Published:Updated:

என் ஊர்!

சொந்த ஊர்ல மட்டும்தான் கதை எழுதுவேன்!

என் ஊர்!

சொந்த ஊர்ல மட்டும்தான் கதை எழுதுவேன்!

Published:Updated:
##~##

ழுதப்படாத விஷயங்கள் என்று ஒதுக்கப்பட்ட வற்றை இலக்கியமாகப் பதிவு செய்பவர் வா.மு.கோமு. இவரது சிறுகதைகளிலும் நாவல்களிலும் நுட்பமான கிண்டல் தொடர்ந்துகொண்டே இருக்கும். தனது சொந்த ஊரான ஈரோடு மாவட்டம், வாய்ப்பாடியின் அழிக்க முடியாத நினைவுகளை இங்கு பகிர்ந்து கொள்கிறார் எழுத்தாளர் வா.மு.கோமு!

''குக்கிராமத்தில் பிறந்த இந்த வா.மு.கோமகன் இன்னிக்கு உங்க முன்னாடி வா.மு.கோமு-வா நிற்கக் காரணம், என் மண்தான். இன்னமும்கூட கிராமத்தில் 50 வீடுகள் மட்டும்தான் இருக்குது. அங்கேதான் இன்ன மும் செல்போன் நம்பரைக்கூட சரியாச் சொல்லத் தெரியாதவங்க இருக்காங்க. எந்த நேரமும் பெருங் கூச்சலோடும் வாகன இரைச்சலோடும் வாழ்வறதை ஒப்பிடும்போது அந்த வாழ்க்கை சொர்க்கம். நான் வாய்ப்பாடியில் மட்டும்தான் கதை எழுதுவேன். வேறு ஊரில் எப்போதுமே நான் கதை எழுதியது இல்லை. எழுதவும் வராது!

என் ஊர்!

என் ஊர் மக்களுக்குப் படிப்பு அறிவு குறைவு. இலக்கியம்னா கிலோ என்ன விலை?னு கேட்பாங்க. ஆனா, அவங்களோட அன்புக்கு எந்த உலக இலக்கியமும் ஈடாகாது. எங்க கிராமத்தில் ஏரியோ குளமோ கிடையாது. கிணத்துப் பாசனம்தான். முன்ன இருந்த மாதிரி விவசாயமும் இப்போ இல்லை. நிறையப் பேர் பெருந்துறை சிப்காட்டுக்கும் திருப்பூர் பனியன் கம்பெனிக்கும் வேலைக்குப் போறாங்க. வாய்ப்பாடியில் மிஞ்சி மிஞ்சிப் போனா பீடி, சிகரெட்தான் வாங்க முடியும். கோதுமையை அரைக்கணும்னா கூட சென்னிமலைக்கோ ஊத்துக்குளிக்கோதான் போகணும்.

அஞ்சாம் வகுப்பு வரைக்கும் இங்கதான் படிச்சேன். ஆறாவது சென்னிமலை குமரப்பா செங்குந்தர் பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிட்டாங்க. தினமும் பஸ்ஸில்தான் போவேன். எங்க ஊரில் இருந்து சென்னிமலைக்கு ரெண்டே பஸ்தான். 10-வது வகுப்பு முடிச்சதும் வீட்ல சைக்கிள் வாங்கிக் கொடுத்துட்டாங்க. எனக்குப் படிப்பில் பெரிய ஈடுபாடு கிடையாது. நான் அஞ்சாவது வரைக்கும் கருப்பசாமிங்கிற வாத்தியார்கிட்ட படிச்சேன். இப்ப என் பையன் கருப்பசாமி வாத்தியாரின் மகன் வெங்கட சுப்ரமணியத்துக்கிட்ட படிக்கிறான். என்னா ஒரு ஒற்றுமை! பொழுதுபோக்குனு எடுத்துக்கிட்டா ஊரில் பெருசா ஒண்ணும் இல்லை. பக்கத்தில் இருக்குற விஜயமங்கலம் ரயில்வே ஸ்டேஷன்தான் எங்களுக்குப் பொழுதுபோக்கு. அங்கே உட்கார்ந்து தினமும் எத்தனை ரயில் வருதுனு எண்ணுவோம். தண்டவாளத்தில் காசைவெச்சு காந்தம் தயாரிப்போம். ஆனா, ஒருமுறைகூட காந்தம் வந்தபாடு இல்லை.

என் ஊர்!

20 வருஷத்துக்கு முன்னாடி வியாழக்கிழமை வாரச் சந்தை கூடும். ஊரில் கடை எதுவும் இல்லாததால் அன்னிக்கு மட்டும் சந்தையில் விக்குற வடை, பஜ்ஜி, போண்டா வாங்க கூட்டம் அலைமோதும். இப்போ அந்தச் சந்தை மறைஞ்சு, அங்கே ஆட்டுச் சந்தை போடுறாங்க.

எங்க வீட்டுப் பக்கத்தில் ஒரு அம்மன் கோயில் இருக்கு. கோயிலுக்கு வெளியே ஒருத்தர் புலியைக் குத்திக் கொல்லுற மாதிரி சிலைவெச்சு இருப்பாங்க. அது ஒரு வரலாற்றுச் சின்னம். அந்தக் காலத்துல ஊருக்கு வெளியே இருக்குற மலையில் இருந்து அடிக்கடி ஊருக்குள்ள வந்த புலி ஒண்ணு, எருதுகளை அடிச்சு தின்னுச்சாம். அதை நேருக்கு நேர் நின்னு, வேல் கம்பாலேயே குத்திக் கொன்னார் ஒருத்தர். அவர் நினைவா இந்த சிலையைவெச்சு இருக் காங்க.

நான் ஏழு வருஷம் காச நோயால் கடுமையா பாதிக்கப்பட்டு இருந்தேன். அப்ப எனக்கு ஆறுதலும் தேறுதலும் தந்தது வாய்ப்பாடி மண்தான். காசநோயால் நான் பட்ட அவஸ்தைகளை 'மண்பூதம்’ சிறுகதைத் தொகுப்பில் 'காசம் வாங்கலியோ காசம்’ என்கிற தலைப்பில் சிறுகதையா எழுதி இருப்பேன். ஒருமுறை அந்தக் கதையை எழுதியதோட சரி... அதுக்குப் பிறகு அதை நான் படிக்கவே இல்லை; படிக்கவும் மாட்டேன். ஏன்னா அழுகாச்சி வந்துடும்.

என் ஊர்!

வாய்ப்பாடி, சென்னிமலை, ஊத்துக்குளி, பெருந்துறை, விஜயமங்கலம் ஆகிய ஊர்களைச் சுத்தியே என்னோட கதைக் களம் இருக்கும். எழுத்துங்கிறது புதுசா உருவாக்குற விஷயம் இல்லை. நம்ம மண் சார்ந்த மனிதர்களைப் பார்த்து, பழகி உள்வாங்குற விஷயம்தான் எழுத்தா வெளிப்படுது. மண்ணைப் பத்தியும் நாம பார்த்த மனுஷங்களை பத்தியும் எழுதுற கதைகள்தான் பேசப்படும். என் கதைகளும் அப்படித்தான்!''

- கி.ச.திலீபன்