Published:Updated:

''அப்பா சொன்ன அந்த ஒரு வார்த்தை..!'' - நெகிழும் சர்வதேச மாற்றுத் திறனாளி சாம்பியன் ஜெனித்தா

''அப்பா சொன்ன அந்த ஒரு வார்த்தை..!'' - நெகிழும் சர்வதேச மாற்றுத் திறனாளி சாம்பியன் ஜெனித்தா
''அப்பா சொன்ன அந்த ஒரு வார்த்தை..!'' - நெகிழும் சர்வதேச மாற்றுத் திறனாளி சாம்பியன் ஜெனித்தா

ப்போது எனக்கு ஒன்பது வயது இருக்கும். என் வயதுடைய பிள்ளைகள் எல்லோரும் தெருவில் விளையாடிக்கொண்டிருப்பார்கள். கண்ணாமூச்சி, பாண்டி, கல்லா மண்ணா என ஓடியாடி அவர்கள் விளையாடுவதை வீல் சேரில் அமர்ந்தபடியே நான் பார்த்துக்கொண்டிருப்பேன். செயலற்றுப்போன கால்களின் ஆற்றாமை மனதில் ஏறி அமர்ந்துகொள்ள, அவ்வளவு ஏக்கமாக இருக்கும். 

ஒருமுறை என் அப்பா என்னிடம், 'நீ விரும்பினால் உன்னால் விளையாட முடிந்த ஒரு விளையாட்டை நான் உனக்கு சொல்லிக்கொடுக்கிறேன். அதைக் கற்றுக்கொள். நிச்சயமாக அந்த விளையாட்டில் நீ சாதிப்பாய்' என்று சொன்னார்.  அப்பா சொல்லிக்கொடுத்த அந்த விளையாட்டுதான் இன்று உலகம் முழுவதும் என்னை ஒரு சாதனைப் பெண்ணாக அடையாளப்படுத்தியிருக்கிறது” - செஸ் சாம்பியன்ஷிப் ஜெனித்தா ஆண்டோவின் வார்த்தைகளில் வைரமாக வெளிப்படுகிறது தன்னம்பிக்கை. 

ஜெனித்தா, கடந்த வாரம் ஸ்லோவாகியா நாட்டில் நடைபெற்ற சர்வதேச அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான தனிநபர் சதுரங்கப் போட்டியில் தங்கம் வென்றிருக்கிறார். இது சர்வதேச செஸ் போட்டியில் அவர் பெறும் ஐந்தாவது தங்கம். அவர் வெற்றிக்குப் பின் வேராக நிற்பவர், அவர் தந்தை காணிக்கை இருதயராஜ். 

''எல்லா அப்பாக்களுக்கும் மகள்களின் மீது அளவுகடந்த பாசம் இருக்கும். அவர்களுக்காக பல தியாகங்களையும் செய்யத் தயாராக இருப்பார்கள். என் அப்பாவும் அப்படித்தான். நான் பிறந்ததிலிருந்து மூன்று வயது வரை எல்லா குழந்தைகளையும்போல நன்றாகத்தான் இருந்தேன். ஆனால், திடீரென என் உடல் உறுப்புகள் எல்லாம் செயலற்றுப் போக, அப்பாவும் அம்மாவும் துடிதுடித்து மருத்துவமனைக்குத் தூக்கிப்போயிருக்கிறார்கள். 'போலியோவால் பாதிக்கப்பட்டிருக்கிறாள். இனி இடது கையைத் தவிர மற்ற உடல் உறுப்புகள் எதுவும் செயல்படாது' என்று மருத்துவர்கள் சொன்னபோது, அவர்கள் எப்படியெல்லாம் பரித்தவித்துப்போனார்கள் என்பதை பலமுறை என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். அன்றிலிருந்து என்னை உட்கார வைப்பதற்கு மட்டுமே ஆறுமாத காலம் போராடியிருக்கிறார்கள். 

அப்பா பள்ளித் தலைமை ஆசிரியராக இருந்தவர். செஸ் பிளேயரும்கூட. ஒரு கையை மட்டும் வைத்துக்கொண்டு எப்படி ஒரு வாழ்க்கை வாழ்வது என்று சோர்ந்து போயிருந்த என்னை, 'அந்த ஒரு கைதான் உன் மூலதனம்' என்று சொல்லி எனக்கு செஸ் விளையாடக் கற்றுத்தந்தார். ஒன்பது வயதில் செஸ் விளையாட ஆரம்பித்தேன். பள்ளி அளவில் இருந்து மாவட்ட அளவு வரை படிப்படியாக போட்டிகளில் பரிசுகள் பெற்றேன். 

அப்போதெல்லாம் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவு எனத் தனியாக இல்லை. பொதுப்பிரிவில்தான் விளையாட வேண்டும். சக போட்டியாளர்கள் பார்வையாலேயே என் மீதான அவர்களின் மதிப்பீட்டை வெளிப்படுத்தும்போதெல்லாம், 'உன்னால முடியும்மா... இந்தப் போட்டியில நீதான் ஜெயிப்ப' என்று நம்பிக்கை சொல்லிச் சொல்லியே, ஸ்டேட் லெவல், நேஷனல் லெவல் போட்டிகள் வரை என்னை முன்னேற்றினார் அப்பா. இப்போது சர்வதேச அளவில் ஐந்து தங்கங்கள். அத்தனைக்கும் காரணம் என் அப்பா. அவர் எனக்குக் கொடுத்த ஊக்கம். வெல்லும் பரிசுகளைவிட, 'என் அப்பா என் மீது வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றிவிட்டேன்' என்பதே எனக்குப் பெருமகிழ்ச்சியாக இருக்கும்'' - வழியும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டே பேசினார் ஜெனித்தா.

“இன்று எங்கெங்கு இருந்தெல்லாமோ என்னைப் பாராட்டுகிறார்கள். அதற்கெல்லாம் பின்னால் தூணாக இருப்பது, என் அப்பாவின் தியாகம்தான். அப்பாவின் ரிட்டயர்மென்ட் தொகையைச் செலவளித்துதான் என்னை வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளுக்கு எல்லாம் அழைத்துச் சென்றார். உறவுகள் எல்லாம், 'பொம்பளப்புள்ளைக்கு, அதுவும் ஒரே இடத்துல உட்கார்ந்திருக்கிற புள்ளைக்கு இவ்வளவு செலவு செய்யத் தேவையா?' என்று அவரைத் திட்டினார்கள். இன்று அவர்கள் எல்லோரும் எங்களை வியந்து பார்க்கிறார்கள். அதுக்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. என்னைப்போன்ற மாற்றுத்திறனாளி செஸ் ப்ளேயர்களுக்கான அசோசியேஷனை அப்பா விரைவில் ஆரம்பிக்கவிருக்கிறார். நாம் பட்ட கஷ்டம் மற்றவர்களுக்கு நேரக்கூடாது, அவர்களுக்கு வழிகாட்டியாக நாம் இருக்க வேண்டும் என்ற மனதுடைய அப்பாவுக்கு மகளாகப் பிறந்ததில் மிகவும் பெருமைப்படுகிறேன்" - மீண்டும் கண்கள் பளபளக்கிறது ஜெனித்தாவுக்கு.