Published:Updated:

அறிவிழி - 56

அண்டன் பிரகாஷ்

அறிவிழி - 56

அண்டன் பிரகாஷ்

Published:Updated:
அறிவிழி - 56

சில நாட்களுக்கு முன்னர்தான் வருடம் தொடங்கியதுபோல் இருந்தாலும், குளிர் காலம் முடிந்தேவிட்டது. மார்ச் மாதம் ஆனதும், டெக் நிறுவனங்களில் இருந்து புதிய அறிவிப்புகள் வரத் தொடங்கும். ஃபேஸ்புக் போன்ற மென்பொருள் நிறுவனங்கள் புதிய வசதிகளை வெளியிடுவதற்கு விளம்பரம், மார்க்கெட்டிங் என சற்றே மெனக்கெட வேண்டியது இருக்கும். ஆனால், ஆப்பிள் போன்ற சாதனத் தயாரிப்பாளர்களுக்கு, புதிய சாதனங்களை வெளியிடுவதற்கு மிகவும் கடுமையாகத் திட்டமிட்டு அனைத்து நிகழ்வுகள் மற்றும் விளைவுகளை ஒருங்கிணைக்க வேண்டியிருக்கும்!

பர்ஸில் இருக்கும் பணத்தைக் கொடுத்து அலைபேசி ஒன்றை வாங்கிவிடுகிறோம். ஆனால், அந்தச் சாதனம் தயாரிக்கப்பட்டு, கடைக்கு வரும் வரையிலான பல்வேறு படிகளைப் பற்றி நாம் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுவது இல்லை. நீங்கள் வாங்கும் சாதனத்தின் விலையை நிர்ணயிப்பதில் மேற்கண்ட படிகள் மிக முக்கிய இடம் வகிக்கின்றன என்பதால், இதைப் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உலகளாவிய வர்த்தகத்தில், சாதனத் தயாரிப்புகளைப் பொறுத்தவரை, சீனா முதல் இடத்தைப் பிடித்துவிட்டது. சீன வருடப்பிறப்பு விழாவைக் கொண்டாடுவதற்காகப் பணியாளர்கள் தமது சொந்த ஊர்களுக்குச் சென்றுவிடுவார்கள் என்பதால், சாதன வெளியீட்டு நிகழ்வுகளை அதற்குத் தகுந்த விதத்தில் அமைத்துக்கொள்ள வேண்டிய நிலை மற்ற நாட்டினருக்கு.

ஆப்பிளின் ஐ-போன் போன்ற பிரபல சாதனங்கள் வெளியாகும் சில நாட்களி லேயே லட்சக்கணக்கில் விற்றுவிடும் என்பதால், அவற்றைத் தேவைக்கேற்ற விதத்தில், அதே நேரத்தில் தேவைக்கு அதிகமாகவும் சென்றுவிடாமல், Just In Time என்று சொல்லப்படும் தேவைக்கு நிகரான தயாரிப்பைச் செய்தாக வேண்டும். சீனாவில் தயாரிக்கப்படும் தங்களது சாதனங்கள் அளவில் சிறிதாக இருப்பதால், அவற்றை விமானங்கள் மூலமாக பல நாடுகளுக்கும் அனுப்பிவிடுகிறது ஆப்பிள். ஆனால், பிரின்டர்களைத் தயாரிக்கும் Canon  போன்ற நிறுவனங்கள் விமானத்தில் பொருள்களை அனுப்பினால், அவற்றின் விலை மிக அதிகமாகிவிடும் என்பதால் சாதனத் தயாரிப்பாளர்கள் பெரும்பான்மையாகப் பயன்படுத்துவது கப்பல் போக்குவரத்தைத்தான். உலக வர்த்தகத்தில் 90 சதவிகிதத்தைக்கொண்டிருக்கும் இந்தக் கப்பல் வழி வர்த்தகத்தின் வருடாந்திர மதிப்பு பல நூறு பில்லியன்களுக்கும் மேல்!

அறிவிழி - 56

கப்பல் வழியான வணிகம் என்பது, 12-ம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டது என்றாலும், இதன் மிக முக்கியமான நவீனமயமாக்க நிகழ்வு சென்ற நூற்றாண்டில்தான் நடந்தது. பொருள்களை மொத்தமாகக் கொட்டி எடுத்துப்போகும் முறை மறைந்து எஃகால் செய்யப்பட்ட கொள்கலன்கள் (Steel Containers) 1950-களின் தொடக்கத்தில் அறிமுகமாகின. இந்த அறிமுகம், உலக வர்த்தகத்தின் மிக முக்கிய மைல்கல். திட்டமிட்டு, பாதுகாப்பாகப் பொருள்களை பல்லாயிரம் மைல்களுக்குக் கொண்டுசெல்ல உதவும் இந்தக் கொள்கலன்களை, கார்பன் பைஃபர் கொண்டு தயாரிக்கும் முயற்சி இப்போது நடந்துகொண்டிருக்கிறது. இது வெற்றி அடைந்தால், அதிகப் பொருள்களை கொண்டுசெல்ல முடியும் என்பதுடன், கொள்கலன்கள் பயன்படுத்தப் படாதபோது அவற்றை மடித்து வைத்துக்கொள்ளலாம். பாதுகாப்புச் சோதனை செய்வது எளிது என்பதால், கடத்தல் நிகழ்வுகளைக் குறைக்கலாம் என்று பலதரப்பட்ட நன்மைகள் இருப்பதால் இந்த ஆராய்ச்சியில் அரசாங்கம், வணிக நிறுவனங்கள் என அனைவருக்கும் ஆர்வம் இருப்பது தெரியவருகிறது.

தொலைவில் இருந்து இயக்கப்படும் தானியங்கிக் குட்டி விமானங்களான Droneகளைப் பற்றி பலமுறை இந்தத் தொடரில் பேசியிருக்கிறோம். அதே போல், பொருள்கள் அடங்கிய கொள்கலன்களை ஏற்றிக்கொண்டு குறுக்கும் நெடுக்குமாக சரக்குக் கப்பல்கள் கடலில் செல்லப்போகின்றன.

பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ்ராய்ஸ், பரிசோதனை முயற்சியாகச் செய்துபார்த்துவிட்டு, இன்னும் சில ஆண்டுகளில் இதை நடைமுறைக்குக் கொண்டுவந்துவிடலாம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆட்கள் இருக்க மாட்டார்கள் என்பதால் அவர்கள் தங்குவதற்கான இடம், மின்சாரம், கழிவறை வசதிகள் என்ற எதுவுமே தேவை இல்லை. அதனால் அதிகப் பொருள்களை அடுக்க முடியும் என்பதுடன் பிணைக்கைதிகளாக யாரையும் பிடித்துச்செல்ல முடியாது என்பதால், கப்பல் கொள்ளை நிகழ்வுகளும் இதில் நடக்காது என்கிறது ரோல்ஸ் ராய்ஸ்.

சிறுவயதில் மழைக் காலத்தில் காகிதத்தில் கப்பல் செய்துவிட்டு ஓடவிட்ட அனுபவம் பலருக்கும் இருக்கும். இன்னும் சில ஆண்டுகளில் உங்களது நாற்காலியில் அமர்ந்தபடியே அட்லாண்டிக் பெருங்கடலில் செல்லும் கப்பலைச் செலுத்த முடியும்.

இந்தியாவின் இணையம் சார்ந்த வணிக முயற்சிகளுக்குக் கிடைக்கும் தொழில் முதலீட்டு வாய்ப்புகள் அதிகமாகி இருப்பதை, சென்ற சில மாதங்களில் பார்க்க முடிகிறது. ஏற்கெனவே தாங்கள் முதலீடு செய்திருந்த Snapdeal நிறுவனத்தில் 800 கோடிக்கும் அதிகமான முதலீட்டைக் கொடுத்திருக்கிறது ஈபே நிறுவனம். வேகமாக வளர்ந்துவரும் இந்தியாவின் ஈ-காமர்ஸ் சந்தையில் பலமாகக் காலூன்றிக்கொள்ள பல நிறுவனங்கள் விரும்புகின்றன. தொழில்முனைவு ஆர்வம் இருப்பவர்கள், இந்தியா என்ற சந்தையில் புதிய முயற்சிகளை எடுக்க இது சிறந்த வருடம். ஏன்..? விரிவாக அலசுவோம்!

- விழிப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism