என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - திருச்சி
Published:Updated:

அண்ணாவின் இருக்கை அப்படியே உள்ளது!

அண்ணாவின் இருக்கை அப்படியே உள்ளது!

##~##

'' 'இந்திய பதிப்பகங்களில் இருந்து வெளியாகும் அனைத்துப் புத்தகங்களின் நகல்களை பெறும் நான்கு முக்கியமான நூலகங்களில் இதுவும் ஒன்று’, 'தமிழில் வெளியான முதல் நூலின் நகலை கொண்டது, முதல் அட்லஸ் உள்பட பழமையான நூல்களை உள்ளடக்கியது’ என, சென்னை கன்னிமரா நூலகம் ஏகப்பட்ட சிறப்புகளைக் கொண்டது. அதுவும் பழமையான நூல்கள் பாதுகாக்கப்பட்டு வரும் இந்தப் 'புத்தகக் காப்புப் பிரிவு’  கன்னிமராவுக்குப் பெருமை சேர்க்கக்கூடியது'' - என்று கன்னிமரா நூலகத்தின்  பெருமையைப் பேசுகிறார், நூலகத்தின் நூல் தொகையாளரான பார்வதி.

 ''கன்னிமராவில் கிட்டத்தட்ட 6 லட்சம் புத்தகங்கள் உள்ளன. அதில் 'புத்தகக் காப்புப் பிரிவு’ பகுதியில் மட்டும் சுமார் 1 லட்சம் புத்தகங்கள் பராமரிக்கப்படுகின்றன. பல்வேறு மொழிகளில் இந்தியா முழுவதும் வெளிவரும் நாளிதழ்கள் இங்கு கிடைக்கும். பெரும்பாலான வாசகர்கள் பழைய தமிழ், ஆங்கில நாளிதழ்களைத் தேடி வருவார்கள் என்பதால் ஐந்து ஆண்டுகள் வரையான நாளிதழ்களை மாத வாரியாகப் பிரித்துவைத்து பாதுகாக்கிறோம்.

அண்ணாவின் இருக்கை அப்படியே உள்ளது!

தொடக்கத்தில் இருந்து இன்றுவரை தமிழக சட்டமன்ற, நாடாளுமன்ற விவாதங்களின் தொகுப்புகள் உள்ளன. இதைத் தவிர வேறு எங்கும் கிடைக்காத பழமையான நூல்கள் இங்கு உள்ளன'' என்கிற பார்வதி, தங்கள் நூலகத்தின் வி.ஐ.பி. வாசகர்கள் பற்றிப் பேசுகிறார்.

'' 'அறிஞர் அண்ணா படித்திராத கன்னிமரா நூல்களே இல்லை’ என்பார்கள். அவர் அன்று அமர்ந்து படித்த இருக்கையை இன்றும் பாதுகாத்து வருகிறோம். அதேபோல் வி.வி.கிரி, முன்னாள் முதல்வர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள் என்று பலர் வந்து இருக்கிறார்கள். வந்துகொண்டும் இருக்கிறார்கள். இதைத் தவிர அரசியல், சமூகப் பேச்சாளர்களும் தவறாமல் வருகிறார்கள்'' என்கிறார் பார்வதி.

அண்ணாவின் இருக்கை அப்படியே உள்ளது!

''தமிழகம் மட்டும் அல்லாமல் இந்தியாவின் பிற மாநில, வெளிநாட்டு ஆய்வு மாணவர்களும் இங்கே வருகிறார்கள். அரிய புத்தகங்களை வீட்டுக்குக் கொண்டுசெல்ல அனுமதிப்பது இல்லை. இங்கேயே அமர்ந்து குறிப்பு எடுத்துக்கொள்ளலாம். தேவை என்றால் இங்கேயே நகல் எடுத்துத் தருவோம்'' என்கிறார் மற்றொரு நூல் தொகையாளர் மீனாட்சி சுந்தரம்.  

மொத்தத்தில் ஒவ்வொரு தமிழனும் காணவேண்டிய, கற்க வேண்டிய இடம் கன்னிமரா!

அண்ணாவின் இருக்கை அப்படியே உள்ளது!

- பூ.கொ.சரவணன், படங்கள்: ப.சரவணகுமார்