Published:Updated:

நானும் விகடனும்!

இந்த வாரம் : சுபாபடம் : கே.ராஜசேகரன்

பிரபலங்கள் விகடனுடனான தங்களின் இறுக்கத்தை, நெருக்கத்தை, விருப்பத்தைப் பகிர்ந்துகொள்ளும் பக்கம்!

##~##

திடீர் என்று நம்மை யாராவது முச்சந்தியில் நிறுத்தி, 'உன்னைப் பெற்ற அம்மா வைப்பற்றி நான்கைந்து வார்த்தைகளில் சொல்’ என்றால், எப்படித் தடுமாறி, தவித்துப்போவோம்? அந்தத் தடுமாற்றம்தான், தவிப்புதான் எங்களுக்கு. எதைச் சொல்வது, எதை விடுவது?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஈர முகத்தில் அப்பிக்கொண்ட டால்கம் பவுடருடன், அம்மா கையைப் பிடித்துக்கொண்டு, பள்ளிக்குப் போக ஆரம்பித்த காலத்திலேயே ஆனந்த விகடன் எங்களுக்கு அறிமுகமாகிவிட்டது. அதுவும் பள்ளியில் தமிழ் அறிமுகம் ஆகும் முன்பாகவே!

விகடனின் அட்டைப் பட ஜோக்குகளைக் காட்டி அம்மாவிடம் அர்த்தம் கேட்டுத் தெரிந்துகொள்வதிலேயே கதை கேட்ட திருப்தி கிடைத்துவிடும். அப்புறம் எழுத்துக் கூட்டிப் படிக்கக் கைவந்ததும், விகடன் எங்களுக்கு நெருக்கமான தோழனாகிவிட்டான்.

இப்போதும் நினைவு இருக்கிறது. விகடன் அட்டைப் படத்தில், ரயில் நிலைய பிளாட்ஃபாரத்தில் ஒருவர் குளித்துக்கொண்டு இருப்பார். 'என்ன சார் இங்கே வந்து தலை முழுகுகிறீர்கள்?’ என்று நண்பர் கேட்பார். அதற்கு குளித்துக்கொண்டு இருப்பவர் சோகமான முகத்துடன், 'ரயில் தவறிவிட்டது சார்’ என்பார்.

நானும் விகடனும்!

சத்தியமாகச் சொல்கிறோம், இன்றைக்கும் விகடனின் ஜோக்குகளுக்கு இணையாக வேறு எங்கும் பார்ப்பது இல்லை. அந்த அபாரமான, நுட்பமான நகைச்சுவைப் பொக்கிஷத்தை, கேரளக் கோயில் சுரங்க அறைகளைக் காட்டிலும் அதிகமாகப் பதுக்கிவைத்து இருக்கிறார்கள். மதனுடைய சிரிப்புத் திருடனும், முன்ஜாக்கிரதை முத்தண்ணாவும், ரெட்டை வால் ரெங்குடுவும் எங்கள் வீட்டிலேயே வசிப்பவர்கள்போல் அத்தனை நெருக்கம்!

பள்ளி வயதில் எங்களுக்காகவே நல்ல கெட்டியான தாள்களில் நான்கு பக்கங்களில் பல வண்ணங்களில் சிறுவர் வண்ண மலர் என்று ஒரு பகுதி வெளியாகும். ஹைஸ்கூல் வந்ததும், அந்த இன்ஸ்பிரேஷனில் 40 பக்க நோட்டில், 'சிறுவர் மலர்ச் சோலை' என்று கையெழுத்துப் பத்திரிகை ஆரம்பித்ததுதான் உள்ளேகிடந்த எழுத்தாள விதைக்கு உரம் போட்டது.  

தமிழில் புதுமை செய்ய விரும்பியவர்களை, விகடன் தாய் மடிபோல் தாலாட்டும். ஜெயகாந்தனின் முத்திரைக் கதைகள், சாவி யின் 'வாஷிங்டனில் திருமணம்’, சேவற்கொடியோனின் 'என் கண்ணில் பாவை அன்றோ?’ எம்.ஜி.ஆரின் 'நான் ஏன் பிறந்தேன்?’ என்று எத்தனை ரத்தினங்கள்!

மிக வித்தியாசமான இனிஷியல்கள்கொண்ட டபிள்யூ.ஆர்.ஸ்வர்ணலதா எழுதிய 'தங்க ஊசி', 'ரோஷன் எங்கே?’, 'நாளை வந்தே தீரும்!’ போன்ற மர்மத் தொடர்கள் எங்களை அவருடைய பரம ரசிகர்கள் ஆக்கின. பிற்பாடு, அந்த டபிள்யூ.ஆர்.ஸ்வர்ணலதா என்பது ஒரு பெண்ணே அல்ல, அந்த முகமூடிக்குப் பின்னால், அபார மூளை கள் பல சங்கமித்து இருந்தன என்று அறிந்த போது, பிரமித்துப்போனோம்.

விகடனின் ஒவ்வொரு முத்திரைக் கதையும் ஒரு தேர்ந்தெடுத்த முத்து. ஒவ்வொரு கதையும் நெகிழச் செய்து, பாரமாக்கி, உணவைத் துறக்கச் செய்து, தூக்கத்தைத் தொலைக்கச் செய்து, ஏதோ ஒரு விதத்தில் இதயத்தில் தனது கைரேகையைப் பதிக்காமல்விட்டது இல்லை.

ஜெயகாந்தனின் 'அக்னிப் பிரவேசம்’ போலவே, எம்.வி.வெங்கட்ராமின்

நானும் விகடனும்!

.500 பரிசு பெற்ற முத்திரைக் கதையான 'பைத்தியக்காரப்பிள்ளை’யும் இன்று வரை மனதைவிட்டு அகலவில்லை. (65-களில் 500 ரூபாய்க்கு சுமார் 20 கிராம் தங்கம் வாங்கலாம்!)

பதின்பருவத்தில் தெனாவட்டாக விகட னுக்கு ஒரு சிறுகதை அனுப்பி, 'நீங்கள் எழுதிய 'ஒரே துண்டு’ என்ற சிறுகதை பிரசுரத்துக்கு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆனால், இதையே உங்கள் கதைக்கான இறுதி விமர்சனமாக எடுத்துக்கொள்ளாமல், மேலும் மேலும் கதைகள் எழுதி எங்கள் பரிசீலனைக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்’ என்ற வாசகங்களுடன் வந்த நிராகரிப்பு அஞ்சல் அட்டையையே, உற்றார், உறவினர், நண்பர்கள் என்று எத்தனை பேரிடம் காட்டி பெருமை அடித்துக்கொண்டோம்!

எங்களுடைய ஒன்றிரண்டு சிறுகதைகள் மற்ற பத்திரிகைகளில் வெளிவர ஆரம்பித்த சமயம், எங்கள் பெற்றோர்களுக்கு தங்களது வாரிசுகள் எழுத்தாளர்களாக உருவானதில் மகிழ்ச்சிதான். ஆனாலும், 'விகடன்ல உங்க எழுத்தை அங்கீகரிக்காத வரைக்கும், நீங்க என்ன எழுதினாலும் ஒண்ணுமே இல்ல...’ என்று அடிக்கடி ஆதங்கப்பட்டுக்கொண்டே இருந்தார்கள். எங்களுக்கும் உள்ளுக்குள் அந்த ஆதங்கம் கனன்றுகொண்டுதான் இருந்தது.

'விகடனில் கதை வெளியானால்தான் நாம் எழுத்தாளர்கள்!’ என்று உறுதிபூண்டு, இருவருமாகச் சேர்ந்து சிறுகதைகளை எழுதி, அடித்துத் திருத்தி, எழுதி, அடித்துத் திருத்தி, விகடனுக்கு அனுப்பிவைத்தோம். முயற்சி திருவினையானது. 'பிராயச்சித்தம்’ என்ற தலைப்பில் எங்கள் சிறுகதை வெளிவந்தபோது, விகடன் அங்கீகரித்துவிட்டான் என்று ஆனந்த நெகிழ்ச்சிகொண்டோம்.

ஆசிரியர் திரு பாலசுப்ரமணியன் அவர்களை முதல்முறை சந்தித்தபோது, நாங்கள் ஆரம்ப எழுத்தாளர்கள் என்ற கட்டத்தைத் தாண்டி இருக்கவில்லை.

அதற்கு முன், வேறு வேறு பத்திரிகைகளில் வெளிவந்திருந்த எங்களுடைய சில சிறுகதைகள்பற்றி, சற்றே அண்ணாந்த முகத்துடன் கண்களைச் சுருக்கிக்கொண்டு, எந்த ஓவியர் படம் வரைந்தார் என்பதுபோன்ற நுணுக்கமான தகவல்களுடன் அவர் பேசியபோது, அவருடைய நினைவாற்றல் கண்டு ஆடிப்போய்விட்டோம். படைப்புகளைப் படிப்பதிலும் பாராட்டுவதிலும் அவருக்கு இணையாக வேறு யாரிடமும் அப்பேர்ப்பட்ட ரசனையான பரந்த மனதை இது வரை நாங்கள் பார்க்கவில்லை.

விகடனில் எங்களுடைய பல கதைகள் பிரசுரமாகிவிட்டபோதிலும், முத்திரைக் கதை வெளியாகவில்லையே என்ற ஆதங்கம் குடைந்து கொண்டே இருந்தது. விகடனின் 70-ம் ஆண்டு நிறைவின்போது, சிறுகதைப் போட்டி வைத்தார்கள். எப்படியாவது விகடனின் முத்திரை யைப் பெற்றே ஆக வேண்டும் என்ற தவிப்பு மீண்டும் மற்ற வேலை களைச் செய்யவிடாமல் துளைத்து எடுத்தது. வங்கிக்கு லீவு போட்டு விட்டுக் கதை எழுத முனைந்தது அப்போதுதான்.

கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாக எங்கள் நெஞ்சை அரித்துக்கொண்டே இருந்த ஒரு விஷயம், 'கோழிக்குஞ்சு’ என்ற தலைப்பில் சிறுகதையாக உருவெடுத்தது. போட்டியில் கலந்துகொண்டது. 20,000 ரூபாய் முதல் பரிசை வென்றது. முத்திரைக் கையால் ஒரு ஷொட்டு. அதன் பின்னரும் எங்களது மூன்று, நான்கு கதைகளுக்கு முத்திரை வழங்கி எங்களை மேலும் நன்றிக்கடன் படவைத்தது விகடன்.

ஐந்து இதழ்களுக்கு ஒரு தொடர் வேண்டும் என்று அவள் விகடனில் கேட்டார்கள். ஒரு பெண்ணின் ஒவ்வொரு 10 வருடங்களையும் ஓர் அத்தியாயத்தில் கொடுப்பது என்று திட்டமிட்டு, 'பஞ்ச வர்ணக் கிளி’ என்னும் தலைப்பில் தொடரைத் துவக்கினோம். திடீரென்று ஆசிரியரிடம் இருந்து போன். 'கதையை சீக்கிரமே முடிச்சிடுங்க...’

இது என்ன நியாயம் என்று கேட்க நினைத்த நொடியிலேயே, நேரில் வரச் சொன்னார் ஆசிரியர். போனோம். ''கதை பிரமாதமாக இருக்கிறது. பஞ்சவர்ணக் கிளிதான் விகடனின் அடுத்த தொலைக்காட்சித் தொடர். உடனே, அதற்கான திரைக்கதை வேலையை ஆரம்பியுங்கள்...'' என்றார் ஆசிரியர் சிரித்தபடியே.

ஆக, எங்களை திரைக்கதை ஆசிரியர்களாக உருவாக்கியதும் விகடன்தான். அதன் பின் சில முக்கியமான தொலைக்காட்சித் தொடர்கள், பேர் சொல்லும் திரைப்படங்கள்!

2005. விகடன் ஆசிரியர் எங்களை அழைத்தார். 'இந்த வருடத் தீபாவளி மலருக்கு நீங்கள்தான் ஆசிரியர்' என்று ஆச்சர்யப்படவைத்தார். முழு சுதந்திரமும் பூரண ஒத்துழைப்பும் கொடுத்தது விகடன் குழு. விகடனின் நிழலில் செல்ல விருந்தாளி களாகச் செலவழித்த அந்த தினங்கள் எங்கள் சந்தோஷச் சரித்திரத்தில் அழுந்தப் பதிந்துவிட்டன.  

ஆனந்த விகடன் தமிழ் உலகுக்குப் புதிய எழுத்தாளர்களை மட்டும் உருவாக்கித் தர வில்லை. பிற்பாடு பல புதிய எழுத்தாளர்களை வாசகர்களுக்கு அறிமுகம் செய்த முக்கியமான பத்திரிகை ஆசிரியர்களையே உருவாக்கித் தந்தது. கல்கி, சாவி, மணியன்போன்ற பல பிரபல பத்திரிகை ஆசிரியர்களின் படைப்புத் திறனுக்குத் தீனி போட்ட முதல் களம் ஆனந்த விகடன்தான். இந்தப் பெருமை வேறு எந்தப் பத்திரிகைக் கும் இல்லை!

சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் வித்தியாசமான கருத்துகளை விகடன் வாசகர்களிடம் கொண்டுசேர்க்கும் பெருமையும் எங்களுக்குக் கிட்டியது. 'அத்தனைக்கும் ஆசைப்படு' தொடர் அடைந்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு சத்குருவின் அடுத்தடுத்த தொடர்களை விகடனில் வழங்கும் பேறு எங்களுக்கே கிடைத்தது. ஓர் எழுத்தாளனுக்கு இதைவிட என்ன அங்கீகாரம் கிடைத்துவிட முடியும்? வாழ்நாள் முழுக்க நன்றி கூறினாலும் அந்தக் கடன் தீராது.

இந்தச் சமயத்தில், இது நாள் வரை அடைகாத்து வந்திருக்கும் ஒரு ரகசியத்தைச் சொல்லிவிடலாம்.

பரணீதரன் அவர்கள் எழுதியுள்ள ஆன்மிகத் தொடர்களை எல்லாம் படித்து இருக்கிறோம். அந்தக் கோயில்களுக்கு எல்லாம் போக வாய்ப்பு கிடைக்குமா என்று எண்ணியது உண்டு. அப்படி இருக்க, சில வருடங்களுக்கு முன்பு திடீரென்று ஒருநாள் விகடனில் இருந்து அழைப்பு. 'ஆன்மிகத் தொடர் எழுதுங்களேன்' என்றார் பொறுப்பாசிரியர்.

மயிர்க்கூச்செறிந்தோம். ஆனால், 'ஜனரஞ்சக எழுத்தாளர்களாக அறியப்பட்டு இருக்கிறோமே, எங்கள் பெயரில் ஆன்மிகக் கட்டுரைகள் வந்தால், வாசகர்களிடம் அதற்கு உரிய மரியாதை கிடைக்குமா?' என்று தயங்கினோம். 'உங்களால் நிச்சயம் சிறப்பாக எழுத முடியும். வேறு புனைபெயரைத் தேர்ந்தெடுக்கலாம்' என்று ஆசிரியர் உற்சாகப்படுத்தினார். அப்படித்தான், 'காஷ்யபன்’ என்று எங்களுக்கு வேறு ஒரு பிறவி விகடனின் ஆசிகளுடன் கிட்டியது.

கிருஷ்ணா, கங்கை, காவேரி, துங்கபத்ரா என்று எண்ணிறந்த புனித நதிகளில் நீராடல், காசி, பிரயாகை, துவாரகை, பூரி, திருப்பதி, ஸ்ரீசைலம், குருவாயூர் போன்ற பாரதத்தின் அத்தனை புனிதத் தலங்களிலும் இறை தரிசனம். சக்தி தரிசனம், ஆலயம் ஆயிரம், தேவியின் திருவடி என்ற தலைப்புகளில் விகடனில் தொடர்கள் என்று எங்கள் வாழ்க்கைப் பாதையே மாறியது.

ஆச்சர்யம் என்னவென்றால், நாங்கள் இந்தத் தேசம் முழுக்கச் சென்ற அத்தனை இடங்களிலும் தவறாமல் விகடனின் வாசகர்களைச் சந்தித்ததுதான். எங்களை அவர்கள் தங்கள் இல்லத்து உறவாக எண்ணி வரவேற்றார்கள். உபசரித்தார்கள். உதவினார்கள். விகடனுக்காக இதுவாவது செய்ய முடிந்ததே என்று தங்களுக்குக் கிட்டிய வாழ்நாள் பாக்கியமாகக் கருதி மகிழ்ந்தார்கள்.

ஆனந்த விகடனின் அங்கீகாரத்துக்குத்தான் எவ்வளவு வலிமை என்று நாங்கள் உணர்ந்த தருணங்கள் அவை.

சிருங்கேரியில் முழு நேர ஆன்மிகப் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு இருந்த ஒரு நரை மனிதர் 'விகடன் சார்பாக வந்திருக்கிறோம்’ என்று சொன்னதும், கைகளைப் பிடித்துக்கொண்டார். 'சின்ன வயசுல பரம ஏழையா இருந்த குடும்பம் எங்களோடது. வாசன் சார் இருந்த அதே தெருவுல இருந்தோம். வாசன் சாரோட அம்மா என்னை அவர்கூட சமமா ஒக்காரவெச்சி அன்னிக்கு சாப்பாடு போடலைன்னா,  இன்னிக்கு என்னை நீங்க பார்த்திருக்கவே முடியாது...' என்று கண்கள் பனிக்கச் சொன்னபோது, எங்கள் கண்களும் தாமாகவே நனைந்துவிட்டன.

விகடனுக்கு, சமூகத்தின் மீது அதீதமான அன்பு உண்டு. இயற்கைச் சீற்றங்களால் மக்கள் அவதிப்பட்ட நேரங்களிலும், தனி மனிதர்களின் இன்னல்களைக் களைவதற்கும் நிதி திரட்டி அளிக்க விகடன்

நானும் விகடனும்!

தயங்கியதே இல்லை. அந்த மனிதநேயம் விகட னின் முக்கிய உயிர்நாடி.

விகடனின் நிழலில் கசடற்ற தமிழைக் கற்றோம். நேர்மையைக் கற்றோம். மனிதநேயம் கற்றோம். வலியோரை மட்டும் வாழ்த்தி, எளியோரைத் தாழ்த்தாது இருக்கக் கற்றோம். விருந்தினரைப் போற்றக் கற்றோம். இடுக்கண் பொழுதுகளில் நகைக்கக் கற்றோம்.

'என்றைக்கு நான் உங்களிடம் அறிமுகமாகிறேனோ, அன்றிலிருந்து ஒரு நாள்கூட உங்களால் என்னை நினைக்காமல் இருக்க முடியாது’ என்று ஷீரடி பாபா சொன்னதை சமீபத்தில்தான் படித்தோம். 'ஐயையோ! விகடன்கூட இப்படித்தானே? அறிமுகமான நாளில் இருந்து இன்று வரை ஒரு நாளும் நினைக்காமல் இருந்ததே இல்லையே!’ என்ற ஆச்சர்ய உண்மை எங்களைத் தாக்குகிறது!''