
1. பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர்
காரைக்குடியிலிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது பிள்ளையார்பட்டி. இங்கே அர்த்த பத்மாசனத்தில், ஜடாமுடியுடன், வலக்கரத்தில் சிவலிங்கம் ஏந்தி காட்சி தருகிறார் ஸ்ரீகற்பக விநாயகர். கஜமுகாசுரனை வதைத்த தோஷம் நீங்குவதற்காக இந்தக் கோலத்தை ஏற்றாராம். விநாயக சதுர்த்தியன்று 18 படி அரிசியால் செய்யப்பட்ட முக்குருணி மோதகம் இவருக்குப் படைக்கப்படுகிறது.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

2. பாண்டிச்சேரி ஸ்ரீமணக்குள விநாயகர்
பாண்டிச்சேரி- ஓர்லெயான் வீதியில், கடற்கரையை நோக்கி கோயில் கொண்டிருக்கிறார் இந்த விநாயகர். பாரதியாரால் பாடப்பெற்றவர். முற்காலத்தில் இங்கிருந்த மணல் நிறைந்த ஒரு குளக்கரையில் கோயில் கொண்டதால், 'மணற்குள விநாயகர்’ என்று பெயர்! விநாயக மூர்த்தங்களில், இந்த விக்கிரகம்- புவனேச மூர்த்தம். எனவே, ஸ்ரீபுவனேச விநாயகர் என்றும் போற்றுவர். இவரை வழிபட்டு பேறுபெற்ற தொள்ளைக் காது சித்தரின் சமாதி, இந்த ஆலயத்தின் மேற்கில் அமைந்துள்ளது.
3. திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார்
கமண்டலத்தில் அடைபட்டிருந்த காவிரி- தரணியில் பாயவும், திருவரங்கப் பெருமாள் இலங்கைக்குச் செல்லாமல் இந்தத் திருத்தலத்திலேயே நிலைபெறவும் காரணமானவர் இவர். மூஷிக வாகனம் முன்னே அமர்ந்திருக்க, கால்களைப் பாங்காக மடித்து வைத்து, திருக்கரங்களில்- பாசம் அங்குசம், ஒடிந்த தந்தம் மற்றும் மோதகத்துடன், ஆனந்தக் கோலத்தில் அருள்கிறார்.

4. திருப்புறம்பயம் ஸ்ரீபிரளயம் காத்த விநாயகர்
குடந்தையிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள திருப்புறம்பயம் ஆலயத்தில் அருளும் விநாயகர். பிரளய வெள்ளத்தை ஒரு கிணற்றுக்குள் அடக்கி, மக்களைக் காத்ததால், 'பிரளயம் காத்த பிள்ளையார்’ என்று பெயர். சங்கு, நத்தைக்கூடு, கிளிஞ்சல், கடல் நுரை ஆகியவற்றால் வருணன் இவரை உருவாக்கினானாம்! விநாயக சதுர்த்தி அன்று, இரவு முழுவதும் இவருக்கு தேனபிஷேகம் செய்வர். அந்தத் தேன் முழுவதும் இவரது திருமேனிக்குள் உறிஞ்சப்பட்டு விடுகிறது! சந்தன நிற மேனியரான விநாயகர், தேனபிஷேகத்தின் போது செம்பவழ மேனியராகக் காட்சி தருவார்!