Published:Updated:

மாமுநைனார்புரத்தில் ஒன்பதாம் கிளாஸ் பிரதமர்!

மாமுநைனார்புரத்தில் ஒன்பதாம் கிளாஸ் பிரதமர்!

##~##

குழந்தைகள் நாடாளுமன்றம் தெரியும்தானே? ஆளுமைப் பண்பு, தலைமைப் பண்பு, உதவும் குணம் முதலான பல பண்புகளை வளர்க்கும் விதத்தில் கிராமங்களில் தொடங்கப்பட்டதுதான் குழந்தைகள் நாடாளுமன்றம். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே  மாமுநைனார்புரம் கிராமத்துக் குழந்தைகள் நடத்தும் நாடாளுமன்றம் பெரும் பாராட்டுகளோடு நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. பிரதமர், கல்வி, பொதுப் பணித் துறை, சுகாதாரம் உள்ளிட்ட ஆறு அமைச்சர்கள் உள்பட மொத்தம் 30 உறுப்பினர்களைக்கொண்டது இந்தக் கிராமத்துப் பள்ளி மாணவ, மாணவியர்கொண்ட நாடாளுமன்றம். இவர்களின் கூட்டு முயற்சியால் இந்தக் கிராமத்துக்கு 30 மின் கம்பங்கள் கிடைத்து இருக்கிறது.  

''ஒவ்வொரு மாசமும் 17-ம் தேதி சாயங்காலம் ஊர் கம்மாக்கரை மரத்து நிழல்ல அமைச்சர்கள், உறுப்பினர்கள் எல்லாம் ஒண்ணாசேர்ந்து கூட்டம் போடுவோம். அயன் விருசம்பட்டி ஊராட்சியில் இருந்து, எங்க மாமுநையினார்புரம் கிராமத்துக்கு மூணு கி.மீ. தொலைவு இருக்கும். பேருந்து வசதிகூட கிடையாது. ஆத்திர அவசரத்துக்குக்கூட 3 கி.மீ.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மாமுநைனார்புரத்தில் ஒன்பதாம் கிளாஸ் பிரதமர்!

நடந்துதான் போகணும். அந்த வழி முழுக்கக்  கும்மிருட்டா இருக்கும். டார்ச் லைட்டோ, லாந்தர் விளக்கோ அடிச்சுக்கிட்டேதான் நடக்கணும். வழி நெடுக பூரான், பாம்புனு பூச்சி பட்டைகளா கிடக்கும். பாம்பு கடிச்சு நிறையப் பேரு செத்துப் போயிருக்காங்க. இதனால சாயங்காலம் 6 மணிக்கு மேல யாருமே வெளியே போக மாட்டோம். 60 வருஷமா இதே நிலைமைதான். மின் விளக்கு வசதிக்காக, போன வருஷம் மார்ச் மாதம் 17-ம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேத்தி முதல் மனுவை ஊராட்சி மன்றத் தலைவர்கிட்ட கொடுத்தோம். ஊரக வளர்ச்சி இயக்குநர், எம்.எல்.ஏ., மாவட்ட ஆட்சியர்னு நாங்க மனு கொடுக்காத ஆளே இல்லை. ஸ்கூலுக்கு லீவு போட்டு மொத்தமாப் போயி மனு கொடுப்போம். தொடர்ந்து அலைஞ்சதுக்கு நல்ல பலன் கிடைச்சுடுச்சு. இப்போ 30 லைட் போஸ்ட் நட்டு இருக்காங்க!''  என்கிறார் நாடாளுமன்றப் பிரதமரான 9-ம் வகுப்பு மாணவி முத்துமாரி.

உள்துறை அமைச்சர் ஆனந்தராஜ், ''எங்க கிராமத்துக்கு மொத்தமே ரெண்டு பைப்தான் இருந்துச்சு. இப்போ தெருவுக்கு ஒரு பைப் இருக்குது. ஊரில் இருக்குற குப்பை கொட்டுற இடங்களை நல்லா சுத்தம் செஞ்சு அதில் மரக் கன்னுகளை நட்டு தண்ணீர் ஊத்தி பராமரிச்சுட்டு வர்றோம்!'' என்றார்.

மாமுநைனார்புரத்தில் ஒன்பதாம் கிளாஸ் பிரதமர்!

இதைப்போல பள்ளி மாணவர்களுக்காவும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அறிவை வளர்க்கும் விதமாக 'நூலகப் பெட்டி’ செய்துவைத்து இருக்கிறார்கள். அதில் இருக்கும் 85 புத்தகங்களில் 15 புத்தகங்களை முழுக்கப் படித்து முடித்தால் சிறப்புப் பரிசு கொடுக்கிறார்கள்.

'வேம்பு’ மக்கள் சக்தி இயக்கத்தின் இயக்குநர் ரிக்கோ கூறுகையில், ''எவ்வாறு பிரச்னைகளை எதிர்கொள்வது, ஊருக்குத் தேவையான வசதிகளை செய்வது, பிறருக்கு உதவுவது என்று படிக்கின்ற வயதிலேயே கற்றுக் கொடுத்து நல்ல குடிமகனாக உருவாக்குவதுதான் நாடாளுமன்றத்தின் நோக்கம். 'வேம்பு’ இயக்கத்தின் கீழ் 60 கிராமங்களில் செயல்படும் குழந்தைகள் நாடாளுமன்றத்தில் இந்தக் கிராம நாடாளுமன்றம் மிகச்சிறப்பாகச் செயல்படுவதோடு, ஓர் ஊருக்கு மின் கம்ப வசதியையே ஏற்படுத்தி உள்ளது!'' என்கிறார் ஆச்சர்யத்தோடு!

- இ.கார்த்திகேயன், படங்கள்: ஏ.சிதம்பரம்