Published:Updated:

விலங்குகளின் தீவில் மாட்டிக்கொண்ட ஒரு மனிதன் #RobinsonCrusoe

சுரேஷ் கண்ணன்
விலங்குகளின் தீவில் மாட்டிக்கொண்ட ஒரு மனிதன் #RobinsonCrusoe
விலங்குகளின் தீவில் மாட்டிக்கொண்ட ஒரு மனிதன் #RobinsonCrusoe

18-ம் நூற்றாண்டில் பிரசுரமான 'ராபின்சன் குரூசோ' (Robinson Crusoe) நாவல் உலகப்புகழ் பெற்றது. பயணம் செய்த கப்பல் விபத்தில் சிக்கி அழிந்து போவதால், ஆள் அரவமற்ற தீவில் ஒதுங்கும் ஒரு மனிதர் தனது 28 ஆண்டுகளை அங்கு கழிக்கிறார். அவரின் அனுபவங்களையொட்டி எழுதப்பட்ட நாவல் இது. 'ராபின்சன் குரூசோ' என்பவரின் உண்மையான அனுபவங்கள் இவை என்று முதலில் நம்பப்பட்டது. பின்னரே Daniel Defoe எழுதிய புனைவு என்று தெளிவாகியது. யதார்த்தத்திற்கு நெருக்கமாக புனையப்பட்ட கற்பனையைக் கொண்டிருக்குக்கிறது இந்தப் படைப்பு.

இந்த நாவலையொட்டி, தொலைக்காட்சி தொடர்களும் திரைப்படங்களும் வெளிவந்துள்ளன. அந்த வரிசையில் 2016-ஆம் ஆண்டு வெளிவந்த அனிமேஷன் திரைப்படம் Robinson Crusoe. ராபின்சன் குரூசோ நாவலின் அனுபவத்தை இன்னொரு பரிமாணத்தில் அனிமேஷன் திரைப்படமாக காண நல்லதொரு வாய்ப்பு. அப்படியானதொரு சுவாரஸ்யமான அனிமேஷன் திரைப்படம் இது.

கடற்கொள்ளையர்களின் கப்பல் கடலில் பயணித்துக் கொண்டிருக்கிறது. எலிகளின் தொல்லையால் உறக்கம் கலையும் பணியாள் ஒருவன் தொலைவில் தெரியும் தீயைப் பார்க்கிறான். தன் தலைவனுக்குத் தகவல் சொல்கிறான். அருகில் சென்று பார்க்கிறார்கள். ஒரு பலவீனமான மனிதன் கயிற்றில் தலைகீழாக தொங்கிக் கொண்டிருக்கிறான். அருகில் சென்று விசாரிக்கிறார்கள். 'என் பெயர் ராபின்சன் குரூசோ' என்று முனகுகிறான். அவனிடம் விலையுயர்ந்த பொருள் எதுவுமில்லை. எனவே அவனைத் தங்களின் அடிமையாக கடத்திக் கொண்டு பயணி்க்கிறார்கள்.

ராபின்சனின் நண்பனாக ஒரு கிளி இருக்கிறது. பேசும் கிளி. அதன் பெயர் 'Tuesday'. ராபின்சன் வைத்த பெயர்தான் அது. அதுவும் அவனுடன் பயணிக்கிறது. கப்பலில் ஒளிந்திருக்கும் எலிகளிடம் கிளி பேசுகிறது. "உள்ளே அகப்பட்டுக் கொண்டிருக்கும் மனிதனின் கதையை அறிய வேண்டுமா?" எலிகள் உற்சாகமாக 'ஆமாம்' என்பதாக தலையாட்டுகின்றன.

ராபின்சனின் பின்னணி, காட்சிகளாக விரிகிறது.

அதுவோர் ஆள் அரவமற்ற தீவு. துறுதுறுவென்றிருக்கும் வண்ணமயமான கிளி, பார்வை மங்கலான வயதான ஆடு, எறும்புத்திண்ணி, கிங்ஃபிஷர் பறவை, பன்றி, பச்சோந்தி போன்றவை மட்டுமே அந்தத் தீவின் உறுப்பினர்கள். தங்களுக்குள் மிக தோழமையாகவும் அன்பாகவும் அந்தத் தீவில் வாழ்கின்றன. ஆனால், கிளிக்கு மட்டும் இந்தத் தீவு சலிப்பூட்டுகிறது. உலகத்தின் இதர பகுதிகளைச் சென்று காண ஆவலாக இருக்கிறது.

கடற்பயணம் மேற்கொண்டிருக்கும் ராபின்சனின் கப்பல், பலத்த புயல் காரணமாக அந்தத் தீவின் அருகே உடைந்து சிதறுகிறது. ராபின்சனும் அவனுடைய நாயும் மட்டுமே உயிர்தப்புகின்றனர். ராபின்சன் மெதுவாக கரையேறுகிறான்.

தீவிலிருக்கும் உயிரினங்கள் இவனைப் பதட்டமாக கவனித்துக் கொண்டிருக்கின்றன. இவனால் நமக்கு ஆபத்து வருமோ என்று அச்சம் கொள்கின்றன. ஆனால், கிளிக்கு மட்டும், உலகைச் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பு இவனால் கிடைக்கக்கூடும் என்ற எண்ணம் உருவாகிறது.

இந்த இரண்டு தரப்புக்கும் மேலே இன்னோர் ஆபத்து இவர்களைக் கண்காணித்துக் கொண்டிருப்பது எவருக்கும் தெரியவில்லை.

ராபின்சன் குரூசோவிற்கும் உயிரினங்களுக்குமான உறவில் என்னவெல்லாம் நிகழ்கிறது, அவர்களுக்குப் பின்னால் இருந்த ஆபத்து என்ன, கடற்கொள்ளையர்களிடமிருந்து அவன் தப்பினானா? என்பதையெல்லாம்  சுவாரஸ்யமான காட்சிகளாக விரித்து சொல்லியிருக்கிறார்கள்.

பலத்த காற்றும் மழையுமாக பொழியும் புயலிலிலிருந்து விலங்குகள் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டு உயிர்தப்பும் சாகசக் காட்சிகள் அற்புதமாக பதிவாகியிருக்கின்றன. தீவின் விலங்குகள் ஒவ்வொன்றுமே தனித்தனியான குணாதிசயத்துடன் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. அதில் மிகவும் சுவாரஸ்யமான பாத்திரம், Tuesday என்று பெயர் வைக்கப்பட்ட கிளி. தீவில் ஒதுங்கும் ராபின்சன் நாட்களை நினைவு வைப்பதற்காக, கிளியைக் கண்ட நாளையே அதற்குப் பெயராக வைத்து விடுகிறான். மற்ற விலங்குகள் ராபின்சனைச் சந்தேகத்துடனும் அச்சத்துடனும் அணுகும்போது கிளி மட்டுமே பொறுமையுடன் கவனித்து 'அவன் ஆபத்தற்றவன்' என்பதைக் கண்டுபிடித்து தனது தோழர்களுக்கும் சொல்கிறது.

ராபின்சன் வந்த கப்பலில் ஒளிந்திருந்த இரண்டு பூனைகள் இவர்களுக்கு கடும் எதிரியாக இருக்கின்றன. இவற்றில் ஆண் பூனை வெற்றுப் பேர்வழியாகவும் பெண் பூனை புத்திக்கூர்மையுடன் சிந்திப்பதாகவும் வடிவமைத்திருப்பது சுவாரஸ்யம். பக்கத்திலுள்ள சபிக்கப்பட்ட தீவில் சென்று விழும் இந்த இரண்டு பூனைகளும் பல்கிப் பெருகி கூட்டமாக வந்து மறுபடியும் ராபின்சன் குழுவைத் தாக்கும் காட்சிகளும் ராபின்சனும் இதர விலங்கினங்களும் இணைந்து உதவிக் கொண்டு தப்பிக்கும் காட்சிகளும் பரபரப்பானவை.

ராபின்சன் தனக்காக வீடொன்றை அமைக்கும்போது அதில் மற்ற உயிரினங்கள் சொகுசாக வந்து வாழும் போது 'இந்தச் சுகத்திற்குப் பழகி விடாதீர்கள். இந்த மனிதன் சென்ற பிறகு என்ன செய்வீர்கள்?' என்று கிங்பிஷர் பறவைக் கேட்பது புத்திசாலித்தனம் மட்டுமல்ல, வாழ்க்கையின் தத்துவங்களில் ஒன்றும் ஆகும்.

நாவலின் படி ராபின்சன் குரூசோ பல காலத்திற்குப் பிறகு மீட்கப்படுகிறான். ஆனால், இந்த அனிமேஷன் திரைப்படத்தில் கடற்கொள்ளையர்களிடம் சிக்கும் ராபின்சன், கிளியின் உதவியால் தப்பி, மீண்டும் தீவிற்கே திரும்பிச் செல்லுவதுபோல திரைப்படம் நிறைவு செய்யப்பட்டுள்ளது.

The Wild Life என்கிற இன்னொரு தலைப்பிலும் அறியப்படும் இந்த அனிமேஷன் திரைப்படத்தை அற்புதமாக இயக்கியிருப்பவர்கள் Vincent Kesteloot மற்றும் Ben Stassen. பெல்ஜியம் - பிரான்ஸ் தயாரிப்பு. பெரும்பான்மையான காட்சிகள் கடல் மற்றும் தீவில் நிகழ்வதால் அது சார்ந்த இயற்கைக் காட்சிகள் அபாரமான கற்பனை வளத்துடன் மிகச் சுவாரசியமாக வரைகலை நுட்பத்தால் உருவாக்கப்பட்டுள்ளன. புயல் மழை அடிக்கும் காட்சிகள் தத்ரூபமான பதட்ட உணர்வை ஏற்படுத்துகிறது.

குழந்தைகளுடன் இணைந்து காண வேண்டிய படைப்புகளில் தவிர்க்க முடியாதது இந்த Robinson Crusoe.