##~##

பொதுவாக, சுமாராகப் படிக்கும் குழந்தைகளை, 'நீ பரீட்சையில் முட்டைதான் வாங்கப் போற!’ என்று கிண்டல் செய்வார்கள். ஆனால், முட்டையைக்கொண்டே சாதனை படைத்து, தேசிய அளவில் விருதும் வாங்கி இருக்கிறார் தர்மபுரியைச் சேர்ந்த அஜய்குமார்.

 அஜய்குமாருக்குத் தொழில் 'லோகோ’ டிசைன் செய்வது. தர்மபுரி பிடமனேரி சிக்னல் அருகே கடந்த ஆறு ஆண்டுகளாக 'ஜி3 டிசைன் ஜோன்’ என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். தமிழகத்தில் 600-க்கும் மேற்பட்ட பிரபல நிறுவனங்களின் 'லோகோ’க்கள் அஜய் கைவண்ணத்தில் உருவானவை. வணிக ரீதியாக மட்டுமின்றி தங்கள் துறை சார்ந்த போட்டிகளை தேடிப் பிடித்து பங்கு கொள்வதிலும் அஜய்குமாருக்கு அலாதி ஆர்வம். அதுதான் அவருக்கு விருதை பெற்றுத் தந்திருக்கிறது.

ஒரு முட்டையின் கதை!

கடந்த 2009-ம் ஆண்டு 'கிரியேட்டிவ் எக்ஸலன்ஸ்’ என்ற நிறுவனம், மும்பையில் தேசிய அளவிலான விளம்பர டிசைன் போட்டி ஒன்றை நடத்தியது. அதில், மூன்றே முட்டைகளை மட்டும் பயன்படுத்தி பெண் சிசுக் கொலை அவலத்தை அழகாகச் சித்திரித்து, ஒரு விளம்பரத்தை டிசைன் செய்து சமர்ப்பித்து இருந்தார் அஜய். 18 ஆயிரம் பேர் கலந்துகொண்ட அந்தப் போட்டியில் முதல் இடத்தை வென்றது அஜய் உருவாக்கிய விளம்பரம்!

மேற்புறம் லேசாக உடைந்த இரு முட்டைகளில் கறுப்பு, வெள்ளை நிறத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, அன்னை தெரசா இருவரின் சோகம் படர்ந்த முகம். அதற்கு அருகே, சிதைந்த நிலையில் ஒரு முட்டை. அதன் மஞ்சள் கருவில் மெல்லியதாக ஒரு பெண் பிஞ்சு முகம். உடைந்த இந்த முட்டைக்கும் மேலே கரித்துண்டு கிறுக்கலாக, 'இழந்த சரித்திரம் எதுவோ?’ என்ற வாசகம். கீழ்ப் புறத்தில், 'பெண் குழந்தைகளைக் காப்போம்... சரித்திரத்துக்கு!’ என்று மற்றொரு வாசகம். இதுதான் அஜய்குமாருக்கு விருதைப் பெற்றுத் தந்த விளம்பர டிசைன்.

ஒரு முட்டையின் கதை!

இது மட்டுமன்றி 'அமெரிக்கன் டிசைன் ஃபிலிம்ஸ்’ என்ற அமைப்பு, ஒவ்வோர் ஆண்டும் உலக அளவில் சிறந்த 200 'லோகோ’ வடிவமைப்பாளர்களைத் தேர்வு செய்து, விருது வழங்குகிறது. அதிலும் இரண்டு முறை விருது பெற்று இருக்கிறது இவருடைய நிறுவனம்.

''போட்டி அறிவிப்பைப் பார்த்ததும் மூன்று மாதங்கள் இதே வேலையாக அலைந்து திரிந்து பல டிசைன்களை உருவாக்கி, இறுதியாக இதை ஃபைனல் செய்தேன். இந்திரா, தெரசா போன்று வரலாற்றுச் சாதனை புரிய வேண்டிய எத்தனையோ சிசுக்கள், தர்மபுரி மாவட்டத்தில் கருவிலேயே அழிக்கப்படுகின்

ஒரு முட்டையின் கதை!

றன. இதைப் போட்டிக்கான கருவாகஎடுத்துக் கொண்டேன். இரவு, பகல் பாராமல் விளம்பரம் சிறப்பாக அமைய நிறைய ஐடியாக்களைத் தந்து என் முதுகுத் தண்டுபோல் செயல்பட்டவர் என் மனைவி, ஷியாமளா...'' அஜய்குமாரின் பேச்சில் ததும்புகிறது அன்பு!

தற்போது புவி வெப்பமயமாதலையும் மரம் வளர்ப்பின் அவசியத்தை உணர்த்தும் வகையிலும் ஒரு விளம்பரத்தை டிசைன் செய்து வருகிறார். அரசு அனுமதியுடன் விரைவில் தர்மபுரி நகர் முழுக்க அஜய்குமாரின் சொந்தச் செலவில் முளைக்கப் போகிறதாம் அந்த விளம்பரம் தாங்கிய ஹோர்டிங்ஸ்.

சரித்திரம் படைக்க வாழ்த்துக்கள்!

- எஸ்.ராஜாசெல்லம், படங்கள்: எம்.தமிழ்செல்வன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு