Published:Updated:

லவ் ஆல்

ரா.கண்ணன், ஓவியங்கள்: ஸ்யாம்

லவ் ஆல்

லை கலைத்தது கடல் காற்று. தரையெங்கும் மழை ஈரம். திருவல்லிக்கேணி பைகிராஃப்ட்ஸ் சாலையில் 25ணி-க்குக் காத்திருந்த என்னைத் தற்செயலாகச் சந்தித்தான் பிரகாஷ். பால்ய சிநேகிதன். பார்த்த விநாடியில் பரவசமாகிக் கட்டிக்கொண்டேன். என் பஸ் இதோ வந்துவிடும். கிடைத்த இடைவெளியில் சபரியில் நானும் பிரகாஷ§ம் டீ குடிக்கப் போகிறோம். அவசரமாக நிறையப் பேசப்போகிறோம். கிளம்பும்போது திடுக்கென்று ஒரு கேள்வி கேட்கப்போகிறான் பிரகாஷ். அதற்குப் பதிலும், அதற்குள் கதையும், எனது பொறுப்பு!

''Move to the left in threes...'

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

- தேனி நாடார் சரஸ்வதியில் அப்போது நான் டென்த் படித்துக்கொண்டிருந்தேன். என்.சி.சி. ஆர்மியில் சார்ஜென்ட். என்ன தவம் செய்தேனோ... மாநிலத்தில் பொறுக்கியெடுக்கப்பட்ட ஆறு பேரில் ஒருவனாக கல்கத்தா பயணமானேன். தேசிய ஒருமைப்பாடு முகாம்!

10 நாட்கள் செம ட்ரில். மற்ற நேரங்களில் பக்கெட்டில் தாளம் போட்டு 'என்னடி முனியம்மா...’ பாடினோம். மெஷின் உழுத எங்கள் தலைகளை கண்ணாடியில் பார்த்து அலறினோம். டெல்லிக்கார சீக்கியப் பையன்களுக்குக் கலாசாரப் பரிவர்த்தனையாக, தமிழில் கெட்ட வார்த்தைகளைக் கற்றுத்தந்தோம். நிறையச் சப்பாத்திகள் சாப்பிட்டோம். இவை எதுவும் இங்கே முக்கியம் இல்லை. எனினும், இந்த கேம்ப் தந்த தற்காலிக ஸ்டார் அந்தஸ்து ரோஸுக்கு என்னை அறிமுகம் செய்துவைத்தது.

##~##

ஊர் திரும்பியதும் மெடலுக்குத் தனி மரியாதை. ஸ்கூல் பிரேயரில் என்னைத் தேசியக் கொடி ஏற்றவைத்தார்கள். நான் கயிறு சுண்ட, டிசம்பர் பூக்கள் உதிர்ந்தன. சாயங்காலமாகத்தான் டியூஷனுக்குப் போனேன்.

''வா பாஸ்...'' - மல்லிகா டீச்சர் உற்சாகமாகக் குரல் கொடுக்க, அன்று முழுக்க கல்கத்தா கதைதான். கொஞ்சம் சரடு சேர்த்து நான் என் சாகசங்கள் சொல்லும்போதுதான், முதன்முதலாக ரோஸ் என்னைப் பார்த்தாள். பார்த்தாள் என்றால், மின்சாரப் பார்வை. ஆச்சரியமும் பயமும் கலந்த அந்தக் கண்கள், ஏனோ கவிதை பேசின.

லவ் ஆல்

விவரங்கள் சேகரிக்க அடுத்த ஒரு வாரம் போதுமானதாக இருந்தது. ரோஸ் என்கிற ரோஸி. IX-B. என்.ஆர்.டி. நகரில் வீடு. புதிதாக டியூஷனில் சேர்ந்திருக்கிறாள். சொந்தமாக சைக்கிள் வைத்திருக்கிறாள். ஸ்கூலுக்கும் டியூஷனுக்கும் சைக்கிளில்தான். வழக்கமாகத் தன் தம்பியுடன் சண்டே பிரேயருக்கு ரோஸ் வருகிற சர்ச், என் வீட்டின் அருகேதான் இருந்தது.

புதுசாக ஏதோ பூத்த மாதிரி இருந்தன அந்த நாட்கள். ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியே பள்ளிகள் என்றாலும், பக்கத்தில் கட்டியதற்கு நான் நன்றி சொல்ல வேண்டும். வீட்டிலிருந்து நடைதூரத்தில் இருந்த பள்ளிக்கு வாடகை சைக்கிளில் அடிக்கடி செல்வது வழக்கமாயிற்று. எடமால் தெரு இறக்கத்தில் சக்கரக் கவிதையாக ரோஸ் விரைகிறபோது, மூச்சுத் திணற பெடல் மிதித்து எதிர்ப்படுவேன். என் வருகையை அவள் உணர்ந்துகொண்டாள் என்பதை, உதட்டோரப் புன்னகையில் உணர்த்தினாள்.

நான் என்.சி.சி.. அவள் ஸ்கவுட்! ஒரு திடீர் நாளில் பக்கத்துக் கிராமம் ஒன்று மொத்தமாகக் கருகிப்போக, நிவாரணப் பணிகளுக்கு எங்களையும் அழைத்துப் போனார்கள். பொங்கல் டோர்னமென்ட்டுக்கு வாலண்டியர்களாகப் போயிருந்தோம். வார்த்தைகளில் பேச ஆரம்பித்து, கிளர்ந்தெழுந்தது அன்பு.

பொத்துக்கொண்ட மாதிரி சிரிப்பு வெடிக்கும்போதெல்லாம் தன் நாசி மீது விரல்வைத்து சடக்கென ரோஸ் அடங்கிப்போகிற அழகு, ஒரு சித்திரமாக என்னுள் படிந்துகிடக்கிறது.

நிறையச் சொல்லலாம். ஒரு மழை நாளில் ரோஸ் சைக்கிளுக்கு நான் பஞ்சர் ஒட்டித் தந்தது... தொலைந்துபோன அவள் நாய்க்குட்டியை ரயில் பாதைப் பக்கம் பார்த்துக் கண்டெடுத்து வந்தது... கிறிஸ்துமஸுக்கு என் அன்பின் சின்னமாக பிங்க் கலரில் ஒரு மெழுகுவத்தி தந்தது... தந்ததும் சட்டென அவள் நெகிழ்ந்து அழுதது... என் நோட்டுப் புத்தகங்கள் எல்லாவற்றின் கடைசிப் பக்கங்களிலும் ரோஸ் பெயரை எழுதிவைத்தது... என்று எவ்வளவோ சொல்லலாம்.

சுருக்கமாகச் சொல்வதானால், ரோஸுக்கு என்னை நிரூபிப்பதற்காக நிறைய பிரயத்தனப்பட்டேன். அப்படி ஒன்றுதான் செவன்த் பட்டாலியனில் பெஸ்ட் கேடட் ஆக நான் தேர்வானது. கோடை விடுமுறை எப்போது முடியும், அவளிடம் இதைச் சொல்ல வேண்டுமே என்று காத்திருந்ததில் மண் விழுந்தது. ரோஸின் ஸ்டேட் பேங்க் அப்பாவை பரமக்குடி பக்கம் மாற்றிவிட்டார்கள். ஊரைக் காலி பண்ணிவிட்டு ரோஸ் போய் ஒரு வாரத்துக்குப் பிறகு, அதுவும் மல்லிகா டீச்சர் சொன்னபோதுதான் எனக்கு சேதியே தெரியும். மடாரென முறிந்துபோன மாதிரி இருந்தது. நான் காதலித்தது யாருக்குமே தெரியாது. பாடப் புத்தகத்தில் செருகிவைத்த மயிலிறகு மாதிரி மனசுக்குள் மட்டுமே அடைகாத்த விஷயம் அது. சொல்லக்கூட ஆள் இல்லாமல் சோகத்தோடு திரிந்த நான், பிரகாஷைப் பார்த்ததும் உடைந்துவிட்டேன். முல்லையாற்றுக்குப் போகிற வழியில் நாணல் தட்டைகளை ஒடித்துக்கொண்டே எல்லாம் சொன்னேன்.

லவ் ஆல்

''அப்ப உன்னையும் பேயறைஞ்சிருச்சுல்ல...'' - ஒரு பெரிய மனுஷன் மாதிரி அன்று என்னிடம் ஆறுதலாகப் பேசியது பிரகாஷ்தான்.

''104 for no loss''

- ந்த ஒரு வாரம் தொடர்ந்து அற்புதங்கள் நிகழ்ந்தன. பத்ரகாளியம்மன் கோயிலில், பாண்டியன் சூப்பர் மார்க்கெட்டில், பகவதியம்மன் கோயில் தெருவில் என்று எங்கே பார்த்தாலும் அனிதா எதிர்ப்பட்டாள். எதிர்ப்பட்டபோதெல்லாம் என்னைப் பார்த்தாள். கடைசியில் சின்னதாகச் சிரித்தாள். 'கடவுளே... என்ன இது...’ - குஷியான கவலை வந்தது.

ஒரு மைதானத்தையே வளைத்து இரும்புக் கடை எழுப்பியிருந்த நாயுடு அவளது தாத்தா என்று அறிந்ததும் சந்தோஷப்பட்டேன். காரணம், நாயுடுவின் பணம் அல்ல. நாயுடுவின் பேரன்கள் என் பக்கத்து வகுப்புகளில் பெஞ்ச் தேய்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களின் நட்பைப் பெற நான் சிரமப்பட வேண்டியிருந்தது.

கபடி, ஃபுட்பால் என்று என் கால் நகங்கள் பெயர்ந்துகொண்டிருந்த காலம். கிரிக்கெட் எனக்குப் புதிர். நாயுடுவின் குடும்பம் கிரிக்கெட்டில் திளைத்தது. ஆக... என் கிரிக்கெட் ஆர்வத்தின் ஆதாரம் அனிதா!

கெமிஸ்ட்ரி லேப்பில் நான் தவறுதலாக உடைத்த பிப்பெட்டுக்குச் சேதமும் அபராதமும் சேர்த்து 200 ரூபாய் கட்ட வேண்டும் என்று அம்மாவிடம் வாங்கி கிரிக்கெட் கிளப்பில் கட்டி மெம்பரானேன்.

என் வாழ்நாளில் நான் அப்படி இருந்ததே இல்லை. கிரிக்கெட்டில் நான் உப்புக்குச்சப்பாணி. ட்வெல்த்மேன். எனக்கு பேட்டிங் கிடையாது. பௌலிங் கிடையாது. பார்டரில் நின்று பந்து பொறுக்கிப் போடுவதும், கிட்டைச் சுமந்து வருவதும், பிட்ச்சைப் பராமரிப்பதுமாக நாட்கள் போயின. மைதானம் என்றால் நல்லபடியாகக் கற்பனை செய்துகொள்ள வேண்டியது இல்லை. ஒரு கரட்டுக்குக் கீழே நாயுருவிச் செடிகளும் நெருஞ்சிமுள் பத்தைகளும் நிறைந்த சமவெளி. முதலில் அந்தச் சூழலும் என்னைச் சுற்றிலும் இருந்த மனிதர்களும் பிடிக்கவில்லையென்றாலும், ஆட்டத்தில் இருந்த சுவாரஸ்யம் என்னை இழுத்தது. நாயுடு பங்களாவையொட்டி அந்த மைதானம் இருந்தது குறிப்பிடத்தக்க விஷயம். அனிதாவை அடிக்கடி பார்க்கிற சந்தர்ப்பங்கள் குறைச்சல் என்றாலும் ஏதோ ஒரு மூலையில் இருந்து அனிதா என்னைப் பார்த்துக்கொண்டுதான் இருப்பாள் என்ற நினைப்பே உற்சாகம்கொள்ள வைத்தது.

ஒரு  மேட்ச்சில் தனா காய்ச்சலில் படுத்துக்கொள்ள, டீமில் எனக்கு இடம் கிடைத்தது. இக்கட்டான தருணத்தில் ''எழவு... மந்திரம் போடுறானுங்க...'' என்று எல்லோரும் கிளவுஸ்களைக் கழற்றிக் கொண்டுவர, எய்ட்த் டவுன் என்னை இறக்கினார்கள். என்ன நடந்ததோ தெரியாது. நான் 37 ரன்கள் எடுத்ததில் ஜெயித்தோம். அந்த நேரத்தில் எனது அதிகபட்ச ஸ்கோர் அது. ஆக, டீமில் தவிர்க்க முடியாமல் நான் சென்டிமென்ட் பிளேயராகிவிட்டேன். எல்லோரும் தோளில் கைபோட்டுக்கொள்ளும் அளவுக்கு நண்பர்களாகிவிட்டார்கள். அப்புறம் ஆட்டமும் அற்புதமாகக் கைவந்தது.

அப்போதெல்லாம் பக்கத்து ஊர்களோடு அடிக்கடி ஃப்ரெண்ட்லி மேட்ச்கள் நடக்கும். அதற்கான ஆலோசனைக் கூட்டங்கள். இல்லையில்லை... சதியாலோசனைக் கூட்டங்கள் நாயுடு வீட்டுத் தோட்டத்தில் நடக்கும். நாயுடு வீட்டுத் தோட்டம் என்பது, நந்தவனம்; தோட்டம் அல்ல. காரணம், தோட்டத்திலிருந்து பார்த்தால் நாயுடு பங்களா தெரியும். பங்களாவில் அனிதா தெரிவாள். அனிதா தலை வாரிக்கொண்டிருப்பது தெரியும். அனிதா பாட்டு கத்துக்கொண்டிருப்பது தெரியும். அனிதா நளினமாக ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருப்பது தெரியும். ஜிகில் ஜிகிலெனக் கொலுசுச் சத்தத்தோடு அனிதா வளையவருவது தெரியும். சத்தமா அது... சங்கீதம்!

நாலு மணி நேரம் ஆடிவிட்டு ஆடிப்போய்த் திரும்புகிற நேரத்தில், அரிதாக அனிதாவே எங்களுக்குத் தண்ணீர் எடுத்துத் தருவாள். எல்லோருக்கும் தந்துவிட்டு, காத்திருக்கவைத்துக் கடைசியாக எனக்குத் தருவாள்.

சினிமா பாட்டெல்லாம் மனப்பாடமானது, திடீர் திடீரெனத் தூக்கம் தொலைந்துபோவது... ஞாபகசக்தியும் ஞாபகமறதியும் ஒரே சமயத்தில் அதிகரித்தது... ஹேர் ஸ்டைல் மாற்றிக்கொண்டது... கவிதை என்று எழுத ஆரம்பித்தது... லைப்ரரி போய் சுவாரஸ்யமான புத்தகங்கள் எடுத்துப் படிக்க ஆரம்பித்தது... எல்லாமே 'ஏதாவது செய்ய வேண்டும்’ என்ற அந்தக் காலத்தில்தான்!

லவ் ஆல்

அப்போது எங்கள் வீட்டில் டி.வி. வாங்கியிருக்கவில்லை. அதில் எனக்கு நிறைய வருத்தம். சந்தோஷப்படவும் ஒரு சமயம் கிடைத்தது. பென்சன் ஹெட்ஜஸ் கிரிக்கெட் சீரீஸ் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருந்த நேரம். கிட்டத்தட்ட ஒரு திருவிழா... நாயுடு பங்களாவில் நாங்கள் எல்லோரும் டி.வி. முன்னால் தவமிருந்தோம். கிரிக்கெட் ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருக்க... காதல் இன்னொரு பக்கம் செழுமையாகக் கிளைத்தது.

மடாரென அறைந்தாற்போல் ஒருநாள் எனக்கு அந்த விஷயம் உறைத்தது. என்னிடமிருந்த அத்தனை உடைகளையும் நான் பலவிதமாக மாற்றி மாற்றிப் போட்டுக்கொண்டாயிற்று. புதிதாக வேறு எந்த டிரெஸ்ஸும் இல்லை, பளிச்சென்று அனிதா முன்னால் போய் நிற்க. 'பட்டுப் பாவாடையும் தாவணியுமாகத் திரிகிறாள் அனிதா. நாம இப்பிடி...’ என்று ஏதோ உள்ளே ஓடிய நாட்கள் அவை.

என்.ஆர்.டி. சாலையில் ஒரு ஞாயிற்றுக்கிழமை. ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத அந்த மதியப் பொழுதை மறக்கவே முடியாது. தூரத்தில் புள்ளியாக ஆரம்பித்து வளர்ந்தது பார்த்ததும், அனிதா தன் தோழிகளுடன் வருவது தெரிந்தது. நிமிடத்தில் என்னை அழகாக பாவித்து நடக்க ஆரம்பித்தேன். அருகில் அனிதா வந்து என்னைக் கடக்கப்போகிற நேரத்தில், விலுக்கென்று வார் அறுந்துபோனது என் செருப்பு. குமுறிவிட்டேன். அப்படியே உதறிவிட்டுப் போகிற நிலைமைகூட இல்லை. கையில் எடுத்துக்கொண்டு, போகிற வழியில் தைத்து மாட்டிக்கொண்டுதான் வீட்டுக்குப் போனேன்.

அதற்கடுத்த நாட்களில் அனிதா என்னைத் தவிர்க்க ஆரம்பிக்கிறாள் என்று பட்டதும், அவளைத் தக்கவைத்துக் கொள்ளத் தவியாய்த் தவித்தேன்.

ஒருநாள் வழக்கமான பிராக்டீஸ் முடிந்து திரும்பியதும் அனிதாதான் எல்லோருக்கும் தண்ணீர் தந்தாள். எங்கள் டீமில் புதிதாகச் சேர்ந்திருந்த, கொஞ்சம் சிவப்பாக இருந்த ஸ்பின்னருக்குக் கடைசியாகத் தந்தாள்.

''மொதல்லயே சொல்லியிருப்பேன்... இதெல்லாம் சரிவராதுன்னு. அது பெரிய இடம்டா.'' - நைட் ஷோ பார்த்துவிட்டு வயல்காட்டு வழியே நடந்து வரும்போது பிரகாஷ் சொல்லிக்கொண்டே வந்தான்.

''நல்லதோர் வீணை செய்தே...''

- பூவரச மரங்கள் நிறைந்து நிழல் தந்த இடத்தில் பாரதியார் விழா...

குரலெடுத்துப் பாடிக்கொண்டிருந்தது குயில். கல்லூரி முழுவதும் செக்கர் மண்ணில் உட்கார்ந்து பார்த்தது. அடுத்த போட்டிக்கு ஆயத்தமாவதைக்கூட விட்டுவிட்டுக் குயில் பாட்டில் கிறங்கிக்கிடந்தேன். குயிலின் குரல், குழல் இசை. பேச்சுப் போட்டிக்கு என் பெயரை அழைத்தார்கள். மேடையேறினேன். 'சுடரொளி... இடியொலி... எரிமலை... பெருமழை...’ என்று முண்டாசுக் கவிஞனை வார்த்தை விளையாடித் திளைத்தபோது, கூட்டத்தின் கவனம் ஈர்த்தேன். குறிப்பாக, குயில்மொழியின்!

பரிசளிப்பு விழாவுக்கு அமைச்சரை அழைத்திருந்தார்கள். அதனாலேயே அவர்தம் லோக்கல் ஜால்ராக்களும் மேடையேற, விழாவில் களேபரம். சான்றிதழ்கள் இடம் மாறின. 'குயில்மொழி - பாட்டுப் போட்டி - முதல் பரிசு’ என்று எனக்கு வந்தது. தெரிந்ததும் விழா முடியும் தருணத்தில் என்னைத் தேடிக் குயில் வந்தது. கூவியது. சர்ட்டிஃபிகேட்டுகளை மாற்றிக்கொண்டோம்.

''உங்க பாட்டு ஒரு மாதிரி உருக்கிடுச்சுங்க'' - நினைத்ததைச் சொல்லிவிட்டேன். நிமிர்ந்து பார்த்தவள், கொஞ்சம் மகிழ்ந்தாள்.

குயில்மொழி, தமிழ் இலக்கியம் படித்துக்கொண்டிருக்க... நான் தாவரத்தோடு போராடிக்கொண்டிருந்தேன். செடிகளை, கொடிகளை, இலைகளை, கிளைகளை, வேர்களை அழகோடு வாசிக்க விரும்பிய எனக்கு, அதன் வாழ்க்கையை விஞ்ஞானத்தில் விசாரிப்பது பிடிக்கவில்லை. கல்லூரி முடிந்ததும் தமிழ்த் துறைப் பக்கம் போகிற பழக்கம் வந்தது. விடுதி நண்பர்கள் அங்கே இருந்தது ஒரு காரணம். நல்ல நூலகம் இருந்தது, இன்னொரு காரணம். அது குயில்கூடு என்பதே முழுமுதற் காரணம்!

நூலகத்திலேயே அவளை அடிக்கடி பார்க்க நேர்ந்ததால்.... அந்த மாதக் கையெழுத்துப் பத்திரிகையில் 'உனக்கென்ன... புத்தகம், கவிதையென்று எப்படியோ பொழுதுபோகும். எனக்கு உன் நினைவே கவிதையாகும்..’ என்று 'கரப்பான் பூச்சி’ கவிதையை எடுத்துப் போட்டிருந்ததை அவள் ரொம்பவே ரசித்தாள் என்பதை, ரொம்ப நாட்களுக்கு அப்புறம் ஒருநாள் சொன்னாள்.

குயில்மொழியிடம் நான் கற்றுக்கொண்டது நிறைய. அவள் பாரதியின் ரசிகை என்பதனால்தான், நான் அவளை ஆழ்ந்து படிக்க ஆரம்பித்தேன். எடுத்துக்கொள்கிற விஷயம் எதுவாயிருந்தாலும் அதை நேர்த்தியோடு கையாளுகிற மென்மையான லாகவம் அவள் பார்த்துத் தெளிந்ததுதான். மத்தவங்களைச் சந்தோஷப்படுத்திப் பார்க்கிற சந்தோஷம் பற்றிச் சொன்னது குயில். ஒரு தமிழ் வாத்தியாரின் பெண். பறக்க ஆசைப்படுகிற அளவுக்குச் சிறகுகள் இல்லையெனினும், வலிக்க வலிக்கச் சிறகு விரிக்கிற வெறி, வேகம், நெருப்பு எல்லாமே குயிலின் பாடங்கள்!

நான் போட்ட நாடகத்தில் நடித்தது குயில். 'என்.எஸ்.எஸ்.ஸுக்காக கிராமங்களுக்கு வீதி நாடகங்கள் நடத்த என்னோடு வந்தது குயில். ஆண்டு விழாவிலிருந்து ஆண்டு மலர் தயாரிக்கிற வரைக்கும் எல்லாவற்றிலும் குயில் இருந்தது கூடுதல் தெம்பு.

''இந்த காலேஜ்ல நான் எதுவுமே படிக்கலைங்கிறது உண்மை குயில். ஆனா, கத்துக்கிட்டது நிறைய...'' என்று எப்போதும் நான் சொல்வதுண்டு.

லவ் ஆல்

ஒருநாள் குயிலும் ஒரு பாடம் எடுத்தாள். தன் வீட்டுச் சூழலையும் சமூக நிர்பந்தங்களையும் சொல்லி, ''நீ என்னை எவ்வளவு நேசிக்கிறேன்னு எனக்குத் தெரியும். நீ இல்லாம நானோ... நான் இல்லாத நீயோ... நெனைச்சுக்கூடப் பார்க்க முடியாத விஷயம். ஆனா, இனிமே நீயும் நானும் விலகித்தான் ஆகணும் விலகறதுன்னா முற்றிலுமா. அதுதான் நம்ம அன்புக்கு நாம காட்டுற மரியாதை'' என்று அந்தக் காரணம் சொன்னபோது, எவ்வளவோ பேசிப் பார்த்தும்கூடக் கடைசியில் குயில் பறந்தே போனது.

விஷயம் தெரியவந்தபோது பிரகாஷ் முதன்முதலாக வருத்தப்பட்டான்.

''ரெண்டு டீ போடுங்க.''

- டபடவென நிறையப் பரிமாறிக்கொண்டோம். டிகிரி முடிந்து அங்கே இங்கே என்று நடந்த வேலைக்கான தேடுதலில், 'உடனடியாகப் பொறுப்பு எடுத்துக்கொள்ளவும்’ என்று ரெஜிஸ்தர் தபால் அழைக்க, பஸ் ஏறியதுதான். ஒன்றரை வருடங்களாயிற்று. குற்றாலம் பக்கத்துக் கிராமத்தில் ஒரு வங்கியில் பிரகாஷ் சேர்ந்தது தெரியும். அதற்கப்புறம் இப்போதுதான் சந்திக்கிறோம். இதோ அவனுக்கும் சென்னை  வேலை.

''சரி, மச்சான்... உன்னை ஈவினிங் வந்து பார்க்கிறேன். அவசரம்டா... நான் கௌம்பட்டா...'' என்று கிளம்ப, பிடித்துக்கொண்டான் பிரகாஷ்.

''என்னடா... உன்னைப் பார்த்தே...'' - என்றவன் என் கண்களைப் பார்த்து, ''என்னடா... எதுனா... லவ்வா..?'' நேரடியாகக் கேட்டுவிட்டான்.

கொஞ்சம் அசடும் வெட்கமும் தழுவ, ''இல்லேடா... ஆமா 7.40 பஸ்ஸுடா. பிருந்தானு பொண்ணு. கம்ப்யூட்டர் க்ளாஸ்ல... அதான்டா!'' என்றேன்.

அதிர்ந்துவிட்டான் பிரகாஷ்.

''என்னடா சொல்றே. ஏண்டா, நெஜமாத்தான் சொல்றியா, இதுக்கு முன்னால நீ லவ் பண்ணவங்கெல்லாம் உன்னை விட்டுட்டுப் போயிட்டாங்களே. அதுமாதிரி இவளும் ஒரு நாள் உன்னை விட்டுட்டுப் போனா, நீ தாங்குவியாடா..?'' என்று கேட்டான்.

அப்படியே உடைந்து போய்ப் பார்த்தேன். ''கஷ்டம்தான்டா பிரகாஷ்.''

''பின்னே..?''

வேதனைச் சிரிப்போடு தெளிவாகச் சொன்னேன்.

''ஸோ வாட் பிரகாஷ்? கம்ப்யூட்டர் கத்துக்குவேன்ல!''

**********