Published:Updated:

அறிவிழி - 53

அண்டன் பிரகாஷ்

அறிவிழி - 53

அண்டன் பிரகாஷ்

Published:Updated:
அறிவிழி - 53

Gross Domestic Product. சுருக்கமாக, GDP என்று அழைக்கப்படும். மொத்த உள்நாட்டு உற்பத்தி எண், வங்கி, முதலீடு, ஏற்றுமதி/இறக்குமதி போன்ற துறைகளில் இருப்பவர்களால் கூர்மையாகக் கவனிக்கப்படும். தேசத்தின் பொருளாதாரம் வளர்ந்திருக்கிறதா, பின்தங்கியிருக்கிறதா என்பதைத் தெளிவாகக் காட்டும் எண் 'GDP’ என்று பரவலாக நம்பப்படுகிறது. ஆனால், அது உண்மையா?

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

GDP பற்றி ஒரு க்விக் அறிமுகம்: GDP என்பது, ஒரு நாட்டின் பொருள்கள் மற்றும் சேவைகளின் மொத்த மதிப்பீடு. உதாரணத்துக்கு, நீங்கள் வங்கியில் பணிபுரிகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். மாதச் சம்பளத்தைப் பெற்றுக்கொண்டதும், வீட்டு வாடகை கொடுக்கிறீர்கள். பெற்றுக்கொள்ளும் வீட்டுச் சொந்தக்காரர் அதில் இருந்து வீட்டுக்கு பெயின்ட் செய்பவருக்கு செட்டில்மென்ட் செய்கிறார். பெயின்டர், தான் வாங்கிய மோட்டார் பைக்கின் மாதத் தவணையை உங்களது வங்கியில் செலுத்துகிறார். இப்படி கைமாறிய பணம் அத்தனையையும் கூட்டினால் வரும் எண்ணை 'GDP’ என்று சொல்லலாம்!

இதனால், கடன் சுமையைப் பற்றிய கவலை இல்லாமல், உற்பத்தியைப் பெருக்கி, வணிக அளவை அதிகரிக்க தலைப்பட்ட மேலைநாடுகளின் பொருளாதாரங்கள் கிடுகிடுவென வளர்ந்தன. இது ஒருவிதத்தில்  வெள்ளந்தி எதிர்பார்ப்பு என்றார்கள் பொருளாதார அறிஞர்கள் பலர். காரணம், தேசத்தின் பொருளாதார அளவை (Volume) மட்டுமே GDP கணக்கிடுகிறது; தரத்தை (Quality) அல்ல!

GDP நியமிக்கப்பட்ட நாளில் இருந்தே லேசான எதிர்க் குரல்கள் எழுந்தன. 70-களின் தொடக்கத்தில், பூட்டான் நாட்டின் அரசர் தங்களது நாட்டின் புத்த மத நம்பிக்கைகளின்படி தேசத்தின் வளர்ச்சி தரத்தின் அடிப்படையில் இருக்கவேண்டும் என்பதால், மக்களின் மகிழ்ச்சி சார்ந்த மதிப்பீட்டை'Gross National Happiness’ என்று அளக்கும் ஃபார்முலாவை அறிமுகம் செய்தார். பூட்டான் தவிர வேறு எந்த நாட்டிலும் இது இன்று வரை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. என்றாலும், அளவை மட்டுமே அடிப்படையாகக்கொண்ட GDP-யின் நம்பகத்தன்மை தொடர்ந்து விவாதத்துக்கு உள்ளானபடிதான் இருக்கிறது!

அறிவிழி - 53

சென்ற வருட செப்டம்பர் வரை கணக்கிடப்பட்ட GDP பதிவுகளைப் பார்க்கும்போது, ஆச்சரியம் எழுகிறது. உதாரணமாக, இந்தியாவின் பொருளாதாரம் கிட்டத்தட்ட ஐந்து சதவிகிதம் வளர்ந்திருக்கிறது. ஆனால், தொழில் உற்பத்தியில் இரண்டு சதவிகிதம் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. அப்படியானால், மேற்படி வளர்ச்சி, சேவைத் துறைகளில் இருந்தும், ஏற்றுமதியில் இருந்தும் முக்கியமாக வந்திருக்க வேண்டும் என்பதை ஊகிக்க முடிகிறது. ஆனால், உலகமயமாகிவிட்ட இன்றைய சூழலில், இப்படி கறுப்பு/வெள்ளையாகப் பொருளாதாரத்தைக் கணக்கிட முடியாது அல்லவா?

இதை சிம்பிளான ஓர் உதாரணம் மூலம் விளக்கலாம். 'கோடாக்’ என்ற பெயர் நம் அனைவருக்கும் பரிச்சயமானது. 19-ம் நூற்றாண்டின் இறுதியில் ஜார்ஜ் ஈஸ்ட்மென் என்பவரால் நிறுவப்பட்ட இந்தக் கேமரா மற்றும் ஃபிலிம் சுருள் தயாரிக்கும் நிறுவனம், 100 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடி கட்டிப் பறந்தது.

அறிவிழி - 53

வணிக உலகில், razor and blades’ என்ற விற்பனைத் திட்டம் ஒன்று உண்டு. சவரம் செய்யும் ரேஸரை மலிவாகக் கொடுத்துவிட்டு, தொடர்ந்து தேவைப்படும் பிளேடை அதிக விலையில் விற்கும் டெக்னிக். இந்த நாட்களில், பிரின்டரைக் குறைந்த விலைக்குக் கொடுத்துவிட்டு, அதற்கான கேட்ரிஜை அதிக விலைக்கு விற்கும் பாணி. கோடாக், இந்த பாணியைத்தான் பின்பற்றி சந்தையைக் கைப்பற்றியது. மலிவாக விற்கப்படும் கேமராக்களில் பயன்படுத்தத் தேவையான ஃபிலிம் ரோல், அதைப் படமாக மாற்றத் தேவையான வேதிப்பொருள்கள் போன்றவற்றை அதிக விலையில் விற்றுக் கொழுத்த லாபம் ஈட்டும் நிறுவனமாக இருந்தது.

டிஜிட்டல் கேமராக்கள் அறிமுகமான 90-களின் இறுதியில் கோடாக்கும் டிஜிட்டல் கேமராக்களைத் தயாரிக்க ஆரம்பித்தது. ஆனால், தொழில்நுட்பத்தின் மாற்றத்துக்குத் தகுந்த விதத்தில் கோடாக்கால் மாற இயலவில்லை. கேமரா வசதி கொண்ட ஸ்மார்ட் போன்களும் டேப்லெட்டுகளும் வரத் தொடங்கியதும் கோடாக் அதலபாதாளத்தில் விழுந்து, திவால் நோட்டீஸ் கொடுத்தபோது கோடாக்கில் பணிபுரிந்தவர்களின் எண்ணிக்கை, கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம்!

இது நடந்து இரண்டு மாதங்களில், 'Instagram’ என்ற அலை மென்பொருள், ஃபேஸ்புக் நிறுவனத்தால் ஒரு பில்லியன் டாலர்களுக்கு வாங்கப் பட்டது. இந்த மென்பொருளின் முக்கியமானப் பணி, புகைப்படங்களை எடுத்து அதை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வது.

இன்னொரு விதத்தில் சொல்லவேண்டுமானால், கோடாக் தொழில்நுட்பத்தின் நவீனப் பயன்பாடு Instagram. முக்கியமாகக் கவனிக்க வேண்டியது ஃபேஸ்புக், Instagram நிறுவனத்தை வாங்கும்போது, அதில் பணிபுரிந்தவர்களின் எண்ணிக்கை 15 மட்டுமே. அப்படியானால், தொழில்நுட்பத்தின் உதவியால் 15 பேர் ஒன்றரை லட்சம் பேரின் வேலையைப் பறித்துவிட்டார்களா? அதன் பொருளாதாரப் பின்னடைவின் விளைவு ஆபத்தானதே என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், உண்மை அதுவல்ல. அதை இன்னும் விரிவாக அடுத்த வாரம் அலசலாம்!

- விழிப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism