Published:Updated:

அருள் மதுரம்... ஆலயம் மதுரம்!

மண் மணக்கும் தரிசனம் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன்குள. சண்முகசுந்தரம்

அருள் மதுரம்... ஆலயம் மதுரம்!

மண் மணக்கும் தரிசனம் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன்குள. சண்முகசுந்தரம்

Published:Updated:
##~##

கோவலன் கொல்லப்பட்ட அநீதியை எதிர்த்து மதுரையை எரித்த கண்ணகி, ஆத்திரம் தீர்ந்ததும் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள கேரள வனப் பகுதியில் தங்கி இருந்து, பிறகு தெய்வமானாள் என்பது புராணம். ஆனால், மதுரையை எரித்த பிறகு, தங்களது ஊரில் அடைக்கலம் புகுந்தவள், அங்கேயே ஊர் காக்கும் தெய்வம் ஆனாள் என்கிறார்கள் சிறுவாச்சூர் மக்கள்.

பெரம்பலூர் மாவட்டத்தில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூருக்கு சுமார் 8 கி.மீ. முன்னதாகவே உள்ளது சிறுவாச்சூர். திருச்சியில் இருந்து சுமார் 48 கி.மீ. தொலைவு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆதிகாலத்தில் இந்த கிராமத்தின் மேற்கு எல்லையில் செல்லியம்மன் கோயில் கொண்டிருந்தாள். இந்தக் கோயிலுக்கு மேற்கே- மலையடிவாரத்தில், செல்லியம்மனின் அண்ணன் பெரியசாமி கோயில் கொண்டிருந்தார்.

ஒரு முறை, மந்திர வித்தைகளில் தேர்ந்த பில்லிகாரன் எனும் அசுரன் ஒருவன், சிறுவாச்சூரில் புகுந்து, ஊரையே துவம்சம் பண்ண ஆரம்பித்தான். அவனைக் கண்டு அஞ்சி ஓடிய மக்கள், செல்லியம்மனிடம் விஷயத்தைச் சொல்லிக் கதறினார்கள். தனது குடிமக்களின் துயர் துடைக்க உடனே புறப்பட்டு வந்த செல்லியம்மன், பில்லிகாரனுடன் நேருக்கு நேர் மோதினாள். ஆனால் அவன், அம்மனையே தனது மந்திர சக்தியால் கட்டிப்போட்டுவிட்டான்.

அருள் மதுரம்... ஆலயம் மதுரம்!

இந்த நிலையில், மதுரையை எரித்த கண்ணகி, ஒரு நாள் மாலைப் பொழுதில் சிறுவாச்சூருக்கு வந்து சேர்ந்தாள். அன்று இரவு தங்குவதற்கு இடம் தரும்படி ஊர்மக்களிடம் கேட்டாள். ஊர் மக்களோ, ''அடி ஆத்தி...! நாங்களே அசுரனோட பிடியில சிக்கி அவதிப்பட்டுக் கெடக்கோம். உனக்கெப்படி அடைக்கலம் தர்றது?'' என்று தயங்கினர். பின்னர், செல்லியம்மனின் ஆலயத்துக்குள் போய்ப் படுத்து உறங்கிப்போனாள் கண்ணகி.

அப்போது, அவளது கனவில் தோன்றிய செல்லியம்மன், ''இங்கே ஒரு அசுரன் என்னைப் பாடாய் படுத்திக்கொண்டிருக்கிறான். அவன் கண்ணில் பட்டால், உன்னையும் விட மாட்டான். அதனால் நீ உடனே இங்கிருந்து போய்விடு!'' என்றாள். இதைக் கேட்ட கண்ணகி, ''அந்த அசுரன் வரட்டும். அவனை நான் ஒரு கை பார்க்கிறேன்!'' என்று அங்கேயே படுத்திருந்தாள். எதிர்பார்த்த படியே நடுநிசி வேளையில், ஆக்ரோஷமாக அங்கு வந்த பில்லிகாரன், செல்லியம்மனின் கருவறைக் கதவை திறந்து உள்ளே ஓர் அடி எடுத்து வைத்தான். அடுத்த அடியை வைப்பதற்கு முன், நிலைப் படிக்கு மேலே உட்கார்ந்திருந்த கண்ணகி, அவனது நெஞ்சில் சூலத்தை பாய்ச்சினாள். அங்கேயே பில்லிகாரன் துடிதுடித்து இறந்தான்.

உடனே கண்ணகிக்குக் காட்சி கொடுத்த செல்லியம்மன், ''என்னையே கட்டிப் போட்டுக் கொடுமைப்படுத்திய அசுரனை அழித்து, எனக்கும் இந்தக் கிராம மக்களுக்கும் விமோசனம் கொடுத்து விட்டாய். இனி இந்த இடத்தில் இருந்து, மக்களையும் ஊரையும் பேய்- பிணி அண்டாமல் நீதான் காக்க வேண்டும். எனது கோட்டையை உனக்குக் கொடுத்துவிட்டு, நான் எனது அண்ணன் இருக்கும் இடத்துக்குப் போகிறேன். இனி இங்கு நீதான் சக்தியாய் இருப்பாய்'' என்று சொல்லிவிட்டு, மக்களுக்கும் உணர்த்திவிட்டு மறைந்தாள். ஆனால், செல்லியம்மனை மலையடிவாரத்துக்குப் போகவிடாமல், கடும் வேண்டுதல் வைத்து மல்லுக்கு நின்றனர் ஊர்மக்கள். அப்போது அவர்கள் எதிரே தோன்றிய செல்லியம்மன், ''இவளும் எனக்குள் அடங்கிய ஒரு சக்திதான். இவள் வேறு, நான் வேறு என்று நினைக்க வேண்டாம். நான் மலையடிவாரத்துக்குப் போனாலும் இந்த ஆலயத்தில் என்றைக்கும் எனக்குத்தான் முதல் பூஜை. அதோடு, வாரத்தில் இரண்டு நாட்கள் உங்களுக்கு தரிசனம் கொடுக்க இங்கு வருவேன்'' என்றாள்.

அருள் மதுரம்... ஆலயம் மதுரம்!

உடனே கிராம மக்கள், ''அப்படியானால், அந்த இரண்டு நாட்கள் மட்டுமே நாங்கள் இந்த ஆலயத்தைத் திறந்து பூஜைகள் செய்வோம். மற்ற நாட்களில் ஆலயத்தை திறக்கமாட்டோம்; பூஜை இருக்காது!'' என்றார்கள். பின்னர், செல்லியம்மன் புறப் பட்டதும், கர்ப்பகிரகத்துக்குள் சென்று கடவுள் அவதாரமாக உட்கார்ந்து கொண்டாள் கண்ணகி. மதுரையை அழித்துவிட்டு வந்தவள் என்பதால், இவளுக்கு 'மதுரகாளி’ என்று பெயர் சூட்டி வழிபடத் துவங்கினர் மக்கள்.

மதுரகாளியின் ஆலயத்துக்குள் விநாயகரை யும் அவளையும் தவிர வேறு சாமிகளுக்கு இடமில்லை. செல்லியம்மனிடம் கிராம மக்கள் சொன்னபடி, இன்றும் வாரத்தில் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே மதுரகாளியம்மன் ஆலயத்தைத் திறந்து பூஜைகள் நடக்கின்றன. அதுவும் உச்சிகால பூஜை மட்டுமே நடக்கிறது. பூஜையின்போது கருவறை மண்டபத்துக்கு வெளியே இரண்டு கோடாங்கிகள் அருள் வந்து இறங்கியது போல், மதுரகாளியும் செல்லியம்மனும் வந்தமர்ந்த கதையை, கோடாங்கி அடித்து பாட்டாகப் படிக்கின்றனர். பாடி முடித்த பிறகே தீபாராதனை நடக்கிறது. செல்லியம்மன் சொல்லிச் சென்றபடி, திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அவள் குடிகொண்டுள்ள மலையடிவாரத்தை நோக்கி தீபத் தட்டைக் காட்டுகின்றனர். அடுத்து மதுர காளியம்மனுக்கு தீபாராதனை. பில்லிகாரன் பலியான இடத்தில் சின்னதாக ஒரு குழி இருக்கிறது. மதுரகாளிக்கு பூஜை முடிந்ததும் பில்லிகாரனுக்கும் இங்கு பூஜை நடக்கிறது.

மதுரகாளியம்மன் கோயிலுக்கு நேர் வடக்கே இருக்கிறது சோலை முத்தையா ஆலயம். இவர் மதுரகாளிக்கும் செல்லியம்மனுக்கும் காவல் தெய்வமாக வந்தவர். இவருக்குத் துணையாக இங்கே ஆக்ரோஷம் காட்டி நிற்கிறார் அகோர வீரபத்திரர். இந்த திறந்தவெளி ஆலயத்தில் நேர்த்திக்கடனாகச் செலுத்தப்பட்ட குதிரையில் அமர்ந்த சோலை முத்தையாவின் சிலைகள் ஏராளமாக நிறுத்தப்பட்டுள்ளன. ஆலயத்தின் முகப்பில் சிவகன்னியம்மன், சோலை கன்னியம்மன், சோலை பெரிய கன்னியம்மன் ஆகியோர் ஒன்றாக கருவறை கொண்டிருக்கிறார்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் சோலை முத்தையா சந்நிதிக்கு வந்து, அங்குள்ள மரத்தில் தொட்டில் கட்டிப்போட்டு வேண்டிக்கொண்டால், குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதேபோல் திருமணமாகாத கன்னிப்பெண்கள் இந்த மூன்று அம்மன்களுக்கும், கழுத்தில் மஞ்சள் கயிறு கட்டி வேண்டுதல் வைத்தால், சீக்கிரமே அவர்களுக்குத் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.

அருள் மதுரம்... ஆலயம் மதுரம்!

மதுரகாளியம்மன் ஆலயத்துக்கு மேற்கே சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது பெரியசாமி மலை. சாதாரண நாட்களில் இங்கு யாரும் செல்வது கிடையாது. மலையடிவாரத் தில், அடர்ந்து வளர்ந்த காட்டு மரங்களுக்கு மத்தியில் கம்பீரமாய் உட்கார்ந்திருக்கிறார் பெரியசாமி. பக்கத்தில் பெரியகன்னி ஐயா, எதிரில் செல்லி அம்மன், லாட சாமிகள் மற்றும் கிணத்தடி யார்கள் சாமிகளும், சற்றுத் தள்ளி பெரிய கன்னியம்மன்களும் உள்ளனர்.

இன்னொரு இடத்தில் ஆத்தடி யார் எனப்படும் 14 சித்தர்கள் சிம்மத்தின் மீது அமர்ந்துள்ளனர். இவர்களுக்கு அருகிலேயே நாக கன்னியம்மன் வீற்றிருக்கிறாள். மற்றுமோர் இடத்தில் செங்கமலை யார், பொன்னுசாமி உள்ளிட்டோர் இருக்கின்றனர்.

அனைவரையும் வணங்கிவிட்டு, வனத்தை விட்டு வெளியே வந்தால், நம்மை வழியனுப்புகிற இடத்தில் பெருமாள் ஸ்தூபி ஒன்றும் உள்ளது.

அருள் மதுரம்... ஆலயம் மதுரம்!

இந்த தெய்வங்களை இந்த அடர்ந்த வனப் பகுதிக்கு வந்து தரிசிக்க முடியாதவர்களுக்காக, மதுரகாளியம்மன் கோயிலுக்குப் பக்கத்திலேயே பெரியசாமி உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறிய அளவில் சிலைகள் இருக்கின்றன. சாதாரண நாட்களில் பெரிய சாமிக்கு இங்குதான் பூஜைகள் நடக்கின்றன.

அருள் மதுரம்... ஆலயம் மதுரம்!

திங்கள், வெள்ளி தவிர மற்ற நாட்களில் மதுரகாளியும் செல்லி அம்மனைப் பார்க்க மலையடிவாரத்துக்குப் போய்விடுவதாக நம்பிக்கை. இதனால் மற்ற நாட்களில் ஆலயத்தில் ஆட்களைப் பார்ப்பதே அரிது. ஆனாலும், பௌர்ணமி மற்றும் அமாவாசை ஆகிய இரண்டு நாட்களில் ஆலயத்தைத் திறக்கும் முறை அண்மைக் காலமாக வழக்கத்துக்கு வந்துள்ளது.

மதுரகாளியம்மனுக்கு 'மாவிளக்கு’ நேர்த்திக் கடன் செலுத்துபவர்கள் அதற்குத் தேவையான மாவை, கோயில் வளாகத்தில் உள்ள உரலில் இடித்தே தயாரிக்க வேண்டும். நெல்லைக் கொண்டு வந்து அதைக் குத்தி அரிசியாக்கி, பிறகு அதைக் குத்தி மாவாக்கி, மாவிளக்குப் போட வேண்டும் என்பது ஐதீகம். ஆலயத்தைச் சுற்றியுள்ள பிற தெய்வங்களுக்கு அசைவ படையல்கள்; ஆனால் மதுரகாளிக்கு எப்போதுமே சைவப் படையல்தான்.

அருள் மதுரம்... ஆலயம் மதுரம்!

ஆண்டுதோறும் சித்திரை மாத அமாவாசையன்று மதுரகாளிக்கு பூச்சொரிதல் விழாவும் பின்னர் அம்மனுக்குக் காப்புக் கட்டித் திருவிழாவும் நடக்கிறது. 8-ம் நாள் திருவிழாவான செவ்வாய் அன்று மாலையில், சுத்துப்பட்டு சனங்களெல்லாம் மலையடிவாரம் பெரியசாமி கோயிலில் கூடுகின்றனர். அன்று இரவு சிறப்பு பூஜையும், மறுநாள் அதிகாலையில் கடாவெட்டு பூஜையும் நடக் கிறது. புதன்கிழமை அன்று மதுரகாளி வாசலில் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். வியாழக் கிழமையன்று செல்லி அம்மன், பெரியசாமி, மதுரகாளி உள்ளிட்ட தெய்வங்களின் தேர்பவனி நடக்கிறது.

வெள்ளிக்கிழமை ஊருக்குள் உள்ள சத்திரத்து மண்டபத்தில் இந்த தெய்வங்கள் ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்குக் காட்சி தருகின்றனர். சனிக்கிழமை மஞ்சள் நீராட்டுடன் அந்த வருடத்து திருவிழா நிறைவடைகிறது.

அனைத்துக் குறைகளையும் போக்குபவள் மதுரகாளி என்றாலும், மந்திரம் கற்ற அசுரனை அழித்த அவதாரிணி என்பதால் பேய், பிசாசு, பில்லி சூனியத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து இவளை தரிசித்தால், அத்தனை யும் அகன்று விடுகின்றன.

மதுரகாளி அம்மனை குல தெய்வமாகக் கொண்டவர்களை இந்தத் தீயசக்திகள் அண்டவே அண்டாது என்பது தனிச் சிறப்பு!

படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism