Published:Updated:

உலகின் கடைசி மனிதன் இங்குதான் செல்வான்..! #SeedVault

உலகின் கடைசி மனிதன் இங்குதான் செல்வான்..! #SeedVault
உலகின் கடைசி மனிதன் இங்குதான் செல்வான்..! #SeedVault

அந்த விதைப் பெட்டகத்தை நிர்வகிக்கும் ஃபெளலரிடம்  இப்படியொரு கேள்வி கேட்கப்பட்டது. 

" இந்த உலகிலிருக்கும் மொத்தப் பனிமலைகளும் உருகிவிட்டன. க்ரீன்லேண்ட், ஐஸ்லேண்ட், ஆர்க்டிக், அண்டார்டிக் என எல்லாம் உருகிவிட்டது. அப்போது இந்த விதைப் பெட்டகத்தின் முன்னே உலகின் மிகப்பெரிய சுனாமி வருகிறது. அப்போது இந்தப் பெட்டகம் என்னவாகும்?"

" ஒன்றும் ஆகாது. அந்த சுனாமியின் உயரத்தைவிட நான்கு, ஐந்து மாடி அதிக உயரம் நின்று, பெட்டகம் பாதுகாப்பாக இருக்கும்..." என்றார். ஆனால், கடந்த மாதம் 130 அடி நீளமுள்ள அந்தப் பெட்டகத்தின் சுரங்கத்தில் நீர் புகுந்துவிட்டது. உலகப் பனிமலைகள் உருகவில்லை. உலகின் பெரிய சுனாமி வரவில்லை. இருந்தும் நீர் புகுந்துள்ளது. இந்த விதைப் பெட்டகம் உருவாக்கப்பட்டதற்கும், இன்று அதனுள் நீர் புகுந்திருப்பதற்கும், உலக அழிவுக்கும், நம் உணவுக்கும், விவசாயத்துக்கும், வாழ்வுக்கும் நிறைய சம்பந்தம் இருக்கிறது. முதலில் இந்த விதைப் பெட்டகத்தைப் பற்றி தெரிந்துக் கொள்ளலாம். 

இரண்டாயிரமாம் ஆண்டிலிருந்தே உலக அழிவு குறித்து, உலகம் முழுக்கவே பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. அரசாங்கங்கள் நேரடியாக உலக அழிவைப் பற்றியெல்லாம் பேசாவிட்டாலும்கூட, பூமி வெப்பமயமாதல், ஓசோன் படலத்தில் ஓட்டை, சூழலில் மாற்றம் என பல விஷயங்களைப் பேசி வருகின்றன. அப்படி ஒரு வேளை உலகம் அழிந்தால் ?, விவசாயம் அழிந்து, பெரும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டால் ?,  உலகம் அழிந்து அதில் தப்பும் சிறு மனித கூட்டம் உணவில்லாமல் உயிருக்குப் போராடினால் ?,  போன்ற கேள்விகளுக்கு பதிலாய் உருவாக்கப்பட்டது தான் " ஸ்வால்பார்ட் குளோபல் விதைப் பெட்டகம் ".   

நார்வே நாட்டின் ஆளுகையின் கீழிருக்கும் ஆர்க்டிக் பிரதேசத்தில் இருக்கிறது ஸ்வால்பார்ட் தீவுக் கூட்டம். இங்கு ஜூன், 19, 2006 அன்று நார்வே, ஸ்வீடன், பின்லாந்து, டென்மார்க், ஐஸ்லேண்ட் ஆகிய நாடுகளின் பிரதமர்களின் முன்னிலையில் விதைப் பெட்டகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. 26, பிப்ரவரி, 2008யில் கட்டிமுடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. இங்கு உலகின் பெரும்பாலான நாடுகளிலிருந்து, பல விதமான விதைகள் வாங்கப்பட்டு பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது. மூன்றாயிரம் வகையான தேங்காய்கள், 4,500 வகையான உருளைக்கிழங்குகள், 35 ஆயிரம் வகையான சோளம், 1,25,000 வகையான கோதுமை, 2 லட்சம் வகையான அரிசி உட்பட, மொத்தம் 15 லட்சம் விதைகள் இங்கு வைக்கப்பட்டுள்ளன. பெட்டகம் மொத்தம் 45 லட்சம் விதைகளைப் பாதுகாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. உலகின் 30 ஆயிரம் ஆண்டுகால விவசாய வரலாற்றை தன்னுளயீந்தப் பெட்டகம் அடக்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. 

ஸ்வால்பார்ட் தீவுக்கூட்டத்தில், ஸ்பிட்ஸ்பெர்கன் எனுன் தீவில் தான் இந்தப் பெட்டகம் அமைக்கப்பட்டுள்ளது. இது இங்கு அமைக்கப்படுவதற்கு மிக முக்கியக் காரணம் ஒன்று உள்ளது. இந்தப் பகுதியில் தான், டெக்டானிக் அடுக்குகளின் அசைவுகள் மிகவும் குறைவாக இருந்தன. மேலும், PermaFrost என்று சொல்லப்படும் “நிரந்தர பனிக்கட்டிகள்"அதிகம் இருக்கும் பகுதியாக இது இருக்கிறது. கடல்மட்டத்திலிருந்து 430 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பெட்டகத்தில் வைக்கப்படும் விதைகள் மூன்று அடுக்குகளைக் கொண்ட “ஃபாயில் பாக்கெட்களில்” ( Foil Packets ) ஈரப்பதம் உள் புகாதபடி பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பெட்டகம் (-)18 டிகிரி செல்சியஸ் அளவிலான வெப்பநிலையில் வைத்து பாதுகாக்கப்படுகிறது. 

இப்படியாக உலகின் மிகச் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களும், அறிவியலாளர்களும் இணைந்து திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இந்தப் பெட்டகத்தினுள் தண்ணீர் புகுந்தது, அறிவியலின் தோல்வியாகப் பார்க்கப்படவில்லை. மாறாக, இயற்கையின் ஆகப் பெரும் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. உலக வரலாற்றிலேயே அதிக வெப்பம் பதிவான வருடமாக 2016 இருந்திருக்கிறது. இதனால், பூமியின் பல மிருதுவான பகுதிகளும் நெகிழ்ந்தன. அப்படித் தான், இந்தப் பகுதியில் இருந்த, உருகவே உருகாது என்று நம்பப்பட்ட நிரந்தரப் பனிக்கட்டிகள் உருகத் தொடங்கியிருக்கின்றன. ஆரம்பத்தில், இது அத்தனைப் பெரிய பிரச்னையில்லை, உலக அழிவுக்கும், இதற்கும் சம்பந்தமில்லை என்று வாதாடிய நார்வே அரசாங்கமுமே கூட, தற்போது, இது ஒரு முக்கியப் பிரச்னைதான் என்பதை ஒப்புக் கொண்டுள்ளது. 9 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் கட்டப்பட்ட இந்தப் பெட்டகத்துக்கு, தற்போது மீண்டும் 4 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கி மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளும் முயற்சிகளைத் தொடங்கியுள்ளது. 

விதைகளோடு பெட்டக நிர்வாகி ஃபெளலர்

இந்த விதைப் பெட்டகம் உருவாக்கப்பட்டிருப்பதற்கு பின்னர், மிகப் பெரிய சர்வதேச அரசியல் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. உலக அழிவு சம்பந்தப்பட்ட மிக முக்கிய விஷயங்களை அரசுகள், மக்களிடமிருந்து மறைக்கின்றன என ஒரு சாரார் குரல் கொடுக்கின்றனர். ஆர்க்டிக்கின் நிரந்தரப் பனிக்கட்டிகள் திடீரென இப்படி உருகத் தொடங்கியிருப்பது, உலக அழிவிற்கான சமிக்ஞை என்று சில ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

எது எப்படியாக இருந்தாலும், இந்த பூமி நேற்று போல் இன்றில்லை. இன்று போல் நாளை இருக்கப்போவதில்லை. நாளுக்கு நாள் மக்கள் பூமியை அதிகம் காயப்பட்டு வருகின்றனர். பெட்டகத்தின் விதைகள் காப்பாற்றப்பட்டாலும், பூமிக்கு மனிதன் செய்த வினைகளுக்கான தண்டனை கிடைத்தே தீரும் என்பதில் சந்தேகமில்லை.