Published:Updated:

ஆஹா... இப்படியும் ஒரு முன்மாதிரிப் பள்ளியா!? #Inspiring

ஆஹா... இப்படியும் ஒரு முன்மாதிரிப் பள்ளியா!? #Inspiring
ஆஹா... இப்படியும் ஒரு முன்மாதிரிப் பள்ளியா!? #Inspiring

ஆஹா... இப்படியும் ஒரு முன்மாதிரிப் பள்ளியா!? #Inspiring

பள்ளிப் படிப்பு போரடிச்ச பசங்களுக்கு, இப்படிப் பாடம் சொல்லிக்கொடுத்தா கசக்கவா செய்யும்.  இயற்கையோடு பழகினால், இனிக்கவே  செய்யும். அட ஆமாங்க, மதுரை திருவாதவூர் அருகில் இருக்கும் ஆமூர் கிராமப் பகுதியில் இருக்கும் ஆரோக்கியப் பள்ளியைப்  பற்றிதான் சொல்கிறேன்.

ஆரோக்கியப் பள்ளியா, அது என்னது என்று கேட்கிறீங்களா... வாங்க சொல்றேன் .


அந்த ஆரோக்கியப் பள்ளிக்குள் நுழைந்தவுடனே, ஒரு வாசம் . உங்க ஜீவனை அசைக்கிற மாதிரி இருக்கும். ஏதோ ஒரு மணி நேரம் தியானம் செஞ்ச மாதிரி அப்படி ஒரு அமைதியான நிலை கிடைக்கும் . அப்படி ஒரு அமைதியில்,  சில்லுவண்டுகளின் சத்தம் போல பள்ளிக் குழந்தைகளின் சத்தம் கேட்டோம்.  பள்ளிக் குழந்தைகள், தங்கள் படிப்பை சற்று விலக்கிவிட்டு,  வாழ்க்கைக் கல்வியைக் கற்க இந்த ஆரோக்கியப்பள்ளிக்கு வந்ததாகத் தெரிவித்தனர். அந்த ஆரோக்கியப் பள்ளியை நடத்திவரும் ரஞ்சித் அவர்களுடன்  பேசினோம் .

'இது ஒரு தூய்மையான பள்ளி. இதை, என் கனவுக் கோட்டைனுகூட சொல்லுவேன். 2006 முதல் இப்படி ஒரு வாழ்வியல் கல்வியை மாணவர்கள் மத்தியில சேர்க்கணும்னு  பல வருஷமா போராடிவந்தேன். அதற்காக  பல முயற்சிகள் எடுத்து, 300 பள்ளிகளுக்கு மேல் ஏறி இறங்கினேன். ஒன்னுமே கதைக்கு ஆகல. கடைசியில நானே  இந்த ஆரோக்கியப் பள்ளியை உருவாக்கினேன் . இங்கு, மாணவர்கள் தினமும் வரவேண்டும் என்று அவசியம் இல்லை. அவங்க விடுமுறை நாள்கள் மற்றும் அவர்களுக்கு நேரம் கிடைக்கும்போது வந்து கற்றுக்கொள்ளலாம். தினமும் மாலை நேரத்தில், டிஜிட்டல் முறையில் மாணவர்களுக்கு கல்வி கற்றுத்தர்றேன் . ஸ்கூல் போற மாணவர்கள் மாலை நேர வகுப்பில் வந்து படிக்க ஏதுவா இருக்கு. டிஜிட்டல் கிளாஸ்ல மாணவர்களுக்குத் தேவையான பாடங்களை  போட்டுக் காட்டுவேன். விளக்கங்கள் அனைத்தும் பாடல்களாக வர்றதால, மாணவர்களுக்கு  எளிமையா புரியும். தொடர்ந்து ஆர்வத்தோட கவனிக்கிறாங்க . தினமும் கொஞ்சம் கொஞ்சம் கத்துக்கிட்டாலே,  அவங்களுக்கு ஞாபக சக்தி அதிகமாகுது. ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் இந்த ஆரோக்கியப் பள்ளி முழுமையா செயல்படும் . முன்கூட்டியே தகவல் சொல்லிட்டா, அவங்க விரும்புகிற விடுமுறை நாள்களிலும் பள்ளி செயல்படும்.

 மாணவர்களுக்கு பாரம்பர்ய உணவுகள் இலவசமா வழங்கப்படுகிறது. இந்தப் பள்ளிக்கு வர எந்த ஒரு கட்டணமும் இல்லை. இலவசமா கல்வி பயிலலாம் . இங்கு வருபவர்கள்  விரும்பினால்,  உண்டியலில் பணம் போடலாம். அந்தப் பணம், மாணவர்களுக்கு உணவுகள் வழங்கப் பயன்படுத்தப்படும் . இந்தப் பள்ளியில் நான், எனது மனைவி சத்தியபாமா, மகள் மோனிசா மற்றும் மகன் போகர் ஆகியோர்  வேலை செய்கிறோம். எங்களோடு, அவ்வப்போது சில ஆர்வமுள்ள இளைஞர்களும் செயல்படுவார்கள்.  வகுப்பு ஆரம்பிப்பதற்கு முன், மழை மற்றும் இயற்கை வழிபாட்டுப்  பாடல்கள் பாடப்படும். பிறகு, மூளைக்குத் தேவையான பயற்சிகள் அளிக்கப்படும் . இயற்கையோடு எவ்வாறு வாழவேண்டும், அதை நாம் எப்படி பாதுகாப்பது, அவற்றின் அவசியம் பற்றி மாணவர்களுக்கு சொல்லிக்கொடுப்போம்.

மேலும், ஆடம்பர வாழ்கையை ஒதுக்கிவிட்டு,  நமக்குத் தேவையானவற்றை நாமே செய்துகொள்ளவும், மின்சார சேமிப்பது, இயற்கை விவசாயம் செய்து எவ்வாறு குறைந்த செலவில் லாபம் காண்பது, பிளாஸ்டிக் கழிவுகளை நமக்குத் தேவையான பொருளாக எப்படி பயன்படுத்துவது , பாரம்பர்ய உணவுப் பழக்க வழக்கங்களைக் கடைபிடிப்பது, பாரம்பர்ய விளையாட்டுகள் விளையாடுவது , வீட்டில் எவ்வாறு இயற்கை மூலிகைகள் வளர்த்துப் பயன்படுத்துவது, தண்ணீரை எப்படிச் சேமிப்பது  போன்ற விசயங்களைச் சொல்லித்தருகிறோம்.

 இந்த ஆரோக்கியப் பள்ளி சிறிதாக இருந்தாலும், பல விஷயங்களைத் தன்னுள் கொண்டுள்ளது. உடைந்த பிளாஸ்டிக்கின் மறு பயன்பாட்டை செய்துகாட்டி அசத்தினார் . மாணவர்கள் அங்கு டிஜிட்டல் கல்வி கற்றாலும், மூலிகைத் தரையில் அமர்ந்து படிக்கிறார்கள். கடுக்காய், கருப்பட்டி முதல் கார சாணம் வரை கலந்துசெய்த அந்த தரையில் கால் வைத்தாலே, ஜில்லென்று குளிர்ச்சி நம்மை வருடுகிறது. 

மின்சாரம் இல்லாமலே காய்கறிகளைப் பாதுகாக்க இயற்கை ஃப்ரிட்ஜ் ஒன்றையும் வைத்திருக்கிறார் ரஞ்சித். தானியங்களையும் சமையல் பொருள்களையும் அரைக்க, நம் முன்னோர்கள் பயன்படுத்திய உரல், அம்மி ,குடுவை போன்ற பொருள்களை மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்க ரஞ்சித் சேகரித்துவைத்திருந்தார் . இயற்கை உரம் எவ்வாறு தயாரிப்பது என்பதை மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்க கரிம குப்பைத்தொட்டி ஒன்றையும் அமைத்து வைத்துள்ளார். தான் படித்த எம்.சி.ஏ படிப்பை கிராமத்து மாணவர்களுக்கு டிஜிட்டல் கல்வியாகவும் தான் செய்துவரும் விவசாயத்தை இயற்கைக் கல்வியாகவும் இணைத்து, ஆரோக்கியப் பள்ளியை நடத்திவருகிறார், ரஞ்சித். எல்லோரும் எங்கள் ஆரோக்கியப் பள்ளிக்கு வாங்க. வரும்போது, என்னிடம் தகவல் சொல்லிவிட்டு வாங்க. அப்போதுதான் உங்களுக்கு இயற்கை உணவுகளைச் சமைத்துவைத்திருக்க முடியும்' என்று சிரித்தபடியே வழியனுப்பினார்.

அடுத்த கட்டுரைக்கு