Published:Updated:

வேடிக்கை பார்ப்பவன் - 16

நா.முத்துக்குமார், ஓவியங்கள்: செந்தில்

வேடிக்கை பார்ப்பவன் - 16

நா.முத்துக்குமார், ஓவியங்கள்: செந்தில்

Published:Updated:
வேடிக்கை பார்ப்பவன் - 16

குறுக்கு வெட்டுத் தோற்றம்

தாமிரக் காசை தண்டவாளத்தில் வெச்சி
நாம பதுங்க ரயில் நசுக்கும் - ராமையா
கால ரயிலோட நாமெல்லாம் காசானோம்
வாலிபம் போய் ஆச்சே வயசு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- வெ.சேஷாசலம்
('ஆகாசம்பட்டு’ தொகுப்பில் இருந்து)

##~##

காலையில் எழுந்து கண்ணாடியைப் பார்த்ததும் இவன் திடுக்கிட்டுப்போனான். கண்ணாடியில், இவன் உருவத்துக்குப் பதில் குட்டிப் பையன் ஒருவன் நின்றுகொண்டிருந்தான். கண்களைத் தாழ்த்தி தன்னைத்தானே ஒருமுறை பார்த்துக்கொண்டான். நிஜம்தான். இவன், எட்டு வயதுக் குட்டிப் பையனாக மாறியிருந்தான். எப்படி இது சாத்தியம்? இவனால் நம்ப முடியவில்லை.

மூன்றாம் வகுப்பு படிக்கும்போது தீபாவளிக்கு இவன் மாமா எடுத்துக் கொடுத்த ஆரஞ்சு கலர் பூப்போட்ட சட்டையும், காக்கி கலர் டிரவுசரும் அணிந்தபடி கண்ணாடி முன் நிற்கும் இந்தப் பையன் இவன்தானா? அதே பழைய ஒல்லியான தோற்றமும், சற்றே சப்பையான மூக்கும் இவன்தான் என்பதை இவனுக்கு உணர்த்தியது. இந்தச் சப்பை மூக்கால்தான் இவனுக்கு சக மாணவர்கள் 'ஜப்பான்’ என்று பட்டப்பெயர் வைத்தார்கள். ''டேய் ஜப்பான்... நீ எப்படிடா மறுபடியும் வந்த?'' என்று இவனே இவனைப் பார்த்து ஆச்சரியப்பட்டான்.

அடுத்த அறையில் மனைவியும் மகனும் உறங்கிக்கொண்டிருந்தார்கள். மெள்ள மனைவியைத் தொட்டு எழுப்பினான். கண் விழித்து இவனைப் பார்த்தவள், ''ஆதவன்... உன் ஃப்ரெண்டு வந்திருக்கான் பாரு'' என்று சொல்லிவிட்டு, ''தம்பி... எந்த ஃப்ளாட்டுடா நீ?'' என்றாள்.

''நான் ஆதவன் ஃப்ரெண்டு இல்லடி. நான்தான் முத்துக்குமார். உன் புருஷன்'' என்றான்.

மனைவியும் திடுக்கிட்டு எழுந்து, ''என்னங்க இது கூத்து?'' என்று அச்சத்துடன் கேட்க, ''ஹாலுக்கு வா சொல்றேன்'' என்றான்.

ஹாலுக்கு வந்து சொல்லி முடித்ததும், ''எப்படிங்க இப்படிச் சின்னப் பையனா மாறினீங்க?'' என்றாள் அதே ஆச்சரியத்துடன்.

''அதான் எனக்கும் தெரியல'' என்றான்.

''அய்யோ! இப்ப நான் ரெண்டு புள்ளைங்களை வளர்க்கணுமா? ஏற்கெனவே ஒண்ணு பண்ற சேட்டையே தாங்க முடியல...'' என்று அலுத்துக்கொண்டாள்.

சத்தம் கேட்டு விழித்து எழுந்து ஹாலுக்கு வந்த மகன், யாரோ போல் இவனைப் பார்த்தான். இவன், ''டேய்... நான்தான்டா, அப்பாடா!'' என்றான்.

''அப்பாவா? யாருகிட்ட டூப் விடற? எங்கப்பா ஹைட்டா இருப்பாரு. தாடி வெச்சிருப்பாரு'' என்றான் மகன்.

''இல்லடா அப்பாதான்டா. திடீர்னு சின்னப் பையனா மாறிட்டேன்'' என்று இவன் சொல்ல, ''எங்கப்பா சின்ன வயசுல ஹார்லிக்ஸ் பேபி மாதிரி குண்டா இருப்பாராம். அவரே சொல்லியிருக்காரு'' என்று மகன், இவன் எப்போதோ சொன்ன பொய்யை நினைவுபடுத்தினான்.

வேடிக்கை பார்ப்பவன் - 16

''இல்லடா ராஜா. அது அப்பா சும்மா நீ நல்லாச் சாப்பிடணும்னு பொய் சொன்னேன். உண்மையிலேயே நான் ஒல்லியாத்தான் இருப்பேன். வேணும்னா போட்டோ காட்டுறேன் பாரு'' என்று சொல்லிவிட்டு இவன் பழைய ஆல்பத்தை எடுத்து வந்து மகனிடம் காட்டினான்.

''ஆமாப்பா... அப்படியே இருக்கீங்கப்பா! எப்பிடிப்பா சின்னதா ஆனீங்க?'' என்று மகன் கேட்க, ''அதான்டா எனக்கும் தெரியல'' என்றான்.

இவர்கள் உரையாடிக்கொண்டிருக்கும்போதே இவன் மனைவி, சொந்தக்காரர்களுக்கு எல்லாம் தொலைபேசியில் இந்த அதிசயத்தைச் செய்தியாக்கிக் கொண்டிருந்தாள்.

''இப்பதான் நீங்க குட்டிப் பையனா மாறிட்டீங்களே, வாங்க பார்க்ல போயி சறுக்கு மரம் வெளயாடலாம்'' என்று மகன் இவனை வடிவேலாக்கி வேனில் ஏற்ற, இவன் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தான்.

வனுக்குள் இப்போது நிறையக் கேள்விகள். இனி என்ன செய்வது? மூன்றாம் வகுப்பில் இருந்து படிப்பைத் தொடர்வதா? இவன் படிக்கப்போனால், குடும்பத்தை யார் காப்பாற்றுவது? இதே உருவத்துடன் இவன் மகனுக்கு இவன் எப்படி அப்பாவாக இருப்பது என்று இவன் குழம்பிக்கொண்டிருந்தபோது, அந்தக் குழப்பக் குளத்தில் மனைவி மேலும் ஒரு கல் எறிந்தாள். ''சாயங்காலம் ஒரு கல்யாண ரிசப்ஷன் இருக்கே. உங்களை எப்படி வெளிய கூட்டிட்டுப் போறது?''

இவனுக்கு எப்போது மனக்குழப்பம் வந்தாலும், எழுத்தாளர், கலை விமர்சகர் சி.மோகனுக்கு தொலைபேசியின் வழியே ஆலோசனை கேட்பான். அவரைத் தொடர்புகொண்டு நிலைமையை விளக்கினான்.

''சமீபத்துல காஃப்காவோட புக் ஏதாச்சும் படிச்சீங்களா?'' என்றார்.

''ஆமா சார். அவரோட புக் படிச்சு ரொம்ப நாளேச்சுனு அவரு எழுதின 'உருமாற்றம்’ நாவலைப் படிச்சேன்'' என்றான்.

''அதான். லிட்ரேச்சரைப் படிக்கும்போது கவனமா இருக்கணும். அது கத்தி மேல நடக்கிற மாதிரி. ஆழ்மனசுல எங்கேயோ போய் சில சமயங்கள்ல அந்தக் கத்தி கிழிச்சுடும். இப்படித்தான் எம்.வி.வெங்கட்ராமோட 'காதுகள்’ நாவலைப் படிச் சிட்டு நெறையப் பேரு, அவங்க காதுலயும் பலவிதமான குரல்கள் கேட்கிறதா எங்கிட்ட சொல்லியிருக்காங்க'' என்றார். இவனுக்குத் தெளிவாகப் புரிந்தது. 'உருமாற்றம்’ நாவல், ஒரு மனிதனை திடீரென்று கரப்பான் பூச்சியாக மாறுவது குறித்தது!

''இப்ப என்ன சார் பண்றது?'' என்றான் திகைப்புடன்

''ஒண்ணு பண்ணலாம் முத்துக்குமார். நீங்க இப்ப ஃப்ரீயா இருந்தீங்கன்னா, என் ரூமுக்கு வாங்க. சின்ன வயசுல நீங்க எப்படி இருந்தீங்கனு பார்க்க, எனக்கும் ஆசையா இருக்கு'' என்றார் சிரித்தபடி.

வேடிக்கை பார்ப்பவன் - 16

கன், பள்ளிக்குக் கிளம்பிச் செல்ல, இவனுக்காக தொலைக்காட்சியில் போகோ சேனலை வைத்துவிட்டு, ''பார்த்துட்டு இருங்க. எனக்கு கிச்சன்ல நெறைய வேலை இருக்கு'' என்றாள் மனைவி.

''நான் வெளிய போயிட்டு வர்றேன்'' என்று மனைவியிடம் சொல்லிவிட்டு, பதிலுக்குக்கூட காத்திராமல் காரைத் தவிர்த்துவிட்டு அரசுப் பேருந்தில் ஏறி, தேனாம்பேட்டை சிக்னலுக்கு டிக்கெட் வாங்கினான்.

சிக்னலுக்குப் பக்கத்தில் இவன் பால்ய வயது நண்பன் சண்முகம் வேலை பார்க்கும் அலுவலகத்துக்குச் சென்றான். இவனை சண்முகத்துக்கும் அடையாளம் தெரியவில்லை.

''டேய் நான்தான்டா முத்துக்குமார்'' என்றான்.

''எந்த முத்துக்குமார்?'' என்று அவன் கேட்க.

''டேய்... ஜப்பான்டா'' என்று சொல்லிவிட்டு, இவன் தன் நிலைமையை மீண்டும் விளக்கினான்.

''நான் சின்ன வயசுல எப்படி இருந்தேன்னு பார்த்தவங்கள்ல நீயும் ஒருத்தன். அதான் உங்கிட்டப் பேசிட்டுப் போலாம்னு வந்தேன்'' என்றான்.

''நான் சின்ன வயசுல எப்படி இருந்தேன்னே எனக்கு ஞாபகம் இல்லே. இதுல உன்னை எப்படி ஞாபகம் வெச்சுக்கிறது? சரி... சரி... வா கேன்டீனுக்குப் போய்ப் பேசலாம். எதுக்கும் ரெண்டு அடி தள்ளியே நடந்து வா. சின்னப் பசங்ககூட எல்லாம் சகவாசம் வெச்சுக்கிறேன்னு ஆபீஸ்ல கிண்டல் பண்ணப்போறாங்க'' என்று சண்முகம் சொல்ல, இவனுக்கு சர்க்கரை அதிகம் இருந்தும் காபி கசந்தது.

திரும்ப பேருந்து ஏறி வீட்டுக்கு வரும்போது செல்போன் ஒலித்தது. இயக்குநர் லிங்குசாமி பேசினார்.

''முத்துக்குமார் நாளைக்கு நைட்டு கம்போஸிங்குக்கு சிங்கப்பூர் போறோம். டிக்கெட் போட்டாச்சு'' என்று சொல்ல.

''சார். அதுல ஒரு சிக்கல். நான் நேர்ல வந்து விளக்குறேன்'' என்று சொல்லிவிட்டு அவரது அலுவலகம் விரைந்தான்.

லிங்குசாமி அலுவலகம் பரபரப்பாக இருந்தது. துணை நடிகர்கள், உதவி இயக்குநர் வாய்ப்பு கேட்டுக் காத்திருந்தவர்கள் என பெருங்கூட்டத்தை விலக்கி, இவன் உள்ளே நுழைந்தான்.

''தம்பி... சைல்ட் ஆர்ட்டிஸ்ட்டுக்கு இந்தப் படத்துல ரோல் இல்ல. போட்டோ குடுத்துட்டுப் போங்க. தேவைப்பட்டா கூப்புடுறோம்'' என்று புரொடக்ஷன் மேனேஜர் இவனைப் பார்த்து சொல்ல, இவன் பெரும்பாடுபட்டு, தான் யாரென்று அவருக்கு விளக்கி, லிங்குசாமியை அவரது அறையில் சந்தித்தான்.

மீண்டும் பெரும் விளக்கம் முடிந்த பின், லிங்கு சாமி கேட்டார், ''இப்ப என்ன பண்றது முத்துக்குமார்? நாளைக்கு இதே உருவத்தோட வந்து நின்னா இமிக்கிரேஷன்ல நம்ப மாட்டாங்களே!''

''ஒரு நாள் டயம் இருக்கு சார். ஏதாவது மேஜிக் நடக்கலாம்'' என்று சொல்லிவிட்டு வீடு வந்தான்.

கன், அவன் வயதுடைய நண்பர்களையெல்லாம் ஃப்ளாட்டில் இருந்து அழைத்து வந்து, ''எங்கப்பாடா! எப்படிச் சின்னப் பையனா மாறியிருக்காரு பாரு!'' என்று பெருமையடித்துக்கொண்டிருந்தான். டிக்கெட் போட்டு விற்காத குறைதான். போதாக்குறைக்கு மனைவி வேறு இவனுக்குப் பிடிக்காத நூடூல்ஸ் செய்து, ''சாப்பிடுங்க டேஸ்ட்டா இருக்கும். சின்னப் பசங்க இதைத்தான் விரும்பிச் சாப்பிடுவாங்க'' என்றாள்.

இப்படியே தொடர்ந்தால் இவன் வாழ்க்கை என்ன ஆவது என்ற அச்சம் உருவானது. வங்கிக் கணக்கில் இருந்து கார் லோன் வரை அடையாள சிக்கல்கள் இவனைத் துரத்தும். இனி இவனது நண்பர் குழாம் இவனை எப்படி நடத்துவார்கள்? எல்லாவற்றுக்கும் மேல், 'நான்தான் கவிஞர் முத்துக்குமார்'' என்றால், இவன் ரசிகர்கள் இவனை நம்புவார்களா?

னைவியும் மகனும் உறங்கிய பின்னும் இவன் கண் விழித்து யோசித்துக்கொண்டேயிருந்தான். மூன்றாம் வகுப்பு படிக்கையில் இவன் என்ன செய்தான்?

என்னென்னவோ செய்தான்! பொறுப்புகளும், அதனால் வரும் கவலைகளும் இல்லாத ஒரு பருவம் அது. அந்தப் பருவத்தில்தான் இவன் எல்லாக் குழந்தைகளையும் போலவே கடவுளாக இருந்தான்.

மேகங்களை விலக்கி நீந்தி வந்து நிலா இவனுக்குக் கதை சொன்னது. மழையும் வெயிலும் அதைத் தொடர்ந்து வண்ணங்கள் ஏழையும் விரித்துக் காட்டும் சீன விசிறியைப் போல் வானவில்லும், இவன் வானமெங்கும் நிறைந்திருந்தன. பெற்றவன் கடனை அறியாமல் பெருங்கனவுகளில் மிதந்து அலைந்த காலம் அது.

பென்சிலுக்காக அடித்துக்கொண்டதும், பெண் உடல் புதிரை அவிழ்க்க முயன்றதும், பிரபஞ்சத்தின் முன்னே புள்ளியாக நின்றதும், விடையில்லாக் கேள்விகளால் வாழ்வை அளந்ததும் அந்தப் பருவத்தில் அல்லவா?

சிறகைப் போல் இவன் பொத்திப் பாதுகாத்த அந்த பால்ய காலம், இன்று சிலுவையைப் போல் கனப்பது ஏன்? பதில் தெரியாமல் உறங்கிப்போனான்.

வேடிக்கை பார்ப்பவன் - 16

காலையில் எழுந்து கண்ணாடியைப் பார்த்ததும் மீண்டும் ஓர் ஆச்சரியம் இவனுக்குக் காத்திருந்தது. குட்டிப் பையன் வளர்ந்து இவன் இவனாகி நின்றுகொண்டிருந்தான். எப்படி இது சாத்தியம்? இடையில் என்ன நடந்தது? மனதுக்குள் கேள்வி எழும்ப, இவனைப் பார்த்து கண்ணாடி கேட்டது,

''பழைய உருவத்துக்கே வந்துட்ட. இப்ப சந்தோஷமா?''

''ஒண்ணுமே புரியல. நடந்தது எல்லாமே புதிராகவும் மர்மமாகவும் இருக்கு. நான் ஏன் சின்னப் பையன் ஆனேன்?'' என்றான்.

கண்ணாடி சொன்னது, ''ரெண்டு நாளைக்கு முன்னாடி நீ உன் பொண்டாட்டிட்ட என்ன சொன்ன... ஞாபகம் இருக்கா?''

''இல்லையே!''

''நான் சொல்லவா. வேலை வேலைனு இப்படிப் போட்டி, பொறாமைகளுக்கு நடுவுல ஓடிக்கிட்டு இருக்கிறது டயர்டா இருக்கு. மறுபடியும் ஏழெட்டு வயசுப் பையனா மாறினா எவ்வளவு சந்தோஷமா இருக்கும்''

இவன் ஞாபகம் வந்து, ''ஆமா... அப்படித்தான் சொன்னேன்'' என்றான்.

''இப்ப சந்தோஷமா இருக்கா?'' என்றது கண்ணாடி.

''இல்ல. அந்தந்த வயசுக்கு அது அது சந்தோஷம். மேட்டுலயும் பள்ளத்துலயும் ஓடத்தான் நதி படைக்கப்பட்டிருக்கு. இப்ப எனக்குப் புரிஞ்சிருச்சு'' என்றான்.

இவன் இவனானதில், இவனைவிட மனைவியும் மகனும் அதிகம் மகிழ்ச்சியை அடைந்தார்கள். லிங்குசாமிக்கு போன் செய்து ''இன்னிக்கு நைட்டு கம்போஸிங் கிளம்பிரலாம் சார்'' என்றான்!

- வேடிக்கை பார்க்கலாம்...