கிரகங்களின் சுழற்சியால் ஏற்படும் பலன்களை எல்லோரும் அனுபவிக்கவே வேண்டும். இது நியதி!
ஸ்ரீவரதராஜப் பெருமாளுடன் நேரில் பேசும் பாக்கியம் பெற்றவர் திருக்கச்சி நம்பிகள். அப்படி ஒரு முறை பெருமாளுடன் பேசிக்கொண்டிருந்தபோது, பெருமாள் நம்பிகளிடம், ''உமக்கு இப்போது ஏழரை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
வருடம் சனி தோஷம் ஆரம்பிக்கிறது, அனுபவியும்!'' என்றார். அதற்கு நம்பிகள், ''ஐயோ, ஏழரை வருடமா? என்னால் முடியாதே! நீங்கள் நினைத்தால் தவிர்க்கலாமே... காப்பாற்றுங்கள்!'' என்றார்.
பெருமாள் அவரிடம், ''எனக்கு மிகப் பிரியமானவர் நீர். ஆனாலும், கிரக தோஷத்தின் பலனை அவரவர் அனுபவித்தே ஆக வேண்டும். உமக்காக ஏழரை வருடங்களை ஏழரை மாதமாகக் குறைக்கிறேன்'' என்றார். அதுவும் தன்னால் முடியாது என்று கூற, பகவான், ''ஏழரை நாழிகையாவது தோஷத்தின் பலனை அனுபவித்தே ஆக வேண்டும்!'' என்றார். நம்பியும் ஒப்புக் கொண்டார்.
அந்த நேரம் பார்த்து ஒரு திருட்டுப்பழி நம்பிகள் மீது விழ, அதற்காக அரசு தண்டனை பெற்றார் திருக்கச்சி நம்பிகள். என்னதான் இறைவனுக்கு அணுக்கத் தொண்டராக இருந்தாலும் கிரகத்தினால் ஏற்படும் பலனை அனுபவிக்காமல் தப்ப முடியாது.
- எம்.வி.குமார், மதுராந்தகம்

காணாமல் போன மோதிரம்!
மம்சாலக்கட்டை சுவாமி வைணவ அடியார். இறைவனுக்குக் கைங்கரியம் செய்வதில் ஈடுபாடு கொண்டவர். அவர் எப்போதும் காஞ்சி வரதராஜர் கோயிலில் ஏதாவது ஒரு தொண்டு செய்து கொண்டிருப்பார்.
அன்று அவர், பெருமாள் எழுந்தருளும் இடத்தைக் கழுவிச் சுத்தம் செய்யும்போது, அவர் கையில் அணிந்திருந்த மோதிரம் இடைஞ்சலாக இருக்கவே, கழற்றி ஓர் ஓரமாக வைத்துவிட்டு, கைங்கரியத்தைத் தொடர்ந்தார்.
பணி முடிந்ததும் கோயிலுக்குச் சென்று, பெருமாளை வணங்கி, தீர்த்தம் வாங்குவதற்காகக் கையை நீட்டினார். அப்போதுதான் அவருக்கு மோதிரத்தைக் கழற்றி வைத்தது நினைவுக்கு வந்தது. உடனே அங்கு போய்த் தேடினார்; அது அங்கே இல்லை!
'ஓ’ என்று அழ ஆரம்பித்தார். உடனே அவரது சீடர்கள், ''சுவாமி... அந்த மோதிரம் போனால் போகிறது. கவலைப்படாதீர்கள். நாளைக்கே இன்னொரு மோதிரம் செய்து கொள்ளலாம்!'' என்றார்கள்.
''அன்பர்களே, மோதிரம் தொலைந்ததற்காக நான், அழவில்லை. எனது அஜாக்கிரதையை நினைத்தே வருத்தப்படுகிறேன். எனது கவனக் குறைவால் யாரோ ஒருவர் அந்த மோதிரத்தை எடுத்திருப்பார். பஞ்சமாபாதகங்களில் பொன்னைத் திருடுவது, முதலாவது பாவம். அந்தப் பாவத்தை ஒருவர் செய்வதற்கு நான் காரணமாகி விட்டேனே!'' என்று பதிலளித்தார்.
- தேனி. பொன் கணேஷ்