Published:Updated:

வேடிக்கை பார்ப்பவன் - 17

நா.முத்துக்குமார், ஓவியங்கள்: செந்தில்

வேடிக்கை பார்ப்பவன் - 17

நா.முத்துக்குமார், ஓவியங்கள்: செந்தில்

Published:Updated:
##~##

முன்பனிக்காலம்

 ''நீ கிளையைக் கவனமாக வரைய முடியுமானால், உன்னால் காற்றின் ஒலியைக் கேட்க முடியும்!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- ஜென் தத்துவம்
(எஸ்.ராமகிருஷ்ணனின் ஜென் கவிதைகள் நூலில் இருந்து)

சினிமா, விநோதமான ஒரு ரங்கராட்டினம். ஆகாயத்துக்கும் பூமிக்கு மாக அடிவயிற்றுப் பயத்துடன் சுற்றிக்கொண்டிருந்தாலும், கீழே வந்து போகும் அந்த ஒரு கணம், மனதுக்கும் புத்திக்கும் ஏறுவதே இல்லை. நாம் எப்போதும் மேலேதான் இருந்துகொண்டிருக்கிறோம் எனும் மாயத்தோற்றத்தை சினிமா ரங்கராட்டினம் காலம் காலமாக எல்லோர் மனதிலும் தந்துகொண்டிருக்கிறது.

'கரைந்த நிழல்கள்’ படப்பிடிப்பு முடிந்ததும் இயக்குநர் அருண்மொழி, எம்.வி.வெங்கட்ராம் எழுதிய 'நித்ய கன்னி’ நாவலைத் தொடராக எடுக்க ஆரம்பித்தார். 'நித்ய கன்னி’ இவன் விரும்பிப் படித்த நாவல். ஆர்வத்துடன் பணியாற்றினான்.

'நித்ய கன்னி’ தொடருக்கும் ராஜராஜனின் சித்தப்பாதான் தயாரிப்பாளர். சினிமா என்னும் மகாநதியில் இருவரும் மீண்டும் இறங்கி நீச்சல் பழகக் கற்றுக்கொண்டார்கள். தொடர்ந்து ஒரு மாதம் படப்பிடிப்பு நடத்தி, போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முடித்து தூர்தர்ஷனின் அனுமதிக்காகக் காத்திருந்தார்கள். அந்தக் காத்திருப்பு மிக நீண்ட காத்திருப்பாக இருக்குமென்று இவன் அப்போது அறியவில்லை. இவன் பணியாற்றியதற்கு, கணிசமான ஒரு தொகையை கையில் தந்தார்கள். கல்லூரி முடிந்த அடுத்த நாளே கனவுக்கோட்டைக் குள் நுழைய வாய்ப்பு கிடைத்த தையும், கை நிறைய சம்பளம் பெற்றதையும் நினைத்து இவன் வானத்தில் பறந்தான்.

வன் ரங்கராட்டினம் கீழே இறங்கப்போகிறது என்று அறியாமல், இருந்த காசில் திருவல்லிக்கேணியில் மேன்ஷன் ஒன்றில் அறை எடுத்தான். திருவல்லிக்கேணி, மேன்ஷன்களின் தாய்நாடு. புறாக்கூண்டு ஒன்று காலியாக இருந்தாலும், சின்னதாகப் படுக்கையை விரித்து வாடகைக்கு விட்டுவிடுவார்கள். திருவல்லிக்கேணி ஒரு கலவையான பகுதி. சாலைகளில் ஒரு பக்கம் வெண்கொற்றக் குடையுடன் இந்துக் கடவுள் ஊர்வலம் போவார். மறுபக்கம் இஸ்லாமியர்கள் மசூதிகளில் தொழுதுகொண்டு இருப்பார்கள். குறுகலான சந்துகள், வாழை மண்டிகள், புராதனக் கட்டடங்கள். திடீரென்று ஏதோ ஒரு வீட்டிலிருந்து கேட்கும் ஆர்மோனிய சத்தம், பின்தொடரும் ச ரி க ம ப த நி ச... என  கிட்டத்தட்ட ஒரு குட்டிக் கல்கத்தா எனச் சொல்லாம்.

வேடிக்கை பார்ப்பவன் - 17

இவன் மேன்ஷன் 24 மணி நேரமும் பரபரப்பாக இருக்கும். காலையில் குளியலறை முன்பும், கழிவறை முன்பும் பிளாஸ்டிக் வாளிகள் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும். மாநகரம் மனிதர்களை பிளாஸ்டிக் வாளிகளாக நசுக்கிவிடுவது இந்தத் தருணத்தில் இருந்தே தொடங்குவதாக தோன்றும்.

'அருவிக் குளியல்
ஆசைக்காரனுக்கு
நகரம் தந்தது
பக்கெட் வாட்டர்’

என்ற கவிஞர் வித்யாஷங்கரின் கவிதைதான் இவனுக்கு ஞாபகம் வரும். அடுத்து கீழே இருக்கும் மெஸ்ஸில் சாப்பிட்டுவிட்டு அவரவர்களின் இயந்திர உலகுக்குக் கிளம்பிவிடுவார்கள்.

அதற்குப் பிறகு விழிக்கும் உலகம், வேலையற்றவர்களின் உலகம். இரவு முழுக்கச் சீட்டு ஆடிவிட்டு, விடியலில் படுத்து பகல் 12 மணி வாக்கில் கண்கள் சிவந்து எழுவார்கள். சீட்டு ஆடுவதற்கென்றே மேன்ஷனில் ஓர் அறை இருந்தது. 28-ம் எண் அறை. அந்த அறைக்கு யார் வந்தாலும் அது சீட்டாட்ட அறையாக மாறிவிடும் அல்லது மாற்றப்படும். நான்கு பேர் எழுந்து சென்றால், வேறு நான்கு பேர் அமர்ந்துவிடுவார்கள். வெள்ளைக் காகிதங்களும் செய்தித்தாள்களின் ஓரங்களும் எண்களால் நிரம்பி வழிந்துகொண்டிருக்கும்.

இவன் காலையில் எழுந்ததும் கடற்கரைக்கு நடந்து செல்வான். பேரிரைச்சலும் மகா அமைதியும் அடுத்தடுத்து தரும் கடலைப் பார்க்கையில், இந்தப் பிரபஞ்சத்தில் தான் ஒரு புள்ளியாக நின்றுகொண்டிருப்பதாக உணர்வான். திரும்பி வருகையில் இயக்குநர் அருண்மொழிக்கு தொலைபேசுவான். ''சாயங்காலம் ஃபிலிம் சேம்பர்ல ஃபெலினி படம் போடுறாங்க. அங்க மீட் பண்ணலாம்'' என்பார். திருவல்லிக்கேணியில் இவனுக்கு மிகவும் பிடித்த இடம், பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள நடைபாதைப் புத்தகக் கடைகள். இவன் தேடிக்கொண்டிருந்த பல பொக்கிஷங்களை அந்தப் புத்தகக் கடைகளில்தான் குறைந்த விலைக்கு கண்டெடுத்தான். அங்கு வாங்கிய புத்தகங்களை வாசித்து பகல் பொழுதை ஓட்டினான்.

வேடிக்கை பார்ப்பவன் - 17

மாலையில் ஃபிலிம் சேம்பரில் படம் முடிந்ததும் அருண்மொழி இவனிடம் ''ரெண்டு மூணு புரொடியூசர்ஸ்கிட்ட பேசிக்கிட்டு இருக்கேன். சீக்கிரம் படம் தொடங்கிடலாம்'' என்றார். அந்தச் சீக்கிரம் வர, ஆறு மாதங்கள் ஆனது.

இவன் கையிருப்பு குறைந்து, பசி, இவனை தினமும் மத்தியானம் ஒரு வேளை உணவுக்கு மட்டும் பழக்கியிருந்தது. மாலையில் யாராவது தோழர்களைச் சந்திக்கையில் தேநீர் வாங்கிக் கொடுப்பார்கள். அந்தக் கணத்துக்காகவே உரையாடலை நீட்டித்துக்கொண்டே செல்வான். என்ன கஷ்டம் வந்தாலும் அப்பாவிடம் பணம் வாங்கக் கூடாது என்ற வைராக்கியம் இவன் மனதில் இருந்தது. எந்த நிலையிலும் இவனின் வறுமை வீட்டுக்குத் தெரிந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்.

சென்னையில் இவன் தனியாக அறை எடுத்து தங்கியிருப்பதை அறிந்து, அம்மாவைப் பெற்ற இவன் ஆயா இவனைத் தேடி அறைக்கே வந்துவிட்டார்கள். இவன் தம்பி, சிறு வயதில் இருந்தே அந்த ஆயா வீட்டில்தான் தங்கி படித்துவருகிறான். தானும் அவர்களுக்கு ஒரு சுமையாகிவிடக் கூடாது என்று இவன் நினைக்க, ''மெட்ராஸ்ல நாங்க எல்லாம் இருக்கும்போது, தனியா ரூம் எடுத்துத் தங்கறானாம். இப்பவே கிளம்பி வீட்டுக்கு வாடா!'' என்று ஆயா இவன் பெட்டியை எடுக்க, மறுக்க முடியவில்லை. வசிக்க இடம் கிடைத்து நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் இவன் மூன்று வேளை உணவு உண்டான்.

தினமும் அருண்மொழியை மாலையில் சந்தித்தான்.

ருநாள் மேக்ஸ்முல்லர் பவன் பெர்க்மென் படத்தில், மறுநாள் அலையன்ஸ் ஃபிரான்சிஸின் த்ரூபோ படத்தில், அடுத்தொரு நாள் அமெரிக்கத் தூதரகத் திரையரங்கில் ஹிட்ச்காக் படம் என அருண்மொழியை இவன் தொடர்ந்து கொண்டே இருந்தான். அந்தப் பின்தொடர்தல், இவனுக்கு பல உலகப்படங்களை அறிமுகம் செய்தது. இவன் உலக சினிமாவின் காதலன் ஆனான்.

நினைத்த படங்களின் டி.வி.டி. நினைத்த நேரத்தில் இப்போது கிடைக்கிறது. அன்றெல்லாம் படங்களை திரைப்பட சொசைட்டிகளிலும் மற்றும் அந்தந்த நாட்டு தூதரகங்களின் திரையிடல்களில் மட்டுமே பார்க்க முடியும். மிதிவண்டியில் அண்ணா சாலையில் பயணித்தபடியே இவன் ரஷ்யாவில், ஜெர்மனியில், ஜப்பானில், ஃபிரான்ஸில், ஈரானில், போலந்தில் சுற்றினான். திரைப்படங்களின் பன்முகத்தன்மை புரிய ஆரம்பித்தது. எல்லா நாட்டுத் தூதரக நூலகங்களிலும் இருந்த திரைப்படம் சார்ந்த புத்தகங்களைத் தேடித் தேடி வாசித்தான்.

இடையிடையே இயக்குநர் அருண்மொழி, சில இயக்குநர்களிடம் இணை இயக்குநராகப் பணியாற்றுவார். கதை விவாதத் துக்கு இவனையும் உடன் அழைத்துச் செல்வார். அவர்களில் 'ஏழாவது மனிதன்’ இயக்குநர் ஹரிஹரனையும், 'அவள் அப்படித்தான்’ ருத்ரய்யாவையும் இவனால் மறக்க முடியாது.

வேடிக்கை பார்ப்பவன் - 17

திரைப்படங்கள் தவிர்த்து அருண்மொழி நிறையக் குறும்படங்களும் எடுத்தார். அவற்றிலும் இவன் பணியாற்றினான். அப்படி ஒரு குறும்படம் எடுப்பதற்காக தஞ்சைக்கு அருகில் உள்ள மெலட்டூருக்குச் சென்றார்கள். மெலட்டூரில் ஆண்டுதோறும் 'பாகவத மேளா’ என்ற நாட்டிய நாடகம் நடத்துவார்கள். உலகெங்கும் வாழும் மெலட்டூரைச் சேர்ந்தவர்கள் ஒரு மாதம் முன்பே வந்து பயிற்சியில் கலந்துகொண்டு விழா அன்று அரங்கேறுவார்கள்.

மெலட்டூர்வாசிகள் ஏற்பாடு செய்து தந்திருந்த ஒரு வீட்டில் இவர்களும் ஒரு மாதம் தங்கினார்கள். தஞ்சை மண்தான் எத்தனை எத்தனை எழுத்தாளர்களைத் தந்திருக்கிறது. தி.ஜானகிராமன், எம்.வி.வெங்கட்ராம், கரிச்சான்குஞ்சு, தஞ்சை ப்ரகாஷ்... என எழுத்தாளர்கள் விளைந்த மண் அது. தி.ஜானகிராமனின் எழுத்துகளில் வரும் கிராமம் போலவே மெலட்டூரும் அதன் மனிதர்களும் இருந்தார்கள். எங்கு திரும்பினாலும் 'மோகமுள்’ நாவலில் வரும் பாபுவும் யமுனாவும் நிறைந்திருந்தார்கள். நாடகம் முடிந்து மீண்டும் சென்னைக்கு வந்த பிறகும் மெலட்டூர் நாட்கள் இவன் மனதைவிட்டு மறையவில்லை.

மீண்டும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, அருண்மொழி வேறொரு படம் தொடங்கினார். சாருஹாசன், சுஜிதா இருவரும் தந்தை-மகளாக நடிக்க கண்தானத்தின் முக்கியத்துவம் சொல்லும் கதை. ஜாலி அட்வர்டைஸ் என்ற நிறுவனத்தின் தலைவர் ஏ.ஜெ.ஜாய்தான் தயாரிப்பாளர். யூனிட்டில் எல்லோரிடமும் அன்பாகவும் எளிமையாகவும் பழகுவார். படத்தின் பெயர் 'விழியே உனக்கு விடியட்டும்’.

ஜாலி அட்வர்டைஸ் அலுவலகத்தில்தான் இவர்களுக்கு அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அது திரையரங்குகளில் விளம்பர சிலைடுகள் தயாரிக்கும் நிறுவனம். ஒரு பக்கம் 'முன் சீட்டில் கால் வைக்காதீர்கள்’ 'புகை பிடிக்கா தீர்கள்’ என்று ஒருவர் டப்பிங் பேசிக்கொண்டிருக்க, மறுபக்கம் 'கேட்டு வாங்குங்கள் நிஜாம் பாக்கு’ என்று இன்னொருவர் குரல் கொடுத்துக்கொண்டிருப்பார். அந்த அலுவலகம், கேஸினோ தியேட்ட ருக்குப் பக்கத்தில் இருந்த மீரான் சாகிப் தெருவில் இருந்தது. தமிழ் சினிமாவின் வியாபாரத்தை தீர்மானிக்கும் முக்கியமான இடங்களில் ஒன்றாக மீரான் சாகிப் தெருவும் இருந்தது. இரண்டு பக்கமும் திரைப்பட விநியோக அலுவலகங்கள், பழைய மற்றும் புதிய படங்களின் போஸ்டர்கள், படப்பெட்டிகள், வீதியில் இறைந்துகிடக்கும் கிழிந்த ஃபிலிம் ரோல்கள் என சினிமாவின் வேறொரு பக்கத்தை அந்தத் தெருவில் இவன் தரிசித்தான்.

வேடிக்கை பார்ப்பவன் - 17

'விழியே உனக்கு விடியட்டும்’ ஏனோ சில காரணங்களால் வளராமலேயே நின்றுபோனது. மீண்டும் வேலையற்று திரைப்பட சொசைட்டிகளிலும் நூலகங்களிலும் திரிந்துகொண்டிருந்தான். அவ்வப்போது பத்திரிகைகளில் எழுதிய கவிதைகளுக்கு வரும் சன்மானம் இவன் கைச்செலவுக்கு உதவிக்கொண்டிருந்தது.

ந்தக் காலகட்டத்தில் நண்பர் ஒருவரின் சிபாரிசில் இவன் உதவி இயக்குநராக வேலை பார்த்த பெயரிடப்படாத ஒரு படத்தின் முதல் நாள் படப்பிடிப்பை இவனால் மறக்கவே முடியாது. அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஊரில் விவசாயம் செய்துகொண்டிருந்தவர். சினிமா ஆசையில் சென்னைக்கு வந்துவிட்டார். யார் யாரிடமோ ஏமாந்து கடைசியில் இந்தப் படத்தை தொடங்கியிருந்தார். ஆனால், கையில் போதுமான அளவுக்குப் பணம் இல்லை. திட்டமிட்டுச் செய்தால் சினிமாவைப் போல நல்ல தொழில் வேறு எதுவும் இல்லை. 'முதல் ஷெட்டியூல கஷ்டப்பட்டு முடிச்சிட்டா, சில ஏரியாக்களை வித்துடலாம்’ என்று யாரோ நம்பிக்கை ஊட்ட, படப்பிடிப்பைத் தொடங்கியிருந்தார்.

ரிஃப்ளெக்டர், டிராக் அண்ட் டிராலி, லைட்ஸ்... என எதுவும் இல்லாமல் தெர்மகோல் உதவியுடன் கிடைத்த வெளிச்சத்தில் படப்பிடிப்பு நடந்துகொண்டு இருந்தது. மதியம் 2 மணி ஆகியும் உணவு இடைவேளை விடவில்லை. இரண்டரை மணிக்கு தயாரிப்பு நிர்வாகி காய்கறிப் பை ஒன்றுடன் வந்து இறங்க, மரத்தடியில் உப்புமா கிளறப்பட்டு 3 மணிக்கு எல்லோருக்கும் பரிமாறப்பட்டது. இப்படியாக இவன் 'உப்புமா கம்பெனி’ என்பதன் அர்த்தத்தை அன்றுதான் அறிந்துகொண்டான்!

- வேடிக்கை பார்க்கலாம்...