Published:Updated:

நசுங்கிப் போனவை...

கல்யாண்ஜி

நசுங்கிப் போனவை...
##~##

'நினைவில் காடுள்ள மிருகத்தை
எளிதாகப் பழக்க முடியாது.
என் நினைவில் 
  காடுகள் இருக்கின்றன!’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

- என்று மலையாளக் கவிஞர் சச்சிதானந்தனின் கவிதை ஒன்று முடிகிறது. நிறையப் பேர் நினைவில் காடுகள் இல்லை. தாவரங்கள் அற்ற ஒரு விநோதச் சூன்யத்தில் மூச்சுக் காற்று ஊளையிட்டுத் திரிகிறது. தொட்டுப் பேசுவதற்கு ஆள் இல்லை, விரல்கள் வெற்றுவெளியைத் துழாவுகின்றன!

ரையாடல்கள்தான் ஒரு மொழியை அதிகம் உயிருடன் புழக்கத்தில்வைத்திருக்கும். உரையாடல்கள் வீட்டுக்குள் இருந்து வெளியேறிவிட்டன. தாத்தா, பேரன் - பேத்திகளிடம் சொல்லுகிற கதைகள் காணாமலே போய்விட்டன. தாத்தா, பாட்டிகளையே நிறைய வீடுகளில் காணோம்.

தொலைக்காட்சிப் பெட்டியின் மேல் நிலைத்த பார்வைகளுக்கு இடையில் மனிதர்கள் சதுரம் சதுரமான இடைவெளிகளுடன் உறைந்து கிடக்கிறார்கள். சுவர்களில் இருந்து இறங்கி, தரைக்கு வந்து பல்லிகள் மிகக் கொடூரமான அவசரத்துடன் ஈசல்களை விழுங்கிக்கொண்டு இருப் பதைச் சலனமே இல்லாமல் பார்க்க முடிகிறது நமக்கு!

நசுங்கிப் போனவை...

தெரு என்பது எவ்வளவு அருமையான விஷயம். வேலை காரணமாக நான் சுடலைமாடன் கோயில் தெருவைவிட்டு வந்து, 18 வருடங்கள் இருக்கும். இப்போது ஊருக்குப் போனால்கூட, 'பையன் திருச்சியில கடைசி வருஷம் படிக்கிறானா... இந்த வருஷத் தோடு படிப்பு முடியுதா?’ என்று ஒருத்தர் கேட்பார். 'தூத்துக்குடியில் இருக்கும்போது உடம்புக்குச் சரியில்லாம ரொம்பச் சங்கடப்பட்டியே... இப்போ ஒண்ணும் தொந்தரவு இல்லையே பழைய மாதிரி?’ என்று இன்னொ ருத்தர் கேட்பார்.

தெரு என்பது இங்கே வெறும் அடையாளம். தெரு தொலைந்துபோய்விட்டது நகரங்களில்!

யாரையும் நம்பி வீட்டுக்குள் வரச் சொல்ல முடியவில்லை. வீட்டுக்குள்ளே கூப்பிட்டு உட்கார்த்திவைத்து, ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்கக் கொடுப்பதற்குக்கூட அடுத்த ஆளை நம்ப முடியாத ஊரில் என்ன பண்ண முடியும்? தினசரிகளிலும் வாரப் பத்திரிகைகளிலும் அடுக் கடுக்காக வெளிவருகிற கொலைகளும் கொள்ளை களும், வாசலில் வந்து நிற்கிற ஒவ்வொரு மூன்றாம் நபரையும் எடுத்த எடுப்பிலேயே சந்தேகப்படவைக்கின்றன. சந்தேகப்படுகிற மனிதர்கள் பூச்செடி வளர்க்க முடியுமா?

ப்பசி, கார்த்திகையில் தெரு நாய்கள் மூன்று நான்கு குட்டிகள் போடுவது ஒன்றும் அதிசயம் இல்லை. ஆனால், மற்ற ஊர்கள் என்றால், குட்டி போட்ட ஒன்றிரண்டு நாட்களுக் குள், ஆளுக்கு ஒன்றாக யாராவது அந்தக் கண் முழிக்காத குட்டிகளை எடுத்துப் போயிருப்பார் கள். மூன்றாம் கிளாஸ் படிக்கிற ஒரு நெல்லையப் பனோ, ஆவுடைநாயகமோ,  ராத்திரி தன்னுடைய படுக்கையில் நாய்க் குட்டியையும் படுக்கவைத்துக்கொண்டு தூங்குவான். என்ன அநியாயம்... இங்கே யாரும் தூக்கிப் போகாமல், ரொம்ப காலம் நாய்க் குட்டிகள் தெருவிலேயே மெலிந்துபோய் அலைந்துகொண்டு இருக்கின்றன - வளர்கிற வரை அல்லது ரோட்டில் அடிபட்டுச் சாகிற வரை!

நாய்க் குட்டிகள் என்ன... மனிதர்களே அப்படித் தான் கிடக்கிறார்கள். விபத்துக்கு உள்ளாகி, ரத்தம் பெருகி, உயிரோடு இழுத்துக்கொண்டு கிடந்தாலும் பக்கத்தில் போய் என்ன... ஏது என்று யாரும் கேட்பதே இல்லை. மேம்பால விளிம்புகளில், தண்டவாளத் தடங்களில், முக்கியமான நகரச் சாலைகளில் பின்னிரவுகளில் சோடியம் வேப்பர் வெளிச்சத்தின் நிராதரவில் கிடந்தவர்களில் உங்களுக்கும் எனக்கும் தெரிந்தவர்கள்கூட உண்டு. நேரம் இல்லை என்று சொல்ல முடியாது. ஈரம்தான் இல்லை. ஈரம் இருந்தால், விபத்துப் பிணங்கள் காலடியில் மூடப்பட்டுக்கிடக்க, யாராலும் வேர்க்கடலை கொறிக்க முடியாது. குடித்துவிட்டு சுய ஞாபகம் இல்லாமல், வேட்டி விலகிக்கிடப்பவனைத் தாண்டி காலி ஸீட்டில் போய் உட்கார்ந்து, புத்தகம் படித்து, மின்சார ரயில் பயணம் செய்ய முடியாது!

நசுங்கிப் போனவை...

ப்பா சவரம் செய்த பிளேடுகளை வைத்துத்தானே பென்சில் சீவுவோம். ஏதோ அணுகுண்டை ஒளித்துவைத்திருப்பது மாதிரி அதை அலமாரியில் வைத்திருப்பார்கள். நாம் பென்சில் சீவ எடுத்தால், 'உன்னை யார் அதை எல்லாம் எடுக்கச் சொன்னார்கள்?’ என்று ஒரேயடியாகச் சத்தம் போடுவார்கள். தப்பித் தவறி நம் கையில் பிளேடு கிடைத்து, பென்சிலையும் நாம் சீவுவதற்கு ஆரம்பித்துவிட்டால், பென்சிலைச் சீவி முடிப்பது வரை உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு, 'பார்த்து, பார்த்து... வெட்டிடப் போகுது’ என்று அம்மா பதைபதைப்பாள். சொல்லிவைத்தது மாதிரி பென்சிலைச் சாய்த்துப் பிடித்திருக்கிற இடது கை சுட்டு விரலில் பிளேடு வெட்டி ரத்தம் கசிவது வேறு விஷயம்.

இப்போது என்னவென்றால், நாலைந்து வயதுகூட ஆகாத முளையான்கள், சதா தொலைக்காட்சி முன்னால் அசையாமல் உட்கார்ந்து, அடிக்கிற, உதைக்கிற, கொல்கிற 24 மணி நேர ரத்தக் களறிகளை, ஏதாவது ஒரு புது ரக வறுவலை அல்லது பொரித்த மக்காச் சோளத்தைத் தின்றுகொண்டு உற்சாகமாகப் பார்க்கின்றன. வன்முறையின் கோர அசைவுகள் விழுந்து விழுந்து இடம் மாறுகிற குழந்தையின் கண்களில் இருந்து ரிமோட் கன்ட்ரோல் பொத்தான்கள் குழந்தைமையைத் திருடி வெகு காலம் ஆயிற்று!

டுக்கை அறைகளின் குறுக்கேயும் நிறையச் சுவர்கள். தொலைக்காட்சிப் பெட்டிகள் அநேகமாக வீட்டின் நடு அறையில் இருக்கின்றன. இரண்டு பேரில் யாராவது ஒருவர் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே தூங்கிப்போகிறார்கள். காதலின் மேல் கரையான் புற்று வளர்கிறது பெரிது பெரிதாக!

குடை எடுத்துக்கொண்டு வராத நாட்களில் மழை பெய்யும் என்றால், எனக்கு வருத்தம் இல்லை. சந்தோஷம்தான். மழையில் இன்னொரு தடவை நனையலாமே. மழை முளைக்க வைக்கும்.

என் தாத்தாவை நனைத்த மழையில் இருந்து நானும், நான் எழுதுகிற இந்த வரியும் முளைக்க முடிந்தது.

என்னை நனைக்கிற மழையில் இருந்து, நாளையோ நாளை மறுநாளோ ஒரு புல் வளர்ந் தால் போதும், இங்கே மழையைச் சபிக்கிறார்கள். ஒரு துளி மழை விழுவதற்கு முன் சடசடவென்று மின்சார ரயிலின் ஜன்னல் கண்ணாடிகளை இறக்கிவிடுகிறார்கள். என்னைப்போன்று யாரா வது ஒருவர், உள்பக்கத்தில் இருந்து உள்ளங் கையால் துடைத்துவிடுகிறோம். வெளியே யாரும் பாராமல் பெய்கிறது மழை!

லியோனாய்ட் எரிகற்களைப் பார்ப்பதற்காக - அதிகம் வர்ணித்துச் சொல்லப்பட்ட அதன் மத்தாப்பு ஜாலத்துக்காக - நிறைய வீட்டு மாடிகளில் அன்றைக்கு இரவு ஆங்காங்கே ஆட்கள் காத்திருந்தார்கள். எந்தெந்த ஊர்களிலோ விட்டுவிட்டு வந்திருந்த வானத்தை இந்த ஊரில் கண்டுபிடிப்பதுபோல, நாங்களும் பார்த்துக்கொண்டு இருந்தோம். குறிப்பிட்ட நேரம் தாண்டியும் வெற்றுக் கண்களுக்கு எதுவும் தெரியவில்லை. எனக்கு ஏமாற்றம் இல்லை. ரொம்ப நாட்களுக்குப் பார்த்த நிசியின் மையிருட்டு, நட்சத்திரங்களைவிட அழகாக இருந்தது. பார்க்கிற திசையை மறைத்த தென்னங்கீற்றுகளைக் கொத்தாகப் பிடித்து விலக்கியபோது, கைப்பிடிக்குள் நசுங்கிய தென்னை ஓலையில் இருந்து லேசாக ஒரு பச்சை வாசம் அடித்தது. நட்சத்திரத்துக்கு இந்த வாசம் இருக்காது. வீட்டுச் சொந்தக்காரருடைய பையன் வினோத் அந்த நேரத்திலும் விழித்துக்கொண்டு இருந்தான். 'குட்டிப் பயல்... தூக்கம் வரலையா உனக்கு’ என்று அவனைத் தடவிக் கொடுத்தேன். நட்சத்திரங்களை எல்லாம் தடவிக் கொடுத்து இருக்க முடியாது!

நசுங்கிப் போனவை...

னிதன் என்று இருந்தால், அவ்வப்போதாவது மண்ணில் காலோ கையோ பட வேண்டாமா? வீடும் சரி, வேலை பார்க்கிற இடங்களும் சரி, சாலைகளும் சரி... பாதங்களுக்கும் மண்ணுக்கும் உள்ள உறவை அடியோடு நிராகரித்துவிட்டன. மண் வாசனை மாதிரி வியர்வை வாசனையையும் ஒழித்துக்கட்டிவிடுவார்கள்போல... ஒரு சிணுக்கோரி, ஒரு கண்மை டப்பா, ஒரு சீப்பு, ஒரு பவுடர் டப்பா என்று இருந்த வீட்டுக் கண்ணாடி களுக்கு முன் இப்போது வகை வகையான வாசனைத் தெளிப்பான்கள். உடற்பயிற்சி செய்கிறது மாதிரி அதை அங்கேயும் இங்கேயும் உபயோகித்துக்கொள்வதன் மூலமே ஆண்களும் பெண்களும் புத்துணர்ச்சியும் தன்னம்பிக்கையும் இங்கே பெற்றுக்கொள்கிறார்கள்!

பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சித்தி, அண்ணன், அக்கா, அத்தை, மாமா என்ற எல்லா உறவுமுறைகளும் விடைபெற்று, அங்கிளும் ஆன்ட்டியும் பெருகிவிட்டார்கள். 'கோமதியை ரொம்பக் கேட்டதாச் சொல்லு’, 'எல்லோரையும் நான் (வி)சார்ச்சத சொல்லுடே’ - விசாரிப்புகள் அருகிப் போய்விட்டன. உறவுமுறை சொல்லிக் கூப்பிடுகிற நெருக்கமிக்க குரல்களை எப்போ தாவது திருநெல்வேலிப் பக்கம் கல்யாணத்துக் குப் போனால்தான் கேட்க முடிகிறது. நான்கு வருடங்கள் ஆகப்போகின்றன இங்கே வந்து. இவ்வளவு நாள் தாக்குப்பிடிக்க முடிந்ததே ஆச்சர்யம். திருநெல்வேலிக்குப் போய்விட வேண்டியதுதான்!

ங்கேயும் வருடத்துக்கு 365 நாட்கள்தான். ஆனால், அந்த 365 நாட்களுக்கும் உள்ள உயிரே தனி, அங்குவிலாஸ் காலண்டரிலோ, சோமசுந்தரம் செட்டியார் நகைக் கடை காலண்டரிலோ அன்றன்றைய தேதியைக் கிழிக்கும்போது, கிழித்த தாளை லேசில் கீழே போட மனசு வராது. அப்படி ஓர் ஒட்டுதல் இருக்கும்!

ட்டுதல் என்றால் என்ன அர்த்தம். அடுத்த மனிதர்கள் மீதான அக்கறைதான் ஒட்டுதல்.

   'சைக்கிளில் வந்த
   தக்காளிக் கூடை சரிந்து
   முக்கால் சிவப்பில் உருண்டன
   அனைத்துத் திசைகளில்
   பழங்கள்.
   தலைக்கு மேலே
   வேலை இருப்பதாய்
   கடந்தும் நடந்தும்
   அனைவரும் போயினர்.
   பழங்களைவிடவும்
   நசுங்கிப்போனது
   அடுத்த மனிதர்கள்
   மீதான அக்கறை.’

இந்தக் கவிதையை 15 வருடங்களுக்கு முன்பே எழுதியிருக்கிறேன். எப்படி என்றுதான் தெரியவில்லை!