Published:Updated:

அதான் நாகேஷ்!

அதான் நாகேஷ்!

விகடன் மேடை - கே.எஸ்.ரவிகுமார் பதில்கள் வாசகர் கேள்விகள்

அதான் நாகேஷ்!

விகடன் மேடை - கே.எஸ்.ரவிகுமார் பதில்கள் வாசகர் கேள்விகள்

Published:Updated:
அதான் நாகேஷ்!

வெங்கடேசன், சென்னை.

''ஜெயலலிதாவுக்கும் ரஜினிக்கும் உச்சகட்ட உரசல் இருந்த சமயம், 'முத்து’ படத்தில் சில சீண்டல் வசனங்கள் இடம் பெற்றன. அதைப் படமாக்கும் சமயம் ரஜினி என்ன சொன்னார்? கொஞ்சம் மனம் திறந்து பேசுங்களேன்...''

''என்ன சார்... சிண்டு முடியப் பார்க்கிறீங்களா? அதுக்கு நான் ஆள் இல்லை!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கண்ணப்பன், ஆரணி.

''சினிமாவில் உதவி இயக்குநராக இருந்துதான் டைரக்டராகி இருக்கிறார்கள். அப்புறம் ஏன் இயக்குநரான பிறகு உதவி இயக்குநர்களைப் பலரும் உதாசீனம் செய்கிறார்கள்?''

''அதுக்குப் பேர் உதாசீனம் கிடையாது. ஓர் ஆசிரியர் மாணவன்கிட்ட பழகுற முறை. அதை உதாசீனம்னு நினைச்சிட்டா, அவங்க 'அன்ஃபிட் ஃபார் சினிமா’னு அர்த்தம்.

ஒரு வாத்தியார், மாணவனுக்கு ஒரு கணக்குச் சொல்லித்தர்றார்னு வெச்சுக்கங்க. முதல் நாள் அந்தக் கணக்கைத் தப்பாப் போட்டுவந்தா சொல்லித் திருத்துவார்; அடுத்த நாளும் தப்பாவே போட்டுவந்தா, குட்டுவார்; மூணாவது நாளும் தப்புனா 'உனக்கு அக்கறையே இல்லை... வெளியில போய் முட்டிக்கால் போடு’னு திட்டுவார். இதுக்கு என்ன அர்த்தம்? அந்த மாணவனை, ஆசிரியர் உதாசீனப் படுத்தினார்னு சொல்லுவோமா?  அதேபோல்தான் சினிமாவும். எல்லாத்தையுமே சாஃப்ட்டா சொல்லிட்டு இருந்தா, உதவி இயக்குநர்களால் சினிமாவே கத்துக்க முடியாது.  

நான் அசிஸ்டென்ட்டா இருக்கும்போது, நிறையத் திட்டு வாங்கியிருக்கேன்; அடியும் வாங்கியிருக்கேன். E.ராம்தாஸ், ஸ்ரீபாலாஜி எல்லாம் என்னை அடிச்சிருக்காங்க. இத்தனைக்கும் ஸ்ரீபாலாஜிக்கு, நான் சில உதவிகள் பண்ணியிருக்கேன். ஆனால், ஸ்பாட் எமோஷனல்னு ஒண்ணு இருக்கு. சமயத்துல திட்டிட்டோ, அடிச்சிட்டோ அவர் ஃபீல் பண்ணுவார். 'நீங்க வேற சார், நல்லதுக்குத்தானே சொல்றீங்க; அடிச்சீங்க’ம்பேன். அதுக்கெல்லாம் வருத்தப்பட்டா, எந்த வேலையும் செய்ய முடியாது. என்னிடம் வேலை செய்த, நான் திட்டும்போது வருத்தப்பட்டவர்களே, அடுத்து இயக்குநர் ஆகும்போது தன் உதவி இயக்குநர்களைத் திட்டிருப்பாங்க. வெளிய இருந்துட்டு 1008 விஷயங்கள் பேசலாம், உள்ளே இறங்கி வந்தாத்தான், விஷயம் புரியும்!''

பார்த்திபன் விஜய், ஃபேஸ்புக்.

''நீங்கள் இயக்கிய படங்களில், எந்தப் படத்தை இப்போது பார்ட்-2 எடுக்கலாம்?''

''ஹிட் அடிச்ச எல்லாப் படங்களையும்! ஏன்னா, ஓடி ஜெயிச்சக் குதிரை மேல எப்பவும் நம்பி பந்தயம் கட்டலாம். அதனால 'சேரன் பாண்டியன்’ தொடங்கி 'நாட்டாமை’, 'முத்து’, 'அவ்வை சண்முகி’, 'படையப்பா’, 'பஞ்சதந்திரம்’, 'தெனாலி’, 'வில்லன்’, 'வரலாறு’, 'நட்புக்காக’, 'தசாவதாரம்’, 'பிஸ்தா’, 'ஆதவன்’ வரை எல்லாப் படங்களையுமே பார்ட்-2 எடுக்கலாம்!''

அதான் நாகேஷ்!

சீனிவாச கிருஷ்ணன், ஃபேஸ்புக்.

 '' 'அவ்வை சண்முகி’ படப்பிடிப்பு சமயத்தில் நாகேஷை இயக்கிய அனுபவங்களைச் சொல்லுங்களேன்?''

''நாகேஷ் பத்தி நாள் முழுக்கப் பேசிட்டே இருக்கலாம். படத்துல கமல் சாருக்கு பெண் வேஷம். அதுவும் மடிசார் மாமி கேரக்டர். மடிசார் கட்டினா பாதம், கால் எல்லாம் பளிச்னு தெரியும். அதனால கால் முடியை ஷேவ் பண்ணணும். அதையே ஒரு ஷாட்டா வெச்சா நல்லா இருக்கும்னு யோசிச்சோம். அது சைலன்ட் ஷாட். அதனால நாகேஷ்கிட்ட, 'சார்... முதல்ல கமல் சார் முகத்தை ஷேவ் பண்ணிட்டு, கண்ணாடி பார்த்து அழுவார். நீங்க அதட்டி சமாதானப்படுத்திட்டு அடுத்து கை, கால்ல இருக்குற முடியை ஷேவ் பண்ணிட்டு கமல் சார்கிட்ட 'ஓ.கே-வா?’னு கேட்கிறீங்க. அவர் ஓ.கே. சொல்லணும்’னு சொல்லிட்டேன். ஷாட் போயிட்டோம்.

கேமரா ரோல் ஆகிட்டு இருக்கிறப்ப, கமல் சார் காலை நாகேஷ் சார் ஷேவ் பண்ணிட்டு பக்கத்துல இருந்த கண்ணாடியை எடுத்து கால் தெரியிற மாதிரி காமிச்சு, 'ம்... ஓ.கே-வா?’னு கேட்டார். அதைப் பார்த்து கமல் சார் தலைல அடிச்சுக்க, நாங்க பயங்கரமாச் சிரிச்சுட்டோம். ஆனா, அந்த டைமிங் சென்ஸ் நல்லா இருக்கவும் அதை அப்படியே படத்துல வெச்சுட்டோம். மேக்கப்மேனோ, பொணமோ தன்கிட்ட கொடுத்த கேரக்டரை அவ்வளவு அழகா ஜஸ்ட்டிஃபை பண்ணுவ£ர் நாகேஷ். அதான் நாகேஷ்!''

உதயசூரியன் சின்னதுரை, ஃபேஸ்புக்.

'' 'புரியாத புதிர்’ கே.எஸ்.ரவிகுமார் இன்னும் இருக்கிறாரா... இல்லை அவரைக் காணாமலே அடித்துவிட்டீர்களா?''

''முழுதாக இல்லாவிட்டாலும் அங்கங்கே கொஞ்சம் கொஞ்சம் இருக்கிறார். அதனாலதான் என்னால் 25 வருஷமா ஃபீல்டுல இருக்க முடியுது. இதே கேள்வியை அதிகமான பேர் என்கிட்ட கேட்டிருக்காங்க. கதைக்கு ஏத்த மாதிரிதானே ஸ்கிரிப்ட் பண்ண முடியும்? ஆனால், மாஸ் ஹீரோ, கமர்ஷியல்னு ஆன பிறகு சுத்தமா கமர்ஷியல் இல்லாமல் கதை பண்ண முடியலை. இனி துளிக்கூட கமர்ஷியல் இல்லாம 'புரியாத புதிர்’ மாதிரி ஒரு படம் பண்றது கஷ்டம்னுதான் தோணுது!''

அன்வர் பாஷா, ஆம்பூர்.

''பிறர் கதைகளையே பெரும்பாலும் படமாக இயக்கி இருக்கிறீர்கள்... நீங்கள் சொந்தமாக கதை யோசிக்க மாட்டீர்களா?''

''அதுக்குக் காரணம், மத்தவங்களோட கதைகளில் என்ன குறை இருக்குன்னு பளிச்சுனு கண்டுபிடிக்கலாம். அதை சரிபண்ணலாம். நம்ப கதையில யாராவது குறை சொன்னால் மனசு ஏத்துக்காது. 'நான் சொல்றதுதான் சரி’னு சாதிச்சுக்கிட்டே இருப்போம். மத்தவங்க கதை எவ்வளவு பெருசா இருந்தாலும், அந்தக் கருவை மட்டும்தான் எடுத்துப்பேன். மீதியை நானே டெவலப் பண்ணிடுவேன். இந்தச் சுதந்திரம் நம்ம சொந்தக் கதையில இருக்காது. 'அப்போ இவன் கதையே யோசிக்க மாட்டான்போல’னு நினைச்சுடாதீங்க. ரஜினியின் 'கோச்சடையான்’ படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் நான்தான்!''

அருண்பாரதி, ஃபேஸ்புக்.

''தமிழ் சினிமாவில் தற்போது வில்லன் பற்றாக்குறை. நீங்கள் ஏன் மிரட்டல் வில்லனாக அவதாரம் எடுக்கக் கூடாது?''

''நான் நடிச்ச முதல் எட்டுப் படங்களில் வில்லனாத்தான் நடிச்சேன். அப்புறம் பெரிய ஹீரோக்களோட படங்கள் பண்ணும்போது நேரம் கிடைக்காததால், சும்மா ஒரு சீன், அரை சீன், பாட்டுல தலை காட்டுறதுனு நிறுத்திக்கிட்டேன். ஆனா, இனிமேல் என்னை ரசிகர்கள் வில்லனா ஏத்துப்பாங்களானு தெரியலையே? ஏன்னா, 'பொண்டாட்டி ராஜ்ஜியம்’, 'புருஷ லட்சணம்’ மாதிரியான படங்கள்ல ஹ்யூமர் ரோல் பண்ணி அது நல்லா ரீச் ஆகிருச்சு. இனி திரும்ப 'டாய்...டூய்’னு யாரையும் அதட்டினா எப்படி இருக்கும்னு தெரியலை!''

சண்முகப் பாண்டியன், திருத்தணி.

அதான் நாகேஷ்!

''ரஜினி உங்களை 'மேஸ்திரி’ என்றுதான் அழைப்பாராமே... அந்த அளவுக்கு அவரை விரட்டி விரட்டி வேலை வாங்குவீர்களா?''

''யார்கிட்ட எந்த வேலை கொடுத்தால் சரியா நடக்கும்னு தெரிஞ்சுக்கிட்டு, அவங்ககிட்ட வேலைகளைப் பகிர்ந்துகொடுப்பேன். அந்த  கோஆர்டினேஷன் வேலைகளை அவர் பார்த்து ரசிச்சிட்டு இருப்பார். பொதுவா தனக்குக் கீழ் ஏகப்பட்ட பேரை வெச்சு வேலை வாங்கிறவங்களை, தொழிலாளர்களும் சரி முதலாளிகளும் சரி 'மேஸ்திரி’னுதான் சொல்வாங்க. அப்படி நான் மேஸ்திரினா... அவர் முதலாளி!''

பாலா வி விக்னேஷ், ஃபேஸ்புக்.

''படப்பிடிப்பில் உங்களிடம் திட்டு வாங்காதவர்கள் யாரேனும் இருக்கிறார்களா?''

''நடிகர்கள்தான். அதுவும் முக்கியக் கதாபாத்திரங்கள் ஏற்று நடிக்கும் நடிகர்கள்தான். அந்த மாதிரி திட்டிடேன்னா காலம் காலமா இருக்கப்போற செல்லுலாய்டில் அது பிரதிபலிக்கும். தவிர, என் கோபம் யார் மனசையும் புண்படுத்தாது. என் கோபம் அந்தச் சமயத்துக்காக மட்டும்தான்கிறது என்கிட்ட திட்டு வாங்கியவங்களுக்கே தெரியும். 'ஆமாம்... நாம செஞ்சது தப்புதான்’னு உணர்ந்துடுவாங்க. அதேபோல தப்புப் பண்ணாதபோது திட்டிட்டேன்னா, அடுத்த நிமிஷமே மைக்ல எல்லார் முன்னாலயும் 'ஸாரி’ சொல்லிடுவேன்!''

ஹரி முருகன்ஜி, ஃபேஸ்புக்.

 ''புத்தகங்கள் வாசிப்பீர்களா... சமீபத்தில் வாசித்த புத்தகம் என்ன?''

''சின்ன வயசுல வாசிச்சதோட சரி. சினிமா பார்க்க ஆரம்பிச்ச பிறகு படிக்கிற பழக்கம் குறைஞ்சிடுச்சு. இப்ப நியூஸ் தெரிஞ்சுகிறதுக்காக தினசரி, வார இதழ் படிப்பேன். எவ்வளவோ மனிதர்களைப் பார்க்கிறோம். அவங்க வாழ்க்கையைப் படிக்கிறோம். இதெல்லாம்தான் நான் எடுக்கிற சினிமாவுக்குள் கொண்டுவருவேன். தவிர, இதுதான் கதைனு முடிவான பிறகு அதைப் பற்றிப் பேசுறோம்; எழுதுறோம்; டிஸ்கஸ் பண்றோம். அதனால என்னைப் பொறுத்தவரைக்கும் வாசிப்புக்கும் என் சினிமாவுக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால், வாசிப்புப் பழக்கம் ரொம்ப நல்லது!''

ரமா, சென்னை.

''பாலு மகேந்திரா..?''

''அவர் பற்றிச் சொல்ல ஆயிரம் விஷயங்கள் இருக்கு. படைப்பாளிகள் சங்கம் ஆரம்பிச்சக் காலகட்டத்தில்தான் அவர்கூட அதிகமாப் பழகினேன். அந்தச் சங்கம் அவரால்தான் தொடங்கப்பட்டது. இன்னைக்கு எல்லாரும் இணைஞ்சு வேலைசெய்றதுக்கு அவர் ஒரு முக்கியமான காரணம். அவருக்காக ஒரு யூனியன்லேர்ந்து இன்னொரு யூனியனுக்கு மாறுகிற அளவுக்கு இண்டஸ்ட்ரில அவ்வளவு மரியாதை வெச்சிருந்தாங்க; வெச்சிருக்காங்க. 'அவருக்காக நான் இறங்கறேன்’னு சொல்லித்தான் பாரதிராஜா, பாலசந்தர் எல்லாம் வந்தாங்க. அவங்க பின்னாடி நிறையப் பேர் வந்தாங்க. அந்தச் சமயத்துல அவர்கூட பழகும்போதுதான் அவர் மிகப் பெரிய அறிவாளினு புரிஞ்சுக்கிட்டேன். ஒரு திறமையான மனுஷனை இழந்துட்டோம்; பெரிய இழப்பு!''

சுந்தர், மதுரை.

''இளைஞர்கள், புதுமுகங்கள் நிரம்பித் ததும்பும் இப்போதைய தமிழ் சினிமா எப்படி இருக்கு?''

''ரொம்ப அருமையா அதேநேரத்துல வித்தியாசமாவும் இருக்கு. சுசீந்திரன், சற்குணம், 'எங்கேயும் எப்போதும்’ சரவணன்... இப்படி நிறையப் பேர் நல்ல நல்ல சினிமாக்கள் பண்றாங்க. புதுப்புது சிந்தனைகள் ப்ளஸ் டெக்னாலஜினு பிரமாதமான படங்களா வருது. ஆனா, இதெல்லாம் பத்தாது. இன்னும் நிறையப் பேர் வரணும்; நிறைய நிறையப் படங்கள் வரணும். அதான் என் ஆசை!''

கேசவன், விழுப்புரம்.

'' 'நாட்டாமை’யில் வேறு ஹீரோதான் நடிக்க இருந்தார் என்று சொல்வார்கள். அந்தக் கதை என்ன?''

'' 'ஹீரோ’ இல்லை... ஹீரோக்கள்! சௌத்ரி சார், ''நாட்டாமை’ கதையை சத்யராஜ்கிட்ட சொல்லுங்க. அவர் பண்ணா வித்தியாசமா இருக்கும்’னார். அப்ப சத்யராஜ் பீக்ல இருந்த நேரம். 'நாட்டாமை’ படத்துக்கு ஈரோடு சௌந்தர்தான் கதை. அவர் சொன்ன கதையில் மாற்றங்கள் பண்ண வேண்டி இருந்துச்சு. ஆனா, அதுக்கு நேரம் இல்லாம, சத்யராஜ்கிட்ட கதை சொல்ல சௌந்தரை அனுப்பினேன். கதையைக் கேட்டவர், 'நான் பண்ணலை’னு சொல்லிட்டார். பிறகு, சௌத்ரி சார் மம்மூட்டிக்குக் கதை சொல்லச் சொன்னார். 'அப்பா ரோல் பண்ண முடியாது. மகன் கேரக்டர் மட்டும் பண்றேன்’னார் மம்மூட்டி. பிறகு ராஜ்கிரண்கிட்ட சொன்னோம். அவருக்குக் கதை பிடிச்சிருந்துச்சு. ஆனா, சம்பளம் செட் ஆகலை. அப்புறம்தான் சௌத்ரி சார், சரத்குமார்கிட்ட கதை சொல்லச் சொன்னார். அவர், 'யார் டைரக்டர்?’னு மட்டும் கேட்டிருக்கார். 'ரவிகுமார்’னு சொன்னதும், கதையே கேட்கலை. 'ஓ.கே.’ சொல்லிட்டார்!''

- ஷாட் பிரேக்...

•  '' 'தசாவதாரம்’ படப்பிடிப்பில் உங்களால் மறக்க முடியாத சம்பவம்...''

• ''அனைவராலும் கவரப்பட்ட மறைந்த நடிகர் ரகுவரனைப் பற்றி...?''

• ''என்னதான் பணம், புகழ், செல்வாக்கு என சினிமாக்காரர்கள் பெற்றாலும் சராசரி சினிமா ரசிகனால் 'அவன், இவன்’ என்று ஒருமையில்தான் அழைக்கப்படுகிறார்கள். இதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?''

- அடுத்த வாரம்...

அதான் நாகேஷ்!

ன்பு வாசகர்களே... எங்களுடன் தொடர்புகொள்ளும்போது உங்கள் செல்போன் எண்/இ-மெயில் முகவரி குறிப்பிட மறக்காதீர்கள். உங்கள் படைப்புகள் எதுவானாலும் ஒரு பிரதி எடுத்துவைத்துக்கொண்டு அனுப்புங்கள். தபால் தலை மற்றும் சுயவிலாசமிட்ட உறை இணைக்க வேண்டாம். படைப்பு தேர்வாகாதபட்சத்தில் திருப்பி அனுப்ப இயலாது. இரண்டு மாதங்களுக்குள் எங்களிடம் இருந்து தகவல் கிடைக்காவிட்டால், உங்கள் படைப்பு தேர்வு பெறவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுகிறோம்.

கே.எஸ்.ரவிகுமாரிடம் கேட்பதற்கான உங்கள் கேள்விகளை உடனடியாகஅனுப்ப வேண்டிய முகவரி:   'விகடன் மேடை - கே.எஸ்.ரவிகுமார்’, ஆனந்த விகடன், 757,அண்ணா சாலை, சென்னை-600002. இ-மெயில்:av@vikatan.com கேள்விகளுடன் மறக்காமல் உங்கள் தொடர்பு எண்ணையும் அவசியம் குறிப்பிடவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism