Published:Updated:

“இது அறியாதவர்கள் செய்த பிழை!”

ஒரிஸ்ஸா கொடூரம்...பரிபாடாவிலிருந்து நேரடி ரிப்போர்ட்

“இது அறியாதவர்கள் செய்த பிழை!”

ஒரிஸ்ஸா கொடூரம்...பரிபாடாவிலிருந்து நேரடி ரிப்போர்ட்

Published:Updated:
“இது அறியாதவர்கள் செய்த பிழை!”
##~##

 'ஆஸ்திரேலியரான கிறிஸ்தவ மதப் பிரசாரகர் கிராம் ஸ்டீவர்ட் ஸ்டெயின்ஸ், தன்னுடைய இரண்டு மகன்களுடன் ஒரிஸ்ஸாவில் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார்!’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மயூர்பஞ்ச் மாவட்டத் தலைநகரான  பரிபாடா கிராமத்தில் இருந்துதான் தன் சேவைகளைச் செய்துவந்தார் ஸ்டெயின்ஸ். பரிபாடா என்பதும் மாவட்டத் தலைநகர் என்ற ஹோதாவோடு இல்லை. மெயின் பஜார் என்ற பெயரில் 15 சாராயக் கடைகள். ஒரே ஒரு ஆட்டோகூட இறக்குமதி ஆகாமல், இன்னமும் மூச்சிரைக்க சைக்கிள் ரிக்ஷா மிதித்துக்கொண்டிருக்கிறார்கள்!

இவ்வளவு பின்தங்கிய ஓர் இடத்தில்தான் சேவை செய்யவேண்டும் என்று தீர்மானமாக இருந்திருக்கிறார் ஸ்டெயின்ஸ். தொழுநோயாளிகளின் மறுவாழ்வும், பக்கத்து மலைப்பிரதேசங்களில் உள்ள ஆதிவாசி இனத்தவரை கிறிஸ்துவின்பால் மனம் திரும்பச் செய்வதுமான வேலையை எடுத்துக்கொண்டார்.

கணவர் ஸ்டெயின்ஸின் பணிகளில் தன்னை முழுக்க ஈடுபடுத்திக்கொண்டவர் அவருடைய காதல் மனைவி கிளாடிஸ். மூத்த மகளும் மகனும் ஊட்டியில் படித்துக்கொண்டிருக்க, கடைக்குட்டி மகனுடன் பரிபாடாவில் இருந்துகொண்டு, 'இவாஞ்சலிக்கல் மிஷனரி சொஸைட்டி’ என்ற அமைப்பைக் கவனித்துவந்தார்.

பரிபாடாவில் கிளாடிஸைச் சந்திக்கச் சென்றோம். ''நான் என்ன சொல்ல வேண்டும்?'' என்று கேட்டார் கிளாடிஸ் வருத்தங்களை வெளிப்படுத்தாத ஒரு குரலில்.

''சொல்லுங்கள்... உங்கள் கணவரைப் பற்றி... அவரை நீங்கள் இந்தியாவில் சந்தித்து, இங்கேயே கல்யாணமும் செய்துகொண்டு, அவருடைய பணிகளில் பங்கெடுத்துக்கொண்டது பற்றி... இரண்டு மகன்களுடனும் அவர் உங்களைவிட்டுப் பிரிந்துபோனது பற்றி...'' என்றோம்.

“இது அறியாதவர்கள் செய்த பிழை!”

கட்டுப்பாடு கலைந்து, மெல்லிய ஒரு நெகிழ்வுடன் பேச ஆரம்பித்தார் கிளாடிஸ். ''15 வருட வாழ்க்கை. மிருதுவான மனிதர். உரத்தக் குரலில் பேசத் தெரியாதவர். பிள்ளைகளை எதற்காகவாவது அவர் கண்டித்தால்கூட திட்டுகிறாரா, கொஞ்சுகிறாரா என்பதே தெரியாது. அவ்வளவு மென்மையாக இருப்பார்.

ஆஸ்திரேலியாவில் அவருடைய குடும்பம் மிக ஏழ்மையானது. அவருடைய அம்மாதான் உழைத்து,  மகனைக் காப்பாற்றினார். பிரமாதமான மாணவராகப் பள்ளிக்கூடத்தில் விளங்கிய அவரால், பள்ளி இறுதி வகுப்புக்கு மேல் தொடர முடியவில்லை. வசதி இல்லை. 'எனது ஏழ்மை, என்னை ஏழைகளின்பால் திருப்பியது’ என்று சொல்வார்.

ஒருநாள், 'நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று கடவுளிடம் கேட்டாராம் ஸ்டெயின்ஸ். 'உனக்கு இந்தியாவில் வேலை இருக்கிறது’ என்று கடவுள் சொல்ல, இங்கு வந்து தன் சேவையை ஆரம்பித்திருக்கிறார். ஆஸ்திரேலியாவில் நான் இருக்கும்போதே, இந்தியாவில் இருந்த ஸ்டெயின்ஸுடன் கடிதத் தொடர்பு ஏற்பட்டது. அது பேனா நட்பாக மாறியது. பிற்பாடு நான் இந்தியாவுக்கு வந்து என் பணிகளை ஆரம்பித்தபோது, அவரை நேரில் சந்தித்தேன். கல்யாணம் செய்துகொண்டோம்...'' என்றார் கிளாடிஸ்.

1965-ல் ஒரிஸ்ஸாவுக்கு வந்த ஸ்டெயின்ஸ், மயூர்பஞ்ச் மாவட்டத்தில் ஏற்கெனவே இருந்த ஒரு மிஷனரி அமைப்பில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். தொடர்ந்து 33 வருடங்களாக ஒரே நோக்கமாக வேலை செய்துவந்தார். பக்கத்து மலைப் பகுதிகளில் ஹோ, ஸந்த்தாலி என்று இரண்டு பழங்குடி இனங்கள். ஒரிய மொழியோடு அவர்களுடைய மொழிகளையும் கற்றுக்கொண்டார் ஸ்டெயின்ஸ். ஒரியா, ஸந்த்தாலி மொழிகளில் நீதிபோதனைப் புத்தகங்களை மொழிபெயர்த்திருக்கிறார்.

பழங்குடி இனத்தவர்களிடம் கிறிஸ்துவின் மகிமைகளைப் பிரசங்கம் செய்வதற்காகவே 'வன முகாம்’ என்ற நிகழ்ச்சியை வடிவமைத்தார் ஸ்டெயின்ஸ். காட்டுப் பகுதிகளுக்குச் சென்று பிரசங்கம் செய்வார். அப்படி ஒரு நிகழ்ச்சிதான் அவர் கடைசியாகத் திட்டமிட்டு இருந்த மனோகர்புர் முகாம். கியோஞ்சர் மாவட்டத்தில் இருக்கும் மலைப் பகுதிக் கிராமம் அது. இந்த முகாமில் ஸ்டெயின்ஸுடன் சென்று கலந்துகொண்ட அவரது ஆஸ்திரேலிய நண்பர் கில்பர்ட் வென்ஸிடம் பேசினோம்.

“இது அறியாதவர்கள் செய்த பிழை!”

''நான் ஸ்டெயின்ஸைச் சந்திக்க இப்போதுதான் முதன்முதலாக இந்தியாவுக்கு வந்தேன். மனோகர்புர் முகாம் பற்றிக் கேள்விப்பட்டதும் உற்சாகமாக நானும் கிளம்பினேன். ஸ்டெயின்ஸின் மனைவி கிளாடிஸும் மகள் எஸ்தரும் பக்கத்துக் கிராமமான தாகுர்முண்டாவிலேயே தங்கிக்கொண்டார்கள்.

ஸ்டெயின்ஸுக்கு ஒரு வழக்கம். முகாம்களுக்குப் போனால் சர்ச்சிலோ, வசதியான குடியிருப்பிலோ தங்காமல் தனது வேனில்தான் உறங்குவார். அன்றிரவு ஒன்பதே முக்கால் மணிக்கு எனக்கு 'குட் நைட்’ சொல்லிவிட்டு மகன்கள் பிலிப்ஸ், திமோதி ஆகியோருடன் வேனுக்குள் சென்று படுத்துவிட்டார்.

நள்ளிரவு பன்னிரண்டே முக்கால் மணிக்குக் களேபரமான சத்தம் கேட்டது. விழித்துப் பார்த்தால்... கடவுளே, அந்தத் தருணத்தை என்னால் மீண்டும் நினைத்துப் பார்க்க முடியவில்லை...'' - சிலிர்த்துக்கொள்கிறார் கில்பர்ட்.

விழித்துப் பார்த்தவர்கள் விபரீதக் காட்சியைக் கண்டார்கள். 50, 60 பேர் கும்பல். கையில் வில்லும் அம்புமாக ஆயுதங்கள்... ஸ்டெயின்ஸும் இரண்டு மகன்களும் இருந்த வேன் எரிந்துகொண்டிருக்கிறது. காப்பாற்றப் போன கிராமத்தினரையும் நண்பர்களையும் விஷமிகள் கும்பல் வில் முனையில் மிரட்டிவைத்திருக்க, வேன் எரிந்து முடிந்தது. கடைசியில், மிஞ்சியது கரிந்த வேனும், அடையாளம் தெரியாதபடி எரிந்துபோன மூவரின் உடல்களும்தான்!

மறுநாள் கொடூரம் வெளியே தெரியவர, தினசரிகள் கதறின. வெளிநாட்டு மீடியா இந்தச் செயலையொட்டி இந்தியாவையே கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தது. தினமும் அமைச்சர்கள், அதிகாரிகள் குழு, சம்பந்தப்பட்ட இடத்துக்கு விஜயம் செய்து, பேசிப் பேசி மாய்கிறது. ஆனால், கணவரையும் இரண்டு மகன்களையும் உயிரோடு எரியக் கொடுத்துவிட்டு, 13 வயது மகள் எஸ்தருடன் தன்னந்தனித்து நிற்கும் கிளாடிஸின் சோகம்தான் பரிதாபமானது.

“இது அறியாதவர்கள் செய்த பிழை!”

10,000 பேர் கலந்துகொண்ட ஸ்டெயின்ஸின் இறுதிச்சடங்கில், தன் கணவருக்குப் பிடித்தமான ஒரிய மொழிப் பாடலைப் பாடச் சொன்னார் கிளாடிஸ். பாடினார்கள்...

'கேளுங்கள் மானிடரே
ஒருபோதும் மறக்க முடியாத
ஒரு பெரும் கதையை...
ஒரு மனிதன் விண்ணிலிருந்து
இங்கு வந்தான்
மனிதர்களின் துயர் துடைக்க
தன் வாழ்வைத் தந்தான்...’

இறுதிச்சடங்கில் தன் மகள் எஸ்தருடன் சேர்ந்து, தானும் ஓர் ஆங்கிலப் பாடலைப் பாடினார் கிளாடிஸ்...

'அவர் இன்னும் வாழ்கிறார்
அந்தத் துணிவில் நாங்கள்
நாளையை எதிர்க்கொள்வோம்...’

கிளாடிஸ் நம்மிடம் பேசும்போதும், ''எனக்குத் துக்கமாகத்தான் இருக்கிறது. ஆனால், யார் மீதும் கோபம் இல்லை. அவருக்கு எதிரி என்று எவரும் இருக்க முடியாது. இது தாங்கள் இன்னது செய்கிறோம் என்று அறியாதவர்கள் செய்த பிழை. கிறிஸ்து அவரை இந்தப் பூமிக்கு அனுப்பினார். திரும்ப அழைத்துக்கொண்டுவிட்டார்...'' என்றார்.

''அடுத்து என்ன செய்வதாக இருக்கிறீர்கள்..?''

''இங்கே உள்ள சகோதர, சகோதரிகளை என் கணவர் நேசித்ததைப் போலவே நானும் நேசிக்கிறேன். இவர்களுக்கு அன்பும் கவனிப்பும் தேவையாக இருக்கிறது. அதை இவர்களுக்கு என் கணவர் கொடுத்ததைப் போல நானும் கொடுக்க வேண்டும். இங்குதான் இருக்கப்போகிறேன். என் கணவரின் சேவைகளைத் தொடர்வேன்...'' என்கிறார் ஸ்டெயின்ஸின் மனைவி கிளாடிஸ்.

கடவுளின்மீது கொண்ட விசுவாசத்தால், கிளாடிஸ் உறுதியாக இருக்கிறார்!

- ரமேஷ் வைத்யா

படங்கள்: கே.கார்த்திகேயன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism