Published:Updated:

டயர் போதும்,வீடு தயார் !

டயர் போதும்,வீடு தயார் !

##~##

கொடைக்கானலுக்கு அருகில் உள்ள செண்பகனூரில் டயர்களைப் பயன்படுத்தி ஓர் அழகான பங்களாவை எழுப்பி ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த அலெக்ஸ் லீயர்.

''நானும் என் நண்பர் மைக்கேல் ரன்னத்தும் 2004-ல் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய இந்தோனேஷியா மற்றும் அந்தமான் போனோம். அப்போது சுனாமியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மைக்கேல், டயர் வீடுகள் கட்டிக் கொடுத்தார். அதன் பின் நான் இந்தியா வந்துவிட்டேன். நான் சாய்பாபாவின் தீவிர பக்தன். 2008-ல் பாபா கொடைக்கானல் வந்தபோது அவரைப் பார்க்கவந்தேன். அப்போதுதான் இந்த செண்பகனூர் பக்கத்தில் இருக்கிற இடத்தை வாங்கி டயர் பங்களா கட்டணும்னு முடிவு பண்ணினேன். வீடு கட்டத் தேவையான டயர் எல்லாம் கோயம்புத்தூர், கொடைக்கானல் பகுதியில் இருக்கிற ஒர்க்ஷாப்ல குறைந்த விலைக்கு வாங்கிவிட்டேன்' என்றவர் டயர் வீடு கட்டிய முறையையும் விளக்கினார்.

டயர் போதும்,வீடு தயார் !

''சாதாரணமாக வீடு கட்டுகிற மாதிரி இல்லாமல் குழி தோண்டி அதில் டயரைப் புதைத்துவிட வேண்டும். டயருக்கு இடையில் செம்மண் வைத்து சுத்தியலால் அடித்து இறுக்கினேன். இதுதான் டயர் அஸ்திவாரம். அதற்கு மேல் டயர்களை வரிசையாக அடுக்கி, செம்மண்ணைக் கலந்து கொஞ்சமாக சிமென்டும் கலந்து பூசிவிட்டேன். அதற்கு மேல் பெயின்ட் அடித்தேன். வீடுகட்டி மூன்று வருடங்களாகிறது. இதுவரை எந்தப் பிரச்னையும் இல்லை. கல்லால் கட்டிய கட்டடங்களைவிட உறுதியாகத்தான் இருக்கிறது.

டயர் போதும்,வீடு தயார் !

காட்டில் கிடைக்கும் குச்சிகளை எடுத்துக்கொண்டுவந்து செதுக்கிக் கூரை அமைத்தேன். சோலார் சிஸ்டம் மூலமாக எனக்குத் தேவையான மின்சாரத்தை உருவாக்கிக்கொள்கிறேன். மழைநீரைச் சேமித்துவைக்க பெரிய வாட்டர் டேங்க் கட்டி இருக்கிறேன். அந்த மழை நீர்தான் எங்களுக்கு எல்லாமே. வீட்டுக்குள்ளேயே எனக்குத் தேவையான பழங்கள், காய்கறிகள் விளைய வைத்து உபயோகப்படுத்துகிறேன். முதலில் தனி மனிதனா இந்த வேலைகளை ஆரம்பித்தேன். அப்புறம் இந்தப் பகுதி மக்களும் உதவினாங்க. ஜீப் மற்றும் குதிரைகள் மூலமா எனக்குத் தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு வந்தேன். சில லட்சங்கள் போதும். இது மாதிரி ஓர் அழகான வீடு கட்டலாம். தண்ணீர், மின்சாரம், காய்கறிகள்னு எல்லாமே இலவசமாக் கிடைக்கும்' என்று சிரிக்கிறார்.

அப்புறம் என்ன பாஸ், போகிப் பண்டிகைக்கு டயர்களைக் கொளுத்தறதை விட்டுட்டு, ஒரு வீட்டைக் கட்டிரலாம்ல?

- உ.சிவராமன், படங்கள் : வீ.சிவக்குமார்

அடுத்த கட்டுரைக்கு