Published:Updated:

என் ஊர்!

சிந்துபாத் கையில் லைலா கிடைப்பாளா?

என் ஊர்!

சிந்துபாத் கையில் லைலா கிடைப்பாளா?

Published:Updated:
##~##

ன் ஊர் தேவநல்லூர் பற்றி இங்கே மனம் திறக்கிறார் கவிஞர் நெல்லை ஜெயந்தா...

''திருநெல்வேலிக்குத் தெற்கே மேலச்செவல் சிங்கிகுளம் வழியாகக் களக்காடு செல்லும் சாலையில் குறிஞ்சியும் மருதமும் சேர்ந்த குட்டிப் பிரதேசம்தான் தேவநல்லூர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி களக்காட்டுக்கு மேலே கால் பதித்து, தருவையைத் தாண்டி, தாமிரபரணியோடு கலக்கும் பச்சை ஆறுதான் எங்கள் மண்ணையும் மனசையும் ஈரமாகவே

என் ஊர்!

வைத்து இருக்கும் எப்போதும். எங்கள் ஊருக்குள் நுழையும்போது பாதையை வளைத்துக்ªகாண்டு பாயும் பச்சையாறு மேலூர் - தென்கரை - கீழூர் என்று ஆயுத எழுத்து வடிவில் ஆக்கிவிட்டது தேவநல்லூரை. தென்கரையில் தெற்குத் தெருவில் இருக்கிறது எங்கள் வீடு.

சோமநாத சுவாமி கோயில் ஊரையே அழகுபடுத்தும் உன்னத ஆலயம். 1925-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்து நடுநிலைப் பள்ளி எனக்கு எழுத்தறிவித்த இறைவன். நான் ஆறாம் வகுப்பை அடைந்தபோது பள்ளிக்கு வந்த நம்பி சாரும் விக்டர் சாரும் எங்களுக்குத் திடீர் என்று கிடைத்த திருப்புமுனைகள். தமிழிடம் என்னை நான் இழக்கத் தொடங்கியதே இங்குதான்.

அந்தக் கால அக்டோபர்- நவம்பர் அடைமழைகளில் பெருக்கெடுக்கும் பச்சையாறு முப்புறமும் சூழ்ந்து தென் கரையையே ஒரு தீபகற்பமாக்கிவிடும். இந்து நடுநிலைப் பள்ளியே இக்கரையிலும் அக்கரையிலுமாக இரண்டாகப் பிரிந்து நடக்கும். வெள்ளம் வடியும் வரை மேலூரில் இருந்து தென்கரைக்கு வரவேண்டிய பாலும் வராது. தபாலும் வராது.

60-களின் இறுதியில் நடந்த முண்டத் தேவர் கொலை வழக்கு, மாவட்டத்தின் தலைப்புச் செய்திகளில் இடம் பெறவைத்தது எங்கள் ஊரை.

முண்டத் தேவர் வெட்டுப்பட்ட இடத்தில் சிந்திய ரத்தம் தோய்ந்த மண்ணை கரைத்துக் குடித்தால், தீராத வியாதியும் தீர்வதாகப் பரவிய செய்தி, சுத்துபட்டு கிராமங்களை மட்டுமல்ல... அக்கம்பக்க மாவட்டங்களையும் திருப்பிவிட்டது தேவநல்லூரை நோக்கி. செவ்வாய், வெள்ளிதோறும் சிறப்புப் பேருந்துகள், திரண்ட கூட்டத்துக்காக முளைத்த திடீர் கடைகள், மாதங்கள் சில கடந்தபின் மறையத் தொடங்கிய நம்பிக்கையால் குறையத் தொடங்கியது கூட்டம்.

என் ஊர்!

எங்கள் கிராமத்தில் தீபாவளியை விடவும் தித்திப்பான பண்டிகை பொங்கல்தான். வீட்டுக்கு வெள்ளை அடிப்பதிலும் தோட்டங்களைச் சுத்தப்படுத்துவதிலும் ஆர்வமாகிவிடுவார்கள் அனைவரும். பொங்கல் இடுவதற்கும் வண்ணப்பொடிகளில் கோலம் வரைவதற்கு என தெரு வாசலை தயார் செய்வது தினசரிப் பணி ஆகிவிடும்.

சாணத்தால் மெருகேறிய வாசலில் பொங்கலுக்கு முதல் நாள் நள்ளிரவு வரை வண்ணக் கோலங்களை வளைத்து வரையும் அம்மா, ஒவ்வொரு வீட்டுக் கோலத்தையும் ஓடி ஓடிப் பார்த்து உறக்கம் தொலைக்கிற நாங்கள், பொங்கல் படி வாங்க வருகிறவர்களுக்காக ஸ்டேட் பேங்க் சொக்கர் அத்தானிடம் மாற்றிவைத்து இருக்கும் புதிய ரூபாய் நோட்டுக்களை அடிக்கடி எண்ணிப் பார்க்கும் அப்பா... இப்படி கரும்பைப் போலவே எத்தனையோ வளையங்கள் எனக்குள்ளும் எங்களூர் பொங்கலைப் பற்றி.

இடைத் தேர்தல் நடக்கும் தொகுதிகளைப்போல ஏராளமான வெளியூர்க்காரங்களை எங்களூரில் பார்க்கலாம். அனைவரும் சிறுவர்கள். பல்வேறு ஊர்களில் இருந்து உறவினர்கள் வீட்டில் கோடை விடுமுறையில் வந்து குவிந்துவிடுவார்கள். கோலிக்குண்டு, பம்பரம், புழுங்கல் பாறைக்கு அருகில் ஆற்று மணலில் நடக்கும் கபடி விளையாட்டு, பெரியவர்கள் திட்டத் திட்ட தெருக்களில் நடக்கும் குச்சிக் கம்பு, இடையிடையே வலுக்கும் எம்.ஜி.ஆர்-சிவாஜி ரசிகர் மோதல், 'சிந்துபாத் கையில் நாளை லைலா கிடைப்பாளா மாட்டாளா?’ சர்ச்சை... இப்படிக் கழியும் கோடை விடுமுறை. சினிமாவைவிட எங்கள் ஊர்க்காரர்களின் ஈர்ப்பு அம்மன் கோயில் கொடை விழாக்களில் நடக்கும் கரகாட்டம்தான். இடைகால் சங்கரன், சிங்கிகுளம் கணேசன் என பல குழுவினர்களும் வருடந்தோறும் வந்து வாசிக்கும் நையாண்டி மேளத்துக்குக் கொடை முடிந்து பத்து நாளாகியும் பலர் ஆடிக்கொண்டு இருப்பார்கள்.

என் ஊர்!

இப்போதும் வருடம் ஒருமுறை தேடித் தேடி ஓடிவிடுகிறேன் தேவநல்லூரை நோக்கி. எங்களுக்கு உறங்கும் தொட்டிலாகவும் உண்ணும் வட்டிலாகவும் இருந்த பச்சையாறு, இன்று மணலுக்குப் பதில் முட்செடிகளைத்தான் பரப்பி இருக்கிறது. நீளும் அந்த உடை மரத்தின் முட்கள் நினைவுபடுத்துவது எல்லாம் மணல் கொள்ளையரின் விரல்களைத்தான். அழுவதற்குக்கூட கண்ணீர் இல்லாமல் ஆறு வற்றிக்கிடக்கிறது. கூட வரும் என் குழந்தைகள் அறியாமல் நான் கண்களைத் துடைத்தபடி கடக்கிறேன் ஒவ்வொரு முறையும்!'

-படங்கள்:வீ.நாகமணி, எல்.ராஜேந்திரன்