தூரிகை தொட்டுவிடும் தூரம்தான்!
##~## |
சிங்கப்பூர், தாய்லாந்து உட்பட பல இடங்களில் ஓவியக் கண்காட்சிகளில் பங்கேற்பு, 50-க்கும் மேற்பட்ட கவிதைப் புத்தகங்களின் முகப்பு அட்டைகளில் இடம்பெற்ற ஓவியங்கள், பழங்கால ஓவியங்கள் குறித்து மாணவர்களிடம் வகுப்பு எடுப்பது எனப் பல பெருமைகளுக்குச் சொந்தக்காரர் புதுவை ஓவியர் அன்பழகன். ஆனால், இவர் முறைப்படி எந்த ஓவியக் கல்லூரியிலும் படித்தது இல்லை என்பதுதான் இங்கு ஆச்சர்யமான செய்தி!
''சின்ன வயதில் இருந்தே எதையாவது வரைந்து கொண்டேதான் இருப்பேன். முதல் வகுப்புப் படிக்கும் போது பெருங்காயப் பெட்டியில் இருந்த ரயிலின் படத்தைப் பார்த்துப் பார்த்து வரைந்த ஞாபகம் இப் போதும் இருக்கிறது. ஆனால், சரியான வழிகாட்டுதல் இல்லாததால் நான் வரையும் ஓவியங்கள் முறையாக இருக்காது.

அப்போது அப்பாவின் நண்பரான ஓவியர் இபேர் 'உனக்கு ஆர்வம் இருக்கிறது. நான் உனக்குக் கற்றுத் தருகிறேன்’ என்றார். அவரிடம் ஓவியத்தின் அடிப்படைகளைக் கற்றுக்கொண்டேன். அதன் பிறகு சென்னையில் ஆசிரியப் பயிற்சி முடித்து, இளங்கோ அடிகள் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணியில் சேர்ந்தேன். வேலை நேரம் போக சினிமா தொடர்பான பேனர்களை வரைந்து கொடுப்பது வழக்கம். அப்படி ஒருநாள் நான் வரைந்துகொண்டு இருக்கும்போது அந்த வழியாகச் சென்ற பாரதியார் பல்கலைக்கூடத்தின் மாணவர் கோபால், 'மிகவும் நன்றாக வரைகிறீர்களே, நீங்கள் ஏன்

பெயின்டிங் பண்ணக் கூடாது?’ என்று கேட்டவுடன் எனக்கு ஒரே குழப்பம்! 'ஏன் நான் இப்போது பெயின்டிங்தானே வரைகிறேன்?’ என்று கேட்டேன். பிறகு அவர், தான் வரைந்த ஓவியங்களைக் காட்டினார். அப்போதுதான் ஓவியத்தின் பன்முகப் பரிமாணங்களை அறியும் ஆர்வம் அதிகரித்தது. நண்பர்கள் மூலமாகப் புத்தகங்களை வாங்கி அதில் வரும் ஓவியங்களைப் பார்த்து வரையத் தொடங்கினேன். ஓவியர்கள் ஆதிமூலம், மாணிக் கம், பாரதியார் பல்கலைக்கூடத்தின் முதல்வர் சிற்பி ஜெயராமன் போன்றவர் களிடம் கிடைத்த அறிமுகத்தால் எனது ஆர்வம் நுண்கலைப் பக்கம் திரும்பியது!'' என்பவர் பழங்கால பாறை ஓவியம், குகை ஓவியம் போன்ற வற்றின் வரலாறுகளைப் படித்து மாணவர்களுக்கு வகுப்பு எடுத்து வருகிறார்.
''என் பெரும்பாலான ஓவியங்களை வில், அம்புகளோடு இருக்கும் ஆண்களும் பெண்களும் அலங்கரிப்பார்கள். துரோணரை மானசீகக் குருவாகக்கொண்ட ஏகலைவனின் குறியீடுகள்தான் அவை!'' என்பவர், ''நவீன ஓவியங்கள் மக்களிடம் இருந்து அறியப்படாமலே அந்நியப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, 'மண்ணை நோக்கி’ என்ற தலைப்பில் என் ஓவியங்களை கிராமங்களில் கண்காட்சியாகவைக்கிறேன். மேலும் என் நண்பர்களுடன் இணைந்து ஆரம்பித்த 'புதுவை புதிய தூரிகைகள்’ அமைப்பின் மூலம் நண்பர்களின் ஓவியங்களையும் கிராமங்களில் கண்காட்சியாக வைத்து இருக்கிறோம்!'' என்கிறார்.

வரலாற்றை அறிந்துகொள்ளல், ஓவியத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தல், இளம் ஓவியர்களை ஊக்குவித்தல் என அன்பழகனின் பணிகளே அழகான ஓவியம்போல ஜொலிக்கிறது!
- ஜெ.முருகன்