Published:Updated:

அறிவிழி - 55

அண்டன் பிரகாஷ்

அறிவிழி - 55

அண்டன் பிரகாஷ்

Published:Updated:
அறிவிழி - 55

பிரபலமான WhatsApp அலை மென்பொருளை, 19 பில்லியன் டாலர்களுக்கு வாங்கிக்கொள்ளப் போவதாக அறிவித்திருக்கிறது ஃபேஸ்புக். ஆப்பிள், ஆண்ட்ராயிட், விண்டோஸ், ப்ளாக்பெரி என அனைத்து மொபைல் தொழில்நுட்பங்களிலும் இயங்கும் WhatsApp அலைமென்பொருள், யாஹூ நிறுவனத்தில் பணியாற்றிய மென்பொறியாளர்கள் பிரையன் ஆக்டன், ஜேன் கோம் ஆகியோரால் ஐந்து வருடங்களுக்கு முன் தயாரிக்கப்பட்டது.

விளம்பரங்கள், விளையாட்டு அழைப்புகள் என எதையும் செய்யப்போவது இல்லை என்பதை முதலில் இருந்தே அறிவித்திருந்த இந்த நிறுவனம், வருடாந்திரச் சேவையாக ஒரு டாலரை மட்டுமே வசூலித்து வந்தது. WhatsApp, 500 மில்லியன் பயனீட்டாளர்கள் தொடர்ந்து பயன்படுத்தும் சேவையாக இருப்பதால், ஃபேஸ்புக் வளைத்துப்போட்டிருக்கிறது. 'பயனீட்டு அனுபவத்தில் எந்த மாற்றமும் இருக்காது; விளம்பரங்கள் வெளியிடப்படாது’ என்றெல்லாம் சொல்லியிருக்கிறது ஃபேஸ்புக். இன்ஸ்டாகிராமை வாங்கும்போது இதுபோலச் சொன்னதாகத்தான் நினைக்கிறேன். ஆனால், இன்ஸ்டாகிராம் ஃபேஸ்புக்கின் விளம்பர வருமான அமுதசுரபியாக இருப்பது இன்றைய நிலை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விளம்பரங்களை வெளியிடுவதற்காகவா ஃபேஸ்புக் WhatsApp-ஐ வாங்கியிருக்கிறது என்பதைத் தீவிரமாக ஆராய்ந்தால், இல்லை என்றே தோன்றுகிறது. எப்படி? விரிவாகப் பார்க்கலாம்.

WhatsApp மென்பொருள் பயனீட்டாளரின் எண்ணிக்கை, நாள் ஒன்றுக்கு ஒரு மில்லியன் என்ற அளவில் விரிவடைந்தபடி இருக்கிறது. 500 மில்லியன் அளவில் இருக்கும் இன்றைய பயனீட்டாளர் எண்ணிக்கை, விரைவில் ஃபேஸ்புக்கின் பயனீட்டாளர் அளவான ஒரு பில்லியனைத் தொட்டுவிடும். 'ஓ... அப்படியானால் தனது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துபவர்கள் WhatsApp-க்குச் சென்றுவிடக் கூடாது என்பதால்தான் ஃபேஸ்புக் அதை வாங்கியிருக்கிறதோ’ எனத் தோன்றலாம். அதுவும் சரியான காரணம் அல்ல.

அறிவிழி - 55

உண்மையான காரணம், ஃபேஸ்புக் பரவலாகக் காலூன்றி இருப்பது அமெரிக்கா, ஐரோப்பாவின் பல நாடுகள், சில ஆசிய நாடுகளில் மட்டுமே. உதாரணத்துக்கு, இந்தியாவில் அலைபேசி மூலம் ஆன்லைனுக்குச் செல்லும் வசதி கொண்டவர்களில் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவானோர் மட்டுமே ஃபேஸ்புக் பயன்படுத்துகிறார்கள். அதே நேரத்தில் 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவர்கள் WhatsApp மென்பொருளைப் பயன்படுத்து கிறார்கள்.

இன்னொரு விதத்தில் சொல்லப் போனால், WhatsApp பயனீட்டாளர்கள்  ஃபேஸ்புக்கைப் பயன்படுத்தாதவர்கள். ஃபேஸ்புக் தொடர்ந்து வெற்றி பெற்றுக்கொண்டே இருக்கவேண்டுமானால், அவர்களுக்குப் புதிய பயனீட்டாளர்கள் சேர்வது மட்டுமல்ல, அவர்கள் எப்படி அலைபேசியைப் பயன்படுத்துகிறார்கள் என்ற விவரமும் தெளிவாகத் தெரிய வேண்டும்.

அறிவிழி - 55

வணிக உலகில், 'வாடிக்கையாளரைக் கையகப்படுத்த ஆகும் செலவு’ (Customer Acquisition Cost) என்றொரு கணக்கு உண்டு. இருசக்கர வாகன டீலர்ஷிப் ஒன்று வாடிக்கையாளர்களைக் கவர்ந்து, தங்களது கடைக்கு வரவைத்து வாகனங்களை விற்க வேண்டும். இதற்கு ஒவ்வொரு வாரமும் ஒரு லட்ச ரூபாயை விளம்பரங்களுக்காகச் செலவழிக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். மேற்படி டீலர்ஷிப் வாரத்துக்கு 10 டூ-வீலர்களை விற்கிறது என்றால், ஒரு வாடிக்கையாளரைக் கையகப்படுத்த அவர்களுக்கு ஆகும் செலவு 10,000.

வாடிக்கையாளர்களை நாடும் இருசக்கர வாகன டீலராக இருந்தாலும், பயனீட்டாளர்களைத் தேடும் அலைமென்பொருளாக இருந்தாலும், கையகப்படுத்த ஆகும் செலவைச் செய்தே ஆக வேண்டும். தங்களிடம் இருக்கும் பில்லியன் பயனீட்டாளர்களுடன், இன்னொரு பில்லியனைச் சேர்த்துக்கொள்ள ஆகும் செலவைக் கணக்கிட்டு, தலைக்கு 19 டாலர் என்ற விதத்தில் செலவு செய்திருக்கிறது ஃபேஸ்புக். தனது சந்தை மதிப்பில் 10 சதவிகிதத்துக்கும் மேல் கொடுத்து WhatsApp-ஐ வாங்கியிருப்பதன் காரணம் இதுதான்.

WhatsApp மென்பொருளைப் பயனீட்டாளர்கள், குறிப்பாக ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் இருக்கும் பயனீட்டாளர்கள் எப்படியெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்பதை ஆழமாக அலசி, அதில் இருந்து தனது வணிக நுண்ணறிவை வளர்க்க ஃபேஸ்புக் மெனக்கெடும்.

கூகுள் சமீபத்தில் Nest  என்ற ஹார்டுவேர் நிறுவனத்தை வாங்கிவிட்டு, கையில் இருக்கும் Motorola Mobility என்ற நிறுவனத்தை விற்றுவிட்டது. சீனாவின் Lenovo நிறுவனம் இப்போது மோட்டரோலாவின் சொந்தக்காரர். இந்த இரண்டு பரிவர்த்தனைகளின் அளவும் மூன்று பில்லியன் டாலர்களுக்கும் குறைவே. ஆயிரக்கணக்கானவர்கள் பணிபுரியும் நிறுவனங்களின் மதிப்பைவிட 50 பேர்களுக்கும் குறைவாகப் பணியாற்றும் WhatsApp  நிறுவனம், அதைவிடப் பல மடங்கு அதிக மதிப்புள்ளதாக மாறியிருக்கிறது. டெக் உலகில் இப்போதெல்லாம், 'Software is eating the world’ என்ற பதம்தான் பயன்படுத்தப்படுகிறது. அது என்ன... அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்!

- விழிப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism