Published:Updated:

வேடிக்கை பார்ப்பவன் - 15

நா.முத்துக்குமார், ஓவியங்கள்: செந்தில்

வேடிக்கை பார்ப்பவன் - 15

நா.முத்துக்குமார், ஓவியங்கள்: செந்தில்

Published:Updated:
##~##

கனவின் கைப்பிடியில்

''கட்டடங்களின் விரிசல்களுக்கு இடையே வேர் விட்டுப் பூக்கும் ரோஜாச் செடிகளை நீங்கள் பார்த்ததுண்டா? இயற்கை விதிகளைத் தவறாக்கி கால்கள் இல்லாமல் நடக்க அவை கற்றுக்கொடுக்கின்றன; அவை கனவுகளோடு வாழ்கின்றன. அதனால்தான் அவற்றால் தூய்மையான காற்றைச் சுவாசிக்க முடிகிறது!''

- ஹிராகி முராகோமி, ஜப்பானிய எழுத்தாளர்.

ரவெல்லாம் இவன் கனவுகள் நொடிக்கு 24 ஃப்ரேம்களில் ஓடிக்கொண்டிருந்தன. அடுத்த நாள் வந்த அதிகாலைச் சூரியன், இதுவரை இவன் பார்த்திராத வகையில் அழகானதோர் ஆரஞ்சுப் பந்தை வானத்தில் வரைந்துகொண்டிருந்தது. 'வருகிறேன் சென்னையே... வருகிறேன். என் ப்ரியத்துக்குரிய கோடம்பாக்கமே!’ என்று மனதுக்குள் குதூகலித்து, கனவுத் தொழிற்சாலைக்குள் கால் எடுத்து வைத்தான்.

மயிலாப்பூரில் நீல்கிரீஸ் கட்டடத்துக்குப் பின்னால், 'சாரதா நிவாஸ்’ என்ற ஹோட்டலில் அறை எடுத்து, அடுத்த நாள் ஷூட்டிங்குக்கான வேலைகள் நடந்துகொண்டிருந்தன. முதன்முதலில் கடலைப் பார்த்த குழந்தையைப் போல, இவன் பிரமித்தபடி அனைத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்.

''யூனிட்டுக்கு சொல்லியாச்சா? என்னென்ன லைட்ஸ் வேணும்னு கேமராமேன்கிட்ட லிஸ்ட் வாங்கிக்குங்க. ஃபஸ்ட் ஷாட் பிள்ளையார் கோயில் மரத்தடியில. இன்னிக்குக் கிரேன் வேணாம், ரெண்டு நாள் கழிச்சுத் தேவைப்படும். இந்த 'விக்’கை எடுத்துட்டுப் போயி சதாசிவம் சாருக்குப் பொருந்துதானு பார்த்து ஸ்டில்ஸ் எடுத்துட்டு வாங்க. அசிஸ்டென்ட் டைரக்டர் எங்கப்பா? டயலாக் சொல்லிக் கொடுத்தாச்சா? எடிட்டிங் ரிப்போர்ட் சொதப்பிடாதீங்க... கன்டினியூட்டி யார் பாக்கிறது?'' என்று வேறு பாஷை, வேறு உலகத்துக்குள் நுழைந்தான்.

வேடிக்கை பார்ப்பவன் - 15

கூத்துப்பட்டறையைச் சேர்ந்த குமரவேல், ஜெயக்குமார், தமிழ்நாடு திரைப்பட இயக்கம் என்ற ஃபிலிம் சொஸைட்டி நடத்தியவரும், கன்னட மொழிபெயர்ப்பாளருமான மறைந்த தி.சு.சதாசிவம், நடிகை மௌனிகா மற்றும் பல துணை நடிகர்களுடன் அடுத்த நாள் ஒரு வீட்டில் படப்பிடிப்பு தொடங்கியது. தயாரிப்பாளருக்குத் தெரிந்தவன் என்பதால், என்னென்ன எழுத வேண்டும் என்று சொல்லிக்கொடுக்கப்பட்டு, முதல் நாளே இவன் கையில் எடிட்டிங் ரிப்போர்ட் எழுதும் பணி ஒப்படைக்கப்பட்டது.

ஒரு நாவல் படமாவதை, வார்த்தைகள் குறைந்து காட்சிகளாவதை, கண்ணெதிரே கற்றுக்கொண்டான். இயக்குநர் அருண்மொழி சத்தம் போட்டுக்கூட பேச மாட்டார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காட்சியாக, 'கரைந்த நிழல்கள்’ வளர்ந்துகொண்டிருந்தது. ராஜராஜனும், தந்தைக்கு உதவியாகத் தயாரிப்பு நிர்வாகப் பணியை ஏற்றுக்கொண்டான்.

ஷூட்டிங் முடிந்து, இரவு அறைக்கு வந்ததும் சாரதா நிவாஸின் மொட்டைமாடியில், பால் நிலா வெளிச்சத்தில் நனைந்துகொண்டிருக்கும் மாமரத்து இலைகளைப் பார்த்தபடி, ராஜராஜனும் இவனும் அன்றைக்கு அறிந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வார்கள்.

ராஜராஜனுக்கு ஒளிப்பதிவாளராக வேண்டும் என்ற ஆசை. நாய்க்குட்டி, பனையேறும் பச்சையப்பன் அண்ணன், குத்துவிளக்குக்கு நடுவே சிரித்த செந்தில்... என இவனைப் போலவே அவனுக்குள்ளும் கோனிகா மேக்ஸி சைஸ் போட்டோக்கள் இருப்பதை இவன் அறிந்துகொண்டான். நள்ளிரவு வரை இவன் கதையாகச் சொல்ல, அவன் ஒளியாக வரைந்து பார்ப்பான்.

வேடிக்கை பார்ப்பவன் - 15

வாழ்ந்து கெட்ட வீடுகளில் இருந்து ஒரு வலி, மெள்ளக் கசிந்து காற்றில் பரவி நிலையற்று அலைவதை எப்போதாவது சந்தித்திருக்கிறீர்களா? கிராமத்தில் வாழ்ந்த சொந்த வீட்டை பூனைகள் உறங்கவும், அரசமரச் செடிகள் சுவர் வழி வேர் விட்டு, வெடித்துக் கிளம்ப அனுமதித்துவிட்டு மாநகரத்து வீதிகளில் பசியுடன் அலையும் கண்கள் நடுநிசியில் வந்து உங்களை அலைக்கழித்ததுண்டா? கதவு, ஜன்னல், பாத்திரங்கள்... போன்றவற்றை விற்ற பின்பு, கையிருப்புக் கரையக் கரைய மாநகரத்து சிக்னல் கம்பங்களுக்கு அருகே சிகப்பு விளக்கு விழும் வரை காத்திருந்து ஓடிவந்து வாகனங்களுக்கு இடையே நுழைந்து கார் துடைக்கும் துணியும், ஆங்கில டைம்ஸ் புத்தகமும் விற்பவர்களில் உங்கள் தூரத்து உறவினர்களின் சாயல் கண்டு துடித்ததுண்டா?

காலம், மைதானத்தில் விளையாடுபவனைப் பார்வையாளனாகவும், பார்வையாளனைப் பரிசு வெல்பவனாகவும் மாற்றிவிடுகிறது. அப்படிப் பட்ட ஓர் இளைஞனை அடுத்த நாள் இவன் சந்தித்தான். விஜயா-வாஹினி ஸ்டுடியோவில் ஒரு காட்சியைப் படம் பிடித்துக்கொண்டிருந்தார்கள்.

தேநீர் இடைவேளையில் கையில் பேடுடன் இவன் இருந்தபோது, ''நீங்க அசிஸ்டென்ட் டைரக்டர்தானே?'' என்றபடி அவன் வந்தான்.

''ஆமாம்'' என்றான். 20 வயது இருக்கும். கசங்கிய உடைகள். பஞ்சடைத்துப்போன கண்கள். வியர்வையில் நனைந்து சூழலுக்குப் பொருத்தமற்று நின்றிருந்தான்.

''எனக்கு ஏதாவது நடிக்கிறதுக்கு சான்ஸ் வாங்கிக் கொடுங்க சார்.''

''ஆபீஸ்ல வந்து பாருங்க... இதுக்கு முன்னாடி நடிச்சிருக்கீங்களா?''

''இல்ல சார்''

''அப்படின்னா கஷ்டம்... எதுக்கும் டைரக்டரை ஆபீஸ்ல வந்து பாருங்க.''

வேடிக்கை பார்ப்பவன் - 15

சட்டென்று இவன் கைகளைப் பிடித்துக்கொண்டான். ''நேத்து காலைல இருந்து சாப்பிடலை சார். ஏதாவது வேஷம் வாங்கிக் கொடுங்க. 10 ரூபா கிடைச்சாக்கூட போதும் சார்'' என்றான்.

''நடிக்கிறது கஷ்டம்... வேணும்னா புரொடக்ஷன்ல சாப்பிட்டுப் போங்க''

''இல்ல சார், ஓசி சாப்பாடு வேணாம்'' என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று நடக்கத் தொடங்கினான்.

இவனுக்கு, அவன் வைராக்கியம் பிடித்திருந்தது. அவனை இயக்குநரிடம் அறிமுகப்படுத்தி, சின்னதாக ஒரு வேடம் வாங்கிக்கொடுத்தான்.

ரு திரைப்படத்தின் முதல் நாள் பூஜை நடக்கும் காட்சி. அந்தப் படத்தின் இயக்குநருடைய தம்பியிடம் நாவலின் முக்கியமான கதாபாத்திரத்தை ஒரு எடிட்டிங் உதவியாளன் அறிமுகப்படுத்தி, 'இவரு கானா தானாகிட்ட வேலை செஞ்சவரு. டைரக்டர்கிட்ட ஒர்க் பண்ணணும்னு பிரியப்படுறாரு’ என்று சொல்ல வேண்டும். அதற்கு அவர் 'அப்பறம் பார்க்கலாம்’ என்பார். இதுதான் காட்சி.

எடிட்டிங் உதவியாளனாக அவனை நடிக்கவைக்க ஏற்பாடு ஆயிற்று. நான்கைந்து முறை வசனத்தைச் சொல்லவைத்துப் பார்த்து திருப்தியாக இருந்தது. திரைப்படத்தின் பூஜைக் காட்சி என்ப தால், ஆப்பிள், சாத்துக்குடி, வாழைப் பழம், இனிப்பு வகைகள்... என நான்கைந்து பெரிய தாம்பாளத் தட்டுகளில் சாமி படத்தின் முன்பு வைக்கப்பட்டிருந்தன. அதன் அருகில்தான் மேற்சொன்ன காட்சி எடுக்க வேண்டும்.

நடிகர்கள் தயாராகி நிற்க, ஒளிப்பதிவாளர் வெளிச்சம் சரி பார்த்து 'ஓ.கே.’ என்று சொல்ல, இயக்குநர் ''ரெடி டேக்'' என்றார். எல்லோரும் சரியாகச் செய்ய அவன் முறை வந்தபோது ''இவரு... இவரு... கானா தானாகிட்ட... வேலை... வேலை'' என்றான். கட் கட் என்று சொல்லிவிட்டு ''என்னப்பா சொதப்பற?'' என்று அலுத்துக் கொண்டார் இயக்குநர்.

''ஸாரி சார்... இப்ப சரியாப் பண்ணிடுறேன்.''

''ஓ.கே. லைட்ஸ் ஆன்... டேக்'' என்றார்.

மீண்டும் சொதப்பினான். கிட்டத்தட்ட ஏழெட்டு டேக்குகள் ஆயிற்று. இயக்குநர் இவனை முறைத்தார்.

''இல்ல சார்... என்னால முடியல. வேற யாரையாவது நடிக்கவெச்சிக்குங்க'' என்று சொல்லிவிட்டு அவன் செட்டைவிட்டு அழுதுகொண்டே ஓடினான். இவன் அவனைப் பின்தொடர்ந்து சென்றான்.

வேடிக்கை பார்ப்பவன் - 15

ரு தெலுங்குப் படத்தின் பாடலுக்காக செட் போடப்பட்டிருந்த காகித சொர்க்கத்தில் அமர்ந்து அழுதுகொண்டிருந்தான் அவன். இவன் மெள்ள நெருங்கி அவன் தோளைத் தொட்டு, ''என்னப்பா என்ன ஆச்சு?'' என்றான்.

அவன் குலுங்கிக்கொண்டே சொன்னான்.

''இல்ல சார்... எங்க குடும்பம் பெரிய குடும்பம் சார். தஞ்சாவூர்ல 100 ஏக்கர் நிலம் இருந்திச்சு. ரெண்டு தெருவைச் சேர்த்த மாதிரி வீடு. திண்ணையிலேயே 100 பேர் தங்கலாம். அப்பாவோட சீட்டாட்டப் பழக்கத்தால எல்லாம் போயிடுச்சு. குடும்பத்தோட மெட்ராஸ் வந்து கஷ்டப்படுறோம். தங்கச்சிங்க எக்ஸ்போர்ட் வேலைக்குப் போகுதுங்க'' என்று சொல்லி அழுதுகொண்டிருந்தான்.

''அது சரி, நடிச்சா காசாவது கிடைச்சிருக்குமே?!'' என்று இவன் கேட்க,

''இல்ல சார்... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தட்டுல ஆப்பிள், சாத்துக்குடி, ஸ்வீட்டுனு நெறைய வெச்சிருந்தீங்க.''

''ஆமா, அதுக்கென்ன?''

''என் கண்ணு முன்னாடியே ஒருத்தர் அந்தத் தட்டு மேல மண்ணெண்ணெய ஊத்தினாரு... என்னால தாங்க முடியல... எங்க வீட்டுல யாருமே ரெண்டு நாளாச் சாப்பிடல சார்... இங்க என்னடான்னா...'' உரையாடலை முடிக்காமல் அழுதுகொண்டிருந்தான். இவனுக்கு விஷயம் விளங்க ஆரம்பித்தது.

சினிமாவில் இதை 'கன்டினியூட்டி’ என்பார்கள். ஒரு ஷாட்டில் வைக்கப்படும் பொருள்கள் அடுத்த ஷாட்டிலும் அதே இடத்தில் அதே வடிவத்தில் இருக்க வேண்டும். அன்று எடுக்கப்பட்ட காட்சிகளின் பின்னணியாக 10 ஆப்பிள்கள் இருந்தன என்றால், இதன் தொடர்ச்சியாக அதே காட்சியை சில மணி நேரங்கள் கழித்து எடுப்பார்கள். அப்போது     10 ஆப்பிளுக்குப் பதில் எட்டு ஆப்பிள்களோ அல்லது வாழைப்பழமோ இருந்தால், படம் பார்க்கையில் உறுத்தும். உணவுப் பொருள்கள் என்பதால், தெரியாமல் யாராவது சாப்பிட்டுவிடக்கூடும். அதற்காக அதன் மேல் மண்ணெண்ணெய் ஊற்றுவார்கள். இதை அவனிடம் இவன் விளக்கிச் சொன்னான்.

வேடிக்கை பார்ப்பவன் - 15

''இருக்கட்டும் சார்... அதுக்காக மண்ணெண்ணெய் ஊத்துவாங்களா? நாங்க ரெண்டு நாளா சாப்பிடல சார்...'' என்று கைகள் நடுங்க அழுதுகொண்டிருந்தான்.

''சரி, பரவாயில்ல இந்தாங்க'' என்று அவன் கையில் 20 ரூபாய் கொடுத்தான்.

''வேணாம் சார்'' என்று சொல்லிவிட்டு வாசல் நோக்கி வேகமாக நடந்து காணாமல் போனான்.

தற்குப் பிறகு செய்தித்தாள்களில் 'வறுமை காரணமாகக் குடும்பத்துடன் தற்கொலை’ என்று படிக்கும்போது புகைப்படத்தில் அவன் முகம் இருக்கிறதா என்று பல நாட்கள் இவன் பதைபதைப்புடன் பார்த்துக்கொண்டிருந்தான்.

இன்றைக்கும் மாநகரத்தில் ஒவ்வொரு சினிமா கம்பெனி வாசலிலும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் வாய்ப்புக்காகக் காத்துக்கொண்டு இருப்பதைக் கவனிக்கிறான். அவர்களுடைய முகங்களில், அந்தத் தஞ்சாவூர் இளைஞன் முகச் சாயலின் துகள்கள் படிந்திருப்பதைப் பார்க்கையில் பயமாக இருக்கிறது!

- வேடிக்கை பார்க்கலாம்...