Published:Updated:

‘ஹமாரா எம்.பி.’

‘ஹமாரா எம்.பி.’

‘ஹமாரா எம்.பி.’

‘ஹமாரா எம்.பி.’

Published:Updated:
‘ஹமாரா எம்.பி.’

சென்னையில் இருந்து 14 மணி நேரம் சார்மினார் எக்ஸ்பிரஸில் பயணித்து ஹைதராபாத். அங்கிருந்து ஐந்து மணி நேர பஸ் பயணத்தில் பிதார் மாவட்டம் - ஓம்னாபாத் என்ற ஊரில் அந்தக் குடிசைக்கு நாம் போய்ச் சேர்ந்தபோது விடிந்திருந்தது. கையில் சொம்புத் தண்ணீரும் கருவேலங் குச்சியுமாகப் பல் துலக்கிக்கொண்டிருந்தார் அந்தப் பெரியவர்.

 ''இந்த ஏழையைத் தேடிக்கொண்டு அவ்வளவு தூரத்தில் இருந்தா வருகிறீர்கள்? மிகவும் மகிழ்ச்சி!'' என்று இந்தியில் கைகூப்புகிறார் இந்தியாவின் சீனியர் எம்.பி.ராமச்சந்திர வீரப்பா. 86 வயசு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அண்மையில் நடந்த தேர்தலில் 1,84,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற பா.ஜ.க. ஆள். ஏரியாவில் யாரும் அவரைப் பெயர் சொல்லிக் குறிப்பிடுவது இல்லை. 'ஹமாரா எம்.பி.’ என்றுதான் சொல்வோம்’ என்று ஆர்வத்துடன் பதில் வருகிறது.

‘ஹமாரா எம்.பி.’

ஒரு முறை எம்.பி-யானவர்கள் அடுத்த தேர்தலில் தொகுதிக்குள் நுழைய முடியாமல் தவிக்கும் காலத்தில், இவர் ஐந்தாவது முறையாக எம்.பி.! ''எப்போதும் அவர் எங்க எம்.பி-தான்!'' என்று மக்கள் நிச்சயப்படுத்திச் சொல்லும் அளவுக்கு இவரது சாதனைதான் என்ன?

ராமச்சந்திர வீரப்பா, அடிப்படையில் ஒரு விவசாயி. டெல்லிக்குப் போனாலும் ஊருக்கு போன் போட்டு 'நிலத்துக்குத் தண்ணீர் பாய்ச்ச ஆட்கள் போயாச்சா... பூச்சிமருந்து அடிச்சாச்சா?’ என்று எஸ்.டி.டி-யில் பேசுகிற விவசாயி.

மாடு கட்டும் தொழுவம்போல் இருக்கும் இருளடைந்த முன் அறை. சுவரில் இருந்த புகைப்படங்களில் பண்டித ஜவஹர்லால் நேருஜி, நீலம் சஞ்சீவரெட்டி, நிஜலிங்கப்பா, பாபு ஜெகஜீவன் ராம், கர்மவீரர் காமராஜர், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், வி.வி.கிரி, இந்திரா காந்தி... என்று பல தலைவர்களுடன் ராமச்சந்திர வீரப்பா உள்ள காட்சிகள்.

‘ஹமாரா எம்.பி.’

முன் அறையைத் தாண்டி ஒரு திறந்த முற்றம். பக்கத்து அறை... சாணம் மெழுகிய தரை. உயரம் குறைவான ஒரு மரக்கட்டில் கொசுவலை கட்டிக்கிடக்கிறது. தலைமாட்டில் ஒரு துப்பாக்கி (இரட்டைக்குழல்), புல்லட்கள் கொண்ட பெல்ட்டை மாட்டிக்கொண்டு எம்.பி. நமக்கு தமாஷாக ஒரு போஸ் கொடுத்தார்.

''நான் 12 வயதில் அரசியலுக்கு வந்தவன். தொடக்கத்தில் ஆரிய சமாஜத்தில் சேர்ந்து தேச விடுதலைக்காகப் பாடுபட்டவன். பல வருடங்களை சிறையில் கழித்திருக்கிறேன். நிஜாம் போலீஸாரிடம் இருந்து இந்து பெண் ஒருவரைக் காப்பாற்றியபோது என்னைத் துரத்தியது போலீஸ். சரமாரியாகச் சுட்டார்கள். ஒரு குண்டு என் வயிற்றில் பாய்ந்து, குடல் சரிந்துவிட்டது. உயிர் பிழைத்தது ஆச்சரியம். ஒரு துப்பாக்கி என் தற்காப்புக்குத் தேவை என்று அப்போது வாங்கியது. இப்போது எனக்கு துப்பாக்கி தேவை இல்லைதான்.  ஆனாலும் பழக்கமாகிவிட்டது சகோதரா... அது ஒரு கம்பீரம்!''

எம்.பி., நம்மை இன்னோர் அறைக்குக் கூட்டிப்போனார். நெல் கொட்டிவைக்கும் பெரிய பானைகள் உள்ள ஓர் அறை. மூலையில் நீளமான மூன்று ஈட்டிகள். அந்த ஈட்டியை எம்.பி., 'பாலா’ என்று குறிப்பிட்டார். ''அந்தக் காலத்தில் பாலா வைத்துச் சண்டைபோடுவது வெகு பிரசித்தம். நான் பாலா சண்டையில் கெட்டிக்காரன்!'' என்று தோள்தட்டுகிறார். கிண்ணென்று விம்முகிற உடம்பு. ''நான் மண்ணில் உழைக்கிறவன். நாளுக்கு 15 மணி நேரம் வேலை பார்க்காவிட்டால், அன்று ரொட்டி இறங்காது!''

குல்பர்காவில் வசிக்கும் பி.எஸ். அன்வர்க்கர் டெபுடி ஹெல்த் எஜுகேஷன் ஆபீஸராம். அவர் ஏதோ வேலையாக எம்.பி-யிடம் வந்திருந்தார். ''ஹமாரா எம்.பி., இதோ இந்த மரத்தடியில் கயிற்றுக்கட்டிலில்தான் படுப்பார். நடுராத்திரியில் உதவி கேட்டு வந்தால்கூட, உடனே எழுந்து அவர்களுடன் கிளம்பிவிடுவார். 'இன்டர்வியூ வந்திருக்கு. சிபாரிசு செய்யுங்க’னு எதிர்க் கட்சிக்காரன் பிள்ளை வந்தாலும் உடன் சென்று சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் நேரடியாக ஒரு வார்த்தை சொல்லிவிட்டுத்தான் வருவார்.

‘ஹமாரா எம்.பி.’

பஸ், கார் போன்ற வாகனங்கள் இல்லாவிட்டால், நடந்துபோகவும் தயங்க மாட்டார். பிதார் தொகுதியில் அது பெரிய கலவரமானாலும் சரி, குடும்பப் பிரச்னையானாலும் சரி... விஷயம் தெரிந்தால் நேரடியாக அங்கு ஆஜராகிவிடுவார். அன்போடு இரு தரப்பையும் அரவணைத்துப் பேசி, நியாயமான முடிவை ஏற்கப் பண்ணிவிடுவார்'' என்கிறார்.

எம்.பி., இதுவரை காபியோ, டீயோ சாப்பிட்டது கிடையாது. வீட்டில் விரும்பிச் சாப்பிடுவது சோள மாவில் சுட்ட ரொட்டி. எம்.பி., டெல்லிக்குப் போனால் ரொட்டி சுட்டுப் போட ஒரு சிறுவனும் உடன் வருவான். ஹோட்டலில் சாப்பிடுவது இல்லை என்று ஒரு விரதம்!

''ஒரு பைசாகூட வாங்காமல் எல்லா உதவிகளையும் செய்கிற ஒரு எம்.பி. வேற யார் இருக்கா இந்த நாட்டுல?'' என்று நெகிழ்கிறார் தொலைபேசி நிறுவனத்தில் வேலை செய்யும் விஸ்வநாத சார்தகி.

பஞ்சக்கச்ச வேட்டி, வெள்ளை முழுக்கைச் சட்டையை மறைத்த கறுப்பு கோட் சகிதம் ராமச்சந்திர வீரப்பா வெளியில் வந்தார்.

‘ஹமாரா எம்.பி.’

''தமிழ்நாட்டில் ஸ்ரீ சங்கராச்சார்ய சுவாமிகளைப் போல இங்கு 25 கி.மீ. தூரத்தில் பஸவகல்யாண் என்ற தலத்தில் ஸ்ரீபஸவேஸ்வர்ஜி என்ற இந்து மத முனிவர் வாழ்ந்து வந்தார். நான் அவருடைய பக்தன். ஆனால், முஸ்லிம் மக்கள், கிறிஸ்தவ மக்கள் அனைவரையும் நெஞ்சார நேசிப்பவனும்கூட.  இங்கு இந்து - முஸ்லிம் இருவருமே ஒற்றுமையுடன், குடும்பப் பாசத்துடன் விளங்குவோம். உங்கள் கோயம்புத்தூர் போல இல்லை. ஏன் அங்கு இப்படியெல்லாம் நடக்கிறது?'' என்று வேதனையோடு நம்மிடம் கேட்டார் எம்.பி.

'பிதார்’ என்று பெயர் வந்ததற்கு எம்.பி. நமக்கு விளக்கம் அளித்தது சுவாரஸ்யமான தகவலாக இருந்தது. மகாபாரதக் கதையில் வரும் விதுரரின் பெயரால் 'விதுர நகர்’ என்று அழைக்கப்பட்டு அதுதான் 'பிதார்’ என்று மருவியதாகக் குறிப்பிடுகிறார். ஏராளமான பழைய கோட்டை, கொத்தளங்கள் இடிபாடுகளுடன் இந்த மாவட்டத்தில் காணக் கிடைக்கின்றன.

''விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட நீங்கள் இப்போது விடுதலையடைந்த தேசத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறீர்கள் உங்கள் குறிக்கோள் என்ன?''

''சக்தி வாய்ந்த பாரதம். ஊழலற்ற, நேர்மையான அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்தான் இந்த நாட்டுக்கு இன்றைய அத்தியாவசியத் தேவை. மற்றவர்களைத் திருத்துவது ஒரு பக்கம் இருக்கட்டும். நான் 'என்’னில் இருந்து ஒரு நல்ல வாழ்வை உருவாக்கிக்காட்ட முடியும் அவ்வளவுதான். எனக்கு இந்தக் கயிற்றுக் கட்டிலே பஞ்சு மெத்தை. கருவேல மரத்தின் காற்றே ஏர்கண்டிஷன் வசதி.''

அருகில் இருந்த ஒரு பெரியவர் சொன்னார். ''எம்.பி-யின் மகன் சுபாஷ் ஒருமுறை குடித்துவிட்டு சண்டை போட்டு, வெளியில் ஒருவன் கழுத்தைக் கத்தியால் கீறிவிட்டான். அப்போது எம்.பி. 'தன் மகன் மீது கேஸ் போட வேண்டாம்’ என்று ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் போலீஸ் விட்டிருக்கும். எம்.பி., என்ன செய்தார் தெரியுமா? போலீஸுக்கு போன் செய்து, 'என் மகன் என்பதற்காக ஏதாவது போலீஸில் சலுகை காட்டினால் நான் உங்களை சும்மா விட மாட்டேன்!’ என்று மிரட்டினார். கடைசியில் அவரது மகன் ஐந்து வருட சிறைவாசம் அனுபவித்துவிட்டுத்தான் வந்தான். இதுதான் எங்க எம்.பி.!''

- ஜே.வி.நாதன்

படங்கள்: 'சூப்பர்’ செல்வம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism