Election bannerElection banner
Published:Updated:

அழகுக்கலையில் அசத்தல் வருமானம்!

அழகுக்கலையில் அசத்தல் வருமானம்!

''துணிஞ்சு இறங்கினா, 45 வயசுக்கு மேலயும் சாதிக்க முடியும்னு எனக்கு தன்னம்பிக்கை கொடுத்தது... இந்த அழகுக்கலைதான்!''

- தான் நேசித்து களத்தில் இறங்கி வெற்றிபெற்றிருக்கும் அழகுக்கலை குறித்து, அழகாகவே பேசுகிறார்... அழகுக்கலை நிபுணரும், ஆலோசகருமான 'ஆர்.எம்.ஹெர்பல்ஸ்' உரிமையாளர் ராஜம் முரளி.

''மல்டி நேஷனல் கம்பெனியில வேலையில இருந்த நான், பர்சனல் காரணங்களால வேலையை விட்டுட்டேன். 95-ம் வருஷம் வள்ளுவர்கோட்டத்துல ஒரு வொர்க் ஷாப் நடந்துச்சு. எதார்த்தமா அதுல கலந்துகிட்ட என்னை, மருத்துவ ஆலோசனைகள் குறித்து பேச சொன்னாங்க. திடீர்னு இப்படி சொன்னாலும், எனக்கு அதுல ஆர்வம் இருந்ததால தைரியமா பேசினேன். 'நீங்க சொன்ன குறிப்புகள் நல்லா இருந்தது!’னு பலரும் பாராட்டினாங்க. பிறகு, தமிழக அரசு நடத்தும் அழகுக்கலை படிப்புல சேரணும்னு ஆர்வம் வரவே, அதுல சேர்ந்து அழகுக்கலையைக் கத்துக்கிட்டேன்.

அழகுக்கலையில் அசத்தல் வருமானம்!

சின்ன வயசுல இருந்தே மூலிகைகள் பத்தி என் அம்மா நிறைய சொல்லிக் கொடுத்திருக்காங்க. அதனால மூலிகைகளைப் பத்தி ஆராய்ச்சி பண்ணிட்டே இருப்பேன். அந்த வகையில குப்பைமேனி செடியோட மருத்துவக் குணத்தை தெரிஞ்சுகிட்டப்ப ஆச்சர்யமா இருந்துச்சு. சில சூத்திரங்களைப் பயன்படுத்தி, குப்பைமேனியை வெச்சு, 18 வருஷத்துக்கு முன்ன சொந்தமா ஒரு புராடக்ட் தயாரிச்சேன். அது ஒரு ஸ்பெஷல் பவுடர். அதாவது, பெண்களோட தேவையற்ற சரும முடிகளை நீக்கும் பொடி.

அழகுக்கலையில் அசத்தல் வருமானம்!

பதின்ம வயதுப் பெண் பிள்ளைகளை மனசுல வெச்சு நான் தயாரிச்ச இந்த பவுடரை, தினமும் தேய்ச்சுக் குளிக்க வலியுறுத்தும்படி, சில குழந்தைகளோட அம்மாக்கள்கிட்ட கொடுத்தேன். மூணு மாசம் கழிச்சு, 'நல்ல ரிசல்ட் கிடைச்சுது. பவுடர் தீர்ந்துடுச்சு. ஸ்டாக் இருக்கா..?’னு மறுபடியும் வந்து நின்னாங்க அந்த அம்மாக்கள். அப்பவே ஒரு டப்பாவோட விலை ரூபாய் 400. ஆனாலும், தரம் பிடிச்சுப் போனதால தயக்கம் இல்லாம பலரும் வாங்க ஆரம்பிச்சாங்க. அந்த வரவேற்பால,

அழகுக்கலையில் அசத்தல் வருமானம்!

தொடர்ந்து அழகு சாதனப் பொருட்கள் தயாரிச்சுக் கொடுக்க முடிவெடுத்தேன். அதுக்கப்புறம் நிறைய காம்பினேஷன்களில் நானே பல ஆய்வுகள் செய்து, தயாரிச்சேன். முழுமையான, பாதுகாப்பான, திருப்தியான புராடெக்டா வந்ததால... அரசுத் துறை அனுமதி வாங்கி, விற்பனை செய்ய ஆரம்பிச்சேன்.

சரும பராமரிப்பு, கேச பராமரிப்பு, பொதுவான உடல் பராமரிப்புனு மூணு பிரிவுகளா பிரிச்சு ஒவ்வொரு பிரிவுக்குமான அழகு சாதனப் பொருட்களை இப்போ தயாரிக்கிறேன். ஆர்வமுள்ள பெண்களுக்கு, நிறைய வொர்க் ஷாப் நடத்தி, அதன் மூலமா பயிற்சியும் கொடுக்கிறேன். அழகு பொருட்கள் தயாரிக்கறதுக்கு 5, 10 மற்றும் 15 நாள் கோர்ஸும் எடுக்கிறேன்.

எண்ணெய்ப் பசையுள்ள சருமம், வறண்ட சருமம்னு சருமத்துல நிறைய வகைகள் இருக்கு. அதனால கஸ்டமர்களுக்கு எந்த வகையான புராடெக்ட் தேவைனு நாமதான் பார்த்து பரிந்துரைத்து விற்பனை செய்யணும். பொதுவா 'ப்ளீச்’ பண்ணும்போது, அதுல கெமிக்கல் இருக்கும்ங்கறதால... கண்களைச் சுற்றியிருக்கிற ஏரியாவில் மட்டும் அப்ளை பண்ண மாட்டாங்க. அதனாலதான் ஃபேஷியல், ப்ளீச்னு பண்ணினாலும், சிலருக்கு கண்களைச் சுற்றியிருக்கும் கருவளையம் மட்டும் அப்படியே இருக்கும். என்னோட ஹெர்பல் ப்ளீச், கண்களைச் சுற்றிஇருக்கிற ஏரியாவிலும் அப்ளை பண்ணச் சொல்லுவேன். அமோனியா இல்லாத, சருமத்துக்கு பாதுகாப்பான நேச்சுரல் ப்ளீச். இதை தைரியமா பயன்படுத்தலாம். சருமத்தை பாதிக்காத இயற்கை மூலிகைகள் மூலமா தயாராகறதுதான், என்னோட புராடெக்ட்களோட வெற்றிக்குக் காரணம்.

அழகுக்கலையை முறையா கத்துக்கிட்டு யார் வேணும்னாலும் அசத்தலாம். இப்ப எனக்கு 65 வயசாகுது. இந்த வயசுலயும் தளராம நான் தன்னம்பிக்கையோட தொழில் பண்றேன்னா, அதுக்கு என்னோட ஆர்வம்தான் காரணம். நான் எழுதி, அவள் விகடனில் தொடரா வந்த, 'பழகிய பொருள்... அழகிய முகம்’ புத்தகத்தை நிறைய பேர் வாங்கிட்டுப் போய், திருமணப் பரிசா கொடுக்குறாங்கனு தெரிய வந்தப்போ, பெருமையா இருந்தது!''

- குரலில் உற்சாகம் ராஜம் முரளிக்கு!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு