Published:Updated:

ஆறாம் திணை - 78

மருத்துவர் கு.சிவராமன்

ஆறாம் திணை - 78

மருத்துவர் கு.சிவராமன்

Published:Updated:
ஆறாம் திணை - 78

நான்கு நாள் காய்ச்சலில் நரம்பில் நோய்வாய்ப்பட்டு நடக்க முடியாமல்போன போலியோவைக் கிட்டத்தட்ட ஓரங்கட்டியேவிட்டோம். மூன்றே நாட்களில் மூளைக்காய்ச்சல் வந்து மூளை வளர்ச்சி ஸ்தம்பிக்கும் நோய்கூட வெகுவாக அருகிவிட்டது. ஆனால், சமீபத்தில் சாதாரணக் காய்ச்சல் வந்துபோன பிறகு, இரண்டு, மூன்று மாதங்களாக நடக்கும்போது குதிகாலில், கால்மூட்டில் வரும் புதுவித மூட்டு வலி நோய் பெருகிவருகிறது.

'மூட்டுகளை விடுங்க... சும்மா எழுதும்போதும், 'ஓ’வுக்காக விரலைச் சுழிக்கும்போதும், 'விண்’னு வலிக்குதுங்க. வலி மாத்திரையைத் தவிர வேறு வழியே இல்லையா?’ என்று அதிகம் பேர் விசாரிக்கின்றனர். 'சிக்குன்குனியாவுக்குப் பிந்தைய மூட்டு வலி’ (POST CHIKUNGUNYA) என்று வலியோடு அழைக்கப்படும் இந்த மூட்டுவலி, வயதானால் வரும் மூட்டு வலியோ அல்லது தனக்குத்தானே சண்டையிட்டுக்கொண்டு (auto immune) வரும் ருமட்டாய்டு மூட்டு வலியோ கிடையாது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வைரஸ் தாக்குதலுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றல் சமாசாரங்கள், வந்த வேலை முடிந்த பின்னரும் அங்கு இருந்து நகராமல் கூடுதல் நாட்கள் மூட்டுகளுக்கு இடையில் தங்கியிருப்பதன் விளைவே இது. ஏற்கெனவே ருமட்டாய்டு மூட்டு வலி இருப்போருக்கு இந்த வைரஸ் காய்ச்சல் மூட்டு வலியும் சேர்ந்துகொள்ளும்போது, வலி தீவிரமாக இருப்பதும் நீடிப்பதும் உண்டு.

சாதாரணக் கொசு கொண்டுசேர்க்கும் அசாதாரண நோய்களில் ஒன்றுதான் சிக்குன்குனியா. 1960-களில் ஆப்பிரிக்காவில் கடும் சேட்டை செய்த பின், பல காலம் அமைதியாக இருந்துவந்த இந்தக் கொசு வைரஸ் கூட்டணி, 2006 டிசம்பரில் மறுபிரவேசம் நடத்தி கடந்த ஆறேழு ஆண்டுகளில் இந்தியாவிலும், இன்னும் சில கிழக்கு ஆசிய நாடுகளிலும் அட்டூழியம் பண்ணிக்கொண்டு இருக்கிறது. தீவிர ஜுரம், மூட்டு வலி, சிவப்புப் படைகளுடன் வரும் சிக்குன்குனியாவை நம் ஊர் நிலவேம்புக் குடிநீரைக்கொண்டு தீர்த்துக்கொள்ளலாம். அதன் பிறகும் தொடரும் வலிக்கு, வலிநிவாரணி மட்டும் போதாது. ஜுரம் விட்ட பின்னரும் சில காலம் இந்த நிலவேம்புக் குடிநீரை காலை, மாலை என வாரம் இரு நாள் சாப்பிடுவதுடன் உணவிலும் கொஞ்சம் அக்கறையாக இருப்பது அவசியம்.

ஆறாம் திணை - 78

'புளிதுவர் விஞ்சிக்கின் வாதம்’ என்கிறது சித்த மருத்துவம். நோயணுகா விதியில் 'கருணையன்றி பிற புசியோம்’ என தேரன் சொன்ன பிடிகருணைக்கிழங்கைத் தவிர பிற கிழங்குகளை மூட்டு வலிக்காரர்கள் சாப்பிடாது இருப்பதும் அவசியம். சிறுநீர் நன்றாக வெளியேறவைக்கும் வெள்ளரி, நீர்முள்ளி, பார்லி முதலான உணவுகளையும் அன்றாடம் சேர்ப்பதுடன், 'ஒமேகா 3’ சத்து நிரம்பியிருக்கும் மீனையும் சாப்பிட வேண்டும்.

கவுட் (GOUT) எனப்படும் யூரிக் அமில மூட்டு வலிக்காரரைத் தவிர பிறர் மீன், மீன் எண்ணெய் ஆகியவற்றை உட்கொள்ளலாம். கவுட் எனும் யூரிக் அமிலம் அதிகரிப்பதால் வரும் மூட்டு வலிக்கு நண்டு, மீன், கோழி இவற்றில் இருந்து பெறப்படும் விலங்கினப் புரதங்களைத் தவிர்த்தே ஆக வேண்டும். அதிகபட்ச பியூரின்களைக்கொண்ட காலிஃப்ளவர் மற்றும் சில கீரை வகைகளை 'கவுட்’ மூட்டு வலிக்காரர்கள் உணவில் தவிர்ப்பது மிக முக்கியம். ஆனால், 'முடக்கறுத்தான் கீரை’ சேர்த்துச் செய்யப்படும் அடை/தோசை, மூட்டு வலிக்குக் காரணமான அதிகபட்ச வாதத்தன்மையைப் போக்கும். அதை எல்லாவித மூட்டு வலிகளால் அவதிப்படுவோரும் சாப்பிடலாம்.

வயதாகி மூட்டு தேய்ந்துவரும் ஆஸ்டியோ ஆர்த்தரைடிஸ் எனும் வயோதிக மூட்டு வலிக்கு கம்பங்கூழ், பிரண்டைத் துவையல் உன்னத உணவு. இது கால்சியமும் தந்து, கூடவே ஆன்ட்டி-ஆக்சிடென்ட்டும் அளிக்கும். எல்லா மூட்டு வலிகளுக்குமே இன்று வாக்ஸினுக்கான அமெரிக்கக் காப்புரிமை வரை பயணித்துவிட்ட நம்ம ஊர் அமுக்கரா கிழங்குச் சூரணம், மூட்டுகளை, தசைகளை, கார்டிலேஜை என அனைத்தையும் வலுப்படுத்தி, கொசுறாக வயோதிகத் தள்ளாமையையும் சரிப்படுத்தும். அன்று தமிழ் மருத்துவம் சொன்ன அத்தனையையும் இன்று நவீன அறிவியல் தரவுகளும் ஆதரிக்கின்றன.

'கொசுவில் இருந்து மலேரியா வரும்னு தெரியும். மூட்டு வலியுமா?’ எனப் பதறும் நாம், அப்போதும் சுற்றுச்சூழலைச் செப்பனிட முயலாமல், 'பெண் கொசுவுக்குக் குடும்பக் கட்டுப்பாடு பண்ணலாமா... அதன் மரபணுவை மாற்றிவிடலாமா?’ என ஹாலிவுட் சினிமா வில்லன் கணக்காகப் பயங்கர யோசனைகளைத்தான் விதைக்கிறோம்!

இயற்கையான ஏரிகளும், குளம்-குட்டைகளும் அதன் சூழலியல் பன்முகத்தன்மையால் கொசுவை இயற்கையாகவே கட்டுப்படுத்தும். ஏரியின் பச்சைப் பாசிகள்தான் கொசுமுட்டைக்கான வாழ்விடம். கொசு முட்டை, மீனுக்கான உணவிடம். மீனும் சில மெல்லுடலிகளும் அங்கு வாழும் நாரைக்கான உணவு.

இந்தப் பல்லுயிர் பன்முகச் சுழற்சி புரியாமல், 'வளர்ச்சி’ என்ற பெயரில் கழிவுகளைக் கொட்டி 75 சதுர கிலோமீட்டராக இருந்த காஷ்மீர் தால் ஏரியை 12 சதுர கிலோமீட்டருக்குச் சுருக்கிவிட்டோம். முடிந்தமட்டும் நல்ல நீரை உறிஞ்சிவிட்டு டெல்லியின் யமுனை, சென்னையின் கூவம்... இரண்டையும் கழிவுநீர் சாலைகளாக்கிவிட்டோம்.

இந்தியாவின் இரண்டாவது பெரிய ஏரி, பழவேற்காடு லகூன். அதன் 450 சதுர கிலோமீட்டர் அளவு, இப்போது 360 சதுர கிலோமீட்டருக்குச் சுருங்கிவிட்டதாம். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அந்த ஏரி அரேபியர்களும் போர்த்துக்கீசியர்களும் பயன்படுத்திய ஒரு துறைமுகம் என்பது சென்னைவாசிகளுக்கே தெரியாத ஓர் ஆச்சரியத் தகவல்!

செங்கல்பட்டைச் சுற்றி சுமார் 2,000 ஏரி, குளங்கள் இருந்ததாக மிகச் சமீப வரலாறுகூட சொல்கிறது. ஆனால், அப்போது கொசு கடித்ததாகவோ, கூட்டமாக வந்து நம் உடலில் குத்தித் துளைத்ததாகவோ தடயங்கள் இல்லை. இன்றோ கொசு குசலம் விசாரிக்காத குடியிருப்பே இல்லை. நல்லவேளை, கொசுக்கடி மூலம் ஹெச்.ஐ.வி., காமாலை போன்றவை பரவுவது இல்லை. ஒருவேளை வருங்காலத்தில் கொசு கடித்து உயிர்க்கொல்லி வைரஸோ அல்லது ஆண்மைக்குறைவோ வந்தால் மட்டும்தான் சூழலைக் காத்து சுகாதாரத்தை மீட்க முயல்வோமோ!?

- பரிமாறுவேன்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism