Published:Updated:

திடீர் தேர்தல் செலவு 1,200 கோடி ரூபாய்!

டி.என்.சேஷன் பேட்டி

திடீர் தேர்தல் செலவு 1,200 கோடி ரூபாய்!

டி.என்.சேஷன் பேட்டி

Published:Updated:
திடீர் தேர்தல் செலவு 1,200 கோடி ரூபாய்!

வேட்டி - பனியன் அணிந்து ரிலாக்ஸ்டாக வீட்டில் டி.வி. பார்த்துக்கொண்டிருந்தார் டி.என்.சேஷன். நம்மைக் கண்டதும் டக்கென்று டி.வி-யை அணைத்துவிட்டு 'கேளுங்க...’ என்றார் வலது கை ஆக்ஷனோடு.

தேர்தல் செலவு பற்றிய கேள்வியோடு பேட்டியைத் தொடக்கினோம் முன்னாள் தலைமைத் தேர்தல் கமிஷனரிடம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''வரப்போகிற தேர்தலில் எவ்வளவு கோடிகளை நாம் இழக்கப்போகிறோம்?''

''தேர்தல் செலவு என்பது ரெண்டு வகை. ஒன்று, வேட்பாளர்கள் செலவு செய்வது; இன்னொன்று, சர்க்கார் செலவு. முதலில் வேட்பாளர் செலவைப் பார்ப்போம். ஒவ்வொரு வேட்பாளரும் சட்டப்படி 15 லட்சம் வரை செலவு செய்யலாம். சராசரியாக நாடு முழுவதிலும் 2,500 வேட்பாளர்கள் நிற்பதாக வைத்துக்கொண்டால் அத்தனை பேரும் சட்டப்படியான செலவு மட்டும் செய்தாலே அது 375 கோடிக்கு வந்துவிடும். உண்மையில் சட்டப்படி செலவு செய்யும் வேட்பாளர்கள் குறைவு. 1,000 வேட்பாளர்களாவது ஆளுக்கு 50 லட்சம் செலவு செய்வார்கள். 700, 800 வேட்பாளர்கள் தலா 25 லட்சம் செலவு செய்வார்கள். தவிர, மிஞ்சியிருப்போர் 15 லட்சமோ அல்லது அதற்கும் கீழோ செலவு செய்வார்கள். ஆக மொத்தத்தில் வேட்பாளர்கள் செலவே பல நூறு கோடிகளுக்கு வந்துவிடும்.

சர்க்கார் செலவுக்கு வருவோம். இரண்டு அல்லது மூன்று நாட்களில் நாடு முழுக்க தேர்தலை நடத்தி முடிப்பதுதான் செலவை ஓரளவு கட்டுப்படுத்தும். ஓட்டு போடும் தாளை எடுத்துக்கொண்டால் அதுவே பெரிய செலவு. பேப்பர் உயர்தரத்தோடு இருக்க வேண்டும் என்பதால், சராசரியாக அதற்கே 200 கோடி ரூபாய் ஆகிவிடும். இரண்டாவது விஷயம் - தேர்தல் அதிகாரிகள். ஒரு வாக்குச்சாவடிக்கு ஐந்து பேராவது தேவைப்படுவார்கள் எனும்போது நாடு மொத்தத்திலும் உள்ள எட்டு லட்சம் வாக்குச்சாவடிகளுக்கு 40 லட்சம் பேராவது வேண்டுமே. அவர்களுக்குப் போக்குவரத்துச் செலவு, உணவுச்செலவு என்று ஆளுக்கு 200 ரூபாயாவது தர வேண்டியிருக்கும். ஆக, இதுவே 80 கோடி ஆகிவிடும்.

திடீர் தேர்தல் செலவு 1,200 கோடி ரூபாய்!

அடுத்தது போலீஸ்காரர்கள்... தேர்தல் நாட்களை மட்டும் கணக்கில் எடுத்தால், அந்த மூன்று நாட்களுக்கு தினமும் 20 லட்சம் போலீஸ் படை தேவை. தவிர, தேர்தலுக்கு முன்னும் பின்னுமாக 20 நாட்களுக்கு சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க ஒவ்வொரு நாளும் ஐந்து லட்சம் கூடுதல் போலீஸ் படை தேவையாக இருக்கும். இவர்களுக்கு ஆளுக்கு 100 ரூபாய் செலவாவதாக வைத்தாலும் 160 கோடி ரூபாய். தவிர, இந்த போலீஸின் அதிகப்படியான ரோந்துகளுக்காகச் செலவாகும் ஜீப் பெட்ரோல், ரயில் டிக்கெட், விமான டிக்கெட் போன்ற செலவுகள் தனியாக 50 கோடி. இந்தக் கணக்கு எல்லாமே சராசரியாக ஒரு தொகுதிக்கு ஐந்து வேட்பாளர்கள் என்ற அடிப்படையில் சொல்பவை.

இப்படியெல்லாம் பார்க்கும்போது குறைந்தபட்சம் 700 கோடி ரூபாய் தேவை. 1996-ல் நான் கமிஷனராக இருந்த காலத்தில் நடந்த தேர்தலின்போது மொத்தம் 14,000 வேட்பாளர்கள் களத்தில் இருந்தார்கள். அதாவது, ஒரு தொகுதிக்குச் சராசரியாக 29 பேர். அப்போதே கிட்டத்தட்ட 1,000 கோடி ரூபாய் செலவானது.

இப்போதும் வேட்பாளர்கள் அதிகரிக்கலாம். தவிர காகித விலை, பெட்ரோல் விலை எல்லாம் அப்போதைக்கு இப்போது கூடியிருக்கிறது. எனவே, இப்போதைய தேர்தல் செலவு 1,200 கோடியையும் தொடலாம்.  குறைந்தபட்சம் 700 கோடி ரூபாயோ அல்லது அதிகபட்சம் 1,400 கோடியோ இந்த எதிர்பாராத திடீர் தேர்தலினால் நம் அரசுக்குச் செலவாகப்போகிறது.''

''இத்தனை பணம் தேர்தல் கமிஷனிடம் ரெடியாக இருக்கிறதா? நம் அரசு இந்தத் திடீர் செலவைத் தாங்குமா?''

''நமது அரசுக்கு 1,000 கோடி ரூபாய் செலவு ஒன்றும் பெரிய காரியம் இல்லை. தேர்தல் கமிஷனைப் பொறுத்தவரையில் அங்கே கமிஷனர் முதல் கடைக்கோடி ஊழியர் வரை வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை வெறும் 250 பேர்தான். வருடத்துக்கு இரண்டரைக் கோடி ரூபாய்தான் கமிஷன் அலுவலகத்துக்குச் செலவாகும். ஒவ்வொரு வருடமும் ஐந்து கோடி ரூபாயோ, 10 கோடி ரூபாயோ தேர்தல் கமிஷனுக்கு ஒதுக்கீடாகக் கிடைக்கும். இப்படித் திடீரென தேர்தல் வரும்போது இந்த ஒதுக்கீட்டுப் பணம் போதாது. அரசு கஜானாவில் உள்ள மக்களின் வரிப்பணத்தை எடுத்துச் செலவழித்துவிட்டு, பிறகு அடுத்து அமையப்போகும் அரசிடம் ஒப்புதல் வாங்கிவிடுவார்கள்!''

திடீர் தேர்தல் செலவு 1,200 கோடி ரூபாய்!

''தேர்தலை நடத்த ஒவ்வொருவர் ஒவ்வொரு தேதி சொல்கிறார்கள். சரியான தேதி எதுவாக இருக்கும்?''

''ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலுமே தேர்தல் நடத்த ஏதுவான காலம் கிடையாது. தேர்தல் கமிஷனைப் பொறுத்தவரை இவை தேர்தல் நடத்த லாயக்கற்ற பீரியட். ஏப்ரல், மே மாதங்களில் கொளுத்தும் வெயில், மாணவர்களின் பரீட்சை போன்ற பிரச்னைகள். ஜூன் முதல் தேதியில் தென்மேற்கு பருவக்காற்று கேரளாவில் செட் ஆகிவிடுவதால் அங்கே மழை. அங்கிருந்து நகர்ந்து மகாராஷ்டிராவில் ஜூன் 10-க்கெல்லாம் மழை. ஜூன் 20-ல் கல்கத்தாவில் மழை. ஜூன் 30-ம் தேதியில் டெல்லியில் மழை கொட்டும். ஜூலை வந்துவிட்டால் போதும்... அஸ்ஸாமில் வெள்ள அபாயம். கங்கை, பிரம்மபுத்ரா எல்லாம் ரொம்பி வழியும். உத்தரபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களிலும் வெள்ள அபாயம்.

இதெல்லாம் முடிந்தால் ஆகஸ்ட்டில் தொடங்கிவிடும் பண்டிகைக் காலம் தீபாவளியில்தான் ஓயும். நடுவே அக்டோபர் மாத முதலில் தமிழ்நாடு, ஆந்திரா போன்ற மாநிலங்களில் மழை பெய்யத் தொடங்கிவிடும்.

இன்னொரு சிக்கல் - வாக்காளர் பட்டியல். இந்த ஜூலைக்குதான் இதுவே ரெடியாகப்போகிறது. காரணம், இதில் தேர்தல் கமிஷன் செய்திருக்கும் குளறுபடி. ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்திலேயே யாரெல்லாம் 18 வயது பூர்த்தியாகிவிட்டார்களோ அவர்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க, அவர்கள் எல்லாம் விண்ணப்பம் வாங்கிப் பூர்த்திசெய்ய வேண்டும் என்று இருக்கிறது. இது, இரண்டரை மாத கால வேலை. திடீர் தேர்தலை இந்த முறை எதிர்பாராததாலோ என்னவோ... இந்த வருடம் இந்த நடைமுறையை ஜனவரியில் தொடங்காமல் தவறவிட்டுவிட்டது தேர்தல் கமிஷன். திடுமென ஏப்ரலில்தான் இந்தப் பணியைத் தொடக்கியிருக்கிறது. இதனால்தான் 'முழு வாக்காளர் பட்டியல் தயாராக ஜூலை வரை ஆகிவிடும்’ என்று எம்.எஸ்.கில் சொல்கிறார்.  தவிர, சில மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களையும் சேர்த்து நடத்தியாக வேண்டும்!''

''இந்தப் புதிய வாக்காளர்களைத் தவிர்த்துவிட்டு தேர்தல் நடத்த முடியாதா?''

''முடியும். அப்படி நடத்தினாலும் தேர்தல் கமிஷனுக்கு எந்தச் சட்ட சிக்கலும் ஏற்படாது. இருந்தாலும் இதனால் கிட்டத்தட்ட ஒண்ணே முக்கால் கோடி புதிய வாக்காளர்கள் தேசம் பூராவிலும் விடுபட்டுப் போவார்களே - அது அநியாயம் இல்லையா?''

- சுபா வெங்கட்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism