மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அறிவிழி - 54

அறிவிழி
பிரீமியம் ஸ்டோரி
News
அறிவிழி ( Anton Prakash )

அண்டன் பிரகாஷ்

அறிவிழி - 54

ணையத்தில், .blog .baby .lol .talk .movie .life .discount .fashion .news - இப்படி ஆயிரத்துக்கும் மேற்பட்ட வலைதளப் பெயர்களை பல்வேறு நிறுவனங்கள் சொந்தமாக்கிக் கொள்ள விண்ணப்பித்து இருக்கின்றன. இணையதளப் பெயர்களைக் கட்டுப்படுத்தும் ICANN (Internet Corporation for Assigned Names and Numbers) அமைப்பு, இன்னும் சில வாரங்களில் இந்தப் பெயர்களை ஏற்றுக்கொண்டுவிடும். .com, .org, .in போன்று மட்டுமே பெயர்களைப் பார்த்திருக்கும் நமக்கு, இன்னும் சில வாரங்களில் புதுமையான வலைதளப் பெயர்கள் அறிமுகமாகும். பை தி வே, .indians என்பதை ரிலையன்ஸ் நிறுவனம் உரிமைகொள்ள விண்ணப்பித்து இருக்கிறது. என்னென்ன பெயர்கள், அவற்றின் விண்ணப்பதாரர்கள் யார் என்பதைப் பார்க்க... https://gtldresult.icann.org/
 

வியட்நாம் நாட்டில் கணினி மென்பொறியாளராகப் பணிபுரியும் டாங் நியனுக்கு வீடியோ கேம்ஸ் தயாரிப்பது பொழுதுபோக்கு. Flap Flap என்ற பெயரில் சென்ற வருடத்தின் மே மாதவாக்கில் ஆப்பிள் சாதனங்களில் இயங்கும்வண்ணம் game    ஒன்றைத் தயாரித்து ஆப்பிளின் ஐ-டியூன்ஸ் ஆப் கடையில் பதிவேற்றம் செய்தார். அதுபோலவே இன்னொரு game  இருப்பதாக ஆப்பிள் சொல்ல, அதன் பெயரை Flappy Bird என மாற்றிவிடுகிறார்.

பல மாதங்கள் பெரிதாக ஒன்றும் நிகழவில்லை. பறவை ஒன்று தூண்களுக்கு இடையே குதித்துச் செல்வதான அந்த விளையாட்டை, மிகவும் கடினமானதாக வடிவமைத்திருக்கிறார் டாங்.

டிசம்பர் வாக்கில், சமூக ஊடகம் மூலமாகவும், வாய்மொழியாகவும் Flappy Bird  கிடுகிடுவென பிரபலமாகத் தொடங்கியது. ஜனவரி மாதத்தில் கூகுளின் ஆண்ட்ராயிட் கடையிலும் Flappy Bird -ஐ பதிவேற்றம் செய்ய, இதிலிருந்து வரும் விளம்பர வருவாய் மட்டும் ஒரு நாளைக்கு 25 லட்சத்துக்கு மேலாக டாங்-குக்குக் கிடைக்கிறது. 'Flappy Bird -ஐ எப்படி விளையாட வேண்டும்?’ என்பது பற்றிய வீடியோக்கள், அதை விளையாடாமல் இருக்க முடியவில்லை என்ற ஒப்புதல்கள், உலகெங்கிலும் உள்ள பல்வேறு பத்திரிகை நிறுவனங்கள் பேட்டி எடுக்க விண்ணப்பங்கள்... என டாங் சில வாரங்களில் உலகப் பிரபலம் ஆகிவிட்டார்.

''இது, என் வாழ்க்கையையே குலைத்துவிட்டது. இனிமேலும் இதைத் தொடர விரும்பவில்லை. எனவே, இரண்டு மென்பொருள் கடைகளில் இருந்தும் Flappy Bird -ஐ எடுத்துவிடப்போகிறேன்’ என்று ட்வீட்டியதும், 'அது Flappy Bird -ஐ இன்னும் பிரபலப்படுத்த அடிக்கும் ஸ்டன்ட்’ என்று பலரும் நினைக்க, அதற்கு மாறாக 24 மணி நேரத்தில் தான் சொன்னது போலவே விளையாட்டை நீக்கிவிட்டார் டாங். Flappy Bird -ஐ தரவிறக்கம் செய்ய முடியாது என்பதால், ஏற்கெனவே தரவிறக்கம் செய்யப்பட்ட அலைபேசிகள், ஈபே போன்ற தளங்களில் விற்கப்பட்டு வருகின்றன.

இரண்டு வருடங்களுக்கு முன்னால், Angry Birds என்ற மென்பொருள், அலைமென் உலகைக் கலக்கியது. ஆனால், அந்த மென்பொருள் தயாரித்து அதை மார்க்கெட்டிங் செய்தவை பெரிய நிறுவனங்கள். Flappy Bird அப்படி அல்ல. இணையத்தின் இணைக்கும் தன்மை மூலம் தனி மனிதன் ஒருவன் மிக விரைவில் பணமும் புகழும் ஈட்ட முடியும் என்பதை எந்தத் திட்டமும் தீட்டாமல் நிரூபித்திருக்கிறார் டாங்.

அறிவிழி - 54

ன்ஸ்டாகிராம் என்ற சிறிய அலை மென்பொருள் நிறுவனம், லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்திருந்த கோடாக் நிறுவனம் திவால் நோட்டீஸ் கொடுக்க காரணமாக இருந்ததா என்பதை அலசலாம் என, சென்ற கட்டுரையில் சொல்லியிருந்தேன்.

கோடாக் என்ற நிறுவனம் இல்லாமல் இருந்திருந்தால், இன்ஸ்டாகிராம் என்பது உருவாகியிருக்காது. காரணம், பயனீட்டாளர்கள் புகைப்படங்கள் எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளும் தொழில்நுட்பத்தைக் கொண்டுவந்தது கோடாக். அதன் நவீன வடிவாக்கம்தான்

அறிவிழி - 54

இன்ஸ்டாகிராம் மற்றும் இன்ன பிற புகைப்படம் சார்ந்த மென்பொருள்கள். 'பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்பதை விரைவில் செய்யத் தவறியது, கோடாக் செய்த முதல் தவறு. புதுமையாக்கல் பழமையான நிறுவனங்களுக்கும் தேவை என்பதற்கு, கோடாக்கின் தோல்வி நல்ல உதாரணம்.

இன்னொரு கோணத்திலும் இதைப் பார்க்க வேண்டும். இன்ஸ்டாகிராம் ஒரு பில்லியன் டாலர்களுக்கு மதிப்பிடப்பட்டபோது, அதன் ஊழியர்களின் எண்ணிக்கை 20-க்கும் குறைவு. ஆனால், அது நேரடியான ஊழியர்களின் எண்ணிக்கை. மேகக்கணினியத்தில் கட்டப்பட்டிருக்கும் இன்ஸ்டாகிராமின் உள்கட்டமைப்பு அமேசான் உள்ளிட்ட பல நிறுவனங்களை உள்ளடக்கி இருக்கிறது.

வேகமாக வளரும் இன்ஸ்டாகிராம் போன்ற தொழில்நுட்பங்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பும் பலமாக இருக்க வேண்டும் என்பதால், புதிய திறன்களைக்கொண்ட ஊழியர்கள் தேவைப்படுவார்கள். அமேசானின் ஊழியர்களின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் இரண்டு மடங்குக்கும் மேலாக வளர்ந்திருக்கிறது என்பதை இங்கே அடிக்கோடிட்டுக் காட்ட வேண்டும். மற்றுமொரு விதத்தில் சொன்னால், தொழில்நுட்ப வளர்ச்சி புராதன வேலைகளை இடையீடு செய்கையில், புதிய வேலைகளை உருவாக்குகிறது என்பதை உறுதிபடச் சொல்ல முடியும்!

- விழிப்போம்...