Published:Updated:

இந்து டீச்சர்!

இந்து டீச்சர்!

இந்து டீச்சர்!

இந்து டீச்சர்!

Published:Updated:
இந்து டீச்சர்!

னது பால்யப் பருவத்தையும் பள்ளிக்கூட நாட்களையும் நினைத்துக்கொண்டால், பட்டென்று மனதில் படர்வது எங்கள் இந்து டீச்சரின் இனிய முகம்தான். அதோடு மல்லிப் பூவும் சந்தன சோப்பும் சேர்ந்த அவரது பிரத்யேக நறுமணமும்தான்.

பனி படர்ந்த ஒரு காலைப் பொழுதில், பார்வையில் கனிவும் பாதத்தில் கொலுசுமாக இந்து டீச்சர் எங்கள் வகுப்பில் நுழைந்த அந்த ஸ்தம்பித்த விநாடியிலேயே எனக்கும், ரகுவுக்கும், பட்டாபிக்கும் புரிந்துபோய்விட்டது - நாங்கள் படுமோசமாகக் காதல்வயப்பட்டுவிட்டோம்.

##~##

அப்போது எனக்கு வயது பன்னிரண்டு. ரகுவுக்குப் பத்தோ பதினொன்றோ. பட்டாபி கொஞ்சம் பெரியவன். ஐந்தாம் கிளாஸில் நாங்கள் மூவரும் ஒரு செட். பள்ளிக்கூடத்தில் மட்டுமல்ல, வெளியிலும்தான். அவரவர் வீட்டில் தூங்கும் நேரம் தவிர, மற்றபடி எங்கும், எதற்கும், எப்போதும் நாங்கள் மூவரும் ஒன்று.

வகுப்பில் நுழைந்த அந்த விநாடியில், இந்து டீச்சரின் பார்வை முதன்முதலில் யார் மீது பதிந்தது என்ற விஷயத்தில் மட்டும் நீண்ட நெடுங்காலமாக எங்களிடையே பலத்த கருத்து வேறுபாடு இருந்தது.

கடுமையான சர்ச்சைக்குப் பின் பரஸ்பரம் நட்பு கருதி 'மூவரையும் ஒரே சமயத்தில்தான் பார்த்தார்’ என்று ஒப்புக்கொண்டபோதும், தனித்தனியே ரகசியமாக 'தன்னைத்தான்’ என்று ஒவ்வொருவனும் எண்ணிக் கொண்டோம்.

பக்கத்து டவுனில் பன்னிரண்டாம் கிளாஸ் வரை படித்துவிட்டு, எங்கள் பட்டிக்காட்டுப் பள்ளிக்கூடத்துக்குப் பாடம் சொல்லிக்கொடுக்க வந்தார் இந்து டீச்சர். மிஞ்சிப்போனால் அப்போது அவருக்குப் பதினெட்டு அல்லது பத்தொன்பது வயதுதான் இருந்திருக்க வேண்டும். மொத்துமொத்தென்று முறுகித் திரண்ட எங்கள் கிராமத்துத் தடிச்சிகளைப் பார்த்துப் பழகிப்போன கண்களுக்கு, இந்து டீச்சர் சற்று ஒல்லியாக, உயரமாக, சிவப்பாக, ரொம்ப அழகாக இருந்தார்கள். சிரிக்கும்போது மட்டும் தெரிந்து மறையும் தெற்றுப் பல் இன்னும் அழகாக இருக்கும். முருகன் கோயில் மூலஸ்தானத்தின் இருளில் இருந்து முழுவதுமாகப் பிய்த்துக்கொண்டு வெளியே கேட்கும் வெண்கல மணிச் சத்தம் மாதிரியான அவருடைய சன்னக் குரல் எங்கள் செவிகளில் தேனாய், தித்திப்பாய், தெவிட்டாத தெம்மாங்காய் மெள்ள இறங்கும்.

இந்து டீச்சர்!

ஜனவரி 26-ம் தேதியன்று அவர் ஜனகணமன பாடியபோது, பள்ளிக்கூடத்துக்கே அந்தப் பாடல் மனப்பாடமாகிவிட்டது. எங்கள் பெரிய வாத்தியாருக்குக்கூட கண்களில் நீர் நிறைந்தது. தூசி விழுந்ததாகப் பாவலா பண்ணித் துடைத்துக்கொண்டார். இந்து டீச்சர் லேசாகச் சிரித்துக்கொண்டதையும் அன்றுதான் பார்த்தோம்.

இன்று வரை நினைவில் நிற்கும் பாரதி பாடல்களும், தேவாரம், திருப்புகழ் போன்றவையும் எங்களுக்கு இந்து டீச்சர் கற்றுக்கொடுத்தவைதான்.

வர் பாடம் சொல்லிக்கொடுப்பதே தனி. எப்போது பாடம் சொல்லிக்கொடுக்கிறார், எப்போது எங்களுடன் சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருக்கிறார் என்று பிரித்தறிய முடியாது. வகுப்புகள் இனிமையும் சிரிப்பும் கும்மாளமுமாகத்தான் இருக்கும். ஆனால், பரீட்சைக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே பாடங்கள் எல்லாம் முடிந்துவிடும்.

எங்கள் மூவரையும் ''என்னப்பா திருமூர்த்திகளா...'' என்றுதான் செல்லமாக அழைப்பார். என் மீது மட்டும் மற்றவன்களைவிட ஓர் இத்தனூண்டு பிரியம் அதிகம். மற்றவன்களுக்கு இது தெரியும். உள்ளே ரகசியமான பொறாமையும்கூட. ஆனால், என்றும் ஏற்றுக்கொண்டது இல்லை.

ள்ளிக்கூட பிக்னிக்குக்காக ஆற்றைக் கடந்து, அக்கரைக்குப் போக நேர்ந்த அன்று என் கையைப் பற்றிக்கொண்டுதான் படகில் ஏறினார்கள் இந்து டீச்சர். துடுப்பு தவறாக விழுந்து என் மீது தெறித்த ஆற்று நீரை 'ஐயையோ’ என்று சிரித்தபடி தன் முந்தானையால் துடைத்துவிட்டார். எனக்கு ரோமாஞ்சனமாகிவிட்டது. பட்டாபியும் ரகுவும் மதியம் வரை என்னுடன் பேசவில்லை. அது வேறு ரொம்பவும் திருப்தியாக இருந்தது.

சாயந்தரம் படகில் திரும்பும்போது களைப்பு மிகுதியால் கண்ணயர்வது போல டீச்சரின் தோளில் மெதுவாகச் சாய்ந்துகொண்டேன். ''இப்படிப் படுத்துக்க'' என்று என்னைத் தன் மடியில் படுக்க வைத்துக்கொண்டார்கள். அவ்வளவுதான், பட்டாபியும் ரகுவும் செத்தான்கள். நான்கைந்து நாட்கள் முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டான்கள். ''போங்கடா பொட்டப் பசங்களா'' என்று விட்டு விட்டேன். எப்படி, எப்போது சமரசமானதென்று ஞாபகம் இல்லை.

குப்பில் நோட்டுப் புஸ்தகங்கள் திருத்துகையில், சம்பந்தப்பட்ட மாணவனைப் பக்கத்திலேயே நிற்கவைத்து அவனிடம் பேசிக்கொண்டே, பிழைகளைச் சுட்டிக்காண்பித்துத் திருத்தங்கள் கூறியபடி செயல்படுவது டீச்சரது வழக்கம்.

என்னைப் பக்கத்தில் நிற்கவைக்கும் நேரங்களில், டெஸ்க்குக்கு அடியில் அவருக்குத் தெரியாமலே அவரது புடைவையின் ஏதோ ஒரு நுனியை நான் மெதுவாகப் பிடித்தபடி நிற்பேன். உட்கார்ந்திருக்கும் அத்தனை மாணவர்களுக்கும் இது கண்ணில்படும். பட்டாபியும் ரகுவும் பதறுவார்கள். 'முடிந்தால் செய்து பாருங்கள்’ என்று நான் சவால் வேறு விட்டிருந்தேன். பட்டாபி ஒரு தடவை முயற்சி செய்தான். டீச்சர் பார்த்துவிட்டார். ''என்ன பட்டாபி?'' என்ற அவர் கேள்விக்கு ''புடைவையில் ஏதோ பூச்சி டீச்சர்...'' என்று பொய் சொல்லித் தப்பித்துக்கொண்டான்.

இந்து டீச்சர்!

விடுதலை நாட்களின் வெப்பம் மிகுந்த ஒரு சாயந்தர வேளையில் ரகுவையும் பட்டாபியையும் எப்படியோ கழற்றிவிட்டுவிட்டு, அவர்களிடம் சொல்லிக்கொள்ளாமல் டீச்சர் வீட்டுக்குத் தனியாகப் போகிறேன். வீட்டில் யாரும் இல்லைபோல் தோன்றுகிறது. வாசலில், முன்கட்டில், கூடத்தில்... ஆள் நடமாட்டம் இல்லை. படுக்கை அறைப் பக்கம் மெதுவாக எட்டிப் பார்க்கிறேன்.

அங்கு கட்டிலில் ஜன்னல் வழியே தெரிந்த ஏகாந்தவெளியை நோக்கியபடி இந்து டீச்சர்.

'கூப்பிடலாமா... வேண்டாமா?’ என்று நான் தீர்மானமற்று நின்ற அந்தத் திகைப்பான விநாடிகளில் அள்ளிக்கட்டிய கொண்டையின் அடிப்பகுதியில் அமைந்து படிந்த தோள்களின் மேல் கழுத்தின் மையத்தில் விழுந்து குறுகுறுத்த என் கூரிய பார்வையின் குவிந்த ஸ்பரிசத்தில் பட்டென்று திரும்பிப் பார்க்கிறார் இந்து டீச்சர்.

எதிர்பாராத அந்த இடர்கொண்ட வேளையில், என்னை நான் சுதாரித்துக்கொள்ளும் முன் டீச்சரை வெறுமனே பார்த்து அசட்டுச் சிரிப்புடன் பேச முயலுகையில்...

''வா பாலு... எப்ப வந்தே?'' என்று நிதானமாக எழுந்திருக்கையில், கண்களில் வழிந்திருந்த நீரை அவர் துடைத்துக் கொள்கிறார்.

ஸ்டார்ச் போட்ட காட்டன் புடைவையில் மகா பெரிய மனுஷியாகத் தெரியும் அவர். பாவாடை தாவணியில் பட்டென்று எங்கள் வயசுக்காரியே போல்... அடேயப்பா, எவ்வளவு பெரிய மாற்றம்!

கூடத்தில் உட்காரச் சொல்லி, காபி கலந்து கொடுத்து அன்புடன் விசாரிக்கிறார். சிரிப்பில் சோகம் கலந்திருக்கிறது. ''எதுக்கு டீச்சர் அழுதுக்கிட்டிருந்தீங்க?'' என்ற கேள்வி, பல தடவை என் வாய் வரை வந்து, கேட்கப்படாமலே கரைந்துபோகிறது.

இனிமையும் மென்மையும் கலந்த அந்த இதயத்தில் எண்ணி அழும்படி அப்படி என்ன துக்கம்? இன்று வரை எனக்குத் தெரியாத ஒன்று.

இதெல்லாம் நடந்து ஏறத்தாழ முப்பது முப்பத்திரண்டு வருடங்கள் ஓடிவிட்டன. இருந்தும், 'பொய்யாய் பழங்கதையாய் மெள்ளப் போக’ மறுக்கும் நினைவுகள் மட்டும் நெஞ்சின் ஆழத்திலிருந்து - மூச்சுவிட நீர் மட்டத்துக்கு வரும் ஆமையாக - அவ்வப்போது மேல் வந்து, மென்மை தந்து...

பின்குறிப்பு:

76-ன் பிற்பகுதியில் இந்து டீச்சர் இறந்துவிட்ட செய்தி, விவசாயத்தைப் பார்த்துக்கொண்டு ஊரோடு தங்கிவிட்ட பட்டாபி மூலம் தெரிந்தது.

77-ல், நான் இயக்கிய முதல் தமிழ்ப் படமான 'அழியாத கோலங்களில்’ என் இந்து டீச்சரை இறவாத பாத்திரமாக்கி நிரந்தரப்படுத்திக்கொண்டேன்.