Published:Updated:

“சிவாஜியே பாராட்டிய நடிகன் நான்!”

“சிவாஜியே பாராட்டிய நடிகன் நான்!”
News
“சிவாஜியே பாராட்டிய நடிகன் நான்!”

விகடன் மேடை - கே.எஸ்.ரவிகுமார் பதில்கள் வாசகர் கேள்விகள்

ஆர்.சீனிவாசன், குளித்தலை.

''இயக்குநராக 25 வருடங்களை நிறைவு செய்துவிட்டீர்கள். உங்கள் சக்சஸ் ஃபார்முலாவை மூன்று வார்த்தைகளில் சொல்லுங்கள் பார்ப்போம்!''

''சின்சியாரிட்டி, டெடிகேஷன், கான்சன்ட்ரேஷன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மூணு வார்த்தையில கேட்டதால இவ்வளவு சொன்னேன். இன்னும்கூட சிம்பிளா சொல்லலாம்... 'கடும் உழைப்பு!’ ''

சீனிவாச கிருஷ்ணன், ஃபேஸ்புக்.

''கமல், ரஜினி இருவரையும் இணைந்து நடிக்கவைத்து இயக்கும் திறமைகொண்ட இயக்குநர்களில் நீங்களும் ஒருவர். இதுகுறித்து இருவரிடமும் ஏதேனும் டிஸ்கஸ் பண்ணி இருக்கிறீர்களா?''

'' 'தெனாலி’ பட வெள்ளி விழா நிகழ்ச்சிக்கு ரஜினியும் வந்திருந்தார். எஸ்.பி.முத்துராமன் சார்னு நினைக்கிறேன்... 'ரஜினியும் கமலும் இணைந்து நடிக்கணும்’னு பேசினார். 'அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால், நிச்சயம் சேர்ந்து நடிப்போம்’னு பின்னாடி பேசின ரஜினி சாரும் கமல் சாரும் சொன்னாங்க. நானும் அப்போ அந்த லைன்ல கொஞ்சம் யோசிச்சேன். ஆனா, இந்த நிமிஷம் வரை அவங்க கிட்ட இது பத்தி நான் பேசினது இல்லை!''

ராஜராஜன், ஆவாரம்பட்டி.

''திரைத் துறை பின்னணி ஏதுமின்றி இயக்குநரானவர் நீங்கள். உதவி இயக்குநர் டு இயக்குநர் பயணத்தின் மைல்கல் சம்பவங்கள் என்ன?''

''நான் யார்கிட்டயும் போய் 'அசிஸ்டென்ட் டைரக்டரா சேத்துக்கங்க, டைரக்ஷன் வாய்ப்பு தாங்க’னு சான்ஸ் கேட்காத ஒரு கேரக்டர். 'அவன் பணக்கார வீட்டுப் பையன்யா. அதான் திமிரா இருக்கான்’னு மத்தவங்க சொல்வாங்க. ஒருவேளை பணக்கார சூழல்ல வாழ்ந்ததுனால, மத்தவங்ககிட்ட போய் நிக்கிறதுக்கு வெட்கப்பட்டிருப்பேனோ என்னமோ! ஆனா, அது மட்டும் உண்மையான காரணம் கிடையாது. 'சான்ஸ் கேட்கிறோம். கொடுத்தா ஓ.கே. இல்லைனா மறுபடியும் எப்படி அவங்களை நேருக்குநேர் பார்க்கிறது’ங்கிற நினைப்புலதான் யார்கிட்டயும் போய் வாய்ப்பு கேட்டதே இல்லை.

“சிவாஜியே பாராட்டிய நடிகன் நான்!”

நான் வாய்ப்பு தேடிட்டு இருந்த சமயத்துல ஆர்.சுந்தர்ராஜன் பரபரப்பான இயக்குநர். 'நாங்க உன்னைப் பத்தி அவர்கிட்ட நிறைய சொல்லியிருக்கோம். நீ நேரடியாப் போய் வாய்ப்பு மட்டும் கேளு’னு அவரோட உதவியாளர்களே என்னைத் தள்ளிவிட்டாங்க. ஆனா, நான் பாதி தூரம் போயிட்டுத் திரும்பி வந்துடுவேன். 'என்னைப் பத்தி அவர்கிட்ட நல்ல விதமாச் சொல்லியிருக்கீங்கனு சொல்றீங்க. அப்படின்னா நான் ஏன் போய் அவர்கிட்ட வாய்ப்பு கேட்கணும். என்னைப் பத்தி தெரிஞ்சுக்கிட்டவர், நான் வேணும்னு நினைச்சா, 'இப்படிப்பட்டவன் நமக்கு வேணுமே... அவனை வந்து என்னைப் பார்க்கச் சொல்லு’னு அவரே கூப்பிட்டு விடுவார்ல’னு ஏதாவது சாக்குபோக்குச் சொல்லிட்டு வந்துடுவேன். இந்த மாதிரி நிறைய சம்பவங்கள் நடந்திருக்கு.

அப்ப கோவைத்தம்பி கம்பெனியில் 'ஆயிரம் பூக்கள் மலரட்டும்’ படத்துல உதவி இயக்குநரா வேலை பார்த்துட்டு இருந்தேன். 'நல்லா வொர்க் பண்றீங்கனு கேள்விப்பட்டேன் ரவிகுமார். இந்தப் படம் ஓடினா, அடுத்து நீங்க நமக்கு ஒரு படம் பண்ணித் தர்றீங்க’னு சொன்னார் கோவைத்தம்பி. 'ஆண்களை நம்பாதே’னு படம். அதுலயும் வேலை பார்த்தேன். 'படம் சூப்பரா வந்திருக்கு ரவி. உங்க வொர்க் என்னன்னு தெரியும். இந்தப் படம் முடிஞ்சதும் அடுத்து நீங்கதான் நமக்குப் படம் பண்றீங்க’னு சொன்னார் அந்தத் தயாரிப்பாளர். அந்த ரெண்டு படங்களும் ஓடலை. அவங்க என்னைத் திரும்பக் கூப்பிடவும் இல்லை. 'அன்னைக்கு வாய்ப்பு தர்றேன்னு சொன்னீங்களே... ஏன் இப்போ மாட்டேங்கிறீங்க?’னு நான் போய் அவங்ககிட்ட கேட்டிருக்கலாம். ஆனா, நான் கேக்கலை. இப்படி ஓடாத படங்கள்ல வேலை பார்த்துட்டே இருந்ததால், ஃபீல்டுல 'ராசி இல்லாத ராஜா’னே எனக்குப் பேரு. அதாவது வீட்ல ராஜா. ஃபீல்டுல ராசி இல்லாதவன்.

அடுத்து 'புதுவசந்தம்’ படத்துக்கு அசிஸ்டென்டா வேலை பார்த்துட்டு இருந்தேன். அந்தப் படம் வெளியாகுறதுக்கு முன்னாடியே அந்தப் படத்தின் தயாரிப்பாளர் என்னை அழைத்து, 'இதுதான் கதை. ஸ்கிரிப்ட் எழுதிட்டு ஒரு வாரத்துல என்னை வந்து பாருங்க’னு சொன்னார். அஞ்சு நாள்லயே எழுதிட்டு அவர்கிட்ட போய் கொடுத்தேன். 'நல்லா இருக்கு. நாளைக்கு மியூசிக் டைரக்டர் எஸ்.ஏ.ராஜ்குமார்கிட்ட போய் டியூன்ஸ் வாங்கிடுங்க’ன்னார். 'டியூன்ஸ்லாம் டைரக்டர்தானே வாங்கணும். நான் எதுக்குப் போய் வாங்கணும்?’னு கேட்டேன். 'நீதான்யா இந்தப் படத்துக்கு டைரக்டர்’னு போறபோக்குல சொல்லிட்டு எழுந்து போயிட்டார். அந்தப் படம்தான் 'புரியாத புதிர்’. அந்தத் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி!''

சிலம்பி எம்சிஏ, ஃபேஸ்புக்

''நீங்கள்தான் எதையும் பளிச்சென்று பேசிவிடுவீர்களே... 'ஏண்டா இந்தப் படத்தை இயக்கினோம்’ என்று நீங்கள் நினைக்கும் படம் எது?''

''ஒண்ணுகூட இல்லை! ஏன்னா ஓடின படத்தைவிட ஓடாத படங்கள்தான் எனக்கு நிறைய பாடம் கத்துக்கொடுத்திருக்கு. அதனால அதெல்லாம் எனக்கு ஒரு பாடம்தானே தவிர, வேண்டாத படம் அல்ல!''

மணிகண்டன், தஞ்சாவூர்

''சிவாஜி கணேசனை இயக்கிய 'படையப்பா’ அனுபவங்கள்..?''

''அந்த மகா மேதையைப் பத்தி நான் இனிமேல் என்ன சொல்லிப் புகழ்றது! ஆனா, அவர் வாயால நான் திட்டும் பாராட்டும் வாங்கின அனுபவத்தைச் சொல்றேனே..!

'படையப்பா’ மேல்கோட்டை மலைதான் ஸ்பாட். ஏழு மணி கால்ஷீட்டுக்கு ஆறே முக்காலுக்கே வந்துட்டார் சிவாஜி சார். நான் 6.50-க்குப் போனேன். ரஜினி சார் கரெக்ட்டா ஏழு மணிக்கு வந்தார். சிவாஜி சாரைக் காக்கவெச்சிட்டோமேங்கிற பதட்டத்துல ஓடுறோம். 'வாங்கடா... என்ன லேட்டா? அக்கறையே இல்லையாடா?’னு கேட்டார். 'நீங்க சீக்கிரம் வந்துட்டீங்க சார்’னு ஒருமாதிரிப் பேசிச் சமாளிச்சுட்டு எல்லாரையும் அதட்டி மிரட்டி வேலை வாங்கிட்டு இருந்தேன். அதை எல்லாம் பார்த்துட்டே இருந்த சிவாஜி சார் ரஜினி சார்கிட்ட, 'யோவ் என்னய்யா இவன் சரியான பொறுக்கியா இருப்பான் போல... இப்படி அதட்டி, அடிச்சு வேலை வாங்குறான்’னு சொல்லியிருக்கார்.

சிவாஜி சார் நடிக்கிற கடைசி ஷெட்யூல். 'உங்க சொத்துக்களைப் பாகம் பிரிப்பாங்க. நீங்க பத்திரத்துல கையெழுத்துப் போட்டுட்டு உட்கார்ந்திருப்பீங்க. லட்சுமி மேடம், ரஜினி சார் ரெண்டு பேரும் பத்திரத்துல கையெழுத்துப் போடுறதை அமைதியாப் பார்த்துட்டு இருப்பீங்க. சித்தாரா கையெழுத்துப் போடும்போது அந்தப் பொண்ணு தலை மேல ஆதரவா கை வெக்கிறீங்க. அப்ப உங்க கண்ல இருந்து தண்ணி வரணும் சார்’னு சொன்னேன்.

“சிவாஜியே பாராட்டிய நடிகன் நான்!”

'ஏண்டா... பொண்டாட்டி, பையன் கையெழுத்துப் போடும்போது அழக் கூடாது. பொண்ணு கையெழுத்துப் போடும்போது மட்டும் எப்படிடா அழறது?’னு கேட்டார். 'நீங்க ஃபீல் பண்ணீங்கனா அழுகை வரும் சார்’னு முந்திரிக்கொட்டை மாதிரி டக்குனு சொல்லிட்டேன். 'ஓ... ஃபீல் பண்ணா அழுகை வருமா..? எங்கே நீ ஃபீல் பண்ணிக் காமி... நாங்களும் பார்க்கிறோம்’னு சொல்லிட்டார். நான் சித்தாரா பக்கத்துல போய் நின்னேன். அவங்க தலைல கைவெச்சேன். ஃபீல் பண்ணேன். அப்படியே கண்ல இருந்து நீர் தாரை தாரையாக் கொட்டுச்சு.

என்னையே பார்த்துட்டு இருந்தவர், 'அந்தப் பொண்ணு தலைல கைவைக்கும்போது என்னடா நினைச்ச?’னு கேட்டார். 'என் பொண்ணுனு நினைச்சுக்கிட்டேன் சார். லட்சுமி கையெழுத்துப் போடும்போது, 'நாம நல்லவிதமா வாழ்ந்துட்டோம்’னு தோணுச்சு. ரஜினி சார் கையெழுத்துப் போடும்போது, 'பையனை நல்லபடியாப் படிக்கவெச்சுட்டோம். இனி எங்கே இருந்தாலும் பொழைச்சுப்பான்’னு தோணுச்சு. ஆனா, சித்தாரா வந்ததும், 'என் பொண்ணு நீ. உனக்கு நான்தான் எல்லாம். உன்னை எப்படியெல்லாம் கல்யாணம் பண்ணிக் கொடுக்கணும்னு நினைச்சேன். ஆனா, இப்ப சல்லிப் பைசாகூட இல்லாம எல்லாத்தையும் கொடுக்கிறேன். ஆனா, அதைப் பத்திலாம் யோசிக்காமக் கையெழுத்துப் போடுறியேம்மா... உனக்கு இனிமே நான் என்னம்மா பண்ணப்போறேன்?’னு நினைச்சேன். கண்ல தண்ணி வந்துருச்சு சார்’னு சொன்னேன்.

'பொறுக்கியா இருப்பானோ?’னு சொன்ன அதே ரஜினி சார்ட்ட, 'அவன் நல்ல டைரக்டர் மட்டும் இல்லடா. நல்ல நடிகனும்கூட’னு சொல்லியிருக்கார். அந்தப் பெரிய மனசுதான் சிவாஜி சார்!''

- ஷாட் பிரேக்...

• ''ஜெயலலிதாவுக்கும் ரஜினிக்கும் உச்சகட்ட உரசல் இருந்துகொண்டிருந்த சமயம் 'முத்து’ படத்தில் சில சீண்டல் வசனங்கள் இடம் பெற்றன. அதைப் படமாக்கும் சமயம் ரஜினி என்ன சொன்னார், உங்களுக்குள் என்ன விவாதங்கள் நடந்தன? கொஞ்சம் மனம் திறந்து பேசுங்களேன்..!''

• ''சினிமாவில் உதவி இயக்குநராக இருந்துதான் டைரக்டராகி இருக்கிறார்கள். அப்புறம் ஏன் இயக்குநரான பிறகு உதவி இயக்குநர்களைப் பலர் உதாசீனம் செய்கிறார்கள்?''

• ''நீங்கள் இயக்கிய படங்களில், எந்தப் படத்தை இப்போது பார்ட்-2 எடுக்கலாம்?''

- அடுத்த வாரம்...

“சிவாஜியே பாராட்டிய நடிகன் நான்!”

ன்பு வாசகர்களே... எங்களுடன் தொடர்புகொள்ளும்போது உங்கள் செல்போன் எண்/இ-மெயில் முகவரி குறிப்பிட மறக்காதீர்கள். உங்கள் படைப்புகள் எதுவானாலும் ஒரு பிரதி எடுத்துவைத்துக்கொண்டு அனுப்புங்கள். தபால் தலை மற்றும் சுயவிலாசமிட்ட உறை இணைக்க வேண்டாம். படைப்பு தேர்வாகாதபட்சத்தில் திருப்பி அனுப்ப இயலாது. இரண்டு மாதங்களுக்குள் எங்களிடம் இருந்து தகவல் கிடைக்காவிட்டால், உங்கள் படைப்பு தேர்வு பெறவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுகிறோம்.

கே.எஸ்.ரவிகுமாரிடம் கேட்பதற்கான உங்கள் கேள்விகளை உடனடியாக அனுப்ப வேண்டிய முகவரி:   'விகடன் மேடை - கே.எஸ்.ரவிகுமார்’, ஆனந்த விகடன், 757,அண்ணா சாலை, சென்னை-600002. இ-மெயில்: av@vikatan.com. கேள்விகளுடன் மறக்காமல் உங்கள் தொடர்பு எண்ணையும் அவசியம் குறிப்பிடவும்.