Published:Updated:

வேடிக்கை பார்ப்பவன் - 20

நா.முத்துக்குமார், ஓவியங்கள்: செந்தில்

வேடிக்கை பார்ப்பவன் - 20

இளவேனிற் காலம்

 இதற்கு மேல் உருள முடியாது
கல் நதியைவிட்டு கரையேறிற்று.
இதற்கு மேல் வழ வழப்பாக்க முடியாது
கல்லை ஒதுக்கிவிட்டு
நதி ஏகிற்று!

-  கல்யாண்ஜி

த்திரிகையில் வேலை செய்தாலும், இவனது தீராக்காதல் சினிமா மீதே இருந்தது. ஒரே நேரத்தில் இரண்டு குதிரைகளின் மேல் சவாரி செய்வது தேசிங்குராஜனாலும் முடியாத ஒன்று என்று இவன் கண்டுகொண்ட காலம் அது.

'குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டுபவன்’ என்றொரு பழமொழி உண்டு. 'ஒரே இடத்தில் சுற்றிக்கொண்டு இருப்பவன்’ என்று அதற்கு பொருள் சொல்வார்கள். இவனும் அப்படித்தான் நம்பிக்கொண்டிருந்தான். இவன் மூன்றாம் வகுப்புப் படிக்கும்போது, தன் நண்பன் ஒருவனைப் பற்றி குறிப்பிட இந்தப் பழமொழியை, அப்பாவிடம் சொன்னான். அவர் இவனிடம் தெளிவுபடுத்தினார், ''அதன் அர்த்தம் அப்படியல்ல... குன்று செடியில் குதிரை ஓட்டுபவன் என்பதுதான் அந்தப் பழமொழிக்குப் பொருள். குன்றின் மீதே குதிரை ஓட்டும் திறமைக்கு எடுத்துக்காட்டாகச் சொல்லப்பட்ட இந்தப் பழமொழி, திறமையின்மைக்கு உதாரணமாக மருவி வழங்கப்படுகிறது!'' என்று இவன் தந்தை சொல்ல, அதற்குப் பின்தான், இவன் அறிந்தான், இதைப் போல மருவிப் பொருள்கொண்ட 20,000 பழமொழிகளை அவர் சேகரித்துவைத்திருக்கிறார் என்று.

குன்றில் ஏறி குதிரை ஓட்டுவது போலத்தான் இவன் சினிமாக் கனவுகள் இருந்தன. இரண்டு குதிரைகளில் ஒரே நேரத்தில் சவாரி செய்யும் சாகசத்தைத் தவிர்த்துவிட்டு, இவன் சினிமா எனும் கனவுக் குதிரையில் தாவிக் குதித்தான். ஆயினும், அந்தக் குதிரை இவன் வசப்பட பத்திரிகைகளே அந்தக் காலத்தில் துணையாக இருந்தன. 'சிறுகதைக் கதிர்’, 'இனிய உதயம்’, 'தமிழரசி’, 'புதிய பார்வை’, 'சுபமங்களா’, 'ராஜரிஷி’... எனப் பல்வேறு பத்திரிகைகளில் ஃப்ரீலேன்ஸ் பத்திரிகையாளனாகப் பணியாற்றிக்கொண்டே சினிமாக் குதிரையைத் துரத்திக்கொண்டிருந்தான்.

சம்பளம் கம்மி என்றபோதிலும், முழுநேரப் பத்திரிகையாளனைவிட, ஃப்ரீலேன்ஸ் பத்திரிகையாளனுக்கு சுதந்திரம் அதிகம். வாரத்தில் ஒரு நாள் வேலை செய்தால் போதும். மீதி ஆறு நாட்களை எப்படிக் கழிப்பது? இவன் தகப்பன், பள்ளியில் தமிழ் வகுப்பு எடுக்கும் ஆசிரியன். தன் பிள்ளை ஒரு நாளாவது, ஏதோவொரு கல்லூரியில், வகுப்பு எடுக்க வேண்டும் என்பது அவனது தீராத கனவு. தன் கனவையும், தகப்பனின் கனவையும் இவன் நிறைவேற்றத் தலைப்பட்டான்.

வேடிக்கை பார்ப்பவன் - 20

ப்படித்தான் நண்பர்களே... இவன் சென்னை பச்சையப்பன் கல்லூரியில், எம்.ஏ., தமிழ் இலக்கியப் பாடப் பிரிவுக்கு விண்ணப்பித்தான். 'பச்சையப்பன் படிக்கட்டும் பைந்தமிழ் பாடும்’ என்பார்கள். 'முதலில் பச்சையப்பன் படிக்கட்டும்... அப்புறம் பைந்தமிழ் பாடட்டும்...’ என்று அதன் தொனியை மாற்றிச் சொன்ன அந்தக் கல்லூரியின் தத்துவத் துறை பேராசிரியர் பெரியார்தாசனை, இவன் பின்னாட்களில் அறிந்துகொண்டான். அவரது நாத்திகப் பேச்சுகளைக் கேட்பதற்காகவே இவன் தகப்பன் இவனை சைக்கிளில் அமரவைத்து, பனிகொட்டும் இரவுகளில் அழைத்துச்சென்றது இப்போது நினைவுக்கு வருகிறது.

பச்சையப்பன் கல்லூரியில், இவன் படிக்க விரும்பியதன் காரணம், அது பேரறிஞர் அண்ணா படித்த கல்லூரி. அண்ணா மட்டுமா? அரசியல், இலக்கியம், விஞ்ஞானம்... என எந்தத் துறையை எடுத்தாலும் பச்சையப்பன் கல்லூரியில் படித்த மாணவர்கள் அங்கு இருப்பார்கள். ஆர்ம்ஸ்ட்ராங் செல்வதற்கு முன்பே, நிலவில் வடை சுட்ட பாட்டியின் முதல் வடையை வாங்கியவன், பச்சையப்பாஸ் ஸ்டூடன்ட்தான் என்ற கர்வம், பச்சையப்பன் மாணவர்களுக்கு உண்டு. அந்தக் கர்வத்தில் இவன் கலந்துகொள்ள விரும்பினான்.

ச்சையப்பன் கல்லூரியின் தமிழ்த் துறையில் காலை நேர வகுப்பு, மாலை நேர வகுப்பு இரண்டுக்கும் சேர்த்து 50-க்கும் கீழான சீட்டுகளே இருந்தன. அந்த வருடம் 400-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் குவிந்திருந்தன. இவன் காலை நேர வகுப்பில் படிக்க விரும்பினான். அதற்கு, கடும் போட்டி. அதே கல்லூரியில் இளங்கலை தமிழ் இலக்கியம் படித்த மாணவர்களுக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்படும் என்பதை இவன் அறிந்திருந்தான். தவிர, இவன் இளங்கலையில் இயற்பியல் படித்திருந்ததால், வேறு பாடப்பிரிவு என்று நிராகரிக்கப்படும் சாத்தியங்களும் இருந்தன.

அதுவரையில் பத்திரிகையில் இவன் எழுதி வெளிவந்த 500-க்கும் மேற்பட்ட படைப்புகள் அடங்கிய ஃபைலையும், இவனது முதல் கவிதைத் தொகுப்பையும் எடுத்துக்கொண்டு தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் தெ.ஞானசுந்தரம் அவர்களைச் சந்தித்தான். காஞ்சி பச்சையப்பனில் இவனுக்குத் தமிழ் வகுப்பு எடுத்த பேராசிரியர் எஸ்.குருசாமி இவனை அவரிடம் அறிமுகப்படுத்திவைத்தார். ''இவன் நல்லாக் கவிதை எழுதுவான் சார். சயின்ஸ்ல 90 பெர்சன்ட் மார்க் எடுத்துட்டு, தமிழ் படிக்கணும்னு வந்திருக்கான். நிச்சயம் இவனுக்கு நீங்க சீட் கொடுக்கணும்'' என்று குருசாமி சார் சொல்ல, முனைவர் தெ.ஞா., இவனை மேலும் கீழுமாகப் பார்த்தார். ''தம்பி... மதியம் ரெண்டு மணிக்கு என்னைத் தனியா வந்து பாருங்க'' என்று சொல்லிவிட்டு, வகுப்பு எடுக்கப் போனார்.

வேடிக்கை பார்ப்பவன் - 20

இவன் கல்லூரியின் கட்டடங்களையும், மரங்கள் அடர்ந்த மைதானத்தையும் சுற்றி வந்தான். பேரறிஞர் அண்ணா, கணிதமேதை ராமானுஜன் என்று எத்தனை எத்தனை மேதைகள் படித்த கல்லூரி இது. எப்படியாவது இங்கு இடம் கிடைக்க வேண்டும் என்று மனது துடித்துக்கொண்டிருந்தது.

சரியாக 2 மணிக்கு முனைவர் தெ.ஞா., முன்பு நின்றான். ''தம்பி உங்களை என் பையனா நெனச்சுச் சொல்றேன், பிசிக்ஸ்ல இவ்ளோ மார்க் எடுத்திருக்கீங்க. எதுக்கு தமிழ் படிச்சுக் கஷ்டப்படப்போறீங்க! பேசாம அறிவியல்லயே மேற்படிப்பு தொடருங்க'' என்று அவர் சொல்ல, ''இல்ல சார், எனக்கு பி.டெக் சீட் கெடைச்சது. அது வேணாம்னு ஒதுக்கிட்டு தமிழ் படிக்கலாம்னு வந்திருக்கேன். சீட் கொடுப்பீங்களா... மாட்டீங்களா?'' என்று தீர்மானமாகக் கேட்டான்.

அவர், இவன் கண்களை ஒருசில விநாடிகள் உற்றுப் பார்த்துவிட்டு, இவன் விண்ணப்பத்தைத் தேடி எடுத்து பச்சை இங்க்கில் ஏதோ எழுதி ''பிரின்ஸிபாலைப் போய்ப் பார்த்துட்டு ஆபீஸ்ல ஃபீஸ் கட்டிடுங்க. அடுத்த வாரம் வகுப்பு ஆரம்பம்'' என்றார்.

இவன் நன்றி சொல்லிவிட்டுத் திரும்பும்போது, ''ஒரு நிமிஷம் தம்பி'' என்று மீண்டும் அருகில் அழைத்தார். இவன், ''சொல்லுங்க சார்'' என்றான். ''சும்மா உங்க உறுதியைச் சோதிக்கத்தான் அப்படிச் சொன்னேன். ஒழுங்காப் படிச்சா தமிழ் எவனையும் தெருவுல நிக்கவெக்காது. ஓய்வா இருக்கும்போது வாங்க. நான் ரசிச்ச நூற்றுக்கணக்கான பாடல்களைக் குறிச்சுக் கொடுக்கிறேன். அதைப் புரிஞ்சுக்கிட்டு மனப்பாடம் பண்ணா மட்டும் போதும். வாழ்ற வரைக்கும் நீங்க பேசியே பொழச்சிக்கலாம்'' என்றார். இவன் சட்டென்று அவர் பாதங்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினான். இவனைத் தூக்கி எழுப்பிய அவர் கண்கள் ஏனோ கலங்கி இருந்தன.

முதல் நாள் கல்லூரிக்குள் நுழைந்தபோது, வள்ளுவனும் கம்பனும் வானத்தில் இருந்து இவன் மேல் பூக்களைத் தூவினார்கள். இவன் தொன்ம பாட்டன் தொல்காப்பியன் தொடுவானத்தின் தொலைதூரத்துக்கு அப்பால் இருந்து, இவனுக்கு வாழ்த்துத் தந்தி அனுப்பியிருந்தான். கபிலரும் பரணரும் காற்றில் அரூபமாக மிதந்துவந்து இவனை வகுப்பறையில் அமரவைத்தார்கள்.

இவனைப் போல பாக்கியம் செய்தவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. தேர்ந்த ஆசான்களிடம் இவன் தமிழ் கற்றான். பேராசிரியரும் கவிஞருமான குருவிக்கரம்பை சண்முகம், பேராசிரியரும் இயக்குநருமான ஏ.எஸ்.பிரகாசம், பேராசிரியர் கவிஞர் மு.பி.பாலசுப்பிரமணியம், பேராசிரியர் விமர்சகர் ராம.குருநாதன், பேராசிரியர் ரா.தட்சிணாமூர்த்தி, பேராசிரியர் ஜெயப்பிரகாசம்... எனப் பல துரோணாச்சாரியார்கள் இவனுக்குச் சொல் வித்தையைக் கற்றுக்கொடுத்தார்கள்.

அவர்கள் கைப்பிடித்து இவன் தொல்காப்பியனின் மரபியல் அறிந்தான்; வள்ளுவனின் வாழ்வியல் உணர்ந்தான்; கம்பனின் விருத்தத்திலும், கபிலனின் குறிஞ்சியிலும், அப்பரின் ஆன்மிகத்திலும், திருஞானசம்பந்தனின் மெய்சிலிர்ப்பிலும், இளங்கோவடிகளின் அறச்சீற்றத்திலும், கலிங்கத்துப்பரணியின் களியாட்டத்திலும், குற்றாலக்குறவஞ்சியின் குரங்காட்டத்திலும், அருணகிரிநாதரின் சந்தத்திலும், சித்தர் பாடல்களின் கோபத்திலும், இவன் முங்கி முக்குளித்தான்.

காஞ்சி இலக்கிய வட்டம் மூலமாகவும், இவன் தந்தை மூலமாகவும் ஏற்கெனவே நவீன இலக்கிய எழுத்துகள் இவனுக்குப் பரிச்சயம் ஆகியிருந்தன. இப்போது சங்க இலக்கிய நதியிலும் நீந்தத் தொடங்கினான். இப்படித்தான் இந்த மரம் தன் ஆழத்து வேர்களையும், ஆகாயத்தை உரசும் கிளைகளையும் அறிந்துகொண்டு பூப்பூக்கத் தொடங்கியது.

வேடிக்கை பார்ப்பவன் - 20

ஒரு மாணவன் வேதியியல் படித்தால், அந்தப் பாடப்புத்தகம் வேதியியலை மட்டும்தான் கற்றுத் தரும். இப்படித்தான் கணிதமும், இயற்பியலும், கணிப்பொறியும், பொறியியலும், மருத்துவமும் அந்தந்தத் துறையைச் சார்ந்த அறிவை மட்டுமே வளர்க்கும். ஆனால், இலக்கியம் மட்டுமே வாழ்க்கையைச் சொல்லிக்கொடுக்கும். சகமனிதர்கள் மீதான மனித நேயத்தை, தோல்விகளைத் துரத்தும் தன்னம்பிக்கையை, புல் நுனியில் தூங்கும் பனித்துளியின் அழகியலை வேறு எந்தப் பாடம் சொல்லிக்கொடுக்கும்? இவன் கண்ணீர் மல்கி கசிந்துருகிக் காதலித்து தமிழ் கற்றான்.

ச்சையப்பன் கல்லூரியைப் பற்றி நினைக்கும்போது அதன் நூலகம் இவன் கண் முன் வருகிறது. அந்துப் பூச்சிகளுக்கு விடுதலை அளித்து இவன் நூற்றுக்கணக்கான புத்தகங்களை அங்கு தேடித் தேடிப் படித்தான். இவன் கல்லூரியில் சேர்ந்த அடுத்த மாதம் நாவலர் போட்டிக்கான அறிவிப்பு, நோட்டீஸ் போர்டில் ஒட்டப்பட்டது. அப்போது சென்னையில் அனைத்துக் கல்லூரிகளுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டி... எனப் பல்வேறு கல்லூரிகளில் போட்டிகள் நடக்கும். ஒரு கல்லூரியில் இருந்து இரண்டு மாணவர்கள் மட்டுமே அதில் பங்கேற்க முடியும். அந்த இரண்டு பேரைத் தேர்ந்தெடுப்பதற்காக பச்சையப்பன் கல்லூரியில் 'நாவலர் போட்டி’ என்று ஒன்றை நடத்துவார்கள். போட்டிக்கு அரை மணி நேரம் முன்பு ஏதோவொரு தலைப்பு கொடுத்து கவிதையோ, பேச்சோ, ஓவியமோ, அந்தந்தத் துறையில் இரண்டு பேரைத் தேர்ந்தெடுப்பார்கள். இவன் கவிதைப் போட்டிக்குத் தன் பெயரைப் பதிவுசெய்துவிட்டு 'என்ன தலைப்பு கொடுப்பார்கள்?’ என்ற பதற்றத்துடன் காத்திருக்கத் தொடங்கினான்.

- வேடிக்கை பார்க்கலாம்...