என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - திருச்சி
Published:Updated:

கருப்பையா ரிட்டர்ன்ஸ்!

கருப்பையா ரிட்டர்ன்ஸ்!

##~##

13 வயதில் காணாமல் போன சிறுவன், 84 வயதில் 'தாத்தா’வாகத் திரும்பக் கிடைத்தால்? அப்படி ஓர் அதிசயம் காரைக்குடியில் நடந்து இருக்கிறது!

 இளையான்குடி அருகில் இருக்கிறது ஆரம்பக்கோட்டை. இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா. 13 வயது சிறுவனாக இருக்கும்போதே எப்படியோ காணாமல் போய்விட்டார். காரைக்குடியில் திக்குத் தெரியாமல் சுற்றித் திரிந்தவருக்கு டீக்கடைக்காரர்கள்தான் அடைக்கலம் கொடுத்து இருக்கிறார்கள். டீ கிளாஸ் கழுவி, வயிற்றுப்பாட்டுக்கு வழி தேடிக் கொண்டவருக்கு தனது சொந்த ஊர் எது என்றுகூடத் தெரியவில்லை. வருடங்கள் ஓடியதில், காரைக்குடி ஏரியாவில் மாங்காய், தேங்காய் குத்தகை எடுத்து

கருப்பையா ரிட்டர்ன்ஸ்!

சம்பாதித்தவர், காசு காலியானதும் அருகில் இருந்த விளாரிக்காட்டுக்கு வந்து சேர்ந்தார்.

அந்தக் கிராம மக்கள் கொடுத்ததைச் சாப்பிட்டுக்கொண்டு,  ஊர் பள்ளிக்கூடத்தின் தாழ்வாரத்தில் முடங்கினார். அந்த நேரத்தில்தான் அவரைச் சந்தித்தார் காரைக்குடி அழகப்பாபுரம் லயன்ஸ் கிளப்பின் பி.ஆர்.ஓ-வான ராமநாதன்.

'அப்புறம் என்ன நடந்தது?’ அவரே பேசுகிறார். ''ஒரு வருஷத்துக்கு முந்தி கண் சிகிச்சை முகாமுக்காக விளாரிக்காடு ஸ்கூலுக்குச் சென்று இருந்தோம். அப்ப, யதார்த்தமா கருப்பையாவைப் பாத்துட்டு, 'ஐயா கண் ஆபரேஷன் பண்ணிக்கிடுதீங்களா’னு கேட்டேன். 'அதெல்லாம் வேணாம் தம்பி... என்னையப் பார்க்க, வைக்க ஆள் இல்லை’னு சொன்னாரு. முகாம் முடிஞ்சு கௌம்புறப்ப மழை பிடிச்சிக்கிருச்சு. ஒதுங்க இடம் இல்லாம, நனைஞ்சு கிட்டே இருந்தாரு. அவரைப் பத்தி விசாரிச்சா, 'அநாதை’னு சொன்னாங்க. அவரை என்கூடவே கூட்டிட்டு வந்தேன். மெள்ள பேச்சுக் கொடுத்து அவர் பூர்வீகத்தை விசாரிச்சேன். குழப்பமா பதில் சொன்னார். அவரு சொன்ன தகவல்களை வெச்சு இளையான்குடி ஏரியாவில் நண்பர்கள்

மூலமா 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விசாரிச்சு ஒருவழியா ஊரைக் கண்டுபிடிச்சேன். 'கருப்பையாவுக்கு ரெண்டு தம்பி, ஒரு தங்கச்சி. ஒரு தம்பி ராமையா அந்தமான்ல இருக்காரு. இன்னொரு தம்பி அய்யாக்கண்ணு எங்க இருக்காருனு தெரியலை. தங்கச்சி செத்துப் போச்சு’னு சொன்னாங்க. அந்தமான்ல மிலிட்டரியில் இருக்கிற என் நண்பன் மூலமா ராமையாவை தேடுனப்ப, சமீபத்தில்தான் அவரு சொந்த ஊருக்கே திரும்பி வந்துட்டாருனு தகவல் கிடைச்சுது. தகவல் சொல்லிவிட்டதும் ராமையா மனைவி புஷ்பவள்ளியும் தங்கச்சி மகன் ரத்தினமும் பாசத்தோட ஓடி வந்தாங்க.

கருப்பையா ரிட்டர்ன்ஸ்!

'இன்னாரு வந்திருக்காங்க’னு சொன்னதும் சந்தோஷத்தில் கண்ணீர்விட்டாரு கருப்பையா. ஊரில் யார் யாரோ பெயரையோ எல்லாம் சொல்லி 'அவங்கள்லாம் எப்படி இருக்காங்க?’னு விசாரிச்சாரு. அதில் சிலர் இறந்துட்டாங்கனு சொன்னதும் சின்னப் புள்ள மாதிரி அழ ஆரம்பிச்சிட்டாரு. ஒருவழியா அவரைச் சமாதானப்படுத்தி காரில் ஏறச் சொன்னா, போகவே மாட்டேனு அடம்பிடிச்சாரு.  'கோயிலுக்குத்தான் கூட்டிட்டுப் போறாங்க’னு சொல்லி அனுப்பி வெச்சேன்!'' என்கிறார் ராமநாதன்.

கருப்பையா ரிட்டர்ன்ஸ்!

கருப்பையாவின் அண்ணி புஷ்பவள்ளி, ''இவுக எனக்குத் தாய் மாமாதான். இவரு காணாமல் போனப்ப நான் பொறக்கவே இல்லை.  இவர எல்லா இடத்திலேயும் தேடிப் பார்த்துட்டு, புள்ளை எங்கேயோ கெணத்தில் விழுந்திடுச்சுனு நினைச்சு, காரியம்லாம் பண்ணிட்டாங்க. அச்சுல எங்க வீட்டுக்காரரு மாதிரியே இருந்ததால் இப்ப சுளுவா கண்டுக்கிட்டோம்.  இவுக அண்ணனால வீட்டு வாசலுக்கு நடக்குறதே சிரமம். அதனாலதான் நான் ஓடியாந்தேன். இனிமே இவுகளை நாங்க பத்திரமாப் பாத்துக்குவோம்!'' என்கிறார் பூரிப்பும் சந்தோஷமுமாக!                                  

- குள.சண்முகசுந்தரம், படங்கள்: எஸ்.சாய் தர்மராஜ்