப்போ, எனக்கு சந்தோஷமா இருந்துச்சு. எங்கம்மாவையும் இந்த வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துடணும்னுதான் ஆசை. ஆனா, அவங்கதான் வர மாட்டேங்கிறாங்க. 'வேணாம்யா... அங்கே வந்தா ஜெயிலு மாதிரி வீட்டைவிட்டு வெளியே போகவே முடியாது. இங்கே பழகின ஜனங்க... எப்பவும் போல நான் இங்கேயே இருந்திடறேன்’னு சொல்லிட்டாங்க!'' - வடிவேலுவின் வார்த்தைகளில் வருத்தம் ஈரம் கட்டியிருந்தது.

மதியம்:

''என் வாழ்க்கையில் மறக்க முடியாத நேரம் மதியம்தான்!'' - வடிவேலுவின் முகத்தில் சந்தோஷ மேகங்கள்...

''சினிமாவுல எப்படியும் நடிச்சிடணும்கிற ஆசையில பித்துப்பிடிச்ச மாதிரி அலைஞ்சேன். அடிக்கடி சென்னைக்கு வந்து சான்ஸ் கேட்டு, கம்பெனி கம்பெனியா ஏறி இறங்கியிருக்கேன். நாயைத் தொரத்தற மாதிரி விரட்டி அடிச்சிருக்காங்க.

ஒருநாள் மதிய நேரம்... நல்ல பசி... ஏவி.எம். ஸ்டூடியோவுக்குப் போனேன். வாசல்ல ஒரு ஆள் நிக்கிற மாதிரி கூண்டு ஒண்ணு இருக்கு. அதில் இருந்த வாட்ச்மேன் உள்ளே போகவிடாமத் தடுத்தார். 'எங்கே வந்தே?’னு கேட்டார். 'நம்ம ஊர் மருதங்க... சினிமாவுல நடிக்க சான்ஸ் கேக்கலாம்னு வந்தேங்க’னு சொன்னேன்.

'ம்... நானும் பெரியகுளத்துக்காரன்தான்’னு அவர் சொன்னார். அட நம்ம ஆளுன்னு சந்தோஷமா இருந்தது. நடிக்கத் தெரியுமானு கேட்டவர், 'நடிச்சுக் காட்டு... பார்ப்போம்’னார். அது போதாதா... அவர் கையைப் பிடிச்சு வெளியே இழுத்து விட்டுட்டு கூண்டுக்குள் போய் நின்னு கையக் காலை உதறி நடிச்சுக் காட்டினேன். விழுந்து விழுந்து சிரிச்சார். 'நல்லா நடிக்கிறியே... பொழச்சுக்குவே, போ’னு ஸ்டூடியோவுக்குள்ளே அனுப்பிவெச்சார். சென்னையில நான் முதன்முதலா நடிச்சதே ஏவி.எம்-மில்தான்னு நெனைக்கிறப்போ ஆனந்தமா இருக்கு.

துரைக்கு வந்திருந்த ராஜ்கிரண் சாரை நான் முதன்முதலா சந்திச்சதும் ஒரு மதிய நேரத்தில்தான். சினிமாவுக்கு வர்றதுக்கு முந்தி மத்தியானச் சாப்பாடெல்லாம் என் வாழ்க்கைல நெனைச்சுப் பார்க்க முடியாது. அப்படியே சில நாள் கெடைச்சாலும், அதை நாலு நாலரை மணிக்கு மேலதான் சாப்பிட முடியும். இப்போ மத்தியானம் பிரேக்குனு சொல்ற சத்தம் இனிமையா இருக்கு. பகல் நேரத்தில் படுக்கிற பழக்கம் எனக்குக் கிடையாது. நேரம் கிடைக்குதேனு தூங்கிட்டா, உடம்புக்கு ஏதாவது ஆயிடும். ஷூட்டிங் இல்லேன்னாலும் பகல்ல நண்பர்களோட டிஸ்கஸ் பண்ணுவேன்'' என்றார்.

"பொசுக்குன்னு தொட்டுப்புட்டேன்!” - வடிவேலு

மாலை:

''பெரிசா நான் படிச்சுக் கிழிச்சிடலே... வெறும் அனுபவப் பாடம்தான். குழந்தைத் தொழிலாளிங்கிறாங்களே... அதுமாதிரிதான் என் கடந்த கால வாழ்க்கை. நான் இப்படி அதிகம் படிக்காததால, இப்போ மாலையிலே நேரம் கிடைச்சா என் புள்ளைங்க பாடம் படிக்கிறத உட்கார்ந்து ரசிச்சுக் கேப்பேன். நடிகன் ஆனதுக்கப்புறம் தியேட்டருக்கு சினிமா பார்க்கப் போறது. பார்க், பீச்னு எதுவும் கிடையாது. ப்ரிவியூ ஷோ போட்டாங்கன்னா மட்டும் போய்ப் பார்ப்பேன். நேரத்தை வேஸ்ட் பண்ணலாமுங்களா? அதோட அருமை எனக்கு நல்லாத் தெரியுமே.''

இரவு:

''மதுரையில் முனிச்சாலையிலதான் நான் பொறந்து வளர்ந்ததெல்லாம். அப்புறமா தியாகராஜா காலேஜுக்கு அப்பால வண்டியூர்ல குடியேறினோம். முனிச்சாலையில ஒப்புலா படித்துறைனு வைகை ஆத்தங்கரையில் ஒரு இடம். எனக்கு இந்தப் படித்துறைதான், போதிமரம் மாதிரி. தினமும் இங்கே ஏதாவது ஒரு கட்சிப் பொதுக்கூட்டம் நடக்கும். இல்லேன்னா கதாகாலட்சேபம். இதைக் கேட்டுக் கேட்டுப் பல வகையான ரசனை எனக்குக் கிடைச்சது. ராத்திரி நேரம் உழைச்சுக் களைச்சு வந்ததுக்கப்புறம் தூங்கப் போக மாட்டேன். விடிய விடிய நண்பர்களோடு அரட்டைக் கச்சேரிதான். பிளாட்பாரத்தில் கும்பலா உட்கார்ந்துக்குவோம். மதுரைதான் 24 மணி நேரமும் விழிச்சிருக்கிற நகரமாச்சே. எப்பவும் ஆள் நடமாட்டம் இருக்கும். போறவங்க, வர்றவங்க மாதிரியே நான் நடந்து பேசி, நடிச்சுக் காட்டுவேன்.

ஒரே எடக்கு, கேலிதான். எனக்கு நகைச்சுவை பொறந்ததே இங்கதான்னு சொல்லலாம். அந்த வறுமையில இந்த மாதிரி எனக்கொரு வடிகால் கிடைக்காம இருந்திருந்தா, ஒருவேளை நான் தற்கொலை பண்ணியிருப்பேனோ என்னவோ...''

- வடிவேலுவின் கண்கள் பனித்தன.

"பொசுக்குன்னு தொட்டுப்புட்டேன்!” - வடிவேலு

''சினிமா சான்ஸ் தேடி நான் மெட்ராஸுக்குப் படையெடுத்தது ரொம்ப தமாஷ்ணே'' என்றபடி தொடர்ந்தார் வடிவேலு. ''வேலை செஞ்சு சம்பாதிச்சதுல வாயைக்கட்டி, வயித்தைக்கட்டி கொஞ்சங் கொஞ்சமா மிச்சப்படுத்தி மாசத்துக்கு ஒருவாட்டி மெட்ராஸுக்கு லாரியில புறப்பட்டுடுவேன். லாரி மேல தார்ப்பாய்லதான் படுக்கை.. அதுல கட்டியிருக்கிற கயித்துல கையைக் கோத்துக்கிட்டுக் கனவுகளோட தூங்கிடுவேன். எல்லாம் நடிக்கிற மாதிரி கனவுகள்தான். மெட்ராஸில் ஒவ்வொரு வாட்டியும் ஒவ்வொரு ஏரியாவில் ஏதாவது வீட்டு வாசல்ல படுத்துத் தூங்கிடுவேன். எதுக்கும் யார் கையையும் எதிர்பார்க்க மாட்டேன்.

அந்தத் தீபாவளிக்கு 'தேவர் மகன்’ ரிலீஸ். அதுக்கு முதல் நாள் இரவில் ப்ரீவியூ ஷோ போட்டாங்க. சிவாஜி சார் வீட்டில் எல்லோரும் ஒண்ணாச் சேர்ந்தோம். அங்கே இருந்து தியேட்டருக்கு ஏ.சி. பஸ்ஸில் அழைச்சிட்டுப் போனாங்க. சிவாஜி சார் வீட்டில் டின்னர். என்னைக் காட்டி கமல் சார்கிட்ட சிவாஜி சார், 'தஸ்புஸ்’னு இங்கிலீஷ்ல என்னவோ சொன்னார். நமக்கு அதெல்லாம் புரியாதுங்களே. என்னை சிவாஜி சார் ரொம்பப் பாராட்டினதா அப்புறமா கமல் சார் சொன்னார்.

படம் முடிஞ்சு வர்றப்போ, சிவாஜி சார் என்னைப் பக்கத்தில் கூப்பிட்டார். என்ன சொல்லுவாரோனு பயந்துக்கிட்டுப் போய் நின்னேன். தோளில் தட்டிக்கொடுத்து, 'வெல்டன் வடிவேலு. நல்லா நடிச்சிருக்கே. உனக்குக் குரல் பெரிய ப்ளஸ் பாயின்ட். உனக்குக் குணச்சித்திர நடிப்பெல்லாம் நல்லா வரும். 'தேவர் மகன்’ல ஆஸ்பத்திரி சீன்ல என்னையே உலுக்கிட்டியேடா’னு சொல்லி சிவாஜி சார் ஆசீர்வதிச்சார். அவர் குரல், அந்த ஆசீர்வாதம், அந்தக் காட்சி... ஜென்மஜென்மத்துக்கும் என்னால மறக்க முடியாது!''

- புல்லட் அங்கிள்