Published:Updated:

வேடிக்கை பார்ப்பவன் - 18

நா.முத்துக்குமார், ஓவியங்கள்: செந்தில்

வேடிக்கை பார்ப்பவன் - 18

நா.முத்துக்குமார், ஓவியங்கள்: செந்தில்

Published:Updated:
##~##

பின் பனிக் காலம்

''பழத்தைப் பார்த்து பூ கேட்டது,
'இத்தனை நாளாய் எங்கு இருந்தாய்>?’
பூ சொன்னது,
'உன் இதயத்தில்தான் ஒளிந்திருந்தேன்!''’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- தாகூர் (வழி தப்பிய பறவைகள் தொகுப்பில் இருந்து)

வேலையற்றவனின் பகலும், நோயாளியின் இரவும் நீளமானவை என்பதை இவன் உணர்ந்த காலம் அது. தூரத்தில் இருந்து பார்க்கையில் தங்க நிலவாகத் தெரிந்த சினிமாவின் மறு பக்கம் வேறுவிதமாக இருந்தது. மஞ்சள் வண்ணத்தில் தகதகத்த அந்த நிலவின் உள்பக்கம், ஆக்சிஜனற்று, தண்ணீரற்று, பள்ளம் பள்ளமாக இவன் முன் விரிந்தது. இவன் கனவின் கைகளைப் பிடித்துக்கொண்டு அந்தரத்தில் மிதந்தபடி வாய்ப்புகளைத் தேடிக்கொண்டிருந்தான்.

இவன் உதவி இயக்குநராக வேலை செய்ய ஆசைப்பட்ட இயக்குநர்களின் பெயர்களைப் பட்டியலிட்டு, அவர்களது அலுவலகங்களைத் தேடிப் போனான். ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி, கிளியின் கழுத்தில் இருக்கும் இளவரசியின் உயிரைப் போல அவர்களைப் பார்ப்பது அவ்வளவு சிரமமாக இருந்தது. வாயிற்காப்போர்களே வந்தவர்களை வடிகட்டி அனுப்பிக்கொண்டிருந்தார்கள். இப்போது போல் கைபேசி வசதி அன்று இல்லை. ஆதலால், அவர்கள் அடைய முடியாத தூரத்தில் இருந்தார்கள்.

வேடிக்கை பார்ப்பவன் - 18

சினிமாவில் இந்த மாதிரி வாய்ப்பு தேடுகிறவர்களுக்கு எழுதப்படாத விதி ஒன்று இருக்கிறது. பிரபலங்களின் வீட்டு முகவரியைக் கண்டுபிடித்து அதிகாலையில் அங்கு போய் தினமும் நின்று, காரில் வெளியே கிளம்பும்போது அவர்கள் பார்வையில் படும்படி வணக்கம் வைத்தால் என்றாவது ஒருநாள், 'யாருப்பா நீ?’ என்று கேட்டு மின்னல் தரிசனம் தருவார்கள். அந்த ஒற்றை விநாடியில் நம் வாழ்க்கைக் குறிப்பை ஒப்பித்துவிட வேண்டும்.

இவன் பார்க்க நினைத்த இயக்குநர்கள், ஒன்று படப்பிடிப்பில் இருந்தார்கள்; அல்லது இவன் பார்வைக்குப் படாமல் ரகசிய வழியில் வெளியேறிக்கொண்டிருந்தார்கள். வேலை இல்லாதவனின் பகலைச் சுட்டெரிக்கும் வெயில், இவன் வானத்தில் தினமும் எரிந்து கொண்டேயிருந்தது. புத்தகங்களின் நிழலில் ஒதுங்குவது மட்டுமே இவனுக்கு ஆறுதலை அளித்தது.

வேடிக்கை பார்ப்பவன் - 18

கதை, கவிதை, கட்டுரை என்று இவன் எண்ணங்களை எல்லாம் பெரும் பத்திரிகை, சிறு பத்திரிகை என்று பார்க்காமல் எழுதித் தள்ளிக்கொண்டே இருந்தான். பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பது போல, அதற்கான சன்மானங்கள் வந்துகொண்டிருந்தாலும், அந்தப் பூக்களின் வாசம்தான் அடுத்த நாளை நோக்கி இவனை நகர்த்திக்கொண்டிருந்தன.

க்கீரன் குழுமத்தில் இருந்து அப்போது சிறுகதைகளுக்காகவே 'சிறுகதைக் கதிர்’ என்று ஓர் இதழ் தொடங்கியிருந்தார்கள். அதில் துணை ஆசிரியராக சேரும் வாய்ப்பு கிடைத்தது இவனுக்கு. சிறுகதைக் கதிர், இவனுக்கான வானத்தையும் சுதந்திரத்தையும் கொடுத்தது. இவன் சிறகை விரித்துப் பறந்தான். அப்போது அதன் அலுவலகம், ராயப்பேட்டை மணிக்கூண்டின் அருகில் அமீர் மகாலுக்கு அடுத்து மீர் பக்ஷி அலி தெருவில் இருந்தது. கீழ்த் தளத்தில் ராட்சஸ பிரின்டிங் மெஷின்கள், சரம்சரமாக அவை வெளியேற்றும் அச்சடிக்கப்பட்ட காகிதங்கள், கடைசி நேர நெருக்கடிகள் என பத்திரிகை உலகின் பரபரப்புகளுக்கு இவன் பழகிக்கொண்டான். சிறுகதைக் கதிர் மாத இதழ் என்பதால், மாதத்தின் கடைசி நான்கு நாட்கள் அலுவலகத்திலேயே தங்க வேண்டி வரும்.

இவனைப் போலவே எல்லோரும் தேநீரும் சிகரெட்டுமாக இரவை, செய்திகளாக நிரப்பிக்கொண்டிருப்பார்கள். அலுவலகம் வெளியே பூட்டப்பட்டு, இவர்கள் வந்து போக வேறு ஒரு வாசல் இருந்தது.

அப்படிப்பட்ட ஓர் இரவில் நக்கீரனில் வெளிவந்த செய்தியினால் கோபமடைந்த ரௌடிக் கும்பல் ஒன்று, டாடோ சுமோக்களில் வந்து இறங்கி, பூட்டப்பட்டிருந்த அலுவலகத்தைப் பார்த்து மேலும் கொதிப்படைந்து, திரும்பிப் போனதை இவன் மொட்டைமாடி இருட்டில் இருந்து வேடிக்கை பார்த்திருக்கிறான்.

புலனாய்வுப் பத்திரிகையில் பணியாற்றும் அனுபவத்தின் பின்விளைவுகளை இவன் அறிந்த நாட்கள் அவை. எழுத்தாளர், பத்திரிகையாளர் மாலன் எழுதிய 'ஆயுதம்’ என்ற சிறுகதைதான் இவன் ஞாபகத்துக்கு வந்தது. ஒவ்வொரு பத்திரிகையாளனும் படிக்கவேண்டிய கதை அது.

பத்திரிகையாளன் என்பவன் காலத்தின் மனசாட்சி, ஜனநாயகத்தின் நான்கு தூண்களை தாங்கிப் பிடிப்பவன், விருப்பு வெறுப்பற்று நடுநிலையாக உண்மை சொல்பவன். முதுகுக்குப் பின்னால் இரண்டு கண்கள் முளைத்திருப்பதும், அந்தக் கண்கள் வழியே மக்கள் காணாத உண்மையை வெளிக்கொணர்வதும்தான் பத்திரிகையாளனின் பணி. பல்வேறு துறைகளைச் சார்ந்த பிரபலங்களை இவன் பேட்டி எடுத்தான்.

சிறுகதைக் கதிரில் அப்போது 'முதன்முதலாக’ என்று ஒரு புதிய பகுதியைத் தொடங்கியிருந்தார்கள். பல்வேறு துறைகள் சார்ந்த பிரபலங்களிடம் அவர்கள் முதன்முதலாக இயக்கிய காட்சி, பேசிய வசனம், எழுதிய கவிதை... என்று பேட்டி எடுக்க வேண்டும். இவன் திரைத்துறை சார்ந்த பிரபலங்களைப் பேட்டியெடுத்தான்.

அப்படித்தான் அந்த இயக்குநரை இவன் சந்தித்தான். அவரது முதல் படம் மிகப் பெரிய ஹிட்டாகி, இரண்டாவது படத்துக்கான கதை விவாதத்தில் இருந்துகொண்டிருந்த காலம். எழுதப்படாத சினிமாவின் விதியைப் பின்பற்றி தி.நகரில் இருந்த அவரது ஃப்ளாட்டின் வாசலில் அதிகாலை காத்திருந்தான். ஆறரை மணிக்கு அவரது அம்மா வெளியே வந்து இவனைப் பற்றி விசாரித்ததும், வந்த நோக்கத்தைச் சொன்னான். ''தம்பி தூங்கிட்டு இருக்கு. எழுந்ததும் சொல்றேன்'' என்று அன்பாகப் பேசியதைக் கண்டு ஆச்சரியப்பட்டுப் போனான். எந்த ரகசிய வழியிலும் அந்த இயக்குநர் வெளியேறாமல் ஏழேகாலுக்கு இவனை உள்ளே அழைத்தார். இவனது ஒல்லியான தோற்றத்தைப் பார்த்து வயதைக் கேட்ட பின், ''நான் பேட்டி குடுக்கற மனநிலையில் இல்லை. ஆனா, இவ்வளவு சின்னப் பையனா ஆர்வத்தோட கேட்கும்போது தவிர்க்க முடியல. கேளுங்க தம்பி'' என்றார்.

வேடிக்கை பார்ப்பவன் - 18

இவன், ''தாங்கள் முதன்முதலாக இயக்கிய காட்சி எது?'' என்றான். அவர் ''நகைக்கடையில் கதாநாயகன் கொள்ளையடித்த காட்சி'' என்றார். ''ரொம்ப நன்றி சார். நான் கிளம்பறேன்'' என்றான்.

''அவ்வளவுதானா? பேட்டி முடிஞ்சிருச்சா?'' என்றார் ஆச்சரியத்துடன். ''ஆமா சார்... இந்தத் தகவல் மட்டும் போதும் சார்'' என்று சொல்லிவிட்டு இவன் கிளம்ப எத்தனிக்கையில், ''உட்காருங்க தம்பி. டீ சாப்பிட்டுப் போலாம். எந்த ஊரு... என்ன படிச்சிருக்கீங்க?'' என்று அவர் கேட்க, இவன் தன்னைப் பற்றி சொல்லத் தொடங்கினான்.

அந்த நேர்காணல் வந்த இதழை அவரிடம் கொடுக்க மீண்டும் சந்தித்தபோது, படித்துப் பார்த்துவிட்டு, ''ஷார்ட் அண்ட் ஸ்வீட்'' என்று அவர் சொன்னது, இவனை மேகத்தில் மிதக்கவிட்டது. தரை இறங்குவதற்கு முன்பாகவே, ''சார் உங்ககிட்ட அசிஸ்டென்டா வேலை செய்ய ஆசைப்படுறேன்'' என்றான். ''இந்தப் படத்தில் ஏற்கெனவே நிறையப் பேர் இருக்காங்க. அடுத்த படம் ஆரம்பிக்கும்போது வந்து பாருங்க. அது வரைக்கும் ஒரு நண்பனா எப்ப வேணாலும் என்னைச் சந்திக்கலாம்'' என்று அவர் சொல்ல, மீண்டும் இவன் தலைக்கு மேல் மேகங்கள் மிதந்தன. இவனுக்கு இருந்த இயல்பான கூச்சத்தால் அவரைச் சந்திப்பதை இவன் தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்தான்.

அதற்குப் பின் அவரை இவன் சந்தித்தது, அவர் தயாரித்த படத்துக்கு பாடல் எழுதுவதற்காக. அந்தப் படம் ஹிட்டாகி, அடுத்தடுத்து அவர் தயாரித்த படங்களிலும், இயக்கிய படங்களிலும், இவன் பாடல்கள் எழுதினாலும், இன்று வரை, அன்று அவர் தேநீர் கொடுத்துப் பேட்டியளித்த, அந்த மீசை முளைக்காத இளைஞன்தான் இவனென்று அவருக்குத் தெரியாது. அந்த இயக்குநர் இந்திய சினிமாவின் பிரமாண்டத்தை உலக சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர்.

அவர்... இயக்குநர் ஷங்கர்!

- வேடிக்கை பார்க்கலாம்...