Published:Updated:

வேடிக்கை பார்ப்பவன் - 21

நா.முத்துக்குமார், ஓவியங்கள்: செந்தில்

வேடிக்கை பார்ப்பவன் - 21

நா.முத்துக்குமார், ஓவியங்கள்: செந்தில்

Published:Updated:

'பச்சையப்பனில் இருந்து
ஒரு தமிழ் வணக்கம்’

''உனக்கு ஒன்றும் தெரியாது என்று தெரிந்துகொள்வதுதான் உண்மையான ஞானம்!''

- சாக்ரடீஸ்

வேடிக்கை பார்ப்பவன் - 21

ச்சையப்பன் கல்லூரியில் நாவலர் தேர்வுக்கான கவிதைப் போட்டிக்கு இவனுக்குக் கொடுக்கப்பட்டிருந்த தலைப்பு 'சுதந்திரம்’. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்ட அந்தப் போட்டியில், 63-வது ஆளாக இவன் கவிதை படிக்க வேண்டும். ஒவ்வொருவரும் பக்கம் பக்கமாக மேடையில் ஏறி கவிதை வாசித்துக்கொண்டிருக்க, அளவுக்கு மீறிய அமிர்தமாக அந்த அரங்கம் நஞ்சானது. மேலும் சிலர், படித்த வரிகளையே மூன்று முறை திரும்பத் திரும்பப் படித்து, பார்வையாளர்களைத் தாலாட்டிக்கொண்டிருந்தனர். மதியம் 2 மணிக்கு இவன் முறை வந்து, இவன் பெயரை அழைத்ததும், மேடையில் ஏறி,

'புறாக்கள் வளர்க்கும் எதிர்வீட்டுக்காரன்
என்னிடம் இருந்து பறிக்கிறான்
பூனை வளர்க்கும் சுதந்திரம்’

என்று மூன்று வரிக் கவிதையை இவன் படித்துவிட்டுக் கீழே இறங்கியபோது, கைதட்டல்கள் அடங்க வெகுநேரம் பிடித்தது. போட்டி முடிவுக்காகக் காத்திருக்காமல், விடுதியில் தங்கியிருந்த நண்பனின் அறைக்குச் சென்று உறங்கிவிட்டான். மூன்றரை மணிவாக்கில், வகுப்புத் தோழன் சேகர் வந்து இவனை எழுப்பி, ''டேய்... இன்னிக்கு நடந்த கவிதைப் போட்டியில் உனக்குத்தான்டா முதல் பரிசு. நீ கல்லூரி நாவலர் ஆயிட்ட...'' என்று சொன்னதும் இவன் ஆச்சரியப்பட்டுப்போனான்.

பக்கம் பக்கமாகக் கவிதை படித்தவர்கள் மத்தியில், மூன்றே வரிகள் படித்த இவனைத் தேர்ந்தெடுத்த நடுவர்களுக்கு மானசீகமாக நன்றி சொன்னான். அந்தச் சம்பவம்தான் இவனுக்குச் சுருங்கச் சொல்லும் வித்தையைக் கற்றுத்தந்தது.

வேடிக்கை பார்ப்பவன் - 21

வனைப் போலவே, பேச்சுப் போட்டியில் முதல் பரிசு பெற்றான் அபிவை சரவணன். அவன் கரந்தை தமிழ்ச்சங்கத்தில் முதுகலைத் தமிழ் இலக்கியம் படித்துவிட்டு பச்சையப்பனில் எம்.ஃபில்., படித்துக்கொண்டிருந்தான். டிரஸ்ட்புரத்தில் இருந்து அவனது அறையில், இருவரும் சிகரெட்டும் தேநீருமாக பல இரவு-பகல்களை இலக்கியம் பேசி வழியனுப்பி இருக்கிறார்கள். சரவணின் ஊர் கும்பகோணத்துக்குப் பக்கத்தில் இருக்கும் அபிவிருத்தீஸ்வரம். கல்லூரி விடுமுறை காலத்தில் அவன் ஊருக்கு இவன் சென்றிருக்கிறான். ஊரை ஒட்டி ஓடும் வெட்டாற்றங்கரையில் அமர்ந்து இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது வீட்டில் இருந்து சாப்பாடு எடுத்துக்கொண்டு சரவணனின் தம்பி வருவான். அவன் அப்போது ஒன்பதாவதோ பத்தாவதோ படித்துக்கொண்டிருந்தான். பின்னாட்களில், 'அண்ணே... நான் எழுதின கவிதையைப் படிச்சுப் பாருங்கண்ணே’ என்று சென்னையில் இவனது அறைக்கு அந்தத் தம்பி வந்தபோது, அவனுக்கு மீசை முளைத்து இருந்தது.

'ரொம்ப நல்லாயிருக்கு தம்பி’ என்று உற்சாகப்படுத்தினான். அந்தத் தம்பி ராஜுமுருகன், பின்னர் விகடனில் நிருபராகி, அதே விகடனில் 'வட்டியும் முதலும்’ தொடர் எழுதி, இன்று 'குக்கூ’ என்ற திரைப்படத்தை இயக்கிக்கொண்டிருப்பதைப் பார்த்து இவன் பேருவுவகை கொள்கிறான்!  

பச்சையப்பன் கல்லூரியில் படித்த நாட்கள் இவனைப் பட்டை தீட்டின. வகுப்பறைக்கு வெளியே அந்தக் கல்லூரி நிறையச் சொல்லிக்கொடுத்தது. மரத்தடியிலும் கேன்டீனிலும் சந்தித்து அறிமுகமான பிற துறை மாணவர்கள், இவனுக்கு மாநகரத்தின் சேரிப்புரத்துக் கானா பாடல்களை அறிமுகப்படுத்தினார்கள். எளிய ஏழை மக்கள் தங்கள் வாழ்க்கையை விமர்சனத்தோடு கொண்டாடும் பாடல்கள் அவை.

'பச்சை மிளகா பழுத்துவிட்டா
இனிப்பா இருக்குமா?
ரெண்டு காலிருந்தும் சிட்டுக்குருவி
நடக்க முடியுமா?
நெருப்பு மேலே நடக்கறாங்க
படுக்க முடியுமா?’

என்று வியாசர்பாடி நண்பன் பாட,

'நாங்க தினந்தோறும் ரிக்ஷா ஓட்டி
பிழைக்கிறோம்
பட்ட சாராயத்துக்குப் பெடலுக் கட்டையை
மிதிக்கிறோம்’

என்று பேசின்பிரிட்ஜ் நண்பன் மறு குரல் எடுப்பான். இப்படித்தான் தோழர்களே, இவன் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையையும் வலிகளையும் அந்த வரிகளின் ஊடாக அறிந்துகொண்டான்.

வேடிக்கை பார்ப்பவன் - 21

ல்லூரி நாவலர் ஆனதும் இவன் அனைத்துக் கல்லூரிப் போட்டிகளில் கலந்துகொள்ள ஆரம்பித்தான். ஆஹா... அந்தக் காலம்! லா.ச.ரா-வின் மொழியில் சொல்வதென்றால் கட்டிய வெள்ளி மணிகளில் கிண்கிணியோடு, இவனுக்குள் ஒரு சிற்பக் கதவு மெள்ளத் திறந்த காலம் அது. லயோலா கல்லூரி, கிறிஸ்தவக் கல்லூரி, நியூ காலேஜ், எத்திராஜ், ஸ்டெல்லா மாரீஸ், க்யூ.எம்.சி., எம்.ஐ.இ.டி., ஐ.ஐ.டி, அண்ணா யுனிவர்சிட்டி... என எத்தனையோ மேடைகள். எல்லாக் கல்லூரிக் கவிதைப் போட்டிகளிலும் முதல் பரிசுக் கோப்பையில் இவன் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.

எல்லாக் கவிதைப் போட்டிகளிலும், அரை மணி நேரத்துக்கு முன்புதான் தலைப்பு கொடுப்பார்கள். அந்தந்தக் கல்லூரியின் மரத்தடியிலோ, மைதானத்திலோ அமர்ந்து போட்டிக்கான கவிதையை எழுதுவான். இந்த மாதிரியான கவிதைப் போட்டிகளில், பார்வையாளராக, போட்டிக்கு வந்திருக்கும் சக மாணவர்கள்தான் இருப்பார்கள். கை தட்டி உற்சாகப்படுத்தினால் நடுவர்கள் அந்தக் கவிதைக்கு அதிக மதிப்பெண்கள் அளித்துவிடுவார்கள் என்பதால், யார் நல்ல வரிகளைப் படித்தாலும் கைதட்டலே கிடைக்காது. காட்டில் பூத்த பூ போல யாராலும் ரசிக்கப்படாமல் அப்படி நிறையக் கவிதைகள் அரங்கில் உதிர்ந்துகிடக்கும். இவனும் இவனது நண்பர்களும் அந்த இலக்கணத்தை உடைத்தார்கள். எல்லா நல்ல கவிதைக்கும் கைதட்டுவோம். 'தகுதியானது வெல்லட்டும்’ என்ற புரிதலை சக போட்டியாளருக்கும் தொற்றவைத்தார்கள்.

இன்றைக்கு இவன் ஓர் இயக்குநர் கதைக்கான சூழலைச் சொன்னதும் அடுத்த நொடியே பாடல் எழுதத் தொடங்குகிறான் என்றால், அன்று அந்தப் போட்டிகளில் எடுத்த பயிற்சிதான் காரணம். இதுதான் தொடர்ந்து 10 ஆண்டுகளாக அதிகப் படங்களில் அதிகப் பாடல்களை எழுதும் பாடலாசிரியராக இவனை முன் நகர்த்தி வந்திருக்கிறது.

பொதுவாக இந்த மாதிரி கவிதை, பேச்சுப் போட்டிகளில் பங்கேற்பவர்கள், 'தாயே தமிழே வணக்கம்’ என்று தமிழ்த்தாயை வாழ்த்தியோ, அல்லது பாரதியார், பாரதிதாசன் பாடலைச் சொல்லியோ, தங்கள் கவிதையையோ, உரையையோ ஆரம்பிப்பார்கள். இவன் அந்தச் சம்பிரதாயங்களை உடைத்து, மேடைக்கு வந்ததும் 'பச்சையப்பன் கல்லூரியில் இருந்து ஒரு தமிழ் வணக்கம்’ என்று சொல்லிவிட்டு, நேரடியாகக் கவிதைக்குள் வந்துவிடுவான். நாளடைவில் அது கல்லூரி மாணவர்களிடம் பிரபலமாகி, இவன் மேடைக்கு வந்து நின்றாலே, அரங்கத்தில் இருந்து 'பச்சையப்பன் கல்லூரியில் இருந்து ஒரு தமிழ் வணக்கம்’ என்று மாணவர்கள் குரல் எழுப்புவார்கள். பின்னாட்களில் அந்தக் கவிதைகளைத் தொகுத்து புத்தகமாக வெளியிட்டபோது, இவன் வைத்த தலைப்பு 'பச்சையப்பன் கல்லூரியில் இருந்து ஒரு தமிழ் வணக்கம்’!

இவன் உதிரத்தில் வெப்பமும், கோபமும், கனவுகளும் ஓடிக்கொண்டிருந்த காலம் அது. அந்த மெய்ப்பாடுகள் எல்லாம் இவன் கவிதைகளில் வெளிப்பட்டன. அனைத்திந்திய வங்கித் தொழிலாளர்கள் சங்கம், கல்லூரி மாணவர்களுக்காக சென்னையில் நடத்திய கவிதைப் போட்டியில்,

'மாபெரும் அறைகூவலுக்குப் பின்
உலகத் தொழிலாளர்கள்
ஒன்று சேர்ந்தார்கள்!
லெனின் சொன்னான்
'என்னை மன்னித்துவிடுங்கள்!
உங்களுக்கு முன்பாகவே
முதலாளிகள் ஒன்று சேர்ந்துவிட்டார்கள்''

வேடிக்கை பார்ப்பவன் - 21

என்றும்

'யார் சொன்னது?
பின்னி ஆலையை மூடிவிட்டார்கள் என்று?
இப்போதும் பின்னி ஆலையில்
நூல் நூற்கும் பணி
நடந்துகொண்டுதான் இருக்கிறது!
சின்ன வித்தியாசம்
நூல் நூற்பது தொழிலாளிகள் அல்ல
சிலந்திகள்! ’

என்றும் இவன் கவிதை படித்தபோது, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் எழுந்து நின்று கை தட்டினார்கள். அன்று கேட்ட அந்தக் கை தட்டலின் ஒலிகள்தான் இன்று இவனை ஓடவைத்துக்கொண்டிருக்கின்றன.

'சொல் புதிது. பொருள் புதிது. ஜோதி மிக்க நவ கவிதை’ என்ற பாரதியாரின் கூற்றுப்படி இவன் கவிதைகளின் வடிவமும் உத்திகளும் மாறிக்கொண்டே வந்தன.

'மாடி வீட்டு முட்டாள்
மழை வரும்போது
குடையை ஏன்
திருப்பிப் போட்டிருக்கிறான்?’

என்று டிஷ் ஆன்டெனாக்களைப் பற்றி நகைச்சுவையாகக் கவிதை எழுதிய அதே நேரத்தில்,

'சோற்றுக்கு வரும் நாயிடம்
யார் போய்ச் சொல்வது?
வீடு மாற்றுவதை!''

என்று வாழ்வியலையும் பதிவுசெய்யக் கற்றுக்கொண்டான்.

இப்படிக் கவிதைகளும் கனவுகளுமாகத் திரிந்துகொண்டு இருந்தபோதுதான், இவன் வாழ்க்கையை மாற்றிப்போட்ட அந்தச் சம்பவம் நிகழ்ந்தது!

- வேடிக்கை பார்க்கலாம்...